Tuesday, April 05, 2005

ஸ்ரீபரமாச்சார்யாள் பாதையிலே - March

ஆர்.பி.

நல்ல குழந்தைகளாய் உருவாகி பூமியில் சாதனை பண்ணிட்டு வர தன் குழந்தைகளைப் பார்த்ததுமே அவளோட எல்லா ஆசையும் பூர்த்தியாகிறதா அவ நினைக்கிறா! அவ பூங்கொடிபோல மென்மையானவ; அழகான அவ சிவம் என்கிற விருட்சத்திலே படர்ந்திருக்கிறா! மல்லி, முல்லை, இருவாட்சி யெல்லாம் கொடியிலேதான் பூக்கிறது! அஷ்டமி சந்திரன் போல இருக்கிற நெற்றியிலே கஸ்தூரிப் பொட்டு துலங் கறதாம்! கஸ்தூரிக்கு ரணத்தை ஆற்றுகிற மருத்துவ குணமுண்டு.

அந்த நாள்லே கஸ்தூரி சேர்த்துத்தான் சாந்துப் பொட்டு தயார் பண்ணுவா. அதை இளம் வயசு ஸ்த்ரீகள், ஒரு வயசுக்குள்ளே இருக்கிற குழந்தைகளுக்கு இடுகிறது வழக்கம். கஸ்தூரியைக் கண்டா ஆவிகள் எட்ட நிற்கும். தன்னை தரிசிக்க வருகிற பக்தர்களைப் பூதப் பிரேதப் பைசாசங்கள் கிட்டேயிருந்து காப்பாத்தத்தான் தேவி கஸ்தூரிப் பொட்டு வைச்சுக்கறாளாம். அவாளோட மனக் காயங்களையும் அவதானே ஆற்றியாகணும்!

அழகா தொங்கத் தொங்க முத்துமாலை போட்டுண்டிக்கிறதா 76-ஆவது வரி சொல்றது. மன சஞ்சலத்தைப் போக்கற சக்தி முத்துக்கு உண்டு. நல்ல முத்து இளைப்பு நோயை சொஸ்தப்படுத்தும்.

“தாடை வீங்கினா பொன்னுக்கு வீங்கி; சித்தங் கலங்கினா முத்து மாலை”ன்னு ஒரு பழமொழி சொல்வா. புத்தி தடுமாறாம காப்பாத்தற சக்தி நல்ல முத்துக்களுக்கு உண்டு. விசேஷ நாட்க ளிலே கோவிலுக்குப் போகச் சொல்லி கட்டாயப்படுத்துவா பெரியவா. “அலங்காரம் கலைக்கறதுக் குள்ளே போயிட்டு வா”ன்னு நச்சரிப்பா. வருஷா வருஷம் பார்க்கறதுதானேன்னு நெனைக்கப்படாது. அத்தனை நவரத்தினங்களை சாதாரணப்பட்டவா சேர்ந்தாப் பலே பார்க்கமுடியாது. ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு பலம் உண்டு. தரிசிக்க வருகிற பக்தர்களோட மனக்குழப்பத்தைத் தீர்க்கறதுக்காகவே அவ முத்து மாலைகளைச் சூட்டிக்கறாளாம்!

தன் சரீரத்திலுள்ள மஞ்சளைத் திரட்டி அதிலேயிருந்து கணபதியை உருவாக்கினா பார்வதி என்கிறது விநாயக புராணம். அவர் யானைமுகாசுரனை சம்காரம் பண்ணினார். தம்பி குறப்பெண்ணை கலியாணம் பண்ணிக்க ஒத்தாசை பண்ணியிருக்கார். அம்மா, அப்பாவைச் சுற்றி வந்தா உலகத்தையே சுத்தின மாதிரின்னு புரியவைச்சவர். தானே எல்லாத்தையும் சொல்ல அம்பாளுக்கு சிரமமாயிருந்தது. லம்போதரன் மூலமா புரிய வைச்சா.

அழிவு என்கிறது அவளுக்கில்லே! தக்ஷயாகத்துலே அவனாலே வளர்க்கப்பட்ட உடலைத்தான் எரிச்சா. இன் னோரிடத்திலே பர்வத ராஜகுமாரியா மலர்ந்தா. சில வீடுகளிலே நகையைக் கடையிலே போடாம அழிச்சு அழிச்சுப் பண்ணுவா. கடையிலே போட்டாலும் அவாளும் உருக்கி வேறே நகையாத்தான் பண்ணப் போறா! இங்கே தேவி தன்னை உருக்கிண்டா! பிடிக்கலேன்னா உருக்கித் தானே ஆகணும்! தேவி பத்தரைமாற்றுத் தங்கம். நெருப்பிலிட்டாலும் அழிவில்லை. தன் அங்கம் விழுந்த இடமெல்லாம் சக்தி பீடங்களாக அருளுகிறா. தன்னை அண்டி வந்தவர்களோட பாபத்தைப் பொசுக்கறா.

அவ எதுக்கு வெட்கப்படறா? லோகத்தையே படைச்சுட்டு அவ மறைஞ்சு இருக்கிறப்போ ஒரு வீட்டைக் கட்டிட்டு பெருமையடிச்சுக்கறவாளைப் பார்த்து நாணப்படறாளாம்! இத்தனை புதையலை பூமிக்குள்ளே வைச்சிருக்கிறவ அம்பாள்! கொஞ்சத்தைக் கண்டு பிடிச்ச மனுஷன் படாடோபமா நடக்கறதைப் பார்த்து வெட்கி மறைஞ்சுக்கறா. அந்தரங்கமா அவளைப் புரிஞ்சுக்கறவாளுக்கு மட்டுமே அவள் தரிசனம் கிடைக்கிறது!

மடைப்பள்ளியில் வேலை செய்த வரதன் வாயிலே தாம்பூலத்தை உமிழ்ந்தா! அவன் காளமேகமானான். நுனிக் கிளையிலே உட்கார்ந்து அடிக்கிளையை வெட்டின அசடன், அவளோட அருளாலே காளிதாசனாகி கவி மழை பொழிஞ்சான். ஊமையை மூக கவியாக்கினவள் அவள். அவளுக்கேது அழிவு! பஞ்சதசாக்ஷரீயின் ஐந்தாவது எழுத்து ‘ஹ்’‘ ஹ்ரீங்கார ரூபமாயிருக்கிறவ அம்பிகை.

உதத்தியன் என்கிற பிராம்மணப் பையன் ஊமையாகவும் மூடனாகவும் இருந்தான். அவன் ஒரு பன்றியைக் காப்பாற்ற “ஹ்ரூம்” என்ற வார்த்தையை உச்சரிச்சான்! ஹ்’ என்கிற அந்த முதல் எழுத்தும், உயிர்கள் கிட்டே அவன் காட்டின விசுவாசமும் அவனை மகாபண்டிதனாக்கியது. ‘ஹ்ரூ’ என்கிறதும் பீஜாக்ஷரமாச்சே! ஹ்ரீங்காரத்தையே இருப்பிடமாகக் கொண்டவள் தேவி. ஹ்ரீம் என்கிற வார்த்தையில் பிரிய முடையவள்.

ஹ்ரீம் என்கிறது புவனேஸ்வரி பீஜாட்சரம். வேறு மந்திரம் வாயில் நுழையாதவர்கள் இதை ஜபித்து வந்தாலே போதும். “ஹ” என்கிறது சிவனையும், ‘ர’ என்கிறது சக்தியையும், ஈ என்கிறது விஷ்ணுவையும் குறிக்கிறதாகையால் நல்ல முன்னேற்றங்களையும், காரிய சாதனையையும் பெற முடியும். ‘ஹ்ரீம்”கார ஜபத்தால் அம்பிகை ஆனந்தப்படுகிறாள்.

ஹ்ரீங்காரத்தோடு கூடியிருப்பவள் அவள். நாம் சொல்கிற ஒவ்வொரு ஹ்ரீமும் அவளுக்கு ஒவ்வொரு நவரத்தினக் கல்லா மாறி ஒரு அற்புதமான ஆபரணமாறது என்கிறது திரிசதியின் 89 ஆவது ஸ்லோகம்.

சீலம்னா என்ன? ஸ்ருஷ்டிக்கறச்சே பிரம்மா கிட்டேயும், ரட்சிக்கறச்சே பெருமாள் கிட்டேயும், பூலோகத்தோட ஒவ்வொரு பக்கமா குப்பைகளை அழிக்கறச்சே ருத்திரன் கிட்டேயும் கலந்துருக்கா. இதைத்தான் அடுத்த ஸ்லோகம் சொல்றது.

ஹ்ரீம் ஏகாக்ஷர மந்திரம். வெறுமனே ஹ்ரீம்ன்னு சொல்லிண்டிருந்தாலே போதும். அவா nக்ஷமமா இருப்பா. ஆதிபராசக்தியா தன்னோட கர்ப்பத்திலே முத்தொழில் புரியற வாளையும் வைச்சிண்டிருந்தவ அவ. கர்ப்பத்திலே புள்ளியா இருக்கிற கருதான் பிறந்து வளர்ந்து பெத்தவாளுக்குத் தலை வலியா மாறுகிறது. ஹ்ரீங்காரின்னே அவளுக்கொரு பெயருண்டு. ஹ்ரீம்னா என்ன அர்த்தம்? அவதான் அர்த்தம்! அவளோட தோலே ஹ்ரீம்தான்! உதிரமே ஹ்ரீம்தான்” ஓம் ஹ்ரீம்நம:”ன்னு ஸ்ரீசக்ரத்திலே பூவைப்போட்டு மகான்களெல் லாம் அவள் பிரியத்தை சம்பாதிச்சுண்டிருக்கா.

ஹ்ரீங்காரத்துக்கு ஆதாரமாயிருக்கறவளும் அவள்தான்! ஒரு குருகிட்டே உபதேசம் வாங்கிண்டுதான்‘ஹ்ரீம்’ என்று ஜபிக்கலாம். அது பெத்தவா பார்த்து கலியாணம் பண்ணி வைக்கற மாதிரி. முறைப்படி படிச்சு பட்டம் வாங்கறது மாதிரி. அப்போதான் அஞ்ஞானம் விலகும். சிந்திக்கற சக்தி வளரும். முக்தி கிடைக்கும்.

மந்திரங்களாலானது தான் தேவியோட சரீரம். பஞ்ச தசாக்ஷரியின் ஆறாவது எழுத்து‘ஹ’. இது கோடி ஸுர்யப் பிரகாசத்தோடு கூடிய காமராஜபீடம், அனாஹதத்திலிருந்து கிளம்பி ஆக்ஞாசக்கரத்தை எட்டுகிறது. காமம், குரோதம் முதலான சத்துருக்களை அழிக்கிறது. ஹலம்னா கலப்பை, கலப்பையை ஆயுதமாகக்கொண்டவர் பலராமர். ஒரு சமயம் கலப்பையை அஸ்தினாபுரக் கோட்டையிலே மாட்டிஅதை அசைச்சுட்டார். அப்புறம் துரியோதனாதியர் மன்னிப்புக் கேட்டுண்டு லக்ஷ்மணை என்கிற கன்னிகையை ஜாம்பவதியோட பிள்ளை சாம்பனுக்கு விவாகம் பண்ணி வைச்சா. அஸ்தினாபுரம் இன்னிக்கும் கொஞ்சம் சாஞ்சிருக்கிறதா விஷ்ணு புராணம் சொல்றது. அப்படி ஒரு பலம் பெற பலராமர் சக்தி உபாஸனை பண்றார்.