Friday, April 01, 2005

ஸ்ரீபரமாச்சார்யாள் பாதையிலே

ஆர்.பி


காரியமே அவள்தான்! இரண்டாவது எழுத்தான‘ர’ வை நீக்கிட்டா காயத்ரியாயிடுவா! ஜனங்களோட பாப புண்ணியத்துக்கு ஏத்த மாதிரி செயல் செய்ய வைக்கிறவளே! என்கிறதுதான் இதோட முழு அர்த்தம். அதனாலே நாம மனசைக் கட்டாயப்படுத்தி பகவானை நினைக்க வைக்க ணும். படிக்காதமக்குத் குழந்தையை அம்மா பலவந்தமா அழ அழ பள்ளிக்கூடம் அனுப்பற மாதிரி “அடே துஷ்ட மனசே! கஷ்டம் வந்துடுத்தேன்னு புலம்பினா ஆயுடுத்தா! கோவிலுக்குப் போ” ன்னு பலவந்தப்படுத்தணும். அப்போ சக்தி அதுக்குக் காரியமா இருந்து புண்ணியம் கிடைக்கப் பண்ணுவா.

அதைத்தான் அடுத்த வாக்கியம் சொல்றது! உபாஸனை, யோக நிஷ்டை, தியானம், மனப்பாடமாவது ஸ்லோகம் சொல்றது! இந்த மாதிரியான கர்மாக்களுக்கும் பலத்தைக் கொடுக்கிறவளே! ன்னு வர்றது.

தருவாளா, மாட்டாளான்ற சம்சயமே இல்லே! ரிஷிகள் நீ தருவாய், தருகிறவள் என்று நிச்சயப்படுத்தி சொல்லியிருக்கா. இதோட பஞ்சதசாக்ஷரீயோட முதல் எழுத்துக்கான சுருக்கமான அர்த்தம் பூர்த்தியாறது.

அடுத்த எழுத்து ‘ஏ’ அவள் அமர்ந்த கோலம் இது. இந்த எழுத்து ஸ்ரீவித்யா மந்திரத்துக்கு பிராண ரூபமாய், பரப்பிரம்மத்தைக் குறிப்பதாய் அமைஞ்சிருக்கு. அவள் ஓம் என்கிற பிரணவ சப்தமாய் இருக்கிறவள். ‘ஓம்’ ன்னு சொல்லாமல் எந்த தேவதையை அர்ச்சனை பண்ண முடியும்? அம்பாள் ஒருத்தியே எல்லா அக்ஷர சொரூபமாய் இருக்கறவள். அவளை கொடி போன்றவள், மின்னலைப்போல இருப்பான்னு சொல்றதெல்லாம் கரையிலே நின்னுண்டு கடலை அளக்கற மாதிரிதான்! அந்த உபமானம் கூட சரியா வராது. சமுத்திரத்தைக்கூட கப்பல்லே போய் அளந்துடலாம். வேணும்னா ஆகாசம்னு வைச்சுக்கலாம்!

குழந்தை பிறந்ததும் தாயார் சந்தோஷப்படற மாதிரி அவளோட மனசெல்லாம் ஆனந்தம் நிறைஞ்சிருக்கு. அதனாலே அவளை ஆனந்தவல்லிங்கறோம். திரிசதியிலே ஏகானந்த சிதாக்ருத்யைங்கற நாமாவளி இதைத்தான் சொல்றது! ஞான பிரஸனாம்பிகையாக காளஹஸ்தியிலே குடியிருக்கா! எந்த பாகம் அறிவு, எந்த பாகம் ஞானமின்னு சொல்ல முடியாது! வேத ஆகமங்களுக்கே பிடிபடாதவள்!

ஆனா அவளை ஏக மனசோட தியானம் பண்ணினா சுலபமா கண்டு பிடிச்சுடலாம். உலகத்தையே அளந்த திரி விக்ரமனை யசோதை கட்டிப் போடலியா? சகாதேவன் கிருஷ்ண பரமாத்மாவை நெஞ்சுக்குள் கட்டலியா? “தத்ரை காக்ரம் மன: க்ருத்வா-யத சித்தேந்த்ரிய: ” அப்படின்னு கீதையிலே அவரே சொல்லியிருக்கார்.

ஒரு ஊசியிலே நூலைக் கோர்க்கணுமின்னாக்கூட நூல் முனை பிசிறில்லாம கூராயிருக்கணும். அப்படியிருக்கறப்போ அம்பாளை தியானிக்கிறதுங்கறது எத்தனை பெரிய விஷயம்! மனசுதான் நூல்! ஊசியோட காதுதான் அம்பாளை அடைகிற பாதை! ஊசியிலே நூலைக் கோர்த்தா மாய்கையாலே கிழிஞ்சு கிடக்கிற மனசைத் தைக்க முடியும்.

த்ரிசதியிலே 28-ஆவது நாமாவளி சொல்ற அர்த்தம் இதுதான்! ஆசையைத் துறந்தவாளாலேதான் அவளோட லயிக்க முடியும். அவளை பூஜை பண்ண ஆரம்பிச்ச உடனே ஆசை கொஞ்சங் கொஞ்சமா விலகிடும். அவளுக்குக் கைங்கர்யம் பண்ற ஆசை மட்டும் தான் மனசுலே இருக்கும்.

நக்கீரர் கிட்டே ஸ்வாமி கொஞ்சம் விளையாடிப் பார்க்க ஆசைப்பட்டார். பாண்டிய ராஜா மனசிலே ஸ்த்ரீகளோட கூந்தலுக்கு இயற்கையா வாசனை உண்டா’ என்கிற சந்தேகத்தை உண்டாக்கினார். ஒரு காரியத்தை மட்டுமே உத்தேசிச்சு பகவான் எதையும் பண்றதில்லே! தருமிக்கு பொற்கிழி கொடுக்கவும் ஏற்பாடு பண்ணினார்.

சொக்கநாதர் எழுதிக் கொடுத்த ஓலையை சபையிலே படிச்சார் தருமிப்புலவர். ராஜாவுக்குத் திருப்தியாயிடுத்து. கொடுத்துடு, பொற்கிழியைன்னுட்டார். நக்கீரர் தடுத்து தருமியைக் குடைஞ்சார். தருமி அவமானப்பட்டு சுந்தரேசப் பெருமான் கிட்டே வந்து அழுதார்.

ஸ்வாமியே சங்க கூட்டத்துக்கு நேரா வந்து விளக்கம் சொல்லி’ என்னப்பா குறை’ன்னார்.” ஸ்த்ரீகளோட கூந்தலுக்கு இயற்கையா வாசனை கிடையாது”ன்னு அழுத்தமா சொன்னார் நக்கீரர்.

“சாதாரணப் பெண்களை விடு. இப்படி உன்னைப் பேச வைச்சிருக்காளே அந்த சரஸ்வதியோட கூந்தலைப் பத்தி என்ன சொல்றே?” ன்னு கேட்டார் பரமேஸ்வரன்.

ஜெயிக்கணுமின்னு வெறி வந்துட்டா அறிவு மழுங்கிடும். ஆர்வமா இருக்கிறது வேறே, வெறியோட அலையறது வேறே! முதல்லயே நக்கீரர் சோமசுந்தரப் பெருமான் பாட்டுலே குற்றம் சொன்னவர். அப்ப சுவாமி தண்டிக்கலே! தெய்வம் எப்பவுமே சும்மா இருக்காது!

நக்கீரர் என்ன சொல்லப் போறார்னு கலை வாணிக் குத் தெரியாதா? அவரை விட்டு விலகினா!

“சரஸ்வதி என்ன! நான் தினமும் வணங்கற அங்கயற் கண்ணியோட கூந்தலுக்குக் கூட இயற்கையா வாசனை கிடையாது” ன்னார் நக்கீரர்.

சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்துட்டார். எல்லோரும் பயந்து ஹர, ஹர ன்னு கன்னத்திலே போட்டுண்டா. நக்கீரர் புத்தியிலே அகம்பாவம் நிறைஞ்சிருந்ததாலே அசட்டுத் துணிச்சலோட நின்னுண்டிருந்தார்.

“அம்பாள் என்னிலே பாதி! சுகந்த குந்தலாம்பாள், பூங்குழலின்னெல்லாம் ஸ்துதிக்கப்படறவள்.

யோசிச்சு பதில் சொல்லு”ன்னார் பகவான். யோசிக்கிறதுக்கு சரஸ்வதி அருள் வேணுமே!

“நீங்க பயமுறுத்தறேள்! ஆயிரங்கண் காட்டினாலும் என் பதில் ஒண்ணுதான்னு” அழுத்தமா சொன்னதுதான் நக்கீரரோட கடைசி வார்த்தை. வெப்பத்தாலே பேச்சு வரலே! உடம்பு எரிஞ்சது. பொற்றாமரையிலே போய் விழுந்தார்.

தருமி என்கிற சுந்தரநாதனுக்கு பொற்கிழியைக் கொடுத்தார் ராஜா. நக்கீரருக்கோ தண்ணீரை விட்டு வெளியே வந்தா தேகம் எரியறது. தண்ணீரிலிருந்தபடியே அந்தாதி பாடி மன்னிப்புக் கேட்டுண்டு காப்பாத்தணும்னார். கபிலர், பரணர் முதலான புலவர்களும் வேண்டிண்டா. ஸ்வாமி அம்பாளோட பொற்றாமரைக்கு வந்து கை கொடுத்தார். பகவான் கைபட்டதும் நக்கீரர் உடம்பு குளிர்ந்ததாம்! பனிமலையிலே வாசம் பண்றவராச்சே! சிவபெருமான் குனிஞ்சு கை கொடுத்ததுலே அவரது சடையிலே இருந்த சந்திரனோட கிரணங்களும் பாய்ஞ்சுதாம்! கேட்கணுமா!

குழந்தை எத்தனை பேசினாலும் தாயார் அதை பொருட்படுத்தறதில்லே! அம்பாள் லோக மாதாவாச்சே! த்ரிசதியிலே 30-ஆவது நாமாவளி அம்பாளோட கூந்தல் ஏல வாசனை வீசறதுங்கறது!

ஜென்ம ஜென்மமா நீ பாவத்தைக் குவிச்சுண்டு வந்தாலும் அதை நாசம் பண்ணிடுவாங்கறது அடுத்த நாமாவளி. அவள் பாபநாசினின்னு புகழப்படறா லலிதா ஸஹஸ்ரநாமத்திலே! பாபம் என்கிறது முள் காடாக மண்டிக் கிடந்தாலும் அதை எரிக்கிற நெருப்பாயிருக்கா அம்பிகை.

அவள் ஒருத்தியாகவே எல்லா போகங்களையும் அனுபவிக்கிறா என்கிறது அடுத்த நாமா. பண்டாசுரனை வதைக்க தேவாளெல்லாம் ஹோமம் செய்தப்போ லலிதை ஒருத்திதான் யாகத்தீயிலிருந்து வந்தா! ஆனா அஸ்வா ரூடை, சம்பத்கரி, நகுலி, தண்டினி, ஜ்வாலா மாலினி, ஸ்தம்பினி, மந்திரிணி, சியாமளை, வாராஹி, குருகுல்லாதேவி, என்று எத்தனை பெரிய ஸேனையை உண்டாக்கினா! இவர்கள் இத்தனை பேராகவும் இருந்து சிந்தாமணிக்கிரகத்தில் போகத்தை அனுபவிக்கறா!

ருசியான விருந்து இருக்கு. கண் அதைப் பார்த்தவுடனே நாக்கிலே எச்சில் ஊறறது. கால் விருந்து கிட்டே அழைச் சிண்டு போறது. புத்தி அதை சாப்பிடுங்கறது. கை எடுத்து வாய்க்கு ஊட்டறது. வயிற்றுக்கு வேணுமானா சாப்பிட்டுக் கட்டும் ன்னு கை நினைக்கலே! இப்படியா ஒரு ருசியை
சரீரம் பூரா அனுபவிக்கற மாதிரி தேவியும் அனுபவிக்கறா! அதனாலே அவள் பெயர் போகினீ. அவளுக்கு ஒரு ரஸனை தான் தெரியும். அவள் அன்பே வடிவானவள். ரஸோவைஸ; ரஸம் ஹ்யேவாயம் லப்த் வானந்தீபவதி ன்னு தைத்ரியோபநிஷத்திலே சொல்லியிருக்கு. அநாஹதத்தில் பூர்ணகிரி பீடத்தில் சிருங்கார ரஸம் நிறைஞ்சிருக்கிறவ அம்பாள்.

லோக நாயகியான அவள் ஐஸ்வர்யத்தைத் தரக் கூடியவளாக்கும். த்ரிசதியிலே 34 நாமாவை தினமும் 108 தடவை சொல்றவாளுக்கு ஐஸ்வர்யம் கூடும். மோக்ஷ ஐஸ்வர்யம் வேணுங்கறவாளும் இப்படியே நினைச்சுண்டு ஜபிக்கலாம். ராஜ அதிகாரம் வேணுமின்னா 35-ஆவது நாமாவை 108 தடவை ஜபிக்கணும். பத்து நாள் ஜபிச்சுட்டு பல்லக்கு வரலியேன்னு வாசலைப் பார்த்து ஏங்கப்படாது. திருஞானசம்பந்தருக்கு அழுதவுடனே பால் கொடுத்தவ நாவுக்கரசரை அலைய வைச்சிருக்காங்கறதையெல்லாம் நினைச்சுப் பார்க்கணும்.

கூட்டமா நின்னு கோஷமிட்டு பூஜிக்கறது ஒருரகம். ஏகாந்தமா அவளோட பேசிண்டே “அம்மா தண்ட நாதை சண்டை செய்யற ஆழகை நீ வேடிக்கை பார்த்துண்டிருக் கறச்சே விஷங்கன் அம்பு விட்டு உன் தேர் கொடியை அறுத்துட்டானாமே! யானைத் துதிக்கை மாதிரி யுத்த களத்திலே கங்கா நதி கொட்டித்தாமே! சும்பன் மோஹிக்கும் படியா நீ ஊஞ்சலாடினியே! அதை ஒரு க்ஷணமாவது நான் பார்க்க முடியுமா?” இப்படி அவளோட பெருமைகளைப் பேசிண்டே நடத்தற அபிஷேகம் நவசண்டிகா ஹோமத்துக் கும் மேலானது.

அம்பிகை பிரகாசமாய் ஜொலிக்கறவ என்கிறது எல்லாருக்கும் தெரியும். ஆனா மனசு ஒன்றுபட பிரகாசம் அதிகமாயிண்டே போகும். மெதுவா பூஜிக்கிறவாளையும் அதுக்குள்ளே இழுத்துண்டுவாரும். இதெல்லாம் அனுபவத்திலே ரஸிக்கிற விஷயம்.

பனிப் பிரதேசத்துலே தூரத்திலேயிருந்து பார்த்தா ஒரே புகை மாதிரி தெரியும். அதுக்குண்டான ஆடையோடு பயணப்படறவா தூரத்திலேயிருந்து பார்க்கிறவாளுக்குத் தெரியமாட்டா. அதுக்காக பனிப்பிரதேசத்துலே மனுஷா இல்லேன்னு சொல்லிட முடியுமா? ஏரோப்ளேன்லே போறச்சே பஞ்சுக் குவியல் மாதிரி மேகத்தைப் பார்த்தேன்னார் ஒருத்தர். பூமியிலேயிருந்து பார்க்கிறவனுக்கு அது தெரியாது அது மாதிரித்தான் இதுவும்! மனுஷா கண்டு பிடிச்சதிலே இத்தனை அதிசயம்னா தெய்வத்தோட லயிக்கறபோது கிடைக்கிற அனுபவம் லேசுப்பட்டதாயிருக்குமா?