Wednesday, April 06, 2005

சிறுவர் இலக்கியம் - இன்று

சிறப்புப் பகுதி: குழந்தை இலக்கியம்

Thanks: Thisaigal - Special :: ஆர். பொன்னம்மாள்


'ஜில்ஜில்' பத்திரிகையின் மூலம்தான் எனக்கு குழந்தை இலக்கியம் பரிச்சயமானது. விடுமுறைக்கு சென்றிருந்த உறவினர் வீட்டில் தடுக்கிவிழுந்தபோது 'ஜில்ஜில்' கிடைத்தது. அதன் பிறகு தமிழ்வாணனின் கல்கண்டு. என்னுடைய குழந்தைப் பருவத்தில் கல்கண்டு கூட சிறுவர் இதழாகத்தான் வெளிவந்துகொண்டிருந்தது.

கண்மணி, பாப்பா மலர், பாலர் மலர் என்று பல பத்திரிகைகள் பர்மாவில் இருந்து வந்தவர்கள் முதல் தமிழ்நாட்டார் வரை நடத்தி வந்துகொண்டிருந்த காலம். பல பத்திரிகைகள் இருந்ததால் புத்தகங்கள் சரியாக விற்கவேயில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். 'வானதி' பதிப்பகத்தின் திருநாவுக்கரசுவும் குழந்தைகளுக்காக பத்திரிகை நடத்தி வந்தார். அவரிடம் பேசும்போதுதான் தமிழ்வாணனின் புகழ்பெற்ற வியாபார நுணுக்கம் தெரிய வந்தது. முதல் பதிப்பு அச்சடித்த பத்திரிகைகளை கிணற்றுக்குள் தூக்கிப் போட்டு விட்டார். பின்னர் பத்திரிகையில் சிறியதாக விளம்பரம் போட்டார்: 'முதல் பதிப்பு தீர்ந்தது'. பாக்கி பிரதிகளும், அடுத்த வாரங்களும் சூடாக விறபனையாக ஆரம்பித்தன.

அனேக எழுத்தாளர்கள் குழந்தைகளுக்கும் சேர்த்தே எழுதினார்கள். தனியாக குழந்தை இலக்கியம் என்று எல்லாம் மெனக்கிடவில்லை. எனக்குத் தெரிந்து குழந்தைகளுக்காக மட்டுமே எழுத்துப்பணி செய்தவர் அழ வள்ளியப்பா மட்டுமே.

பூந்தளிர், ரத்னபாலா, அம்புலி மாமா, பாலமித்ரா என்று பல இதழ்கள் அப்பொழுது வெளிவந்துகொண்டிருந்தது. கதை சொல்லப்படுகிற விதம் அனேகமாக இவற்றுள் ஒற்றுமையாக இருந்தது. எல்லாக்கதைகளிலும் அறிவுரை கண்டிப்பாக இருக்கும். அம்புலி மாமாவில் வேதாளம் சொன்ன கதை இன்னும் வருகிறது. குறிப்பிட்ட அளவுதான் வேதாளம் சொல்லியிருக்கும். ஆனால், அவர்கள் இன்றும் சுவாரசியமாக இழுக்கிறார்கள்.

சிறுவர்களுக்கான தனி இதழ்கள் தவிர ஆனந்த விகடன், கல்கி அகிய இரண்டுமே பாலர் மலர், பாப்பா மலர் என அவ்வப்பொழுது கொடுக்கும். அவை புத்தகத்தின் நடுப்பகுதியில் இருக்கும். காட்டைப் பிண்ணனியாகக் கொண்ட கதைகள், சொல் விளையாட்டு, சிறுவர் கவிதை என பல்சுவையாக கொடுப்பார்கள். ஆனந்த விகடன் ஹாஸ்யத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்ததால், சிறுவர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தது. அரைகுறைப் படமும் அவசரப் பிச்சுவும் போன்ற பொதுவான நகைச்சுவையையும் சிறுவர்கள் விரும்பிப் படிப்பார்கள். பாரதியார், பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் சிறுவர் பாட்டுகளை இயற்றியிருக்கிறார்கள். டிகேசியும் கல்கியும் குழந்தைகளுக்காக நிறைய எழுதியிருக்கிறார்கள். அன்றும் இன்றும் குமுதம் குழந்தைகளுக்காக தனியாக எதுவும் செய்ததில்லை.

ராஜா-ராணி கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், மரியாதை ராமன் கதைகள், ஈசாப் நீதிக்கதைகள் போன்றவைகளுக்கு என்றும் சிறுவர் உலகத்தில் இடம் உண்டு. எலி இங்கே பண்டம் எங்கே, கோட்டிலே வரை, உங்களுக்குத் தெரியுமா, புள்ளிகளை இணைத்தல், வண்ணம் தீட்டுதல், சொற்புதிர்கள் போன்றவை தற்போது அதிக அளவில் இடம்பெறுவது ஆரோக்கியமான வளர்ச்சி. கோபாலான் - சேகர் போன்ற சமூக தற்காலப் பெயர்களைக் கொண்டு குழந்தைகளுக்கு அறிவுரை சொல்லும் கதைகளும் அவர்களிடையே பிரசித்தம். சிறிய வயதில் படிக்கும் கதைகள், குழந்தைகளின் ஆழ்மனதில் தங்கும்.

ஏவிஎம் அமைத்த குழந்தை எழுத்தாளர் சங்கம் எழுபதுகளில் ஆரம்பித்து சிறப்பான சேவையை செய்து வந்தது. நாவல், சிறுகதை, அறிவியல், நாடகம், கவிதை, வரலாறு என ஆறு துறைகளில் போட்டிகளை நடத்தி வந்தார்கள். ஒவ்வொரு வருடமும் தங்கப் பதக்கம், வெள்ளிப்பதக்கம் என இரு பரிசுகள் வழங்கப்பட்டன. சுழற்சி முறையில் ஒவ்வொரு ஆண்டும் இரு தலைப்புகள் கொடுக்கப்படும். பாரபட்சமில்லாத நடுவர்கள், பரிசு பெறும் புத்தகங்களை புத்தகமாக வெளியிடுதல், வெற்றி பெற்றவர்களுக்கான விழா என்று மிகவும் ஆர்வத்துடன் குழந்தை எழுத்தாளர் சங்கம் செயல்பட்டது.

முன்பின் தெரியாத எழுத்தாளர்களையும் பிரசுரம் செய்வதில் பழனியப்பா பிரதர்ஸ் புத்தக வெளியீட்டாளர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அருணோதயம் குழந்தைகள் புத்தகத்தை ஆர்வமாக வெளியிடுவார்கள்.

தமிழ்நாடு, சுதேசமித்திரன் போன்ற பத்திரிககளும் சிறுவர் பகுதியை வெளியிட்டு வந்தார்கள். அப்பொழுது பிலோ.ஹ்ருதயநாத்

கட்டுரைகளை சிறுவர்கள் விரும்பிப் படிப்பார்கள். பிலோ ஹ்ருதயநாத்தின் காட்டில் உள்ள மனிதர்கள், பழங்கால வாழ்க்கைமுறை, சுற்றுலா பயணக்குறிப்புகள், யானை, குரங்கு போன்ற மிருகங்கள் குறித்த படைப்புகள் சிறுவர்கள் ரசிக்குமாறு அறிவை புகட்டும்.

சிறுவர் இலக்கியத்தில் அழ வள்ளியப்பாவிற்குப் பிறகு பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. சமகால படைப்பாளிகளில் அறிவியல் சமாசாரங்களை ஈ.எஸ். ஹரிஹரன் எளிய முறையில் கதைகள் மூலமாக சொல்வார். தாவரங்கள், மிருகங்கள் குறித்த வாண்டு மாமாவின் புத்தகங்கள் குறிப்பிடத்தக்கது. மா.கோதண்டராமன் எழுதிய அறிவியல் கட்டுரைகளும் ஆழமாகவும் சுவையாகவும் சிறுவர்களுக்கு ஏற்ற முறையில் இருக்கும்.

சுந்தரம் அவர்களின் நாடகங்கள் மேடையேற்றுவதற்கு எளியது. படிப்பதற்கும் சுவாரசியமாக இருக்கும். பா ராகவன் சிறுவர்களுக்கான நாவல் எழுதுகிறார். பூவண்ணன் இன்றைய நடைமுரைக்கு ஏற்ப புனைகதைகள் படைக்கிறார். சௌந்தர் எழுதும் குழந்தைகளுக்கான படைப்புகளும் அவசியம் சிறுவர்களின் புத்தக அலமாரியில் இருக்கவேண்டும்.

தற்கால பத்திரிகைகளில் கோகுலம், சுட்டி விகடன், இரண்டும் கண்ணையும் கருத்தையும் கவருகிறது. இந்த இரண்டில் கோகுலத்தில் கோகுலம் மிகவும் குறிப்பிடத்தக்க பணியை செய்து வருகிறது. அங்கிலக் கலப்பு இல்லாமல் வருபவதையும் இங்கு கவனிக்க வேண்டும்.

இந்தக்கால நாகரிகத்துக்கு ஏற்ப தற்கால இதழ்கள் கொஞ்சம்தான் மாறியிருக்கிறது. பெரும்பாலும் அந்தக்கால பத்திரிகைப் பாணிகளை அடியொற்றியே குழந்தைகளின் புத்தகங்களும், இதழ்களும், இலக்கியமும் அமைகிறது. மாயாஜாலம், மாந்திரீகம், போன்றவை என்னுடைய சிறிய வயதி இருந்தே ஃபேமஸ்.

விளம்பிநாகனார், ஔவையார் போன்றவர்களும் குழந்தைகளுக்காக எழுதியிருக்கிறார்கள். திருக்குறள் மற்றும் நாலடியார் தவிர திரிகடுகம், ஏலாதி, நீதி வெண்பா, நீதி சதகம், இன்னா நாற்பது இனியவை நாற்பது, நான்மணிக்கடிகை, அறநெறிச்சாரம், ஆசாரக்கோவை போன்ற பல சங்க கால இலக்கியங்களை அடுக்கலாம்.

நாலு நாலு அறிவுரையாக வரும் நான்மணிக்கடிகை குழந்தைகளின் மனதில் எளிதில் தைக்கும். ஒவ்வொரு அறிவுரைக்கும் உவமை, எளிய சொல்லமைப்பு போன்றவற்றைக் கொண்டது. இப்பொழுது இவற்றை யார் எழுத வாய்ப்பளிக்கிறார்கள்?

இதே வரிசையில் நன்னெறி , நல்வழி, வெற்றிவேற்கை, கொன்றை வேந்தன் போன்றவற்றையும் பட்டியுலிடலாம். புதுக்கவிதையாக, தற்போதைய நடைமுறைப்படி இவற்றை கொடுக்கவேண்டும்.

சுற்றுலா கட்டுரைகள், வாழ்க்கை வரலாறு போன்றவை பயனுள்ளதாக இருந்தாலும், குழந்தைகளுக்கு சுவையாக இருப்பது கதைகள்தான். வர்ணனையில் ஆரம்பித்தால் குழந்தைகளுக்கு கதைகள் பிடிக்காது. ஆரம்பிக்கும்போது கஷ்டப்பட்டு படிக்கமாட்டார்கள். சாராம்சம் போய் சேராது. சுவையாக, சுருக்கமாக ஆரம்பிக்க வேண்டும். ஆனால், கதை/கட்டுரையின் நடுவே கள விவரணைகளையும் விவரிப்புகளையும் கொடுக்கலாம். மருந்துக்கு நடுவில் தேன் தடவி கொடுப்பது போல் இருக்க வேண்டும்.

விக்ரமாதித்தன், மதனகாமராஜன், அலாவுதீன், ஜெகஜ்ஜாலன், அரேபிய இரவு போன்ரவற்றில் கொஞ்சம் ஏ வாசனை வந்தாலும் வடிகட்டிப் போடுவர்கள். அவ்ற்றை குழந்தைகள் படிப்பதை பெற்றோர்களே ஊக்குவிக்கவும் செய்தார்கள். செக்ஸ் கல்வி போன்றவற்றை இலை மறை காயாக விளக்க இந்த புத்தகங்கள் டீனேஜ் பாலகர்களுக்கு பயன்பட்டது.

விகடனில் பால ராமாயணம், சித்திர மகாபாரதம் என்று தொடர்ந்து ஓவியங்கள் வெளிவரும். அம்புலி மாமா விநாயக புராணம் வெளியிட்டது. கல்கண்டு துணுக்குகள் ரசிக்கத்தக்கவை. கோகுலம் தற்போது குழந்தை இலக்கியத்தை முன்னேறியிருக்கிறது. இதற்கு முதல் காரணம் அழ வள்ளியப்பா. வியாபார நோக்கோடு மட்டும் அல்லாமல் குழந்தைகளுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் கோகுலம் குறிக்கோளாக வைத்துள்ளது.

சுட்டி விகடன் பத்திரிகை ஜனரஞ்சகமாக இருக்கிறது. கிஃப்ட் கொடுக்கிறார்கள். வழவழா பேப்பருடன் பொம்மை வரும், ரயில் வரும் என்று தூண்டில் போட்டு இழுக்கிறார்கள். குழந்தைகள் மட்டுமே அட்டைப்படங்களில் தோன்றுகிறார்கள்.

இன்றைய குழந்தை பத்திரிகைகள் அனைத்திலும் ஹாஸ்யம், புராணம், தொடர்கதை என அனைத்தும் வருகிறது. பதினொரு மாசத்துக்குத்தான் ஒரு தொடர்கதை வருகிறது. நிறைய சித்திரங்கள் இருக்கிறது. படம் பார்த்து கதை சொல் போன்றவை மிகச் சிறியவர்களைவும் கவர்ந்திழுக்கும். மூளையும் வளரும். தமிழ் படிக்கவும் ஊக்கம் கிடைக்கும்.

சாதனை புரிந்தவர்கள், ரோல் மாடல்கள், பல்துறை விற்பனர்கள், உடல் ஊனமுற்றவர்கள் என பலரின் வாழ்க்கை குறிப்புகளும், சரிதைகளும் குழந்தைகளுக்கு ஊக்கம் கொடுக்கிறது. தூண்டுகோலாக அமைகிறது.

குழந்தைகளே எழுதும் புதிர்கள், ஓவியங்கள் அவர்களின் திறமையை வெளிப்படுத்துகிறது. தமிழார்வத்தையும் வளர்க்கிறது. குழந்தைகளுக்கு மட்டும் நடத்தப்படும் சிறுகதைப் போட்டி, அறிவியல் போட்டி போன்றவையும் வரவேற்கத்தக்கது.

கோகுலத்தில் மாதந்தோறும் இரண்டு இரண்டு பள்ளிக்கூடங்களை எடுத்துக் கொண்டு ஸ்பெஷல் போடுகிறார்கள். அந்த பள்ளிக்கு நேரில் சென்று, விளையாட்டுகள் -- கண்ணைக் கட்டி ஓடுதல், பதினைந்து பொருட்கள், க்விஸ் என்று பொதுவாக வைத்தாலும், சிறுவர்களின் பங்களிப்பை முன்னிறுத்துவதால் கவனிக்கத்தக்கது. இதே போல் அனைத்து பத்திரிகைகளும் அந்தக்காலம் போல் பள்ளிக்கூடங்களுக்கு சென்று நேரடி கவனிப்பைப் பெற வேண்டும். மேலும் தனியார் பள்ளிகளுடன் நிற்காமல், அனைத்து கிராமங்க்ளையும், பள்ளிகளையும் கொடுக்கவேண்டும். பகுத்தறிவு போட்டி, குறுக்கெழுத்துப் போட்டி, வார்த்தை ஜாலங்கள் போன்ற புதிர்களுக்கு எந்தப் பள்ளி அதிக அளவில் விடை அனுப்புகிறார்களோ அந்தப் பள்ளிக்கூடத்தை பாராட்டி பரிசு வழங்குகிறார்கள்.

புத்தக விமர்சனம், பிரபலங்கள் வாழ்வில், வெளிநாட்டு கதையின் மொழிபெயர்ப்பு, கவிதை நடையில் அறிவுரைக் கதை என விதவிதமாக நிகழ்கால குழந்தை இலக்கியம் வளர்ந்திருக்கிறது. படிக்கப் படிக்கத்தான் அறிவு வளரும். எந்த விஷயமாக இருந்தாலும் தொடர்ந்து மாற்றம் செய்து கொண்டேயிருக்கிறார்கள். ஒரே விஷயத்தைத் திரும்பச் சொல்வதில்லை.

இன்றைக்கு சம்பாத்தியத்துக்காக ஆங்கிலம் படிக்கிறார்கள். காண்பதில் ஆர்வம் அதிகம் ஆகியிருக்கிறது. டிவி, பெரியவர்களின் ஒத்துழைப்பின்மை குழந்தை இலக்கியத்தை நசிய வைத்திருக்கிறது. குழந்தைகளும் சீரியல் பார்ப்பதற்கு ஃபோர்ஸ் செய்யப்படுகிறார்கள். மிருகங்களின் வாழ்க்கைமுறையுடன் கூட சேர்க்கையையும் புரியாமல் பார்த்துத் தெரிந்து கொள்கிறார்கள். ரிமோட்டைக் கொடுத்துவிட்டு பெற்றோர்கள் சென்றுவிடுவதால் குழப்பங்கள் அதிகரிக்கிறது. சீரான அறிவு வளர்ச்சிக்கு டிவி பாதகமாக இருக்கிறது.

குழந்தைகள் தங்களின் உலகத்தை இழக்கிறார்கள். பெரியவர்கள் குழந்தைகளை ஒதுக்கும்போதோ, ஒதுங்கும்போதோ - புத்தகம் தோழன் ஆனது. புத்திசாலித்தனம் வளர்ந்தது. ஆனால், டிவி என்னும் பிசாசு வீட்டுக்குள் வந்துவிட்டபின் நிலைமை மாறிப்போனது.

டிவி வேலை கேட்டுக் கொண்டேயிருக்கும் ராஷஸன். பொழுதை வீணாக்குகிறது. சொல்லப்போனால், டிவி ரிப்பேர் ஆனால்தான், வேலை நிறைய நடக்கிறது.

தொலைக்காட்சியில் குழந்தைகள் இலக்கியம் எங்குமே வருவதில்லை. சிறியவர்களுக்கு மட்டுமே ஏற்ற நாடகங்கள், ஆக்கங்கள் போதிய விளம்பரதாரர்களின் பின்புலத்தொடு கிடைக்கவில்லை.

என்னுடைய அடுத்த வருத்தம் ஏலாதி போன்ற பழங்காப்பியங்கள் எந்த ஊடகங்களிலும் வருவதில்லை. நடப்பு முறைக்கு ஏற்ற மாதிரி மனதில் ஆழச்செல்லுமாறு அருமையாக விளங்கவைக்கக் கூடிய சீரியல்கள் கூடக் கொண்டு வரலாம். அல்லது கதை மூலம் செய்யுள் விளக்க வேண்டும். பாரதியாரைப் போற்றுவது போல் பதிணென் கீழ்கணக்கு நூல்களையும் குழந்தைகளுக்குக் கொண்டு செல்ல வேண்டும். இலக்கியத்தையும் எளியமுறையில் புதிது புதிதா காட்சிப்படுத்தலாம். +2 மாணவர்களுக்கு ஏற்ற மாதிரி கார் நாற்பது, களவழி நாற்பது போன்றவற்றை தொலைக்காட்சித் தொடராகக் கொண்டு வரலாம்.வாழ்க்கைப் பாடங்கள், தற்கொலை, பொறாமை, கொடுமைகள், அன்றாட காமன்சென்ஸ், உள் இறுக்கங்கள், மன அழுத்தம் போன்றவற்றை சமாளிப்பது எப்படி என்று எல்லாம் கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்ள இன்று யாரும் இல்லை. அன்று குருகுலம் இருந்தது. கொஞ்ச காலம் முன்பு புத்தகங்கள் இருந்தது. பெரிய குடும்பத்தில் கொஞ்சமே கொஞ்சம் வயது வித்தியாசம் உள்ள அண்ணா, அக்காக்கள் இருந்தார்கள். இன்றைய நடுத்தர குட்டி குடும்பத்தில் வளரும் சிறுவர்களுக்குத் தோன்றும் கேள்விகள் அவர்களின் மனதுக்குள்ளே புதைந்து போகிறது. பள்ளிச்சிறுவர்களை அவர்களின் அடுத்த வயதுக்கு தயார் செய்யும் வேலையை தொலைக்காட்சியும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். அழ வைக்கமல், வளரும் குழந்தைகளுக்காக, ஒப்பாரியையும் சண்டையையும் சச்சரவையும் மட்டுமே காட்டாமல், சிறந்த எழுத்தாளர்களைக் கொண்டு செய்ய வேண்டும்.

குழந்தைகள் ஈரமண். அனைத்து ஊடகங்களும் பத்து சதவீதமாவது முழுக்க முழுக்க வயதுவாரியாகக் குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும். பொறுமை, முன்னேற்றம், தன்னம்பிக்கை, அன்பு, பணிவு, சேமித்தல், ஆடம்பரம் தவிர்த்தல், நேரம் விரயமின்மை, காலங்கள் மாற்றம், கனவு, நம்பிக்கை போன்றவற்றை விதைத்து வருங்காலத்திற்கு தயார் செய்ய வேண்டும்.