Wednesday, April 06, 2005

குரு ரத்னங்கள்

ஸ்ரீகாமகோடி பீடம்



பூமா தேவியின் நாபிக்கமலம் காஞ்சி. நாபிக்கமலத்துக்கு ஆபரணம் ஒட்டியாணம். ஒட்டியாணம் என்றால் காஞ்சி. ஆக உலகிற்கே காஞ்சி ஆபரணமாகிறது.

அங்கே 32 அறங்கள் வளர்த்த ஸ்ரீகாமாக்ஷி அருள் பாலிக்கிறாள். தாக்ஷhயணியின் சரீரத்தை சிவன் சுமந்து ஆடுகையில் நாபிக்கமலம் சுற்றிலுமுள்ள சதையோடு விழுந்த இடமான காஞ்சியிலுள்ள எல்லா சிவாலயங்களும் ஸ்ரீ அன்னையின் ஆலயத்தை நோக்கிய சந்நிதிகளை உடையனவாய் உள்ளன. பஞ்ச பூதத்தலங்களில் இது ப்ருத்விஸ்தலம். சப்த மோட்ச ஸ்தலங்களில் காஞ்சியும் ஒன்று. அது மட்டுமே தென்னாட்டில் அமைந்திருக்கிறது. ஸ்ரீகாமகோடி பீடம் காஞ்சிக்கு மேலும் எழிலூட்டுகிறது.

காஞ்சி என்பதிலேயே காசி என்ற பெயர் அடங்கியுள்ளது. காசிக்கு போக இயலாதவர் காஞ்சிக்குச் சென்று அறம் வளர்த்த அம்பிகையை தரிசித்து வரலாம்!

ஸ்ரீசதாசிவனே ஆதிசங்கரராக அவதரித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. ஸ்ரீகாமகோடி பீடம் தெய்வத் திரு மரபு 1. ஸ்ரீமஹாவிஷ்ணு 2. பிரம்மா 3. வசிஷ்டர் 4. சக்தி 5. பராசரர் 6. வியாசர் 7. சுகர் 8. கௌடபாதர் 9. கோவிந்த பவகத் பாதர் என்பது ஆதிசங்கரருக்கு முந்தைய பரம்பரை.


ஸ்ரீ ஆதிசங்கரர் கி.மு. 509-477
ஸ்ரீ ஆதிசங்கரர் காணாபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைணவம், சௌரம் என்ற ஷண்மதங்களை ஸ்தாபித்தவர். ஆதிசேஷனின் அம்சமான பதஞ்சலி முனிவர் யோக சூத்திரத்தை திரையிட்டுக்கொண்டு சொல்லும்போது திரை விலக்கிப் பார்த்த எல்லா சீடர்களும் நாகத்தின் விஷ மூச்சால் பொசுங்கிப் போனார்கள். வெளியே அனுப்பப் பட்டிருந்த கௌட பாதர் மட்டுமே பிழைத்திருந்தார். கௌடபாதரின் சீடர் ஸ்ரீ கோவிந்த பகவத் பாதர். இவரே ஆதிசங்கர பகவத்பாதரின் குரு. மேற்கில் துவாரகாவிலும், வடக்கே பத்ரியிலும், கிழக்கே பூரியிலும், மத்தியில் ஸ்ரீங்கேரியிலும் தெற்கே காஞ்சியிலும் பீடங்களை நிறுவிய ஸ்ரீஆதி சங்கரரின் வாசஸ்தலமும், சித்திஸ்தலமும் காஞ்சியே!


ஸ்ரீ ஆதிசங்கரர் ஜாதகம்

புனர் பூச நக்ஷத்திரம் 2-ஆம்பாதம். கடக லக்னம், கடக ராசி சூரியன், சுக்ரன், குரு , குஜன், சனி ஆகிய ஐந்து கிரஹங்கள் ஸ்ரீராமபிரான் ஜாதகத்தைப் போலவே உச்சம்.

Aadhi Sankarar Jaathagam



சந்திரனும் ஸ்ரீராமர் ஜாதகத்தைப் போலவே ஆட்சி பெற்றிருக்கிறான். அதைப்போல் புதனும், சூரியனுடன் கூடியிருக்கிறான். இருவருக்கும் ஒரே நக்ஷத்திரம். ஒரே மாதம். ராகு-கேதுக்கள் மட்டுமே இடம் மாறியிருக்கின்றன.

பிறந்த கிழமை- ஞாயிறு திதி: சுக்ல பக்ஷ பஞ்சமி (வளர் பிறை) ஆண்டு: நந்தன வருடம். கலி 2593 (கி.மு.509) இவ்வாறு ப்ருஹத் சங்கர விஜயத்தில்’ கூறப்பட்டிருக்கிறது. கி.மு. 477 ரக்தாட்சி வருஷம் வ்ருஷப மாதம் வளர்பிறை ஏகாதசி யன்று அவர் காஞ்சியில் சித்தியடைந்தார் என வரலாறு கூறுகிறது.

பௌத்தமதத்தை ஆராய அதோடு இரண்டறக் கலந்த குற்றம் நீங்க தன்னை உமி கொண்டு மூடி புடம் போட்டுக் கொண்ட குமாரில பட்டரை ஆதிசங்கரர் விரைந்து சென்று தடுக்க முயன்றிருக்கிறார். குமாரில பட்டர் சங்கரரை விட 48 வயது மூத்தவர்.

காஞ்சி காமகோடி பீடத்தை நிறுவிய ஆதிசங்கரரே அதன் முதல் குருவாக இருந்தார். ஸ்ரீ காமாக்ஷி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்து ஆலய நிர்மாணமும் செய்வித்தார். ஸ்ரீகாமகோடி பீடத்தில் தான் கைலாயத்திலிருந்து கொண்டு வந்த ஐந்து ஸ்படிக லிங்கங்களில் ஒன்றான யோக லிங்கத்தை ஸ்தாபித்தார். தனக்குப்பின் ஆச்சார்யராக ஸ்ரீ சுரேஸ்வரரை நியமித்தார்.

ஆதிசங்கரர் சமயவியல் அறிஞர்களை வாதிட்டு வென்றதும் காஞ்சியில்தான்! திருவானைக்காவில் ஸ்ரீசக்ர வடிவிலான தாடங்கப் பிரதிஷ்டை புரிந்த ஸ்ரீஆதிசங்கரர் காசி முதலான பிற nக்ஷத்திரங்களிலும் ஸ்ரீ சக்ரப் பிரதிஷ்டை செய்திருக்கிறார்.

“ஸ்வர்ண ஆகர்ஷண யந்திரத்தை” திருப்பதி (திருமலை)யில் செல்வவளம் கொழிக்குமாறு பிரதிஷ்டை செய்து “விஷ்ணு பாதாதி கேஸாந்த ஸ்தோத்திரத்தை” அருளினார்.

கிழக்குக் கடற்கரை பூரி கோவர்த்தன மடத்தில் ‘விமலா பீடத்தில்’ முதலாச்சார்யராக ஆதிசங்கரர் பத்ம பாதரை நியமித்தார். இதுவரை 144 பீடாதிபர்கள் அதை அலங்கரித் துள்ளனர்.

மேற்குக் கடற்கரை துவாரகா மடத்தில் மகாகாளிகா பீடத்தில் முதலாச்சார்யராக ஆதிசங்கரரால் நியமிக்கப் பட்டவர் ஹஸ்தாமலகர். இதுவரை 79 பீடாதிபர்கள் அதை வழி நடத்திச் சென்றிருக்கின்றனர். ஹிமாச்சலத்தின் பத்ரியில் ஜ்யோதிர் மடத்தில் ஜ்யோதிஷ்மதி பீடத்தில் முதலாச்சார்யராக ஆதிசங்கரர் நியமித்தவர் தோடகர்.

கர்நாடக மாநிலத்தில் துங்கை-பத்ரை நதிகள் சங்கமிக்கும் திருத்தலம் ஸ்ரீங்கேரி. ரிஷ்ய சிருங்கர் அங்கே தவமியற்றியதால் சிருங்க கிரி என அந்த nக்ஷத்திரம் புகழ் பெற்றது. ஸ்ரீசாரதாம்பிகையின் விருப்பப்படி, தேவியை அங்கே பிரதிஷ்டை செய்து ஸ்ரீமடத்தை நிறுவிய ஆதிசங்கரர் தன் சீடரான பிருத்வீதரரை அதன் ஆச்சார்யராக நியமனம் செய்தார். கைலாயத்திலிருந்து கொண்டு வந்த பஞ்ச லிங்கங்களில் ஒன்றான போக லிங்கத்தை அங்கே ஸ்தாபித்தார்.

ஆதிசங்கரரின் வழிவந்து ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தில் ஆச்சார்யர்களாக விளங்கிய குருரத்னங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.



ஸ்ரீ சுரேஸ்வரர் கி.மு. 491-407

ஸ்ரீசுரேஷ்வரருடைய பூர்வீக நாமம் மண்டனமிச்ரர். இவர் வாழ்ந்தது மகதநாடு. நர்மதா நதிக்கரையில் மாகிஷ்மதி என்ற சிற்றூரில் வசித்து வந்தார். இவரை பிரம்மாவின் அம்சம் என்பார்கள். இவருடைய மனைவி சரஸ்வதியின் அம்சம். பெயர் ஸரசவாணி. வேத வேதாங்கங்களில் புலமை மிக்கவள். குமாரில பட்டரை வாதில் வென்றபின், மண்டல மிச்ரரை கர்மமார்க்கத்திலிருந்து திருப்ப அவர் இல்லம் வந்தார் சங்கரர். இருவரும் வாது புரிந்தனர். மிச்ரரின் மனைவி நடுவராக இருந்தாள்.


இரண்டு மலர் மாலைகளைக் கொணர்ந்து இருவரையும் கழுத்தில் அணிந்து கொண்டு வாதிடும்படி கூறி எவர் கழுத்திலுள்ள மாலை வாடுகிறதோ அவரே தோற்றவர் என்றும் இயம்பினாள். தோற்றவர் வென்றவர் மார்க்கத்தைப் பின்பற்ற வேண்டுமென்பது நிபந்தனை. இருவரும் சளைக்காமல் பல நாள் வாதப்போர் நடத்தினர். மிச்ரர் கழுத்திலுள்ள மாலை வாடத் தொடங்கியது. கணவனில் பாதி மனைவி. தன்னையும் வாதில் வென்றாலே பூரண வெற்றி என்று சரஸவாணி தர்க்கம் செய்தாள்.

அவளையும் தர்க்க சாஸ்திர நெறிப்படி ஜெயித்தார் ஆதிசங்கரர். மிச்ரர் சந்நியாச ஆச்ரமத்தை ஏற்றார். ஸ்ரீசுரேஸ்வரர் என்ற தீட்சா நாமத்தை அவருக்கு அளித்தார் சங்கரர்.

ஸ்ரீஆதிசங்கரர் சித்தியடைந்தபின் ஸ்ரீசுரேஸ்வரர் எல்லா


பீடங்களுக்கும் மேலாளராயிருந்து நிர்வகித்தார். இவர் பல அத்வைத நூல்களை எழுதினார்.

காஞ்சியில் ஒரு பெரும் அக்ரஹாரத்தை அமைத்தார். ஸ்ரீகச்சபேஸ்வரர் ஆலயத்துக்கருகிலுள்ள இது மண்டனமிச்ரர் அக்ரஹாரம் என வழங்கப்படுகிறது.

ஸ்ரீசுரேஸ்வரர் கி.மு. 407ல் சுக்லபட்ச துவாதசியன்று சித்தியடைந்தார். இன்றும் ஸ்ரீசங்கர மடத்தில் ஸ்ரீசுரேஸ்வரர் சன்னதியும் திருவுருவமும் உள்ளன.