கல்யாண நரசிம்ஹர்
நரசிம்மர் என்றாலே நமக்கெல்லாம் ரௌத்ராவேசமாக அவர் தூணிலிருந்து வெளிப்பட்டு இரணியன் குடலை உருவியதுதான் ஞாபகம் வரும், ஆனால் வரமளிக்கும் நரசிம்மராக கலியாணகோலத்துடன் தரிசனம் தரும் நரசிம்மரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் வட்டத்தில் குஜிலியம் பாறை என்ற இடத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்திலிருக்கிறது ராமகிரி கிராமம். அங்கே தான் ஹிரண்ய சம்ஹாரம் செய்த நரசிம்மரை சாந்தப்படுத்த ஸ்ரீ தேவி, பூதேவி இருவரையும் அவருக்குத் திருமணம் முடித்திருக்கிறார்கள்.
இதை நிச்சயம் செய்தது சிவபெருமான் குடும்பமும், பிரம் மாவின் குடும்பமும். பிள்ளைகள் பெற்றவர்களுக்கு அறுபதாம் கல்யாணம் செய்தது மாதிரி-ஆனால் முதுமை எய்தா நித்ய கல்யாண புருஷருக்கு-பிரம்மாவால் இது நடத்தப்பட்டிருக்கிறது. தேவர்களெல்லாம் வந்து இந்தச் சின்னக் கிராமத்தில் கூடியிருக்கிறார்கள்!
தமையன் திருமணத்திற்கு வந்து துர்க்கை இங்கேயே தங்கி விட்டாள். அவளை விஷ்ணு துர்க்கை என்றழைக்கிறார்கள். இந்த துர்க்கையை ஒன்பது
ஞாயிற்றுக்கிழமைகள் ராகுகாலத்தில் வழிபட்டால் தடங்கலின்றி செயல்கள் பூர்த்தியாவதால் மாலை 4.30 மணி யிலிருந்து 6.00 மணி வரை துர்க்கை சன்னதியில் கூட்டம் அதிகம்.
பாண்டிய மன்னன் இப்பகுதியில் படை நடத்தி வந்தபோது தாகத்தால் தவித்திருக்கிறான். அப்போது ஆகாயத்தில் ஒரு கருடன் இறக்கையை அடித்தபடி வட்டமிட்டுக் கொண்டிருந்தது. பாண்டியன் படையினரோடு அங்கு சென்றான்.
‘இந்த இடத்தில் ஏதோ விசேஷம் இருக்கிறது. தோண்டுங்கள்’ என உத்தரவிட்டான். சில அடிகள் தோண்டுவதற்குள்ளேயே தண்ணீர் பொங்கி வந்தது. நீரோடு ஒரு கீரிப்பிள்ளையும் வெளிப்பட்டு துள்ளிக் குதித்தது.
நீரை அருந்திய வேந்தன் அதன் சுவையையும், தெய்வத்தின் கருணையையும் எண்ணி புளகித்தான்.
கீரியின் நெற்றியில் நாமம் போன்ற ஒரு கோட்டினைக் கூடியிருந்தவர்கள் பார்த்தனர். ராம பக்தனான அரசன் அந்த இடத்துக்கு ‘ராமகீரீ’ என பெயர் சூட்டினான். அதுவே நாளாவட்டத்தில் மக்கள் நாவில் மருவி ராமகிரியாயிற்று. கிணற்றுக்கு மேற்கே கருடன் சன்னதி இருக்கிறது.
விஜயநகரப் பேரரசரின் ஆளுகைக்குக் கீழிருந்த லண்டைய பொம்மைய வசந்தக்கதிரழக நாயக்கர் தடைப்பட்ட தன் வம்சத் திருமணத்தை நடத்திவைத்த நரசிம்மருக்கு 900 ஆண்டுகளுக்குமுன் அங்கே கோயில் கட்டினார். குமரழகு சாமா நாயக்கர், இரும்பு முறுக்கி (இரும்பை முறுக்கிவிட்டது
போல் அவரது நரம்புகள் புடைத்திருக்கும்) சாமா நாயக்கர், தலை வெட்டி சாமா நாயக்கர் ஆகிய சிற்றரசர்கள் தங்கள் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்த நரசிம்மர் ஆலயத்தை விரிவுபடுத்திக் கட்டினர். கோயிலில் ஆறுகால பூஜைகள் சிறப்பாக நடந்தன. 64 பணியாட்கள் கோயில் வேலைக் கென்று நியமிக்கப்பட்டனர். 1500 ஏக்கர் நிலம் கோயில் மானியமாக விடப்பட்டது!
இந்த சிற்றரசர்கள், ஆலயத்துக்கு எதிரிலேயே (தொப்பையகிரி சுவாமிலையில்) கோட்டை கட்டி வாழ்ந்தனர். ராமகிரியை இந்த நாயக்க மன்னர்கள் தலைநகரமாகவே கொண்டிருந்தனர்.
முகலாயப் படையெடுப்பிலிருந்து தப்பவும் தங்களின் குலதெய்வமான நரசிம்மரை ரகசியமாக வந்து பூஜிக்கவும் மலையிலிருந்து ஆலயத்திற்கு சுரங்கப்பாதை அமைத்தனர். இப்போதும் அந்த சுரங்கப் பாதை உள்ளது. தற்கால கணக்குப்படி அதன் நீளம் 20 கி.மீ.
இந்த சிற்றரசர் குடும்பத்துக்கு மட்டுமில்லாமல் இன்றும் பல பக்தர்களுக்கும் பிள்ளை வரமும், திருமணப்பேறும் அருள்கிறார் ஸ்ரீ நரசிம்மர். 1950-ல் இக்கோவில் தமிழக அரசின் கீழ் வந்தது. அதன் பின் அரசு வருடத்திற்கு 3,350 ரூபாய் உதவித் தொகை அளித்து வந்தது. 1994 முதல் அது நின்று விட்டது.
தற்போது கோவிலுக்கு சொந்தமான நிலம் 60 ஏக்கர். கலியாண நரசிம்மரை, சம்ஹார நரசிம்மராக மாற்றாமல் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டியது வரம் பெற்ற பக்தர்களின் கடமையல்லவா?
திண்டுக்கல்லிலிருந்து கரூர் செல்லும் பேருந்து தடத்தில் ராமகிரி என்று கேட்டு இறங்கலாம். ஒன்றரை கிலோமீட்டர் கிழக்கே நடந்தால் கோயில் வரும் - குஜிலியம் பாறையிலிருந்து ஆட்டோ, மினிபஸ் வசதி உண்டு.
முகவரி: அருள்மிகு கல்யாண நரசிங்கப்பெருமாள் தேவஸ்தானம், ராமகிரி, வேடசந்தூர்,
திண்டுக்கல் மாவட்டம்.