ஆர். பி.
11.11.2004 தீபாவளிப் பண்டிகை
ஸ்ரீவராக மூர்த்திக்கும், பூமாதேவிக்கும் பிறந்தவன் நரகாசுரன். தாயையன்றி வேறெவராலும் மரணம் சம்பவிக்கக்கூடாதென்று வரம் வாங்கியிருந்தான். பூதேவியின் அம்சமாகப் பிறந்த சத்யபாமாவை கண்ணன் மணந்தார். நரகாசுரன் கொடுமை தாங்காமல் தேவர்கள் கிருஷ்ண பரமாத்மாவிடம் முறை யிட்டனர். போர்க்களத்துக்கு பாமா கண்ணனின் சாரதியாக வந்தாள். யுத்தத்தில் மடியும்போது நரகாசுரன் தனது இறந்த தினத்தை மக்கள் விமரிசையாகக் கொண்டாட வேண் டும்’ என வேண்டிக் கொண்டான். அந்த நாளே நரக சதுர்த்தசி. இன்று அதி காலையில் தைலத்தில் லக்ஷ்மியும், நீரில் கங்கையும் வாசம் செய்கிறார்கள். ஆகவே அந்தப் பொழுதில் எண்ணெய் ஸ்நானம் செய்வதால் லக்ஷ்மி கடாட்சமும் கங்கா ஸ்நான புண்ணியமும் கிடைக்கும். ‘தைலே லக்ஷ்மி, ஜலே கங்கா’ என்பது முதுமொழி.
வட நாட்டில் தீபாவளி திருநாளை தீபமேற்றியே கொண்டாடுகின்றனர். வடநாட்டில் இன்று லக்ஷ்மி-குபேர பூஜையும் நடத்தப்படுகிறது. தங்க, வெள்ளித் தாமரை அல்லது காசுகளால் லக்ஷ்மியை அர்ச்சிக்கிறார்கள். இன்று புதுக்கணக்கு எழுதுகிறார்கள்.
முதல் நாள் இரவே ஒரு மணைப்பலகையில் கோலமிட்டு புத்தாடைகளை குங்குமமிட்டு அடுக்கி வைத்து விடலாம். தீப ஒளியில் கண் விழிக்க வீட்டுக்குப் பெரியவர்கள் விளக்கேற்றி வைத்திருப்பார்கள். பட்சணங்கள், தங்க நகை, வெள்ளிக் காசு, பழங்கள் இவற்றையும் பரத்தி இருப்பர். இவற்றில் கண் விழித்தால் செல்வவளம் வற்றாதிருக்கும் என்பது வழிவழி வந்த நம்பிக்கை.
இன்று பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ள வேண்டும். இதனால் ஆயுள் விருத்தியாகும். தலையில் மூத்த பெண்டிர் எண்ணெய் வைத்தால் மங்கலம் கூடும்.
காலையில் இஞ்சி லேகியம் கொடுப்பர். உறவினர், நண்பர் இல்லம் செல்கையில் சாப்பிடும் பண்டங்களால் அஜீர ணம் ஏற்படக்கூடாதென்றே இந்த ஏற்பாடு.
--------------------------------------------------------------------------------
11.11.2004 மெய்கண்டார் ஜன்ம தினம்
திருப்பெண்ணாகடத்தில் சைவ வேளாளர் மரபில் அச்சுதக் களப்பாளர் என்ற சிற்றரசருக்கு தவப்பயனாய் உதித்தவர் இந்த சிவனடியார். தாயார் பெயர் மங்களாம்பிகை பெற்றோரிட்ட பெயர் சுவேதவனப்பெருமான். இரண்டு வயதுக்குள் பெற்றோர் சிவபதமடைந் தனர். மாமன் காங்கேய பூபதியிடம் சென்று திருவெண்ணெய் நல்லூரில் வளர்ந்தார்.
ஒரு சமயம் இவர் வீதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது சனத்குமாரரும், பரஞ்சோதி முனிவரும் அகஸ்தியரைக் காண வான்வழி சென்று கொண்டிருந்தனர். குழந்தை மீது விமான நிழல் பட்டதும் விமானம் நின்று விட்டது. ஞான திருஷ்டி மூலம் எதனால் விமானம் நின்றது என்பதைக் கண்டறிந்த பரஞ்சோதியார் கீழிறங்கி வந்தார். மெய்கண்டார் என்ற Ðதீட்சா நாமமிட்டு தலையில் கை வத்து ஆசீர் வதித்து ஞானோபதேசம் செய்தார். குழந்தை அவரை அங்குள்ள பொல்லாப் பிள்ளையார்
முன் அழைத்துச் சென்று தர்க்கித்து தெளிவு பெற்றது.
“அப்பனே! சென்ற பிறவியில் சரியை, கிரியை, யோகம் மூன்றையும் முடித்தவனாயிற்றே நீ” என வாழ்த்திச் சென்றார் பரஞ்சோதியார் .
இவர் சிவஞான போதத்தை 12 சூத்திரங்களாகவும், வார்த்திக மொழிப் பெயர்ப்பும் வெளியிட்டு உதாரணச் செய்யுளும் அருளியவர். இவரை சாமு சித்தர் என்று மக்கள் அழைத்தார்கள்.
--------------------------------------------------------------------------------
12.11.2004 கேதார கௌரிவிரதம்
புண்ணியவதி, பாக்கியவதி இருவரும் ராஜகுமாரிகள். பகையர சனின் திடீர் படையெடுப்பால் ஆண்டியானான் இவர்களின் தந்தை. இளவரசிகள் கங்கைக்குச் சென்ற போது கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கும் தேவமங்கையரைக் கண்டு நோன்பு பற்றி விசாரித்தனர். அவர்களும் நோன்பு கடைப்பிடிக்கும் முறைப் பற்றிக் கூறி “உமாதேவியார் இந்த விரதமிருந்து சிவபெருமானின் இடப்பாகத்தில் இடம் பெற்றார். அஷ்ட ஐஸ்வர்யங்களையும் கொடுக்கும் நோன்பு இது” என்று சொல்லி 21 இழைகள் கொண்ட சரட்டை இளவரசிகளின் வலது கையில் கட்டி விட்டனர். அதன் பயனாய் இருவருக்கும் இரு ராஜ குமாரர்களை மணக்கும் பாக்கியம் கிட்டியது. இருவருக்கும் மகப்பேறு வாய்த்தது மாமனாருக்காக மாப்பிள்ளைகள் படை திரட்டிச் சென்று எதிரியரசனை ஜெயித்து நாட்டை மீட்டுத் தந்தனர்.
இளையவளான பாக்கியவதிக்கு அசிரத்தை ஏற்பட்டதால் விரதத்தை கைவிட்டாள். பழைய கயிறு வைர, தங்க வளையல்களுக்கு நடுவே அசிங்கமாக இருப்பதாக நினைத்து அவிழ்த்து எறிய, அது அவரைப் பந்தலில் விழுந்து அவரைக் காய்கள் காய்த்துக் குலுங்கியது.
பாக்கியவதியின் கணவன் நோய் வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்தான். நாட்டில் மழை இல்லை. எங்கும் தரித் திரம், அதனால் கொலை, கொள்ளை என தீய சக்திகள் அதிகரித்தன. மக்கள் வளமான நாடு தேடிச் சென்றனர்.
மூத்தவள் தங்கைக்கு அறிவுரை கூறி விரதத்தை தொடரச் செய்தாள். இதனால் நாட்டில் மழை பெய்து முப் போகம் விளைந்தது. அவள் கணவன் வியாதி குணமானது. மக்கள் நாடு திரும்பினர். இந்த நோன்பை பக்தி சிரத்தையோடு கடைப்பிடிப்பவர் களுக்கு சகல சௌபாக்கியங்
களும் கிட்டும்.
--------------------------------------------------------------------------------
15.11.2004 மணவாள மாமுனிகள் ஜன்ம நக்ஷத்திரம்
திருநெல்வேலியில் சிக்கில் கிடாரம் என்ற ஸ்தலத்தில் 1370-ல் பிறந்தவர் இந்த ஹரிபக்தர். இவரது குரு திருமலையாழ்வார். அஹோபில மட ஸ்தாபகரான ஆதிவண் சடகோப ஸ்வாமியிடம் இவர் சன்யாசம் பெற்றுக் கொண்டார். திருவாய் மொழியின் வியாக்யானமான “ஈடு முப்பதாயிரம் படியை உபன்யசிக்க வேண்டும்” என்று திருவரங்கன் உத்தரவிட அவ்விதமே செய்தார். இவருடைய உபன்யாசம் பூர்த்தியாக ஒரு வருஷமாயிற்று. எம்பெருமானும் கதை கேட்க வந்து விடுவதால் அந்த ஆண்டு உற்சவங்களே நடைபெறவில்லை! சொற்பொழிவு முடிந்ததும் தனது ஆசனமான அனந்தனை மணவாளருக்குக் குடை பிடிக்க வைத்து மரியாதை செய்தார் ஸ்ரீரங்க நாதர். இன்றும் அங்கு மணவாள மாமுனிவரின் பின்னே ஆதிசேஷன்
எழுந்தருளியிருப்பதைப் பார்க்கலாம். இன்று பெருமாள் கோயில் சென்று பெருமாளோடு இவரையும் வணங்கினால் கல்வியும் , ஸ்ரீஹரியின் அருளும் கிட்டும்.
--------------------------------------------------------------------------------
15.11.2004 கடைமுகம்
துலாமாதத்தின் கடைசி நாள். இன்று காவிரியில் குறிப்பாக மயிலாடு துறையில் ஸ்நானம் செய்வதற்கு கடை முகம் என்று பெயர்.
--------------------------------------------------------------------------------
15.11.2004 ஐயடிகள் காடவர் கோன் ஜன்ம தினம்
‘பக்திக்கடல் ஐயடிகள்’ என்று நம்பியாண்டார் நம்பியால் போற்றப் பட்டவர் இவர். மூன்றாம் சிம்மவர்மன் என்பது சரித்திரப் பெயர். இவரது புதல்வரே சிம்ம விஷ்ணு. பல அரசர்கள் கப்பம் கட்ட பெருமையுடன் அரசாண்ட இந்தப் பல்லவ மன்னர் ஸம்ஸ்கிருதத் திலும் கலை ஞானத்திலும், பாடலி யற்றுவதிலும் வல்லவர். சிவாலயங்கள் அனைத்தையும் தரிசித்து ஒவ்வொன்றின் மீதும் ஒரு வெண்பா இயற்றியவர். nக்ஷத்திரத்திருவெண்பா எனப்படும். இதில் பலவெண்பாக்கள் காலத்தால் காணாமல் போக இப்போது 24 வெண்பாக்களே கிடைத்துள்ளன. மூப்பும், மரணமும் வருமுன், உடல் திடகாத்திரமாய் இருக்கும் போதே இறைவனைத் துதிக்க வேண்டும் என்பதே அவரது உபதேசமாகும்.
--------------------------------------------------------------------------------
16.11.2004 முடவன் முழுக்கு
இன்று கார்த்திகை மாதப்பிறப்பு. ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு மாலை போட்டுக் கொள்ளும் தினம். துலாஸ்நானம் பண்ண ஒரு முடவன் காவேரிக்கு நகர்ந்து வருகிறான். அவன் காவேரியை அடையும் போது ஐப்பசி மாதம் முடிந்து விடுகிறது. இனி மற்ற நதி தேவதைகள் காவேரியில் நீராட வர ஒரு வருஷமாகுமே என அவன் வருந்துகிறான். அப்போது “நதி மங்கையர் உனக்காக இன்றும் என்னுடன் கலந்துள்ளார்கள். மனம் தளராமல் வந்து ஸ்நானம் செய்” என்று அசரீரி ஒலித்தது. அவனும் நீராடி மோட்சம் பெற்றான். அதனால் இன்று காவிரியில் நீராடுவது ‘முடவன் முழுக்கு’ எனப் பெயர் பெற்றது. இன்று காவிரியில் குளித்தால் துலாமாதம் முழுவதும் நீராடிய புண்ணியம் கிடைக்கும். ஸ்நானம் செய்தபின் தாம்பூலம், மஞ்சள், கருகமணி, வளையல் வைத்து சுமங்கலிகளுக்குக் கொடுத்தால் ஏராளமான புண்ணியம் கிட்டும்.
--------------------------------------------------------------------------------
17.11.2004 ஸ்கந்த சஷ்டி
சக்தியிடம் வேலாயுதத்தோடு ஆசியையும் பெற்று சூரபத்மன், சிங்கமுகன், கிரௌஞ்ச பர்வதமாக இருந்த தாருகாசுரன், பானுகோபன் ஆகியோரை அழித்தார் சுப்ரமண்யர். நவவீரர்களும், லட்சம் சேனாபதிகளும் தோன்றி அசுர சேனைகளை துவம்சம் செய்தனர். வாழ்க்கையில் காமம், குரோதம், மோகம் முதலான ஆறு பகைவர்களை வெல்லவே ஆறு நாட்கள் விரதமிருக்கிறோம். இந்த ஆறு நாட்களும் கந்த புராணம் படிப்பது நல்லது. இன்று விரதமிருப்பது பன்னிரண்டு சஷ்டிவிரத பலனைத் தரும். சஷ்டி விரதம் சங்கடங்களைத் தீர்க்கக் கூடியது. சந்தான பாக்கியம் தரக்கூடியது. ‘சஷ்டி விரதம் இருந்தால் அகப்பையில் கருவரும்’ என்பது முதுமொழி. சர்ப்பதோஷங்களும் நீங்கும். எல்லா முருகன் கோவில் களிலும் சூரசம்ஹாரம் நடக்கும் திருச்செந்தூர் கடற்கரை மணல்
கொள்ளாதபடி பக்தர் கூட்டம் நிறைந்திருந்து சூரசம்ஹாரத்தை காண்பார்கள். முருகவேளின் மயில் வாகன தரிசனம் காணக்கண் கோடி வேண்டும்!
--------------------------------------------------------------------------------
23.11.2004 யாக்ஞ வல்கிய ஜெயந்தி
ரிஷிகளெல்லாம் ஒரு மகாநாடு நடத்தினார்கள் அதற்கு வைசம்பாயனரால் போக முடியவில்லை இதனால் ரிஷிகள் சாபமிட அவரைப் பாபம் சூழ்ந்தது. அதைப் போக்க தவம் செய்யும்படி தன் சீடர்களுக்கு உத்தர விட்டார் வைசம்பாயனர். யாக்ஞ வல்கியர் நான் ஒருவனே தவம் செய்து சாபத்தை அகற்ற முடியும். மற்றவர்கள் எதற்கு?” என்று கூற வைசம்பாயனர் “உனக்கு அகந்தை வந்து விட்டது. எனக்கு சீடனாயிருக்க உனக்கு தகுதியில்லை. என்னிடம் கற்ற வேதத்தை என்னிடமே திருப்பிக் கொடு” என்று கூற அத்தனையையும் கக்கிவிட்டார் யாக்ஞவல்கியர். பின்னர் சூரியனிடமிருந்து வேதங்களைக் கற்றுக் கொண்ட மகான் இவர்.
--------------------------------------------------------------------------------
26.11.2004 திருமங்கையாழ்வார் திருநக்ஷத்திரம்
ஸ்ரீமந் நாராயணனின் சார்ங்க வில்லின் அம்சமாகப் பிறந்தவர் இந்தப் பெருமாள் பக்தர். சோழனிடம் தளபதியாய் இருந்து பல வெற்றிகளைத் தந்து பரகாலன் என்ற பட்டத்தைப் பெற்றவர். இயற்பெயர் நீலன்; குமுத வல்லி என்கிற தேவமங்கையை மணக்க ஆசைப்பட்டார். அவள் போட்ட நிபந்தனைப் படி தினமும் 1008 அடியார்களுக்கு பாத பூஜை செய்து அறுசுவை உணவிட்டு அவளுக்கு மாலையிட்டார். அன்னதானம் செய்தே சொத்து காலியாயிற்று. வழிப்பறி செய்து அன்னதானமும், ஆலயத்திருப்பணிகளும் செய்தார். இவரைச் சோதிப்பதற்காக பரந்தாமன் திருமகளுடன் காட்டுவழி வந்தார். அவரையும் கொள்ளையடித்தார். கொள்ளையடித்த ஆபரண மூட்டையைத் தூக்க முடியவில்லை! “என்ன மந்திரம் போட்டீர்? மரியா தையாய் சொல்லிக் கொடும்” என அதட்டினார் ஆழ்வார்.
பகவான் பயந்தது போல் நடித்து அவருடைய காதில் “ஓம் நமோ
நாராயணாய” என்று ஓத மெய்ஞானம் பெற்றார் ஆழ்வார். அது மட்டுமின்றி பகவான் பாத விரலிலுள்ள மிஞ்சியைக் கழற்ற பல்லால் கடித்ததினால் திருவடி தீட்சையும் கிடைத்து பல பாசுரங்களை இயற்றும் ஆற்றலும், ‘கலியன்’ என்ற பட்டப் பெயரும் பெற்ற இவர் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராவார்.
--------------------------------------------------------------------------------
26.11.2004 திருவண்ணாமலை தீபம்
ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நக்ஷத்திரம் வரும். கார்த்திகை மாதம் வரும் கிருத்திகையன்று பௌர்ணமி கூடுகிறது. அதனால் இதற்குப் பெரிய கார்த்திகை என்று பெயர். இன்று முழுவதும் உபவாசம் இருந்து தீப தரிசனம் கண்ட பிறகு விரதம் முடிப்பவர்கள் இன்றும் உண்டு. இன்று அதிகாலை 4.00 மணிக்குத் திருவண்ணாமலையில் பரணி தீபமும், பகல் 2.00 மணிக்கு பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்த வாரியும், மாலை 4.00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் தங்க விமானங்களில் எழுந்தருளுகின்ற ஜோதி விஸ்வரூப மஹாதரிசனமும் அடிவாரத்தில் தீப அலங்காரமும் மாலை ஆறுமணிக்கு கார்த்திகை தீபக்காட்சியும் காணலாம். இரவு பஞ்சமூர்த்திகள் பவனியில் தங்க ரிஷப வாகனத்தில் அருணாசலேஸ் வரர் தரிசனம் தருவார். திருவண்ணாமலை அக்னி ஸ்தலமானதால் தீபதரிசனம் விசேஷம். மலைமீது ஜோதி தெரியும்போது
“அண்ணாமலைக்கு அரோகரா” என்ற கோஷம் ஆகாயத்தை முட்டும்.
இன்று எல்லா ஆலயங்களிலும் சொக்கப்பனை கொளுத்துவார்கள். இல்லங்களிலும் அழகழகாய் வரிசையாக விளக்கேற்றி அப்பமும் பொரியும் நிவேதிப்பார்கள். வாண வேடிக்கையும் நடக்கும். குமரனை கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால் முருகன் கோயில்களிலும் தீபத்திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்படும்.