Thursday, May 08, 2008

Paramachariyal Paathaiyiley - Kamakoti

ஸ்ரீபரமாச்சார்யாள் பாதையிலே....

பிரிய விரதன்னு ஒரு ராஜா. ஸ்வாயம்பு மனுவோட மூத்த பிள்ளை. இவன் துருவனுக்குப் பெரிய தகப்பன்.

பிரிய விரதனோட குமாரி ஊர் ஜஸ்வதி. அவளை அசுரகுருவான சுக்கிராச் சாரியாருக்குக் கல்யாணம் பண்ணிக்

கொடுத்தா. அவாளுக்குப் பொறந்தவதான் தேவயானி. அவ தான் அசுர ராஜகுமாரி சர்மிஷ்டையோட சண்டை

போட்டவ. யயாதியோட முதல் பெண்டாட்டி. பிரிய விரதனுக்கு பத்து பிள்ளைகள் பிறந்தா. அதிலே மூணுபேர்

இல்லற வாழ்க்கையிலே ஈடுபடலே. எல்லாம் கிடைச்சாலும் மனுஷனாலே சும்மாயிருக்க முடியாது.

“என்னோட இராஜ்ஜியத்துலே இராத்திரி வரதாவது”ன்னு பிரியவிரதன் நெனைச்சான். தன்னோட தவ

பலத்தாலே சூரியனைப் போல ஒரு பிரகாசமான தேர் செஞ்சு ஏறிண்டான். பூமியை எழு தடவை சுற்றி வந்தான்.

அப்போ ஏழு தடவை அவனோட ரதச்சக்கரம் பூமியிலே அழுந்தினது.

அதுதான் ஏழு சமுத்திரமாச்சு. அப்போ அவன் தேர் எத்தனை பெரிசுன்னு நீங்க கணக்குப் போட்டுக்கோங்கோ.அந்த சமுத்திரங்களுக்கு நடுவிலேதான் ஜம்புத்வீபம், பலிஷத், சான்மலி, குச, ரௌஞ்ச, சாகதத்வீபம்,

புஷ்பராகம் முதலான தீவுகள் இருக்கு. அந்தச் சமுத்திரங்கன் உப்பு, கரும்புச் சாறு, தேன், நெய், பால், தயிர், சுத்த

ஜலம் என்கிற தன்மையோட இருக்கு க்ஷீராப்தியிலே மஹாவிஷ்ணு சயனிச்சிண்டிருக்கார். உப்புக்கடல் பூலோகத்

துலே இருக்கு. சன்யாசியாகாத ஏழு பிள்ளை களுக்கும் ஏழு கடலைப் பகிர்ந்து கொடுத்துட்டார் ராஜா.

பிரியவிரதன் சாதனையாலே தேவியை நோக்கித் தவம் பண்ணி ஏழு தீவுகளையும் பிள்ளைகளுக்குக் கொடுத்தான்.

சாதனைகளாலே அம்பாளை நெருங்கலாம். மனஸிலே பக்தி வேணும். நாலு பூப்போட்டாலும் ஆத்மார்த்தமா

இருக்கணும். கங்கையில் ஸ்நானம் பண்ணி குந்திக்காக கர்ணனையும், சுபத்திரைக்காக அபிமன்யுவையும்,

காந்தாரிக்காக துரியோதனாதியரையும் காண்பிக்க வேணுமின்னு வியாசர் ஜெகதாம் பிகையைத் தியானம்

பண்ணினார். பாரத யுத்தத்திலே மாண்டு போன எல்லோரும் ஒரு நிமிஷம் காட்சியளிக் கும் படி பண்ணினா

அம்பாள். அப்போ நாரதரும் கூட இருந்தார்.தேவி நற்கதியை அளிப்பவள் என்கிறது அடுத்த ஸ்லோகம். யாருக்கு? நல்லவர்களுக்கும். தவசிகளுக்கும்,

வர்ணாச்சிரம தர்மத்தை ஒழுங்கா கடை பிடிக் கறவாளுக்கும் நற்கதி கொடுக்கறது அவ கடமை.

பிருகு மகரிஷியோட பார்யாள் புலோமை. அவர் களுடைய பிள்ளை தான் சியவன முனிவர். அவர் தவம் செய்கிற

போது புற்று மூடிண் டுத்து. சர்யாதி ராஜா வேட்டையாட வந்தப்போ அவரோட குமாரி சுகன் யையும் கூட வந்தா.

புற்றிலே ‘பளபளன்னு’ ஜொலிக்கிற ரிஷியோட கண்களைப் பளிங் குன்னு நெனைச்சு குச்சியாலே குத்தினா.

அதனாலே புற்று சரிந்தது. சியவனரோட கண் பார்வைபோயிடுத்து. அவர் தேவி உபாஸகர்.

தேவியோட கோபத்தாலே சர்யாதியும், அவன் பத்தினி யும் பரிவாரங்களும் மலஜலம் கழிக்க முடியாம அவஸ்

தைப்பட்டா. செஞ்சகுத் தத்துக்குப் பரிகாரமா கிழ முனிவருக்குப் பணி விடை செய்யப் போன சுகன்யை அவரை

முழுமனசோட கல்யாணம் பண்ணிண் டுட்டா. அதனாலே எல்லாரும் தேக உபாதை நீங்கி சௌக்கிய மானா.

அப்புறம் அஸ்வினி தேவாளுடைய கிருபையாலே புருஷனுக்கு இளமையை மீட்டுத் தந்தா சுகன்யை.நற்கதின்னா மோட்சம் மட்டும்தான்னு பலபேரும் நினைச்சிண்டிருக்கா. குழந்தைகளை நன்னாப் படிக்க வைக்க நியாயமான சம்பாத்யம் வரணும். பிதுர்கர்மா ஒழுங்கா நடக்கணும். அகால மிருத்யு ஏற்படப்படாது. தாயார், தகப்பனார், இல்லேன்னா ஆதரிச்சவாளுக்கு அனுசரணையா இருக்கணும். கொடிய வியாதி எதுவும் வரப்படாது. சந்ததிகள் செழிப்பாயிருக்கறப்போ பாயிலே படுக்காம மரணம் நேரணும். தயாள குணத்தோட வாழ்ந்தா மோட்சம் கிடைக்கிறதிலே எந்த சிரமமுமில்லே! இப்படி வாழறதும் நற்கதிதான்.‘கதியில்லைன்னு சொல்றோம். ‘கதி’ன்னா மார்க்கம். ‘மார்க்கம்னா பாதை, வழி. நல்வழியிலே வாழ்க்கை நடத்தினா நல்ல கதி தானா வரும். சுகன்யை கௌரியை தியானிச்சாள். அஸ்வினி தேவர்கள் இரண்டு பேர் சியவனக் கிழவரோடு தடாகத்திலே மூழ்கி எழுந்தி ருந்தா. மூணுபேருக்கும் சமமான அழகு, வயசு. ஒத்த ரூபம். புருஷனுக் குப் பார்வையும், வாலிபமும் வேணுங்கறதுக்காக அந்த சோதனையை ஏத்துண்டா. சாதிக்க நினைச்சா சோதனைக்கும் தயாராகணும். அம்பாள் அருளாலே சியவன ரைக் கண்டு பிடிச்சு மாலை போட்டா. அந்த சியவனரோட பிள்ளை தான் பிரமாதி.பிரமாதியோட பார்யாள் பிரதாபி. அவாளுக்கு ருருன்னு ஒரு பிள்ளை. ருரு தூலகேச முனிவரோட ஆசிரமத்திலே பிரமத்வரை என்கிற ரூபவதியைப் பார்த்து ஆசைப்பட்டான் அந்தப் பெண் மேனகைக்கும் விஸ்வா வஸு என்கிற கந்தர் வனுக்கும் பொறந்தவ. தூலகேச ரிஷி யோட வளர்ப்புப் பெண். பிரமாதி, பிள்ளையின் விருப்பப்படி தூலகேச ரிஷி கிட்டே சம்பந்தம் பேசி கல்யாணத்துக்கு நாள் குறிச்சார். சம்பந்தப்பட்ட எல்லாரும் சந்தோஷமா யிருக் கறப்போ கல்யாணப் பெண் பாம்பை மிதிச்சுட்டா. பாம்பு கொத்திடுத்து. கடிச்சது ராஜநாகமானதாலே அந்த க்ஷணமே அவ உயிர் போயிடுத்து. எல்லோரும் ‘இப்படியாயிடுத்தே”ன்னு அழுதா. இப்படியெல்லாம் நடந்தா அது தீயகதி.ருரு ஆத்தங் கரைக்குப் போய் குளிச்சு கையிலே நதி ஜலத்தை வைச்சுண்டு “நான் கிரமமா பூஜை, ஹோமம், காயத்ரி ஜபம், வேத அத்ய யனம், சூரிய நமஸ்காரம் எல்லாம் செய்தது சத்திய மானா, எனக்காக வரிக்கப்பட்ட ஸ்த்ரீ, உயிர் பெற்று எழுந்தி ருக்கணும். அப்படி அவள் பிழைக் கலைன்னா நான் பிராணனை விடுவேன்” அப்படீன்னு பகவானை பிரார்த்திச் சான். அவன் கண்ணிலேயிருந்து ஜலம் வழிஞ்சுண்டே யிருந்தது. ஆப்போ யமதூதன் வந்து “இதேன்ன அடாவடி? விவாகமே ஆகவில்லை! ஆவளை விட சௌந்தர்யவதி யான ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து b காள். பிரம்மதேவரை யோட முடிஞ்சுத்து” என்றான். ஆனா ருரு ‘வரிச்சவ தான் வேணும்’ கறதிலே வைராக்கியமாயிருந்தான். யமதூதன் “அப்படியானா உன் ஆயுசிலே பாதயை நீ அவளுக்குக் கொடுக்கணும்” னான்.
யமதூதன் கிட்ட “அவளுக்காக நான் நெருப்பிலே குதிக்கறதுக்கும் ஆயத்தமாயிருக்கேன். அப்படி இருக்க ஆயுசிலே பாதியைத் தரமாட் டேனா? எப்படியாவது அவ உயிரோட இருந்தாப் போதும்’’னான்ருரு.

பிரமத்வரையின் தகப்பனான விசுவாவஸு ருருவையும், கால தூதனையும் கூட்டிக் கொண்டு யமபட்டணம் போனான். யமன் கிட்டே நடந்ததை எல்லாம் காலதூதன் சொன்னான். யமன் ரொம்ப ஆச்சரியப்பட்டு பிரமத்வரையை எழுப்பித் தந்தான்.

ருருவுக்கு பிரமத்வரையோடு கல்யாணம் ரொம்ப சிறப்பா நடந்தது. ருருவுக்கு தர்ம காரியங்களாலே ஆயுசு பெருகித்து. பிரமத்வரையும் பௌர்ணமி பூஜை பண்ணி வயசை வளர்த்துண்டா. இது கெட்ட கதியையும், நல்ல கதியா மாத்திண்ட சம்பவம்.

பிரம்ம குமாரர்களான சனகாதி முனிவர்களால் தியானிக்கப் படுகிறவள் அம்பாள். ஸ்ரீதேவி பாகவதத்தை சனகாதியர், சூத முனிவரி டம் கேட்டுத் தெரிந்து கொண்டனர். சனகாதியர்களுக்கு அப்படி என்ன உயர்வு? அவர்கள் பரமபாகவதர்கள். அவர்களை வைகுண்ட வாசலில் தடுத்து நிறுத்தின தால் வைகுண்ட வாயில்காப்போர்களான ஜய விஜயர்கள் மூணு ஜென்மாக்கள் அசுரர்களாப் பொறந்தா! அதோட போச்சா? மகாவிஷ்ணுவும் வராக, நரசிம்ம, ஸ்ரீராம, ஸ்ரீகிருஷ்ண பலராமனா அவதாரம் எடுக்க வேண்டி வந்தது.நூறு வருஷங்கள் இரண்யாட்சன், இரண்ய கசிபுவை திதி கருவில் சுமந்ததா பாகவதம் சொல்றது. சனகாதியர் மகத்துவம் ரொம்பப் பெரிசு. அவாளுக்குத் தான் சிவபெருமான் தக்ஷிணா மூர்த்தியா உபதேசம் பண்ணினார்.

அம்பிகையை ஸதாசிவனின் பத்னி என்கிறது 231-ஆவது நாமா. ஸ்ரீ சக்கரத்தின் நடுவில் ஸர்வானந்த மயம் என்ற பீடத்திலே பஞ்சபிரம்மா ஸனத்தில் ஸதா சிவனுடைய மடியில் மஹா திரிபுர ஸுந்தரி எழுந்தருளி யிருக்கா. பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன் முதலானவர்களைக் கால்களாகவும், ஸதாசிவனுடைய மடியையே மேல் பலகையாகவும் கொண்ட கட்டிலே பஞ்ச பிரம்மாஸனம் என்று சொல்லப்படறது.வெளுப்பான சிவபெருமான் 25-ஆவது தத்துவமான ஸதாசிவத் தத்துவத் தோடு இரண்டறக் கலப்பதால் தேவியோட சாயையால் சிவப்பாகத் தோன்றி தேவிக்கு மகிழ்ச்சியை அளிக்கிறார் என்கிறது ருத்ரயாமளம்! இந்த ஸ்லோக வரிகள் எதையும் நிர்வகிக்கும் ஆற்றலைக் கொடுக்கக் கூடியது.

பத்னி என்கிறவள் கணவனோடு கலக்க வேண்டும். அவள் அப்படிக் கலக்க, அடிமுடி காண இயலாத சர்வேஸ்வரனும் அவள் சயனிக்கும் பொருட்டு தன் மேனியைப் பலகை யாகத் தர வேண்டும் என்பதை எடுத்துக் காட்ட சிவசக்தி தம்பதியரின் லீலை இது.

பண்டாசுரனோடு போரிட்ட களைப்பு லலிதைக்கு. இல்லற வாழ்வில் உறவினர் களோடு, பிள்ளைகளோடு, பொருளா தாரத்தோடு போரிட்ட களைப்பு, தன் பத்னிக்கும் இருக்கும் என்கிறதை ஒவ்வொரு ஆடவரும் புரிந்து கொள்ள, சக்தி தரிசனம் தந்த விதம் இது.

முப்புரத்தையும் சிரித்தே எரித்தோம்! காலனைக் காலால் உதைத்தோம் என்ற கர்வம் ஸதாசிவனுக்கும் இல்லை. ‘இது சிருங்கார பீடம். இங்கே தேவிக்கு நானே சகலமும் என்று சிவனைப் போல பள்ளியறையில் ஆடவர் செருக்கில்லாம தன்னையளிக்க வேண்டும்’ என்று உலகத்துக்குப் புரிய வைச்சவா அம்மையப்பர்.

நெருப்புப் பெட்டியில் தீக்குச்சி உரசமாட்டேன் என்றால் அடுப்பு எப்படி எரியும்? எப்படி உணவை சமைக்கிறது? புருஷன் பெண்டாட்டி கலகலப்பா இருந்தாதான் குழந்தைகள் கல்யாணப் பேச்சை எடுக்கற போது பின்வாங்க மாட்டா! தன் பத்னியோட சந்தோஷமா பிள்ளை குடும்பம் நடத்தணுமின்னு ஆசைப்பட்டா மட்டும் போறாது. வாழ்ந்து காட்டறதுதான் வாழ்க்கை. வாயால் உபதேசிக்கற தில்லே!சுதந்திரம் வேணுமின்னு விறைப்பா வாழ்ந்தா பொண்ணு விவாகரத்துக்குப் போறதையும் வேடிக்கைதான் பார்க்க முடியும்! வேர்கள் வெளியே தெரியாம அடக்கமா இருந்தாதான் குடும்பம் என்ற விருட்சம் செழிப்பா வளரும்.

‘எல்லாவற்றுக்கும் அதிஷ்டானமா யிருக்கிறவள்’ என்கிறது அடுத்த வரி. அனைத்து சக்திகளும் தேவியிடமே அடங்கியிருக்கு. ‘க்லீம்’ என்று மட்டுமே ஜபித்தவனுக்கு காசி ராஜகுமாரியைக் கல்யாணம் பண்ணி வைச்சு, ராஜ்யத்தையும் மீட்டுக் கொடுத்தா. ‘ஹ்ரூம்’ என்று சொன்ன சத்தியவிரதனை பெரிய பண்டிதனாக்கினா.அவளை மனசு உருகிப் பிரார்த்திச்சா போதும். நினைச்சது நடக்கும். சில காரியம் நடக்கத் தாமஸ மாகலாம். அதுக்காக முயற்சியைக் கைவிட்டுடப் படாது. காரியம் பெரிசாயிருக்கும். பத்தாயிரம் ரூபாயைக் கையிலே வைச்சுண்டு பங்களா
கிடைக்கலையேன்னு பெருமூச்சு விடலாமா? பணம் சேர்க்கற மாதிரி புண்ணியமும் சேரணும்.

சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் எல்லாம் அவகிட்டதான் ஒடுங்கிக் கிடக்கு.

‘சத்யமே வடிவானவள்’ என்கிறது அடுத்த ஸ்லோகம். காளிதாசன் முட்டிண்டான். அவனைக் காவியங்கள் படைக்க வைச்சா. ஒரு தடவை பவபூதிக்கும், காளிதாசனுக்கும் தர்க்கம் நடந்தது. யார் கவிதை உசந்ததுன்னு இரண்டு பேரும் வாதம் பண்ணினா! கடைசியிலே எல்லாப் புலவர்களுமா சேர்ந்து ஒரு தீர்ப்பு சொன்னார்கள். ரெண்டு பேர் பாட்டை எழுதின ஓலைச்சுவடிகளையும் அம்பாள் பாதத்திலே அர்த்த ஜாம பூஜையிலே வைச்சுடணும். மறுநாள் தேவி சொல்கிற தீர்ப்பை ஏத்துக்கணுமின்னா.

இரண்டு பேரும் சம்மதிச்சு ஏடுகளை பயபக்தி யோட சக்தியோட திருவடிகளிலே வைச்சா. மறுநாள் ரெண்டு பேருக்கும் ரொம்பப் பதட்டம். தீபாராதனை காட்டி ஓலைக் கட்டை எடுத்துண்டு வந்து கொடுத்தார் அர்ச்சகர்.

அதுலே பவபூதியோட ஏட்டிலே ‘இது ஒசத்தி’ங்கற வார்த்தை யைப் பார்த்ததும் காளி தாசர் கண்ணாலே ஜலம் விட்டார். “அம்மா! இப்படிச் சொல்லிட் டியே!” ன்னு சாப்பிடாம உருகினார். ராத்திரி களைப்பிலே கண் அசந்துட்டார்.கனவிலே வந்த காளிகாம்பா “அட பைத்தியமே! பவபூதி கவிஞன். நீ நானில் லையா? உனக்குள்ளே இருந்து நானே எழுதறப்போ அதை ஒசத்தின்னா அது தற்பெருமையாகாதா? இதுபுரியலியே”ன்னா.

காளிதாசர் சிலிர்த்துப் போயிட்டார். சத்தியம் எங்கெல்லாம் இருக்கோ அங்கேயெல்லாம் அவ இருக்கா. அரிச்சந்திரன் சந்திரமதியை வெட்ட அரிவாளை ஓங்கறப்போ அங்கே கழுத்து துண்டாகலே. பூமாலையா விழுந்தது. அதனாலே பொய்சத்தியம் பண்ணப்படாது.தவதத்தனின் பிள்ளை உதத்தியன் தகப்பனார் செய்த பாவத்தாலே ஊமையாப் பொறந்து காட்டிலே பதினாலு வருஷம் வாழ்ந்தான் . அவன் பொய் சொல்றதில்லேன்னு உறுதியாயிருந்தான். அதனாலே அவனை எல்லாரும் சத்தியதபன் என்றே கூப்பிட்டா. ஒரு நாளைக்கு ஒரு வராகத்தை ஒரு வேடன் துரத்திண்டு வந்தான். பன்றி உடம்பிலே அம்பு பட்டு இரத்தம் வழியறது.

அதைப் பார்த்து “ஹ்ரூ ஹ்ரூ”ன்னு கத்தினான் சத்தியதபன். பன்றி ஒரு புதருக்குள்ளே போய் மறைஞ் சுண்டது. வேடன் இரைக்க, இரைக்க வந்து ‘அடிபட்ட பன்றி எந்தப் பக்கம் போச்சு’ன்னு கேட்டான். பன்றி யைக் காட்டிக் கொடுத்தா அது இம்சை! தெரியா துன்னா அது சத்தியவிரத பங்கமாயிரும்.

“ஹ்ரு, ஹ்ரூ”ன்னு மறுபடி கூச்சலிட்டான் சத்தியதபன். “ஹ்ரூம்” என்கிறது ஸ்ரீவித்யா பீஜாக்ஷர மில்லையா? தேவி பிரத்யட்சமாகி எல்லா சாஸ்திரங் களும் அவனுக்கு வரும்படி அருள்புரிஞ்சா. ஏன்னா அவள் சத்திய சொரூபிணியாச்சே!சத்தியதபன் மகாபண்டிதனாகி நாலு வேதங் களையும் மழையா பொழிஞ்சான். சத்தியத்துக்கு முதுமை கிடையாது. என்னிக்கும் அதுக்குப் பதினாறு வயசு. நாமளும் சத்தியத்தையே பேசி வாழ்க்கையிலே முன்னேறது தான் சாஸ்வதமான ஜெயம்.

‘ஸமா க்ருத்யை’ என்கிறது அடுத்த அர்ச்சனா ஸ்லோகம். சிறியவா, பெரியவா, நல்லவா, கெட்டவா எல்லாருக்கும் சூரிய சந்திர வெளிச்சமும், காத்தும், மழையும் பொது. இவை பேதம் பார்க்கறதில்லே! அக்னி யார் தொட்டாலும் சுடும், யார் பத்த வைச்சாலும் எரியும். அம்பாளும் அப்படித்தான். எல்லா அவயவங் களும் எப்படி அவளுக்கு அந்தந்த வடிவுப்படி அமைஞ்சிருக்கோ, அதே மாதிரி அவளும் எல்லாரிட மும் சமமா கருணையைப் பொழியறா.

மஹிஷனுக்கும், சும்ப, நிசும்பனுக் கும்,சண்ட முண்டனுக்கும், ரக்த பீஜனுக்கும், தூம் ராக்ஷனுக்கும் கூட காட்சி தந்திருக்கா.

சௌந்தர்யலஹரியிலே 41-ஆவது ஸ்லோகத்திலே கூட ‘ஸஹஸமயயா லாஸ்ய பரலா’ன்னு வரும். அம்பாள் சிவனுக்கு சமமா நர்த்தனம் ஆடுகிற வள். எந்தச் செயலையும் அவள் சிவனுக்கு சமமா செய்கிறவள் என்கிறதாலேதான் அவளுக்கு ‘ஸமயா’ன்னு பேர்.

சுக்ராச்சாரியார் தன்னோட பெண்
தேவயானிக்கு, மாப்பிள்ளை யயாதி துரோகம் செஞ்சதா நெனச்சார்.‘ அதனால் “உனக்கு கிழட்டுத் தன்மை வரட்டும்’’னு சபிச்சுட்டார்.

தேவயானி தகப்பனார் கிட்டே அழுதா. மாப்பிள்ளையைக் கூப்பிட்டு புத்தி சொல்லுவேள்னு பார்த்தா இப்படி சாபம் கொடுத்துட்டேளே”ன்னு வருத்தப்பட்டா.

சுக்ராச்சாரியார் சாப விமோசனம் சொன்னார்.

‘‘யாராவது மாப்பிள்ளையோட வயோதிகத்தை வாங்கிண்டா, கொடுத்தவாளோட இளமை யயாதிக் குத் திரும்பவரும்”னார். யயாதி ஒவ்வொருத்தர் கிட்டயும் ‘இளமை’யை கொடுத்து உதவும்படி கேட்டார். ஒருத்தரும் சம்மதிக்கலே!

யயாதியின் இரண்டாவது சம்சாரமான சர்மிஷ்டை யோட பிள்ளை பூரு. அவன் தகப்பனாருக்கு தன்னோட வாலிபத்தைத் தந்தான். ‘மரணம் எப்ப வேணா வரலாம். உயிர் கொடுத்த தகப்பனாருக்கு உயிரோட இருக்கற போதே கேட்டதைக் கொடுக்கற பாக்கியம் வந்திருக்கே’ ன்னு முழுமனசோட கொடுத்தான்.

தகப்பனாருக்காகக் கல்யாணம் பண்ணிக்காம ஆயுசு முழுக்க பிரம்மாச்சாரியா வாழ்ந்தவர் பீஷ்மர்.

பூரு முதுமையை வீணாக்கலே. அப்போ
துவாபரயுகம். nக்ஷத்ராடனம் புறப்பட்டார். வழியிலே நாரதரை சந்திச்சார். பூரு அவர்கிட்டே “அம்மையப் பனை தரிசனம் பண்ணணுமே’’ன்னு சொன்னார்.திருசூரிலேயிருந்து இரிஞாலக் குடா போற மார்க்கத்துலே சேர்ப்பு கிராமத்துக்குப் பக்கத்திலே இருந்த ஒரு இடத்தைக் காட்டி’ “இங்கே தபஸ் பண்ணு. நீ நினைச்சது நடக்கும்’’னார் நாரதர்.

பூரு அந்த இடத்துலே தபஸுக்கு உட்கார்ந் துட்டார். பூரு தவஸ் பண்ணின தாலே அந்த இடத்துக்கு ‘பூருவனம்’னு பேர் வந்தது. இப்போ ஜனங்க வாய் வழக்கிலே மருவி பெருவன மின்னு ஆயிடுத்து.

பூரு ரொம்ப காலம் தபஸ் பண்ணி அர்த்த நாரீஸ் வரரை தரிசனம் பண்ணினார். அவா மறைஞ்ச பிறகு அங்கே ரெண்டு சிவலிங்கங்கள் ஒரே பீடத்திலே இருந்ததாம். யயாதிக்கு வாழ்க்கை சலிச்சு பூருகிட்டே இளமையைத் திருப்பிக் கொடுத்து, ராஜாவாக்கி பட்டம் கட்டிட்டார். அங்கே பெரிய கோவிலைக் கட்டினான் பூரு.

ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி ராவண சம்ஹாரம் முடிஞ்சு திரும்பறச்சே பெருவனத்திலே ஒரு நாள் தங்கி இரட்டை யப்பர் மகா தேவருக்கு பூஜை பண்ணியிருக்காருன்னு பார்க்க புராணத்திலே இருக்கு. அப்போ கங்கா, யமுனா, நர்மதா, காவேரி நதிகளோட தீர்த்தத்தை வரவழைச்சு அபிஷேகம் பண்ணியிருக்கார் அவர். கிருஷ்ணாவதாரத்திலும், பலராமரோடு வந்து வழிபட்டி ருக்கார். வசிஷ்டரும், விஸ்வாமித்திரரும் வந்து ஆராதிச்சிருக்கா.

ஏன்னா அம்பாள் பிரபஞ்சமெல்லாம் படைச்சவ. அவளை காமேஸ்வரரோட வழிபடறது நிறைய பலத் தைத் தரும். அவளுக்கு ஈடு இணை சொல்ல முடியுமா? அவ எல்லாத்தையும் விட ஒசந்தவ.தக்ஷப்ரஜாபதி துஷ்டன்னு அம்பாளுக்குத் தெரியாதா? ஆனாலும் நீதான் மகளா வரணுமின்னதும் சம்மதிச்சு வந்தா. ஆனா புருஷனுக்கு அவிர்ப்பாகம் தரப்படலேன்னதும் யாக குண்டத்துலே பாய்ஞ்சுட்டா.

சதிதேவியோட சரீரத்தை பரமேஸ்வரன் எடுத்துண்டு கோர தாண்டவம் ஆடினார். தேவியோட சரீரத்தை சுதர்ஸனச் சக்கரத்தாலே சேதிச்சார் பெருமாள். இருதயம் விழுந்த இடம் சிதா பூமிங்கறது சிவ புராணம். உடனேசிதை அடுக்கி அப்பன் தகனம் பண்ணியிருக்கார். அந்த இடம் ருத்ர பூமியாச்சு. இந்த ஹார்த்பீடத்துலே தேவியோட திருநாமம் ஜெயதுர்க்கா.

அவள் பூரணி. அன்ன பூரணியா விஸ்வநாதருக்கு பிiக்ஷயிட்டவ. அதனாலே ஈஸ்வரன் கையிலே ஒட்டிண்டிருந்த பிரம்ம கபாலமே கழன்று விழுந்துடுத்து.தேவதத்தன், தனஞ்சயன் ரெண்டு பேரும் கூடப் பொறந்தவா. ஆனா தேவத்தன் மண்ணைத் தொட்டாலும் பொன்னாச்சு. தனஞ்ஜயனுக்கு எதுவும் விளங்கலே! பசிதாங்கமுடியலேயே,ன்னு அழுதான். தாயார் பொறுப்பாளா? சொப்பனத்திலே தபஸ்வியா வந்தா.

“குழந்தே! போன ஜென்மத்துப் பாவம். அன்ன பூரணியை ஸ்தோத்திரம் பண்ணு”ன்னா. அவனும் அப்படியே செஞ்சு பெரிய பணக்காரனாயிட்டான். அவன் தான் அன்னபூரணியைக் காசியிலே பிரதிஷ்டை பண்ணிக் கோவிலும் கட்டினான்’னு அகஸ்தியர் வனவாசம் வந்த ராமபிரானுக்கு இந்தக் கதையைச் சொல்லி, அன்ன பூரணியை நினைச்சுண்டிருந்தா பசி பிரச்சினையே வராதுன்னு, அன்ன பூரணி மந்திரத்தை உபதேசிச்சாராம்.

இதை கிருஷ்ணாவதாரத்திலே பஞ்ச பாண்டவாளுக்குச் சொல்லியிருக்கார் கிருஷ்ணர். அவா அன்ன பூரணி விரதத்தை கடைபிடிச்சி ருக்கா. ‘நாளைக்குக் காலையிலே சூரியனை ஸ்தோத்திரம் பண்ணு’ன்னா அம்பாள். அதனாலே தான் அவளுக்கு அட்சய பாத்திரம் கெடச்சது.

சிவனை மதிக்காத தட்சயாகத்திலே சூரியன் பல்லை இழந்தான். பெருமாள் சுதர்ஸனச் சக்கரத்தைப் பறிகொடுத்தார். நான்கு கொம்பு களும், ரெண்டு தலைகளும், ஏழுகைகளும், மூன்று கால்களும் கொண்ட அக்னி கிளியாகும்படி சபிக்கப்பட்டான்.

“ஆட்டை வாகனமாக் கொண்டவனே! சுயமா சிந்திக்காம மத்தவா சொல்றதுக்காக வந்தியா”ன்னு சீறினார் சிவன். தென் கிழக்கு திசைக்கு அதிபதியான அக்னி திருவாரூக்குப் பக்கத்திலேயுள்ள நன்னிலத்துக்கு வந்தான். காற்று அக்னியைக் கிரனூர் சிவ லோக நாதர் கோவிலுக்குக் கூட்டிண்டு போச்சு. சிவ லோக நாதர் சுயம்புலிங்கம். க்ஷீராம்பிகை அருளாலே சுய உருவம் பெற்றான் அக்னி. தேவியோட கோபம் க்ஷணத்திலே மறைஞ்சுடக் கூடியது.பற்றற்றவள் என்கிறது அடுத்த அர்ச்சனா நாமாவளி. இந்த லோகத்திலே முக்கால் வாசி கடல்; கால் வாசி தான் நிலம் என்கிறது விஞ்ஞானம். ஆனா கடலுக்கு மேலேயும் ஆகாயம் இருக்கு. நம்ம வாசஸ்தலத்தைப் பூட்டிப் போட்டிருந்தாக் கூட தூசியடையறது. திறந்துகிடக்கிற ஆகாயம் நிர்மலமாயிருக்கு. ஆகாயம் மாதிரியானவ அம்பாள். அவளுக்கு நல்லவா, கெட்டவா, ஏழை, பணக்காரா, அழகானவா, குரூபி என்கிற வித்தியாச மெல்லாம் கிடையாது. யார்கிட்டேயும் பற்றும் கிடையாது. அதனாலேதான் ஆத்மாவிலே அவ அணுவா பரவியிருக்கா. யாருடைய ஜீவனும் வேதனைப் படுகிறமாதிரி பேசவோ, நடந்துக்கவோ கூடாது.ஆத்மாவுக்கு அழுக்கு கிடையாது. சோம்பேறித் தனமும் இல்லே. இயங்குன்னா உடனே செயல்படும் ஆத்மா. நாமபக்தி காட்டினா பரதேவதை நமக்கு அருள் புரிவா.ஸத்வம், ரஜஸ், தமஸ் என்கிற மூன்று குணங்களும் அம்பிகைக்கு உண்டு. 1803-ஆம் வருஷத்தில் ஈரோடு அருகே இருந்த பவானியில் அப்போதைய கோவை கலெக்டர் வில்லியம் காரோ என்கிறவர் முகாமிட்டிருந்தார். பவானிநதி காவேரியுடன் சங்கமமாகிற இடத்துக்கு அருகே விடுதியில் அவர் தங்கி இருந்தார். அம்பாள் வேத நாயகியோட மகிமையை தன் கீழே வேலை பார்ப்பவர்கள் சொல்லச் சொல்ல அப்பேற்பட்ட அம்பாளை நாமும் தரிசனம் பண்ணணும்னு வில்லியம் நெனைச்சார். தன் ஆசையை தாசில்தார் கிட்டே சொன்னார். தரிசில்தார் கோவிலோட கிழக்கு மதிளிலே ஒரு துவாரம் போட்டு அம்பாளை தரிசிக்க வழிபண்ணிக் கொடுத்தார்.

ஐப்பசி மாதம். மழை கொட்டறது. நடுராத்திரி. கலெக்டர் தன்னை மறந்து தூங்கிண்டிருக்கார். யாரோ தட்டி எழுப்பறா. அரைக் கண்ணை முழிச்சுப் பார்த்தார். ஒரு சின்னப் பெண் அவர் கையைப் பிடிச்சு தரதரன்னு இழுத்துண்டு போறா. எதுக்குன்னு தெரியாட்டாலும் இரும்பைக் காந்தம் கவர்ந்த மாதிரி பின்னாலே போறார்.பெரிய சத்தம் கேட்டது. அந்த பழைய பயணிகள் விடுதி மடமடன்னு சரிஞ்சு விழறது. ஒரு விநாடி தாமதிச்சிருந்தாலும் என்ன ஆகியிருக்குமின்னு திகைச்சுப் போயிட்டார் வில்லியம்.

அப்புறம், ‘அந்தப் பொண்ணுக்கு நன்றி சொல்லலாம், நடுராத்திரியிலே அவளுக்கு இந்தக் கட்டடம் இடியுமின்னு எப்படித் தெரிஞ்சதுன்னு’ கேட்க தேடினார். உரக்க அழைச்சுப் பார்த்தார். அறிஞ்ச பிறகு கண்ணிலே தென்படுவாளா? வந்தது தேவின்னு கூட இருக்கிறவா புரியவைச்சா.

11-1-1804 அன்னிக்கு தந்தத்திலே பல்லக்கு பண்ணி காணிக்கையாக் கொடுத்தார் வில்லியம். இது அம்பாளோட சத்வகுணத்துக்கு ஒரு சின்ன உதாரணம்.

அம்பல் என்கின்ற பிரம்மபுரியில் அருள் புரிகின்ற பிரம்மபுரீஸ்வரரை தரிசிக்க ஆகாயம் வழியாகப் போய்க் கொண்டிருந்தார் துர்வாச முனிவர். மதலோலைன்னு ராட்சசமங்கை ஒருத்தி அவரை வழிமறிச்சா. என்ன வேணுமின்னு கோபமா கேட்டார். நீங்க எனக்கு பர்த்தாவாகணுமின்னா.

“பக்திக்கு எதிரியே காமம்தான்! குழந்தை வேணுமின்னு தானே ஆசைப்படறே! என் ரஜோ குணமும், உன் தாமஸ குணமும் சேர்ந்து இப்பவே ரெண்டு குழந்தை பிறக்கும்”னு சொல்லிட்டுப் போயிட்டார். இது வரம் மாதிரியிருக்கற சாபம்!

மதலோலை பயந்து போய் கீழே இறங்கினாள். அதுக்குள்ளே ஒரு குழந்தை பிறந்துடுத்து. அம்பரத்திலே (ஆகாயம்) பொறந்ததாலே அதுக்கு அம்பரன்னு பேராயிடுத்து. அடுத்தாப்பிலே பொறந்த சிசுவுக்கு அம்பன்னு பேர் வைச்சா.

இரண்டு பிள்ளைகளும் மடமடன்னு வளர்ந்தா. குழந்தைகளை சுக்ராச்சார்யார் கிட்டே படிக்க அனுப்பினா மதலோலை. இரண்டு பேரையும் சிவனை நோக்கி தபஸ் பண்ணச் சொன்னார் அசுரகுரு அவாளும் கடுமையா தபஸ் பண்ணினா. சிவன் பிரத்யட்சமானார். நிறைய ஆயுள், சுகம் , பலம் எல்லாம் வாங்கிண்டா. கடைசியிலே ஒரு சந்தேகம்.

“எங்களுக்கு யாராலே மரணம் வரும்னு” கேட்டா. “நீங்க ஒற்றுமையா இருக்கிற வரை உங்களுக்கு மரணம் சம்பவிக்காது’’ன்னு சொன்னார் பசுபதீஸ்வரர்.

அவ்வளவு தான். வழக்கம் போல எல்லா உலகத்தையும் ஜெயிச்சா. அஷ்டதிக் பாலர்களை ஓட ஓட விரட்டினா. தங்களை விட யாருமே பலசாலியாகக் கூடாதுன்னு ரிஷிகளை தபஸ் பண்ண விடாம இம்சிச்சா. எல்லாத்தையும் விட அழகான ஸ்த்ரீகளை கவர்ந்துண்டு வந்தது தான் பெரிய பாவமாயிடுத்து.

“இப்படி வரம் கொடுத்துட்டேளே”ன்னு தேவர்கள் ரிஷிகளெல்லாம் கைலாசத்துலே வந்து முறையிட்டா. ஸ்வாமி இடது பக்கம் திரும்பினார்.


சக்திக்கு ஏற்கெனவே கோபம். தன் தமை யனைப் பார்த்தா. சகோதரியோட எண்ணத்தைப் புரிஞ்சுகிட்டு வயோதிக பிராம்மணனாக மாறினார் மகாவிஷ்ணு. அம்பிகை அற்புத ரூபத்தோடு தமைய னோடு நடந்தா.

ரெண்டு பேரும் அம்பரன் அரண்மனைக்குப் போனா. “பெரியவரே! இவ உங்க உங்க குமாரியா?”ன்னு விசாரிச்சான் அம்பரன்.

“அம்பரா! நான் நிறைய சமாசாரத்திலே உனக்கு விட்டுக் கொடுத்திருக்கேன். இந்த அழகி எனக்குத்தான். நீ பேசாம இரு”ன்னான் அம்பன்.அம்பாள் நினைச்சது நடந்தது. இரண்டு பேருக்கும் தர்க்கம் வலுத்தது. அந்தப் பெண் கிட்டேயே கேட்போமின்னு சொல்லி “சுந்தரி! எங்க ரெண்டு பேரிலே யாரை உனக்குப் பிடிச்சிருக்கு?” ன்னு கேட்டா.

“என் தகப்பனார் சொல்கிறபடி செய்வேன்”னா தேவி.

ஸ்ரீமந்நாராயணன் “ரெண்டு பேர்லே யார் பலசாலியோ அவாளுக்குப் பெண்ணைக் கொடுத்துடறேன்”னார். சிவனோட நிபந்தனையை மறந்து ரெண்டு பேரும் மல்யுத்தம் பண்ணினா. முட்டி மோதிண்டா. கடைசியிலே அம்பன் சதைப் பிண்டமாய் விழுந்தான். அம்பரன் கொக்கரித்தான்.

வைகாசி விசாகம். செவ்வாய்க்கிழமை. கன்னியை அணைக்கக் கையை நீட்டினான் அசுரன். தேவி மண்ணையும், விண்ணையும் நிறைத்தபடி பயங்கர துர்க்கையானாள். அம்பரன் எருமைக் கடாவாகி தன் கூரிய கொம்புகளால் காளிதேவியைக் குத்த வந்தான்.

ஆனா, அம்பரன் காளி தேவியோட வாளால் வெட்டுப்பட்டான். அப்படியும் எழுந்தவனை தரையில் தள்ளி, இடது பாதத்தை அவன் மார்பில் அழுத்தி சூலா யுதத்தாலே அவன் குடலை எடுத்து, மாலையாப்
போட்டுண்டா. இந்த இடத்திலே அம்பிகையோட ரஜோ குணம் வெளிப்பட்டது. பக்தாளோட தேவைதான் அவளோட ஆசை.


திருவாரூருக்குப் பக்கத்திலே தியானபுரம்னு ஒரு சின்ன கிராமம். கலியுகத்திலே இங்கே சிவன் தியானம் பண்றதா சொல்லப்படறது.

வல்லாள மகாராஜா பெரிய சிவபக்தர். பட்ட மகிஷி குழந்தையை சுமந்திண்டிருக்கா. ராணிக்குத் தன் பிள்ளை சிரஞ்சீவியாயிருக்கணுமின்னு ஆசை. அதிலே தப்பில்லே! ஆசை பேராசையானா? அந்தக் காலத்திலே யுத்தத்துக்குப் போகாம இருக்க முடியாது. யுத்தத்திலே தன் பிள்ளை உடம்பிலே
யிருந்து சிந்தற ஒவ்வொரு துளி ரத்தத்திலே யிருந்தும் அவனைப் போலவே ஒரு குமாரன் உண்டாகணு மின்னு சோமவாரம் தோறும் சிவனுக்கு அபிஷேகம் பண்ணி, லட்சார்ச்சனை செய்தா.இரத்த பீஜன் இப்படித்தான் வரம் வாங்கினான். அழியாம இருந்தானான்னு யோசிக்கலை! விபரீத ஆசை! அத்தனை பிள்ளைகளை பிரசவ சிரமம் இல்லாம பார்க்க நினைச்சா. அத்தனை பேரும் சேர்ந்து உலகத்தையே ஜெயிப்பான்னு கணக்குப் போட்டா.

ராஜாவையும் வற்புறுத்தி காட்டுக்குப் போய் தபஸ் பண்ண வைச்சா. வரம் கெடச்சது. இயற்கையை மாத்த மனுஷாளாலே முடியுமா? தேவர்களெல்லாம் அம்பாள் கிட்டே முறையிட்டா. முளையிலே கிள்ளலேன்னா இன்னொரு இரத்த பீஜனாயிடுவானேன்னு பார்வதியும் யோசிச்சா. வரம் கொடுத்தது புருஷன். முளையிலே கிள்ளாட்டா கோடாலியல்லவா தேடணும்!

ரத்தம் சிந்தினாதானே! அந்தக் குழந்தை பிறந்து நிறையப் பேரைக் கஷ்டப்படுத்தி பாவத்தைச் சேர்க்காம தடுக்க நினைச்சா.

பாண்டிய நாட்டிலேருந்து ஆயிரம் சுகப்பிரசவம் பார்த்த மருத்துவச்சி வர ஏற்பாடு பண்ணியிருந்தார் ராஜா. அடுத்த வாரம்தான் குழந்தை பிறக்கும்னு உள்ளூர் மருத்துவச்சி சொல்லியிருந்தா. ஆனா உமாதேவியோட திருவருளாலே ராணிக்கு இடுப்புவலி தொடங்கிட்டது!

பாண்டி நாட்டு மருத்துவச்சி வடிவத்திலே வந்தா அம்பாள். கையிலே மருந்துப்பெட்டி. பின் கொசுவக்கட்டு. ராஜா நிம்மதியோட அவளை வரவேற்றார்.

அறைக்குள் அறை. கூட இருந்த பெண்களை அடுத்த அறைக்குப் போகும்படியா உத்தரவிட்டா ஈஸ்வரி. அம்பாள் கட்டளையை யாரால் மறுக்க முடியும்? கதவைத் மூடித் தாளிட்டாள். 18 கை காளியாக மாறிய தேவியைப் பார்த்து மூர்ச்சையாகி விட்டா அரசி.

மகாராணியைத் தூக்கி மடியில் போட்டுக் கொண்டா. விநாயகரும், குமரனும் கிடந்த மடியாச்சே! அது சோமவார அபிஷேக பலன்! குழந்தையை அதன் ஒரு சொட்டு உதிரமும் சிந்தாதபடிக்கு எடுத்து இடது கையிலே வைச்சுண்டா.

இதற்குள் அடுத்த அறையிலிருந்த உள்ளூர் மருத்துவச்சிகள் ராஜாகிட்டே போய் நடந்ததைச் சொன்னா. இதென்ன, ஒருத்தி கூட உதவிக்கு வேண்டாமான்னு ராஜா திகைச்சார். ஏதோ விபரீதம்னு புத்தி சொல்லித்து. கதவை உடைச்சு உள்ள போனா, ருத்ர காளியா நின்னா அம்பாள்!

‘தாயே, மன்னிச்சுடு’ன்னு கால்லே விழுந்தார் ராஜா. அவரையும் மிதிச்சு காலடியிலே கிடத்தினா. குழந்தை கத்தியை எடுத்த மாதிரி ராஜா - ராணியோட புத்தி வேலை செஞ்சது. சிவபெருமான் வந்து அம்பாளை சாந்தப்படுத்தி ராஜாவுக்கு உயிர் பிச்சை கொடுத்தார்.

‘பெரிய’ நாயகியான உமாதேவி, ராணியையும் எழுப்பினா. சாதாரண வீரனா குழந்தையை மாத்தி ராஜாகிட்டே ஒப்படைச்சா. பெரிய நாயகி அம்மன் இன்னிக்கும் இடது கையிலே குழந்தை, மடியிலே ஒரு பெண், காலடியில் வல்லாள மகாராஜா என்று தான் காட்சி கொடுக்கறா. இது அம்பிகையோட தாமஸகுண வெளிப்பாடு.


விபரீதமா ஆசைப்படக் கூடாதுங்கறதை உணர்த்தறது அம்பாளோட தர்மஸ வடிவம் தான். காளி, துர்க்கைங்கறதெல்லாம் கௌரியாயிருந்து இரத்த பீஜனை சம்ஹாரம் பண்ண முடியாது.

காய்கறி நறுக்கணுமின்னா அருவாள் மணையோ, கத்தியோ வேணும். தூங்காம இருந்தா தேக ஆரோக்கியம் கெட்டுப்போகும் தூங்கவைக்க நித்திரா தேவியா வரா.

‘ஸகலேஷ்டதாயை என்கிறது அடுத்த ஸ்லோக நாமா. இதற்கு விரும்பியதையெல்லாம் அளிப்பவள் என்கிறது பொருள். அதற்காக தேவியை ஸ்தோத்தரித்து விட்டுப் பேராசைப் படலாம் என்று அர்த்தமில்லை!

தெளிந்த சிந்தையுடையவர் எந்தெந்த உலகத்தை மனதால் சங்கல்பிக்கின்றாரோ, உரிமையுள்ள, போகங்களை விரும்புகின்றாரோ அவற்றை அடைவதில் தடையிருக்காது என்று முண்டோப நிஷதமும் சொல்கிறது.

அதுக்காக குழந்தை கத்தியைக் கேட்டு அடம் பிடிக்கிறதென்று கொடுக்க முடியுமா?

தாக்ஷhயணியோட நாபி விழுந்த இடம் காஞ்சிபுரம், அங்கே ‘ஆகாசபூ பதி’ன்னு ஒரு ராஜா. அவன் குழந்தை பாக்கியம் இல்லாமல் அம்பாளைப் பிரார்த்திச் சான். காமாக்ஷி கிருபையாலே பிள்ளையார் அம்சமா ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு துண்டீ ரன்னு பேர் வைச்சா. பேர் சுட்டற விழாவன்னிக்கு பெரிசா அன்னதானம் நடத்தினார் ராஜா.மளிகை சாமானெல்லாம் தரமா இருக்கான்னு ராணி சோதிச்சா பயத்தம்பருப்பு மேலாக இரண்டு சாவியா இருந்ததைப் பார்த்துட்டா சாவின்னா விரலாலே நசுக்கினா உடைஞ்சுடும். ஒரு வேளை மொத்தமும் இப்படியிருந்துட்டா என்ன பண்ணற துன்னு அடியிலேயிலே கைவிட்டு ஒரு கை அள்ளிப் பார்த்தா நன்றாகத்தான் இருந்தது என்பதால் திருப்தியாயிட்டா.

ராணி அடியிலே கைவிட்டு அளைஞ்சப்போ மோதிரத்திலுள்ள ஒரு தங்க முத்து பருப்பிலே விழுந்துடுத்து. தங்கத்திலே முத்துக்களைச் செஞ்சு ஸ்வஸ்திக் மோதிரமா போட்டுண்டிருந்தா. ராணியும் விழா மும்முரத்துலே அதை கவனிக்கலே!

பயத்தம் பருப்பை வேகவைத்து வெல்லப் பாகில் போட்டுக் கிளறி கூட, பச்சை கற்பூரம், கிராம்பு, ஏலம், ஜாதிக்காய் எல்லாம் போட்டு பூரணமாக்கி கொழுக்கட்டை பண்றது விசேஷபட்சணம். அருமைப் பிள்ளையோட பேரிட்டுக் கல்யாணமாச்சே! அதைச் செய்யச் சொன்னார் ராஜா. தங்க முத்து வெல்லப்பாகிலே பரிசுத்தமாகி பூரணமாக கரண்டியிலே அடிபடாம வெள்ளை மாவுக்குள்ளே உட்கார்ந்துடுத்து.

அன்னதானத்துலே சாப்பிட அம்பாளும் வந்திருந்தா. அந்த தங்க முத்து இருந்த மோதகம் அம்பாள் இலையிலே விழுந்தது. அம்பிகையும் அதை முழுசா முழுங்கிட்டா. ஒண்ணு கொடுத்தா ஒன்பது தரவளில்லையா? காஞ்சிபுரத்திலே தங்க மழையைப் பொழிய வைச்சா.

துண்டீரன் ஆட்சி பண்ணினதாலே இந்தப் பகுதிக்கு தொண்டை மண்டலமின்னு பேர் வந்தது. காஞ்சிபுரம் போனா துண்டீரர் சன்னதியைப் பார்த் துட்டு வரலாம். துண்டி கணபதி ஐஸ்வர்யத்தைத் தரக்கூடியவர். அம்பாளின் இருபாகடாட்சத்துக்கு இது சின்ன உதாரணம்.

பஞ்சதசாக்ஷரியின் பதின்மூன்றாவது எழுத்தான
கார வடிவினள் என்கிறது அடுத்த நாமாவளி. ‘க’ என்றால் பிரம்மா, ஆ (க+ஆ=கா) என்றால் மகாவிஷ்ணு வையும். ‘ம’ என்கிற எழுத்து மகேஸ்வரனையும் குறிக்கிறது. ‘காம’ என்கிற வார்த்தை மும்மூர்த்தி களையும் குறிக்கிறது. மும்மூர்த்திகளையும் ஆட்சி செய்கிறவள் காமாக்ஷி என்கிற திருநாமத்தைப் பெற்றாள்.‘கா’ன்னா கலைமகள். ‘மா’ன்னா மகாலக்ஷ்மி. ‘அக்ஷி’ன்னா விழிகளாகக் கொண்டவள்’னு ஒரு அர்த்தம் வரது. சரஸ்வதி, திருமகள் இரண்டு பேரும் காமாட்சியோட இரண்டு கண்களா சொல்லப் படறது. ‘காம’ன்னா ஆசை. அடியார்கள் ஆசைப்படறதை நிறைவேத்தறவள் அம்பாள்.கல்யாணி, காந்திமதி, கற்பகவல்லி, கமலாம் பிகை, கன்யாகுமாரி, காயத்ரி, கனகவல்லி, இப்படி பெயர்கள் வித்தியாசப்படலாம். ஆனால் அவள் அருளில் எந்த பாரபட்சமுமில்லை.

காவியங்களாய் விளங்குகிறவள் என்கிறது அடுத்த அர்ச்சனை. வால்மீகி, காளிதாசன் போன்றவா காவியம் படைச்சிருக்கா. மனுஷாளையே காரியம் ஆகணுமின்னா இந்திரன் சந்திரன்னு வர்ணிக்கிறோம். அம்பாள் சகல கலாவல்லி!

“மாணிக்க வீணா முபலாலயந்தீம்” என்று தொடங்கும் சியாமளா தண்டகத்தில் கவி, அம்பிகை மடியிலிருக்கிற வீணையில் மாணிக்கம் இழைத்திருக் கிறதா பாடறார். மஹேந்திர பர்வதத்தோட சிகரம் நீலமாயிருக்கும். அதுபோல பிரகாசம், ஆனா மலை போல கடினமாயில்லாம மென்மையான சரீரங்கறார்.

“ஜய லீலா ஸுகப்ரியே”. “விளையாட்டுக்காக இருக்கும் கிளியிடம் பிரியமுள்ளவளே! நீ என்றும் எதிலும் ஜெயிப்பவள்! அமிர்த சாகரத்தின் மத்தி யிலே, மனசைக் கவரக் கூடிய சிந்தாமணித் தீவிலே, செழித்த உயரமான வில்வ வனத்துக்குள்ளே,
கற்பக விருட்சங்களோடு கூடின கதம்பச் சோலையை வாசஸ்தலமாகக் கொண்டிருக் கிறவளே!” என்று எப்படியெல்லாம் வர்ணிச்சி ருக்கார்!

பாதாதி கேசம் ஒண்ணு விடாம வர்ணிச்சு வணக்கம் சொன்னப்பறம்தான் காப்பாத்து
வியான்னு கேட்கறார். இந்த மாதிரியான காவியங் களில் அம்பாள் லயிச்சிருக்கறதா சொல்லப்படறது.

காமேஸ்வரரோட மனசை ஆகர்ஷிக்கறதா அடுத்த நாமா சொல்றது. காமேஸ்வரரோட பிராண நாடியே அம்பிகைதான்! காமேஸ்வரராலே ஆலிங்க னம் செய்யப்பட்டவள் தேவி. தன்னுடைய இடது தொடையிலே தேவியை உட்கார்த்தி வைச்சிண் டிருக்கார் அவர்.

மன்மதனை நெற்றிக் கண்ணாலே எரிச்சவர் சிவன். பிரம்மாவோட தலையை நகத்தாலே கிள்ளின வர்; அந்தகாசுரன், இரண்யாட்சனோட பிள்ளை. அந்தகனை காலின் கீழே போட்டு மிதித்து சூலத்தை அவன் மேலே பாய்ச்சினவர், திரிபுரங்களையும் ஒரு சிரிப்பாலே சாம்பலாக்கின புண்ணிய மூர்த்தி, காலாலே சக்கரம் எழுதி அதை ஏவி ஜலந்திராசுரனை சம்ஹாரம் பண்ணினவர், கஜாசுரனுடைய தோலைக் கிழித்து போர்வையா போர்த்திண்டவர், யமனைக் காலால் உதைச்சு செயலிழக்கச் செய்தவர் சிவபெருமான்.

“காமாரி காமாம் கமலாஸனஸ்தாம்” அப்படின்னு காமாக்ஷி ஸ்தோத்திரத்திலே சொல்லப்படறா தேவி. ‘மாரனை ஜெயிச்ச மஹேஸ்வரனையும் உன் சௌந்தரியம் மயங்கச் செய்கிற
தே’ன்னு கவி சொல்றார்.

“ம்ருஷா க்ருத்வா கோத்ர” என்று தொடங்குகிற சௌந்தர்ய லஹரி ஸ்லோகத்தையும் ஆதிசங்கர பகவத் பாதாள் இதே லயத்தில் தான் எழுதியிருக்கா. இதை தினமும் அரைமணி நேரம் பாராயணம் பண்ணினா சத்ரு பயமே இருக்காது. பேய், பிசாசுகள் அண்டாது.பிறந்த வீட்டைப் பத்தி கேலி பண்ணினா ஸ்த்ரீ களுக்குக் கோபம் வரும். அம்பிகையும் அதுக்கு விதி விலக்கில்லை. வேடிக்கையா நையாண்டி பண்ணிட்டு காத்யாயனியை சமாதானப் படுத்த சாஷ்டாங்கமா கங்கை தளும்ப, சந்திரன் உரச அம்பிகையோட பாதங் களிலே விழுந்துடறார் சிவன் என்கிறார் குருநாதர்.

‘பர்த்தாவோட நெற்றியிலே உன் பாதம் படறது! “மன்மதனுக்கு அது ரொம்ப சந்தோஷமாயிருக்காம்! “நான் பஸ்பமானாலும் ஆரம்பிச்ச காரியம் சுபமா முடிஞ்சுதே” ன்னு திருப்திப்பட்டுக்கறானாம்! ரகசியத்துலே நடந்தது அவனுக்கெப்படித் தெரிஞ்சதுன்னு கேள்வி வரும்! ஆ, பர்த்தா தன் கால்லே விழறதாவதுன்னு தேவி காலை இழுத்துக்க, சும்மா இருக்க மாட்டாம, சிலம்புகள் ‘கிலி கிலி’ன்னு ஓசை எழுப்பி, அது ‘ஜயகோஷம் இல்லியா’ ன்னு தேவர்களையெல்லாம் கவனிக்க வெச்சதாம்! சௌந்தர்ய லஹரியிலே 86ஆவது ஸ்லோகம் இது.


“67ஆவது ஸ்லோகத்திலே “கிரீ சேனோதஸ்தம் முஹுர தரபானா குலதயா” என்கிற இரண்டாவது வரியிலேயும் நுனிக்கையாலே தேவியுடைய மோவாயைப் பரமேசுவரர் ஆசையோட உயர்த்தறதா ஆசார்யாள் சொல்லியிருக்கா. இதைத்தான் திரிசதியோட 243 ஆவது நாமாவளியிலே நாம பார்க்கறோம்.

“கதாஸ்தே மஞ்சத்வம்” என்கிற 92 ஆவது சௌந்தர்யலஹரி ஸ்லோகத்திலும் நாலாவது வாக்கியமான “சரீரி சிருங்காரோ ரஸ இவ த்ருசாம் தோக்தி குதுகம்” என்கிறதோட அர்த்தம்: சதாசிவன் வெள்ளை நிறம். கட்டிலுக்கு மேல் விரிப்பு போலே இருக்கார். தாயே! உன்னோட சிவப்பு நிறம் அவர் மேலே பிரதிபலிச்சு சிருங்கார ரஸமே வடிவமாய் உன்னோட கண்களுக்கு ஆனந்தத்தைக் கொடுக்கறார்.

காமேஸ்வரருக்கு அம்பிகை சுகத்தைத் தருகிறதாக 247ஆவது அர்ச்சனா நாமாவளி சொல்றது. காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வர லிங்கத்தில் அம்பிகை ஆலிங்கனம் பண்ணின அடையாளமா வளைத் தழும்பை தரிசிக்கலாம். “செம்பொன் மலைவல்லி தழுவக் குழைந்த மேனிப் பெருவாழ்வு”ன்னு இதை சேக்கிழார் பெருமானும் குறிப்பிட்டிருக்கறார்.

கும்பகோணம் பக்கத்துலே இருக்கிற தாரா சுரத்துக்கு ரெண்டு மூணு மைல் தூரத்துக்குள்ள சக்தி முற்றம்னு ஒரு ஸ்தலம். சத்தி முத்தம்னு சொல்லுவா. உமாதேவியார் பகவானை உகந்து ஆலிங்கனம் பண்ணி முத்தமும் கொடுத்த nக்ஷத்திரம் அதுன்னு கர்ண பரம்பரைக் கதை இருக்கு. யோகேஸ்வரரை இந்தப்படி பார்வதிதேவி சந்தோஷப்படுத்தறா. தென்னாற்காடு மாவட்டத்திலே திருக்கோவிலூருக்குப் பக்கத்திலே ‘ரிஷி வந்தியம்’ன்னு ஒரு nக்ஷத்திரம். ஊருக்கு நடுவிலே அர்த்தநாரீஸ்வரர் ஆலயமொண்ணு இருக்கு.

ஒவ்வொரு நாளும் அர்த்த ஜாம பூஜையிலே இங்கே லிங்கத்துக்கு தேன் அபிஷேகம் நடத்தறா. அப்போ அம்பிகையோட வடிவத்தை இதிலே தரிசிக்கலாம். தேன் முழுவதும் வழிஞ்ச பிறகு நிழல் வடிவமா தெரிஞ்ச அம்பிகை மறைந்து லிங்கம் வழவழப்பாயிடும். அம்பாளும் ஸ்வாமியும் இங்கே ஒருத்தரோடொருத்தர் பிணைஞ்சிருக்கா. இந்த லிங்கம் இந்திரன் பிரதிஷ்டை பண்ணி பூஜித்தது. அவனுக்கு அர்த்தநாரீஸ்வர தரிசனம் கிடைச்சது. ஸ்வாமி, அம்பாள் இரண்டு பேருக்குமே தேன் அபிஷேகம், நைவேத்யம் இரண்டுமே ஒசந்ததாச் சொல்லப்படறது.

சென்னை பெசன்ட் நகர் இரத்தினகிரீஸ் வரர் ஆலயத்திலே உமா ஆலிங்கன மூர்த்தியை பிரதோஷ காலத்தில் பார்க்கலாம். சென்னைக்குப் பக்கமா இருக்கிற மண்ணி வாக்கத்துலே ஒருவரை ஒருவர் அணைத்த படியான பரஸ்பர ஆலிங்கன மூர்த்தியை தரிசிக்கலாம்.சிவப்பிரேமை என்கிற இன்பத்தை அடியார்களுக்குத் கொடுக்கிறவள் அம்பாள். பரதேவதைதான் அகில லோகத்துக்கும், ருத்ரருக்கும் இன்பமளிக்கிற ஒளஷதம் என்கிறது ஸ்ரீருத்ரம்.

தக்ஷிணாமூர்த்தி எல்லா இடத்திலேயும் தனியாகத்தான் இருப்பார். திருப்பதி போறவழியில் ஊத்துக்கோட்டை பக்கம் சுருட்டப்பள்ளின்னு ஒரு nக்ஷத்திரம். அங்கே விஷமுண்ட பரமேஸ்வரர் சயன கோலத்திலே காட்சிதரார். அம்பாள் மடியிலே தலைவைச்சிருக்கார். இதே ஸ்தலத்துலே தேவியை மடியிலே அமர்த்திண்டிருக்கிற தாம்பத்ய தக்ஷிணா மூர்த்தியையும் பார்க்கலாம்.

‘‘அழகிய புன்னகையால் சிறப்புற்ற திருவாயில் திகழும் பச்சைக் கர்ப்பூரத்துடன் கூடிய தாம்பூலத்தைத் தரிக்கின்றவளே! கோவைப்பழம் போன்ற அதரத்தை உடையவளே!” இப்படியெல்லாம் சியாமளையை வர்ணித்த காளிதாசர் “உன்னை நம்பி மோசம் போனேனே! என்னைக் கைவிட்டாயே” என்று நிந்தா ஸ்துதியும் பண்ணியிருக்கறார்.