Friday, April 01, 2005

ஸ்ரீபரமாச்சார்யாள் பாதையிலே

மாதா பிதா மக்களுக்குச் சத்ருன்னு சொல்வா. அப்படி ஆகக் கூடாது. குழந்தைகளை ஒவ்வொரு கட்டத்திலேயும் வளர்க்கறது கம்பி மேல நடக்கற மாதிரி! பெத்தவா கண்ணாடி மாதிரி! அதிலே குழந்தைகள் தன் வாழ்க்கையை பிரதிபலிக்கிறா!

துஷ்யந்த மகாராஜாவோட பிள்ளை பரதன்னு எல்லாருக்கும் தெரியும். அவனுக்கு மூணு பத்தினிகள் இருந்தா. அவர்களுக்கு ஒன்பது பிள்ளைகள் பிறந்தா. தகப்பனாரைப் போலவே நாமளும் பண்ணணுங்கற எண்ணம் பரதன் மனசுலே இருந்திருக்கணும்.

ஒருநாள் கோபத்துலே “நீங்களெல்லாம் என்னோட புத்திராளா இருக்க தகுதி யில்லாதவா’ன்னு சொல்லிட்டான் அவன். துஷ்யந்தன் சகுந்தலையை என் மனைவியில்லே, அவ வயிற்றிலே இருக்கறது என் குழந்தையில்லேன்னு நிராகரிச் சுட்டான்னு கண்வ மகரிஷியும் அவரோட மத்த சீடர்களும் சொன்னது பரதன் மனுசுலே ஆறாத காயமா இருந்திருக்கணும்.

துர்வாசர் சாபம்னு மனசை நிதானப்படுத்திண்டிருக்கணும். மனசு ஒரு நிலையிலே இல்லேன்னா அது சரீரத்தையும் இம்சைப்படுத்தும்.

பரதனுடைய மனைவிகளுக்கு இந்த சமாசாரமெல்லாம் தெரியும் - சகுந்த லையை தாயாரான மேனகை தூக்கிண்டு போயி ரிஷிகளோட ஆசிரமத்திலே விட்டா. பூலோக வாசிகளான நம்ம தாய்மாராலே அது முடியுமான்னு கவலைப்பட்டா. கூடிப் பேசினா! நம்ம மேலே சந்தேகப்பட்டு ராஜா தள்ளி வைச்சுடுவாரோன்னு பயந்தா. பிள்கைளைக் கொன்னுட்டா!

துஷ்யந்தனோட சந்தேகம் அவன் வம்சத்தையே அழிச்சது. அதனாலே இன்னிக்கு உள்ள சந்தோஷத்தை மட்டுமே நினைக்காம எந்தக் காரியத்தையும் வருங்காலத்தை நினைச்சு யோசிச்சு செய்யணும். சந்ததி அழிஞ் சுட்டதே! பரதனுக்கும், அவன் பத்தினிகளுக்கும் பிள்ளை பெறும் பிராயம் தாண்டியாச்சு. என்ன பண்றது? மருத்துக்களை வேண்டி ஸோமயாகம் பண்ணினான். பரத்வாஜரை குமாரனா வைச்சுக்கோன்னு மருத்துக்கள் தத்துக் கொடுத்தா. ஆத்திரப்பட்டு வார்த்தையைக் கொட்டினேன்னு பரதனும் வருத்தப்பட்டான். கோபம் நெருப்பு மாதிரி. அதைக் கொட்டினா அது குடும்பத்தையே தகிச்சுடும்.

விரதமாயிருந்து கிடைச்சதாலே பரத்வாஜனுக்கு விரதன்னு ஒரு பேருண்டு. பரத்வாஜரை கர்ப்பத்திலே சுமந்த தாயார் மமதை. குழந்தைகள் பிறந்தாலும் அவா தீர்க்காயு சோடு இருக்க பெத்தவாளோட நடவடிக்கை தான் காரணம்.

சந்தனு மகாராஜா மோகத்துனாலே சத்தியவதியை விவாகம் செய்துண்டார். கங்காபுத்திரன் கலியாணம் நடத்தி வம்சம் பெருகியிருந்தா எத்தனை சிரேயஸாயிருந்திருக்கும்! சத்தியவதிக்கு சித்திராங்கதன், விசித்திர வீரியன்னு ரெண்டு பிள்ளைகள் பிறந்தா! ஆண்குழந்தை பிறந்துட்டா மட்டும் பரம்பரை செழிக்கிறதில்லே! நீண்ட காலம் பௌருஷமா இருந்து பொறுமையோட பெருமை சேர்த்தாத்தான் பிதுர்க்கள் வாழ்த்துவா. சித்திராங்கதன் நல்ல வயசிலேயே காலமாயிட்டான். விசித்திர வீரியனோ அந்தப்புரமே கதியாக் கிடந்து தொழுநோய் வந்து மடிஞ்சான். அளவுக்கு மேலே எதையுமே அனுபவிக்கறது ஆபத்து! திரட்டுப்பால் அடுப்பிலேயே இருந்தா நிறம் மாறி கறுப்பா யிடும்! வாழ்கையும் அப்படித்தான்! எதிலேயும் நிதானம் வேணும்!

இங்கே சந்தனுவின் தகாத ஆசை, புத்திரனே சம்மதிச்சாலும் தர்மத்துக்கு செஞ்ச துரோகம்
சந்ததியை நாசம் பண்ணினது. குருட்டுப் பிள்ளையும், ரோகியானபிள்ளையும் அடுத்தாப்பிலே பிறந்தது. குருnக்ஷத்திர யுத்தத்திலே எல்லாமே அழிஞ்சுடுத்து.

சந்தனுவுக்குத் தமையன் தேவாபி. அவனுக்கு காடுபிடிச்சிருந்தது. அருவி, பூ, ஆறு, ஆசிரமம்னு அங்கேயே தங்கிட்டான். சந்தனுவோட ஆட்சியிலே ஒரு மாமாங்கமா மழையில்லே! ஜாதகம், ஆரூடமெல்லாம் பார்த்தான். சோழி உருட்டினார்கள்! மூத்தவனோட உரிமையை நீ அபகரிச்சுண்டிருக்கே! தமையன் விவாகமில்லாம இருக்கும் போது நீ விவாகம் பண்ணிண்டிருக்கே! தமையன் உத்தரவு தந்தாதான் தம்பி திருமணம் செஞ்சுக்கலாம். தேவாபி பரிசுத்தமானவனா, நல்லவனா இருக்கும் போது நீ இப்படி தர்மத்தை மீறியிருக்கே! தர்மதேவதை கோபிச்சிண்டிருக்கா’ன்னா.

“சரி, நான் போய் தேவாபியை அழைச்சுண்டு வந்து அவன்கிட்டேயே ராஜ்ஜியத்தை ஒப்படைச்சுடறேன்னு பரிவாரங்களோடு புறப்பட்டான்.

சந்தனுவே ராஜாவா இருக்கணும்னு அவனோட மந்திரி ஆசைப்பட்டான் அவன் பேர் அஸ்மராவி - தேவாபியை அவனுக்குப் பிடிக்கலே! தேவாபி தப்புப்பண்ணிட்டா தோஷம் நீங்கிடுமேன்னு குறுக்கு வழியிலே யோசிச்சான். அதனாலே சில ரிஷிகளை தேவாபியைத் தப்பு பண்ண வைக்கிறது உங்க பொறுப்புன்னு அனுப்பிச்சான்.

ஒரு ராஜா குடிமக்கள் கிட்டே அதிக வரி வாங்காம, நாட்டுக்கு நன்மை செஞ்சா மட்டும் போதாது. தன்கிட்டே வேலை செய்யறவாளோட நடத்தையிலேயும் ஒரு கண் வெச்சுக்கணும். சந்தனு இங்கேயும் கவனக் குறைவா இருந்துட்டான். நல்ல பால்லே விஷத்தைக் கலக்க ஏற்பாடு பண்ணினான் மந்திரி.

ரிஷிகளெல்லாம் காட்டுக்கு வந்து தேவாபியை ஆசீர்வாதம் பண்ணினா. “தேவாபி! நீ எத்தனை நல்லவனா யிருக்கே! ராஜ்யம் என்கிறது பெரிய சுமைன்னு இந்தக் சின்ன வயசிலேயே தெரிஞ்சுண்டிருக்கே! ஆனா சந்தனு உன்னை சும்மாவிட மாட்டான் போலிருக்கே! ஆயுதப்பயிற்சி இல்லாத நீ யுத்தம் வந்தால் என்ன செய்வே. சிறையிலடை பட்டு சித்திரவதைப்படணுமின்னு உன்னோட தலைவிதியா? யுத்தமே வராட்டாலும் நாட்டில் நடக்கற அக்கிரமத்துக் கெல்லாம் உன்னைன்னா குற்றம் சொல்லுவா! எவனாவது ஒரு மந்திரி தப்பா யோசனை சொல்லிட்டா அதனாலே உனக்குத் தானே அவப் பெயர் வரும்?

“த்வா விமௌ க்ரஸதேபூமி; ஸர்போ பிலஸயா நிவ!

ராஜானாம் சாவி ரோத்தாரம்”

என தர்ம சாஸ்திரம் சொல்றது. எந்த ராஜா சத்ருவை எதிர்த்து அடக்கலையோ, அவனை இந்த பூமி, வளையில் இருக்கும் எலிகளைப் பாம்பு முழுங்கற மாதிரி முழுங்கிடும் என்கிறது இதன் அர்த்தம்-அதாவது கீர்த்தியும், குலமும் அழிஞ்சிடுமாம்! குலநாசத்துக்கும் சரித்திரம் உன்னையே தூஷிக்கணுமா?

‘வரிசை தப்பிய மன்னருக்கோர் மழை’ என்கிறது சாஸ்திரம், அற நெறியிலிருந்து ராஜா தவறினா அறுவடை காலத்துலே மழைபெய்யுமாம்! மேகம் செய்யற தப்புக்கு நீங்க பொறுப்பாளியாகணுமா?

“அஸம் விபாகீ துஷ்டாத்மாக்ருதக்னோ நிரபத்ரப:

தாத்ருங் நராதிபோ லோகே வர்ஜனீயோ நராதிப”

இதோட அர்த்தம் என்ன தெரியுமா? எல்லாரும் அனுபவிக்கிற மாதிரி சம்பத்தைப் பிரிச்சுக் கொடுக்காதவன், கெட்ட மனசுடையவன், நன்றி கெட்டவன், வெட்கமில்லாதவனுமான ராஜாவை லோகத்திலேயிருந்து தள்ளி வைக்கணுங்கறது. அரசு பீடத்திலே உட்கார வைச்சுட்டு விரட்டினா அவமானமில்லையா? நீயா ராஜ சிம்மாசனத்திலே உட்காரணும்னு ஆசைப்பட்டே? மழை பெய்யாததுனாலே தானே உன் தம்பி உன்னைத் தேடி வரான்! அப்போ மழை பெஞ்சதும் விரட்டிடுவானா? தரையிலே நடக்கறவன் விழுந்தா அடி அதிகமில்லே! அதுவே யானை மேலேயிருந்தோ, தேரிலிருந்தோ விழுந்தா என்ன ஆகும்? உன் மேலே சகதியை அப்பி ஒரேயடியா அழிக்க திட்டம் போடறான் உன் தம்பி!” இப்படி மாறிமாறி போதிச்சதாலே தேவாபியோட சித்தம் யானை புகுந்த குட்டை மாதிரி கலங்கிப் போச்சு. மறுநாள் சந்தனு வேத பிராமணாளோட வந்து நமஸ்காரம் பண்ணி “நீதான் ராஜ்ஜியத்தை ஆளணும்’னு கேட்டுண்டப்போ தேவாபி ரொம்பக் கோபப்பட்டான். “நான் காட்டிலே நிம்மதியா இருக்கிறது பிடிக்கலையான்னு கத்தினான். நீங்கள்ளாம் அவனுக்குக் கைக்கூலியா! நான் அத்தனை சீக்கிரம் ஏமாற மாட்டேன்’னு தூஷிச்சான்.

பிராமணாளெல்லாம் “ராஜா! உன் கடமையை செய்துட்டே! உன் மேலே இருக்கிற தோஷம் போயிடுத்து! கயறைப் பாம்புன்னு மிரண்டிருக்கான் தேவாபி.

“கர்ணீ நாளீக நாராசான் நிர்ஹரந்தி ஸரீரத:

வாக் ஸல்யஸ்து நநிர்ஹர்தும் ஸக்யோ ஹ்ருதிஸயோஹிஸ:”

கர்ணி, நாளீகம், நாராசம் என்கிற அம்புகள் சரீரத்தில் தைச்சுதானா பிடுங்கி எறிஞ்சுடலாம். தூஷணை என்கிற பாணம் தைச்சா மனசிலேயே தங்கிடும். எடுக்க முடியாது. வாங்கோ, போகலாம்னு சமாதானம் பண்ணி சந்தனுவை அழைச்சிண்டு போனா. போனவுடனே மழையும் பெஞ்சது. நல்லதையும் கெட்டதா காண்பிக்க வல்லவாளாலே முடியும்.

சந்தனுவோட தம்பி பாகிலீகன். பாகிலீகனோட பிள்ளை சோமதத்தன், சோமதத்தனுக்கு பூரி, பூரிசிரவஸ், சல்லியன்னு மூணுபேர். இதையெல்லாம் படிச்சா சந்ததிகள் விருத்தியாகும். ஆயுசு பெருகும். இதையெல்லாம் நான் இட்டுக்கட்டிச் சொல்றதா நினைக்க வேண்டாம்.
வைஷ்ணவ புராணத்திலே இருக்கு.

-ஆர்.பி.