Thursday, June 29, 2006

Azhagan Aravamuthu Ammaiyarammai

Ellai Theivangal

கிராம தேவதைகள்
அழகன் அரவமுத்து அம்மையரம்மை!
மதுரை வடக்கு மாசி வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தான் அரவமுத்து. பல்லக்கின் திரைச் சீலையை நூலளவு விலக்கி வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்த தாசி லட்சுமி அரவமுத்துவின் தேஜஸைக் கண்டு விதிர் விதிர்த்தாள். பல்லக்கு அரவமுத்துவின் அருகில் சென்றதும் “நில்லுங்கள்” என்று உத்தர விட்டாள் லட்சுமி.




“நிலவொன்று பல்லக்கில் போகிறதோ?” என்று குறும்பாகக் கேட்டான் அரவமுத்து.

“உஷ்! அதிகம் பேச்சு வேண்டாம்! திரைச்சீலையும் அழகேச மன்ன னிடம் உளவு சொல்லும். என் பெயர் லக்ஷ்மி. நான் அழகாபுரி வேந்தனின் உடமை. நீங்கள் என் வீட்டுக்கு வருகிறீர்களா? அல்லது உங்கள் இருப் பிடத்துக்கு நான் வரட்டுமா? இது என் முகவரி” என்று தாசி கிசுகிசுக்க அரவமுத்து வாயடைத்துப் போனான்.

தோகை மயில் குயில் குரலில் பேசுமா? என்று வியந்தான். “ஒத்தைக் காலன் விளையில் பெற்றோர் தவித்திருப்பர். இன்றைக்கு எட்டாம் நாள் சந்திப்போம்” சட்டென்று முடிவெடுத்து அவன் சொன்ன பிறகு “புறப்படுங்கள்” என்று மிழற்றியது லட்சுமிக் கிளி.

மதுரையைச் சுற்றிப் பார்க்காமலே திட்டத்தை மாற்றிக் கொண்டு ஒத்தைக்காலன்விளைக்குச் சென்றான் அரவமுத்து.

“ஆத்தா! அண்ணன் வந்துட்டாக!” தங்கை அம்மையரம்மையின் கூவல் ஊரையே வீட்டில் கூட்டி விட்டது.

மகனுக்கு ஆரத்தி சுற்றி பொட்டு வைத்தாள் சிவகாமி. “ராசா! சந்திரக் குட்டி அண்ணாவி கிட்டேதான் எல்லாம் படிச்சாச்சே! அப்புறம் எங்கபோனே? என்று மகனைத் தடவிக் கொடுத்தபடி கேட்டார் சிற்றரசர் இணை சூரமாயர்.

“மல்யுத்தம், சிலம்பம், குதிரையேற்றம் எல்லாம் படிக்கணுமின்னே திண்டுக் கல்லிலேயிருந்து சுந்தரப் பணிக்கரை வரவழைச் சோம்! இந்தக் கோட்டை யைக் கட்டியாள இவ்வள வும் போதாதுன்னு மலை யாளத் துக்குப் போயி மந்திரஜால மெல்லாம் கத்துக்கிட்டி யாக்கும்” என்று நொடித்தாள் அத்தை.

“அம்மா! உங்களுக்கு தங்கச்சி கிட்டதானே பிரியம் அதிகம்” என்று தாயை வம்புக் கிழுத்தான் அரவமுத்து.




“ஏன் அப்பிடிச் சொல்லுதே? மீனாச்சியும், சொக்கநாதரும் ஆளுறதுக்குப் புள்ளையையும், ஆசைக்குப் பொண்ணையும் தந்திருக் காருன்னு தான் நெனைச்சி ருக்கோம்! அக்கினி நக்ஷத்திரத்திலே பொறந்த வனாச்சே! அதான் நெருப்பா வார்த்தையைக் கக்குறே” என்றாள் சிவகாமி.

“தோ, இதுதான் அண்ணன் எப்பவரும், எப்பவரு மின்னு கேட்டு தொளைச்சிடுச்சு” என்று மகளைச் செல்லமாகத் தலையில் தட்டினார் தந்தை.

ஒரு வாரம் போனதே தெரியவில்லை! எட்டாம் நாள் மீனாட்சியைப் பார்க்க என்று சொல்லிவிட்டுப் புறப் பட்டு விட்டான் அரவமுத்து.

வாசலிலேயே காத்திருந்து வரவேற்றாள் தாசி லக்ஷ்மி. பல்லக்குத் தூக்குபவர்களும் மனிதர்கள் தான் என்பதை லக்ஷ்மி மறந்து போனாள். அவர்களில் ஒருவன் லக்ஷ்மியும் அரவமுத்துவும் பேசியதை அப்படியே கொற்றவனிடம் ஒப்பித்திருந்தான்! அரசனிடம் நல்ல பெயர் வாங்கலாம் என்ற நினைப்பு அவனுக்கு.

அரவமுத்து வீட்டுக்குள் நுழைந்ததுமே அழகேசனுக்குத் தகவல் போய்விட்டது. ருதுவான நாளிலிருந்து காவல்காத்த சொத்தைக் களவு போக விடுவானா வேந்தன்?

லட்சுமியின் அழகு அவளைக் காப்பாற்றியது. அரவமுத்துவின் தலை கொய்யப்படவேண்டும் என்று தலையாரிக்கு ஆணையிட்டான் அழகேசன். அரவ முத்துவின் கைகளில் விலங்கு மாட்டி அழகாபுரிக் கோட்டையைக் கடந்து காட்டு வழி நடத்திச் சென்றான் தலையாரி. அவனுக்கும் இவன் வயதில் ஒரு பிள்ளை உண்டு!



“பொம்பிளைங்க சகவாசம் எங்கே கொண்டு விட்டுச்சு பார்த்தியா? வாலிப வயசு! எதையும் அனுபவிக்காம போறே! ஒன் அழகுக்கு ராசகுமாரியே தேடி வருவா! அவசரப்பட்டுட்டியே! ராசா உத்தரவை நிறைவேத்தலேன்னா என் ஒடம்புலே சிரசு நிக்காது. நீ ஏதோ மந்திரமாயமெல்லாம் கத்து வைச்சிருக் கிறதா பேசிக்கிட்டாங்க! சமயத்துக்கு ஒண்ணும் ஞாபகம் வரலியா?” என்று அனுதாபத்துடன் கேட்டபடி தலையாரி அரிவாளை ஓங்கினான்!

அதுவரை தான் கற்ற மந்திரங்களை மெல்ல முணு முணுத்தபடி நடந்து வந்த அரவமுத்து வல்லூறாகிப் பறந்து போனான். கீழே விழுந்த கைவிலங்குகளை எடுத்துக்கொண்டு தலையாரி நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

பத்திரமாக ஊர் போய்ச் சேர்ந்தான் அரவமுத்து. என்றாலும் அவன் உடல்தான் ஒத்தைக்காலன் விளையில் இருந்தது, மனமெல்லாம் தாசி லட்சுமியையே சுற்றி வந்தது.

மகனுக்குத் திருமணம் செய்து விடலாம் என்று பெற்றோர் ஜாதகம் பார்க்க “பெண் உறவு மரணத்தை ஏற்படுத்தும். 22 வயது முடியட்டும்” என்றார் ஜோதிடர்.

சித்திரைத் திருவிழாவுக்கு மாறு வேடத்தில் மதுரை வந்தான் அரவமுத்து. இப்பொழுது வள்ளி என்ற தாசி அவனைப் பார்த்து அவன் மீது மோகம் கொண்டாள். அவனை நெருங்கி மயக்கு மொழி களால் பேசி அவனை தன்னோடு வருமாறு அழைத்தாள்.

“லட்சுமி பெருமாளுக்கு சொந்தம். இலவாணிச்சி வள்ளி இந்த முருகனுக்கு சொந்தம். ரோசா அழகு தான். அதுக்காக தாமரை அழகில்லேன்னு சொல்ல முடியுமா” என்று தேனாய் கொஞ்சினாள் வள்ளி.

“ஒரேமாவுதான். இட்லியாய் ஊற்றினாலும், தோசையாய் வார்த்தாலும் பசியைத் தீர்க்கிறது” என்று நினைத்து தாசி வள்ளியின் பின் நடந்தான் அரவமுத்து.

திண்டுக்கல் அரசன் அரவ முத்துவின் சாமர்த்தியங்களை அறிந்து “இங்கேயும் அழகிகள் உண்டு. அதோடு என் நண்பனாக சிலகாலம் தங்கியிருக்கலாம்” என்று தூதனுப்பினான். அதே சமயம் மகன் மறுபடியும் ஒரு தாசி வலையில் விழுந்தானே என்று மருகிய பெற்றோர் அவனை மீட்டு அழைத்துப்போக மதுரைக்கே வந்திருந்தனர்.

திண்டுக்கல் அரசருக்கு மறுநாள் வருவதாக தகவல் அனுப்பினான் அரவமுத்து. மறுநாள் தங்க மாங்கனி களை மந்திரத்தால் வரவழைத்து பேழையில் அடுக்கி பெற்றோர் அறியாமல் நண்பனுடன் திண்டுக்கல் சென்றான். அன்று வெள்ளிக்கிழமை.

தங்க மாம்பழங்களைப் பார்த்த அரசன் பிரமித்தான். அரவ முத்துவுக்குத் தடபுடலான விருந்துபசாரம்.

சனிக்கிழமை காலை வழக்கமாக அரசனுக்கு எண்ணெய் தேய்ப்பவன் எண்ணெய்க் கிண்ணத்துடன் வந்தான்.

“மன்னா! என் சினேகிதன் வர்மக்கலை தெரிந்தவன். அவன் எண்ணெய் தேய்த்தால் சுகமாகத் தூக்கம் வரும். இன்று அவனை தேய்த்துவிடச் சொல்லிப் பாருங்கள்” என்றான் அரவமுத்து.

இதைக் கேட்ட எண்ணெய் தேய்ப்பவன் முகம் சுண்டியது. “அடுத்த வாரமோ, அடுத்த மாதமோ எண்ணெய் தேய்க்கும் போதெல்லாம் குத்திப் பேசுவாரே” என்று குமுறினான்.

அரவமுத்து சொன்னதற்கு அரசர் சம்மதிக்க அவனிடமிருந்து வர்மக் கலையைக் கற்றிருந்த தோழன் எண்ணெய் மஸாஜ் செய்தான். அரவமுத்து சொன்னபடி மன்னன் சுகமாக நித்திரை செய்தான்.

அரண்மனை எண்ணெய் தேய்ப்பான் பொறாமை கொண்டான். அரவமுத்துவை விரட்ட சதித்திட்டம் தீட்டினான். எப்பொழுதும் எண்ணெய் தேய்க்கும் போது அரசனின் வைர மோதிரத்தை அவன்தான் கழற்றி வைத்திருந்து அவர் தூங்கி எழுந்ததும் கொடுப்பான்.

அன்று அந்த மோதிரத்தை எடுத்து அரவமுத்து உறங்கும்போது அவனது உடைவாள் உறையில் போட்டு உடைவாளைச் சொருகி வைத்து விட்டான்.

உறங்கி எழுந்த அரசர் ‘‘மோதிரம் எங்கே’’ என்று கேட்க “என்னிடம் தரவில்லை. அரவமுத்துவின் நண்பரிடம் தான் தந்தீர்கள்” என்று சாதித்தான் அரண்மனை எண்ணெய் தேய்ப்பவன்.

அந்த நண்பன் அரவமுத்துவிடம் மோதிரத்தைத் தந்து விட்டு எண்ணெய் தேய்த்ததைத் தான் பார்த்த தாக பொய்ச் சாட்சி சொன்னான் எண்ணெய் தேய்ப்ப வனுக்கு வேண்டிய ஒரு சேவகன்.

அரவமுத்துவும், அவன் தோழனும் தங்களை சோதித்துக் கொள்ளும்படி கூற, சோதனையில் மோதிரம் சிக்குகிறது.

“களவாணி” என்ற பட்டம் சூட்டி அரவமுத்துவை வெள்ளிமலையில் கழுவேற்றும்படி ஆணையிட்டார் அரசர்.

கழுவில் துடித்தான் அரவமுத்து. மோர் விற்கும் ஆயர் குல மங்கையான முத்துமாரி அவன் மீது இரக்கம் கொண்டு மோர் தந்தாள்.

“மாரி! ராசாவுக்குத் தெரிஞ்சா கையைக் காலை வாங்கிப்புடுவாக! ராசத்துரோகிக்கு தண்ணி கொடுத்தாக்கூடத் தண்டனை, தெரியுமா?” என்று அச்சுறுத்தினார்கள் கூட மோர் விற்பவர்கள்.

“திருவிழாவுக்குப் போன வண்டி கொடை சாஞ்சி ராக்காயிக்குக் கையும், காலும் போச்சு. அது மாதிரி நெனைச்சுக்கறேன்” என்று தைரியமாகச் சொல்லி விட்டு தொடர்ந்து தினமும் மோர் கொடுத்தாள் முத்துமாரி. கழு மரத்தில் குற்றுயிரும் குலை உயிருமாக சில நாட்கள் துடித்தான் அரவமுத்து.

அவன் கழுவில் ஏற்றப்பட்ட விஷயம் ஒத்தைக் காலன் விளையில் பரவியது. அம்மையரம்மை கனவில் “தங்கச்சி! நாக்கு மேலண்ணத்தில ஒட்டிக்குது. வெள்ளிமலைக்கு மோர் கொண்டு வாரியா?” என்று கேட்கிறான் அரவமுத்து.

தங்கக் குடத்தில் மோர் கொண்டு கதறி அழுதபடி பெற்றோரோடு வெள்ளி மலைக்கு விரைந்து வந்த தங்கை அண்ணன் நிலைமை கண்டு மனம் உடைந்தாள்.

“சொக்கநாதா! அக்கிரமம் பண்ணினவங்களை நீதான் தண்டிக்கணும்” என்றபடி அங்கேயே தீ வளர்த்து அதில் பாய்ந்தாள். தங்கை தீபாய்ந் ததைக் கண்டு அரவமுத்து மனம் வெதும்பினான். இந்த கோர முடிவைத் தாங்காத பெற்றோர் தாங்களும் தீப்பாய்ந்தனர்.

ஏற்கெனவே நைந்து போன அரவமுத்துவின் ஜீவனும் பிரிந்தது. அண்ணனும் தங்கையும் தெய்வ மானார்கள். முன்பு அரவமுத்துவை சிரச் சேதம் செய்யச் சொன்ன அழகேச மன்னனும், திண்டுக்கல் அரசனும் குடும்பத்தவரும் சொல் லொணாத் துன்பத்தை அனுபவித்தனர்.

திண்டுக்கல், மதுரை, வெள்ளிமலை, ஒத்தைக் காலன் விளை இங்கெல்லாம் பீடம் வைத்து பூஜை செய்து, பலி கொடுத்து அரவமுத்துவையும் அவன் தங்கை அம்மையரம்மையையும் சாந்தப்படுத்தினர் மக்கள். அரவமுத்துவும் அவன் தங்கை அம்மையரம் மையும் காவல் தெய்வங்களாக வழிபடப்படுகின்றனர்.

சில இடங்களில் இக்காவல் தெய்வங்களுக்கு பொங்கல் வைத்துத் திருவிழாவும் நடைபெறுகிறது. அங்கெல்லாம் அரவமுத்துவின் வரலாறு பாட்டாகப் படிக்கப்படுகிறது.

- காயத்ரி