Kanchi Chandrasekhar Path
ஸ்ரீபரமாச்சார்யாள் பாதையிலே. . .
சென்ற இதழ் தொடர்ச்சி. . .
இரத்தம் சிகப்பு. குங்குமம் சிவப்பு. பதவி வேணுமா? சிவப்பு ஆடை சார்த்தணும். செவ்வாய் தோஷம் போகணுமா பவழமாலை போட்டுக்கணும். கௌரவத் தையும், செல்வாக்கையும் தேடறவா சூரியனை ஆராதிக்கணும். சூரியன் அவளுக்கு வலது கண்ணில்லையோ? ஆதித்ய ஹிருதயத்தைப் பாராயணம் பண்ணித்தான் ஸ்ரீராமபிரான் இரா வணனை ஜெயிச்சாங்கறது இராமாயணம். எதிரிகளை மடக்கணுமின்னா சிவப்பு வஸ்திரத்தாலே தான் அலங்காரம் பண்ணணும்.
பஞ்சதசாக்ஷரி மந்திரத்திலே பத்தாவது எழுத்து“ல.” அந்த ரூபமாயிருக்கிறதா 181ஆவது ஸ்லோக வரி சொல்றது.
கொடியைப் போல மனசிலே இருத்தி ரிஷிகள் அவளை பூஜிச்சிருக்கா. பதிவிரதாஸ்த்ரீகளால் அவ ஆராதிக்கப்பட்டவள். சதி சாவித்திரி, அவளை பூஜித்ததால் தான் எமன் அவளோட கண்களுக்குத் தெரிஞ்சான். அவளும் தன் புருஷனோட உயிரை வாக்கு சாதுரியத்தாலே மீட்டுண்டு வந்தா.
மதயந்தின்னு ஒரு பதிவிரதை. கௌரி பூஜை பண்ணி கணவனோட சாபத்தைப் போக்கி ராஜ்ஜியத்தை மீட்டுக் கொடுத்தா. ருக்மணி சக்தியை பூஜைபண்ணித் தான் ஸ்ரீகிருஷ்ணனைப் பதியா அடைஞ்சா.
பரிக்ஷித்து ராஜா சொர்க்கத்துக்குப் போகலே. அதுக்குக் காரணம் அவனோட பிள்ளை ஜனமே ஜயன் சர்ப்பயாகம் செய்ததுதான்! அந்த சர்ப்ப யாகத்தை ஜரத்காரு ரிஷியோட புத்திரர் அஸ்திகர்தான் நிறுத்தினார். சர்ப்பயாகத்தை நடத்தியது உத்துங்க முனிவர். அம்பாளுக்குக் கோவில் கட்டி வழிபடச் சொன்னார் வேதவியாசர். தேவி பாகவதத்தையும் கூறியருளினார். பரிக்ஷித்து சொர்க்கம் சேர்ந்தான்.
பிருகு மகரிஷி யோட பாரியாள் கியாதி, தேவியை பூஜை பண்ணித்தான் மகாலக்ஷ்மியை மகளா அடைஞ்சா. அப்போ லக்ஷ்மி யோட பேர் பார்க்கவி. அவளோட கூடப் பிறந்தவா தாதா, விதாதான்னு ரெண்டு பேர். எல்லாரும் தேவி உபாஸனை பண்ணி தேஜஸை அடைஞ்சா. விதாதா வோட பிள்ளைதான் மிருகண்டு ரிஷி. இவர் மார்க்கண்டேயரோட தகப்பனார். மார்க்கண்டேய ரோட மைந்தன் வேதசிரன். அவனும் தேவிபக்தன்தான்!
சுத்யும்னன் சிவ சாபத்தால் இளை என்கிற பெண்ணாயிட்டான். இளைன்னா ரொம்ப இளமையுடையவன்னு அர்த்தம். புதபகவான் இளையை விவாகம் செய்துண்டார். அவாளுக்குப் பிறந்தவன் தான் புரூரவன். ரிஷிகளெல்லாம் யாகம் பண்ணி இளையை மறுபடியும் சுத்யும்னனா மாத்திட்டா. எல்லாத்துக்கும் தேவி அருள்தான் காரணம். சூரியனோட பிள்ளை மனு. மனுவோட கடைசிப் பிள்ளை பிருக்ஷத்திரன். அவன் சுத்யும்ன னோட தம்பி. குருவான வசிஷ்டருக்கு நிறையப் பசுக்கள் சொந்தமாயிருந்தது. எல்லாம் தானமாக் கிடைச்சது.
சிஷ்யாள் எல்லா வேலையையும் மறுக்காம செய்யணும். பசுக்கூட்டத்தைக் காவல் காக்கச் சொன்னார் வசிஷ்டர். ராத்திரி ஒரு புலி வந்து பசு நிரையிலே நுழைஞ்சுடுத்து. சட்டுனு அம்பு விட்டான் பிருக்ஷத்திரன். புலி ஓடிடுத்து. ஆனா அம்பு குறி தவறி ஒரு பசுவைக் கொன்னுடுத்து. அதுக்குக் காரணம் அவனுக்கு தேவி உபாசனை இல்லே! வசிஷ்டரோட சாபத்துக்கு ஆளானான்.
அருந்ததி, மானசீக தேவி பூஜை பண்ணியே ஆகாயத்துலே நக்ஷத்திரமானா!
பிரளயத்துக்கும், சிருஷ்டிக்கும், காத்தலுக்கும் தேவிதான் காரணம் அவ அனாதியானவ. பெண்கள் நடனமாடினா அது லாஸ்யம். ஆண்கள் ஆடினா அதுக்குத் தாண்டவம்னு பேரு. நடனம் ஆடறதுக் காகவே அவ அப்ஸரஸ்த்ரீகளைப் படைச்சிருக்கா. நல்ல நடனத்தை அவ ரஸிக்கிறா! தாள லயங்கள் அவளுக்குப் பிடித்தமானது. நர்த்தன மாடறபோது அவாளாவே மாறிடறதா தேவி பாகவத்திலே சொல்லியிருக்கு.
‘மலையாசலத்திலே அவள் பேர் ரம்பை. திலோத் தமையிடம் அவள் அழகாயிருக்கா. ஏம கூடத்திலே மன்மதை.’ இப்படி அவளை வர்ணிக்கிறது தேவி மஹாத்மியம்
அலம்புஸா என்கிற அப்சரஸை திருண பிந்து ராஜா விரும்பி மணந்து கொண்டிருக் கான். அவாளோட பிள்ளை விசாலன் தான் வைசாலி நகரத்தையே ஏற்படுத்தினவன். அந்த வம்சத்திலே வந்த ஸோமதத்தன் பத்து அஸ்வ மேத யாகம் பண்ணினவன். எல்லாம் அம்பாளோட கடாட்சம்!
அம்பாளிடம் இல்லாதது எது? எதையும் அடைய வேண்டும் என்ற அவசியம் அவளுக்கில்லை!
அவளுடைய உத்தரவை யாரும் மீற முடியாது. யாருடைய கட்டளையும் அவளைத் தடுத்து நிறுத்த முடியாது. சிவனோட உத்தரவையும் மீறித்தான் அவ தட்சயாகத்துக்குப் போனா. பெத்தவா தப்பை பிள்ளைகள் பெரிசு படுத்தப்படாது
என்கிறதை லோகத்துக்குப் புரியவைக்க! அவளுக்குத் தெரியாதா தட்சனோட அகம்பாவம்! சிவ பெருமானை அவமரியாதை பண்ணினவன் உலகத்திலே இருக்கப் படாதுன்னு நினைச்சா! பூலோக மனுஷாளுக்கு சக்தி பீடங்களாயிருந்து அருள் புரியணுமின்னு முடிவு கட்டினா. இது அவளோட தீர்மானம்.
அம்பாள் புருவ அசைப்பிலே எல்லாத்தையும் அறிவிக்கிறதா சௌந்தர்ய லஹரியோட 24-ஆவது ஸ்லோகமும் சொல்றது.
ஈடு இணையில்லாத, எதோடவும் ஒப்பிட முடியாத அழகுடையவள் அவ. தேவியோட பாத நகங்கள் கண்ணாடிபோல் பளபளப்பாயிருக்கும். அந்த நகங் களின் நடுவிலேயிருந்து பலகோடி பிரம்மாண்டங் களும், தேவர்களும் அப்சரஸ்களும், கந்தர்வர்களும், மற்ற பேர்களும் வந்ததைப் பார்த்ததா பிரம்மா சொல்றார். அவ அழகோட அமுதசுரபி. அது வற்றாம கொட்டுகிற அருவி.
சுலபமா சித்திகளை வழங்கறவ அம்பிகை. சௌபரின்னு ஒரு ரிஷி. ஒருமாமாங்கம் ஜலத்துக் குள்ளேயே தவம் பண்ணிண்டிருந்தார். அவருக்கு பறவை, மிருகம், ஊர்கிறது எல்லா பாஷையும் தெரியும்.
தண்ணிக்குள்ள சம்மதன்னு ஒரு பெரிய மீன். அதோட உடம்பிலே பேரன், பேத்தின்னு ஏகப்பட்ட மீன்கள் விளையாடறதைப் பார்த்தார். நாமளும் கல்யாணம் பண்ணிண்டு உறவுகளோட ஆனந்த மாயிருக்கணுமின்னு முடிவு பண்ணினார். அம்பாளை வேண்டிண்டு சண்டிகா ஹோமம் பண்ணினார். ‘நீ நினைச்சது சித்திக்கும்’ னு வரம் கொடுத்தா தேவி.
மாந்தாதாவுக்கு ஐம்பது அழகான பெண்கள், மாந்தாதா தேவி உபாசகராச்சே! கேட்கணுமா? மாந்தாதா கிட்டேபோய் “ஐம்பது கன்னிகை வைச்சி ருக்கியே! ஒண்ணை எனக்குக் கன்னிகா தானமாக் கொடு”ன்னு கேட்டார் ரிஷி.
‘தலையெல்லாம் பனி பெஞ்ச மாதிரி இருக்கிற இவரா மாப்பிள்ளை’ன்னு யோசிச்சார் ராஜா. மறுக்க வும் பயம், சபிச்சுடுவாரோன்னு! ராஜா தந்திரமா “நான் தாய் வயிற்றிலே பிறக்காம தகப்பன் வயிற்றிலே பிறந்த வன். ஸ்த்ரீகளுடைய அபிப்ராயத்துக்கு அதிகமா மதிப்புக் கொடுக்கணுமின்னு நெனைக்கிறேன்’’னார்.
“நல்ல சுபாவம் தான்! உன் பெண்களிலே ஒருத்தி ஆசைப்பட்டா உனக்கொண்ணும் ஆட்சேபணை இல்லையே”ன்னு கேட்டார் ரிஷி.
மாந்தாதாவுக்குச் சிரிப்பு வந்தது. அடக்கிண்டார். இந்த தொண்டுகிழத்தை எவ ஆசைப்படப் போறான்னு நினைச்சு அலட்சியமா ஒரு சேவகனைக் கூப்பிட்டு அவரை அந்தப்புரத்துக்கு அழைச்சிண்டுபோகச் சொன்னார்.
அந்தப்புர எல்லை வந்ததும் ‘நான் போயிக்கறேன். நீ இங்கேயே இரு’ன்னு சேவகனைத் தடுத்து நிறுத்திட்டார் ரிஷி.
(தொடரும்)
- ஆர்.பி