Tuesday, April 05, 2005

புற்றிலிருந்து வந்த அம்மன்

கிராம தேவதைகள் :


“நான் உன்னை நம்ப மாட்டேன். உனக்கு சத்தியம் சர்க்கரைப் பொங்கல். நீ என்னை மறந்துரு” என்று சொல்லி பேச்சி புறப்பட்டு விட்டாள்.

“இதோ பாரு பேச்சி! நாளைக்கு மலையாள மாச முத வெள்ளிக்கிழமை ‘சக்குளத்து கா வுக்குப் போவோம். தேவியோட வாளைத் தொட்டு சபதம் செய்றேன். அப்ப வாவது நம்புவியா?” பரிதாபமாகக் கேட்டான் ஐயனார்.

“யோவ்! சக்குளத்து அம்மையை சாதாரணமா நெனைக்காதே! வாக்கு மாறினே கை, கால் முடங்கிடும்” பயத்தோடு எச்சரித்தாள் பேச்சி.

“அதெல்லாம் மாற மாட்டேன். தேவி அதுக்கான மனத்திடத்தைத் தருவா” என்றான் ஐயனார்.

“அப்ப நாளைக்கு மாலை போட்டுக்க. இரண்டு நேரமும், குளிச்சு சுத்த பத்தமா விளக்கேத்து. வேணும்னா இன்னிக்கே முடிவெட்டிக்கிட்டு வந்துரு. இருமுடி கட்டிப் போவோம். பதினோராம் நாள் கலசாபிஷேகம் பண்ணி, அடுத்த நாள்’ அம்மாச்சி காவடி’ எடுப்போம்” பரபரப்பானாள் பேச்சி.

“பேச்சி! சாமி நடைக்கு முன்னாலே கோலம் போட்டுப் பாட மறந்துடாதே! உடம்பு நல்லாயிடுச்சுன்னா. நானும் வந்துருவேன். வெள்ளிக் கிழமை பச்சிலை மருந்து தீர்த்தம் வாங்கிட்டு வர மறக்காதே” மாமியார் உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தாள்.

பேச்சி ‘சரி, சரி’ என்றபடி பிரயாண ஏற்பாடுகளில் மும்முர மானாள். “பாட்டீ, சக்குளத்து காவுன்னா என்ன அர்த்தம்?” பேச்சியின் மகள் பாட்டியின் வாயைக் கிளறினாள்.




“அம்மையோட முன்னாலே இருந்த குளத்து நீர் சக்கரையைப் போல இனிப்பா இருந்ததாம். சக்கரைக் குளம் தான் ஜனங்க பேச்சிலே சக்குளமா மாறிப் போச்சு. அடியே! அம்மைக்கு தினமும் அடையும், பழமும் படைப்பாரு நம்பூதிரி. பழத்தை ஒரு குழந்தைக்குக் கொடுப்பார். அந்தப் பழத்துக்காகவே ஒரு குழந்தை காத்துக்கிட்டு இருக்கும்.

ஒரு நா பழம் கிடைக்கலே. அடையை மட்டும் நைவேத்தியம் பண்ணினார். குழந்தை ‘பழம்தா’ன்னு கேட்டுது. அம்மா கிட்டே கேளு பழம் தருவா”ன்னார் நம்பூதிரி. குழந்தை சன்னிதிக்குப் போயி” அம்மா பழம் கொடுன்னு கையை நீட்டிச்சு. நம்பூதிரியும், சேவார்த்திகளும் இதைப் பார்த்து சிரிச்சாங்க.

“கொஞ்ச நேரத்துலே பழம் தரேன்”ன்னு குரல் வந்ததும் எல்லாருக்கும் ‘திக்’குனு ஆயிடிச்சு. அப்போ ஒரு பக்தர் பழக்குலையோட வந்தார். எல்லாருக்கும் இது அதிசயமாயிருந்தது. அப்பேற்ப்பட்ட சக்தி வாய்ந்தவ இந்த தேவி. அதனாலே இவளுக்கு ‘விளி அம்மை’ன்னு ஒரு பேருண்டு கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரு கிறவள் அவள்.”

கதை சொல்லிக் கொண்டு வந்த பாட்டிக்குத் திடீரென்று ஞாபகம் வர “பேச்சி! முதல்லே குளத்துக்குப் போய் கைகால் கழுவிக்கிட்டுதான் கோயிலுக்குப் போகணும்” என்று சொன்னாள்.

“பாட்டீ! கோயில் ரொம்பப் பெரிசா?” பேத்தி பழையபடி பாட்டியின் கவனத்தைத் திரும்பினாள்.

“அம்மையோட சன்னதிக்கு மேற்கூரை ஆகாசம் தான்! இரண்டு பக்கமும் பம்பா நதியும், மணிமலை ஆறும் ஓடுது. சுத்திமலை. பிள்ளையார், வடக்கே சுப்பிரமணியர்; சிவலிங்கம். அப்புறம் நவக்கிரகங்கள் அதுக்கப்புறம் ஐயப்பன் நடை; நாகராஜா. கோயிலை ஏழு தடவை வலம் வரணும். புரட்டாசி ஆயில்யத்தன்னிக்கு நாகராஜாவுக்குப் பால் ஊத்து வாங்க!”

“அப்போ புத்து இருக்கா?” பேத்தி குறுக்கிட்டாள்.

“முன்ன இருந்தது. ஒரு வேடன் பொண்டாட்டி, புள்ளையோட அங்க இருந்தான். ஒரு நா அவன் கண்
ணுலே ஒரு பெரிய பாம்புபட்டது. விறகு வெட்டிக்கிட்டு இருந்த கோடாலியை அதன்மீது வீசினான். ரத்தம் வந்தது. ஆனா பாம்பு துண்டாகலே சரசரன்னு ஓடிச்சு. ‘அடிபட்ட பாம்பு பழி வாங்குமோ’ன்னு பின்னாலேயே போனான். ஒரு குளம். அதுக்குப் பக்கத்துலே பெரிய புத்து. புத்து மேலே பாம்பு! வேடன் கோடாலியாலே அதை வெட்டறான்! பாம்புக்கு ஒண்ணும் ஆகலே. அது புத்துக்குள்ளே போயிடுச்சு.”

“அப்புறம்?” பேத்தி ஆச்சரியமாகக் கேட்டாள்.

“புத்துக்குள்ளேயிருந்து அருவி மாதிரி நீர் வழிஞ்சது. அந்தத் தண்ணியிலே தர்ப்பையும், அட்ச தையும் வந்தது. வேடனைத் தேடிக்கிட்டு குழந்தை யோட வந்த அவன் பொண்டாட்டி அதைப் பார்த்துப் பயந்துட்டா.

அப்போ நாரதர் சாமியார் மாதிரி வந்தார்.

“பயப்படாதீங்க! கொஞ்ச நேரம் கழிச்சு தேனும், பாலும் கூட வரும். அப்போ புற்றைக் கலைச்சா ஒரு விக்ரஹம் கிடைக்கும்”னார்.

வேடன் “சாமி! தப்பா எதுவும் ஆயிடப்படாது. நீங்களே இருந்து விக்ரஹத்தை எடுத்துக் கொடுத்து பூஜையை ஆரம்பிச்சு வைக்கணுமின்னு கேட்டு கிட்டான். அவரும் அப்படியே பண்ணினார். வேடன் காலம் வரை அவனே பூஜை பண்ணினான்.

இது நடந்து மூவாயிரம் வருடமாச்சு. பட்டமனை இல்லத்து நம்பூதிரி தான் இந்தக் குளத்தை தூர்த்து கோயிலைக் கட்டினவர். அவர் பரம்பரைதான் பூஜையும் பண்றாங்க. இங்கேயிருந்து ஒரு கைப்பிடி மண் எடுத்துட்டுப் போய்த்தான் பல கோயில்களைப் புதுப்பிக்கிறாங்க. தோஷ பரிகாரம் பண்றாங்க.

1981-ஆம் வருடம். டிசம்பர் 11-ஆம்தேதி காலம்பற 3-30 மணிக்கு நிர்மால்ய தரிசனத்துக்காக ஜனங்கள் காத்திண்டிருந்தப்போ ஒரு அபூர்வமான வாசனை! குளத் துலே குளிச்சுட்டு வந்த நம்பூதிரிக்கும் அது தெரிஞ்சுது. நடை திறந்ததும் பார்த்தா அம்பாள் ரொம்ப உயரமாத் தெரிஞ்சா ஒரு நிமிஷம்தான்! பழையபடி ஆயிட்டா.

உடனே பிரச்னம் வைச்சுப் பார்த்தா. ‘இன்னிக்கு அம்மையோட பொறந்த நாள்’ன்னு தெரிஞ்சது. அன்னிக்கு கார்த்திகை மாதம், கார்த்திகை நக்ஷத்திரம்! அன்னியிலேருந்து அந்த நாள்லே அபிஷேகம், நைவேத்தியம், அத்தாழ பூஜை எல்லாம் விசேஷமா நடக்கும். புதுப்பானையிலே பொங்கல் வைப்பாங்க!

ரொம்ப வருடத்துக்கு முன்னாலே ஒரு பெரிய பூஜை நடந்துகிட்டிருந்தது. அதிலே ஒரு சடங்கு. “ஸ்த்ரீக ளெல்லாம் வெளியே போகணும்” அப்படீன்னாங்க. எல்லாரும் வெளியே வந்துட்டாங்க. ஒரு வயசான அம்மாவாலே நடக்க முடியலே. “நான் வயசுப் பொண்ணா! ஒரு மூலையிலே இருக்கேனே”ன்னா. கேட்கலே. பலவந்தமா வெளியிலே கொண்டு வந்து விட்டுட்டு கதவைச் சார்த்திட்டாங்க.

ஆனா என்ன ஆச்சு தெரியுமா? விளக்கெல்லாம் அணைஞ்சுபோச்சு. கலசமெல்லாம் உருண்டது. பூஜை பண்ணினவா பயந்துபோயி சாமியாடி’யைக் கூப்பிட்டாங்க.

சாமியாடியை ‘வெளிச்சப்பாடு’ம்பா. அவர் குளத் துலே குளிச்சுட்டுவந்து அம்மையோட வாளை எடுத்தார். அவ்வளவுதான். உக்ரமாயிட்டார். வார்த்தை கொட்டுது.

“ஏண்டா! வயசானவளை தொரத்தினீங்களே! நானும் பெண்தானே! அதான் வெளியே போயிட்டேன். வெறும் கல்லுக்குப் பூஜை பண்ணுங்கடா”ன்னா.

“அம்மா! தெரியாம தப்பு பண்ணிட்டோம்! என்ன பண்ணினா நீ உள்ளே வருவே”ன்னு கேட்டாங்க.

“எல்லா பெண்களையும் பாதபூஜை பண்ணி உள்ளே கூப்பிடுங்க! அதிலே ஒருத்தியா உள்ளே வரேன்”னா! அம்மா. அன்னிக்கு மார்கழி மாதம் முதல் வெள்ளிக் கிழமை அம்பாள் உத்தரவுப்படி இன்னிக்கும் இந்த ‘நாரி பூஜை’ ஒரு பெண்ணுக்கு நடக்குது.

நீயும் அம்மாகிட்டே “நோய் நொடியில்லாம வாழணும்; நல்லாப் படிக்கணுமின்னு வேண்டிக்கோ. சக்குளத்துக் காவுதேவி கண்கண்ட தெய்வம்” என்று பாட்டிமுடிக்க.

“உங்களுக்கு உடம்பு நல்லாயிடும் பாட்டி. நீங்களும் எங்களோட வருவீங்க” என்று முடித்தாள் பேத்தி.