Tuesday, April 05, 2005

ஸ்ரீபரமாச்சார்யாள் பாதையிலே

ஆர்.பி:

அந்த அமிர்தேஸ்வரியோட அருளாலேதான் விந்திய பர்வதத்தை அகஸ்தியர் தணிய வெச்சார். 46ஆவது ஸ்தோத்திரம் ஈசானனிலிருந்து பிரம்மா வரை ஐந்து மூர்த்தி யாவும் அவள்தான் இருக்கா. கட்டில் காலாயிருக்கிறவளும் அவள்தான். சதாசிவன் மடியிலே தலைவெச்சுப் படுத்துண்டி ருக்கிறவளும் அவள்தான்! பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன் இவா சக்திகளோட கூடியிருந்தா பஞ்ச ப்ரம்மம். பிரிஞ்சுட்டா பஞ்ச ப்ரேதம். சக்தியில்லாதவனை பூமி தள்ளிடறது. ஜீவன் மட்டுமே இருந்தா ‘கோமா’ங்கறா.

இது லலிதாஸஹஸ்ரநாமாவிலே 249-ஆவது ஸ்லோகமா வரும். அவர்களைப் பிரேதங்களாகாம காப்பாத்தறவ தான் சக்தி. இதைத் தான் “பாங்க்தம் வா இதம் ஸர்வம்’ ங்கறது தைத்ரியோபநிஷதம்.

சிருஷ்டிக்கிறப்போ பிரம்மாணியா இருக்கா; ரட்சிக்க றப்போ கோவிந்த ரூபிணியாயிருக்கா: ஸம்ஹாரம் பண்றப்போ ருத்ர ரூபிணியாயிருக்கா மறைக்கிறப்போ ஈஸ்வரியாயிருக்கா அனுக்கிரஹம் பண்றச்சே சதாசிவ சொரூபிணியாயிருக்கா. இதுக்குப்பேர் பஞ்ச கிருத்தியம்.

அஷ்ட சித்தியாயிருக்கிறவளும் அவதான்.
சித்தர்களுக்கு எட்டு சித்திகளைக் கொடுக்கிறவளும் அவதான். இல்லேன்னா அகஸ்தியரால் கடலைக் குடிக்க முடியுமா? அனுமாரால சமுத்திரத்தைத் தாண்டத்தான் முடியுமா? அவர் சாவித்துவாரம் வழியா உள்ளே நுழைஞ்சு இலங்கை பூரா தேடினது எப்படி? பலசாலியான பீமனாலே எப்படி அனுமார் வாலை அசைக்க முடியாமப் போச்சு? அதே அனுமாராலே சீதை மணலால பிடிச்ச லிங்கத்தை அசைக்கக் கூட முடியலையே! அருணகிரி நாதர் பாரிஜாதம் கொண்டு வர எப்படிப் பறக்க முடிஞ்சது? எல்லாம் அன்னையோட சித்திதான்!

திருஞானசம்பந்தரோட எத்தனை பேர் நெருப்புக்குள்ளே போனா! அவாளுக்கு பயமாயில்லையா? அது அக்னியைக் கட்டற சக்தி. அக்னி பனிமலை மாதிரி குளுகுளுன்னு ஆயிடும். அப்புறம் பயமாவது! பிரகலாதனையும், திருநாவுக் கரசரையும் லகிமா என்கிற சித்தியாலே லேசாக்கி மிதக்க வைச்சதும் அவ சக்திதான்! ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாகனமாகி திருணாவர்த்தன் என்கிற அசுரனைக் கீழே போட வைச்சதும் அவசக்திதான். வாமனராயிருந்தவர் திரிவிக்ரமனா விஸ்வரூபம் எடுத்ததும் அஷ்டமா சித்திதான்!

ஒரு துரும்பைப் போட்டு அக்னியாலே எரிக்க முடியாம, வாயுவாலே அசைக்க முடியாமப் பண்ணினவளாச்சே! எல்லாத்துக்கும் சாட்சியாயிருக்கிறவள் அவள். நினைத்த மாத்திரத்தில் கோடி பிரம்மாண்டங்களை அவளால் சிருஷ்டிக்க முடியும். நாமதான் அவளை நினைக்கிறதில்லே! நம்மளாலேயே எல்லாம் சாதிக்க முடியுமின்னு நினைக் கறோம். அவளைத் துணைக்கு அழைச்சுண்டவா ரொம்ப உசரத்துக்குப் போயிடறா! ஈஸ்வரனைப் பர்த்தாவா கொண்டவள். வேதங்களிலும், ஆகமங்களிலும், புராணங்க ளிலும் ஸ்துதிக்கப்பட்டிருக்கா. நவராத்திரி பூஜை பண்ணித்தான் ராமர் ராவணனை ஜெயிச்சதா தேவி பாகவதம் சொல்றது! பரமசிவத்தோட பாதி சரீரமே அவதான்! அப்படி ருத்ரனோட கலந்ததாலே அவருக்கு ஒளஷதமாவும் ஆகியிருக்கா.

சியமந்தக மணிக்காக ஜாம்பவானோட கிருஷ்ணர் சண்டை போட்டுண்டிருக்கார். கிருஷ்ணருக்கு அந்திம காலம் ஏற்பட்டதா குகைக்கு வெளியிலே காத்திண்டி ருந்தவா போய் வசுதேவர் கிட்டே சொல்றா. வசுதேவர் புலம்பறார். நாரதர் வந்து ‘தேவியை பூஜை பண்ணுங்கோ. கலியாண கிருஷ்ணனா திரும்பி வருவாங்கறார். அந்தப்படி துர்க்கா பூஜை பண்ணினார் வசுதேவர். பழிபோனதோட ஜாம்பவதி, சத்யபாமா என்கிற இரண்டு பெண்களை விவாகம் பண்ணிண்டு nக்ஷமமா திரும்பி வரார் கோபாலன்.

இதை நான் சொல்லலே. ஸ்ரீருத்ரம் சொல்றது. அவள் ஈஸ்வரனுக்கும் அதி தேவதை. இந்த லோகத்தைப் படைச்சு காத்து, அழிச்சு பாப, புண்ணியங்களை பண்ணவச்சு, இந்த கொடுக்கல்-வாங்கலில், இந்த வியாபாரத்தில் அவளுக்கு அலுப்பே ஏற்பட்டதில்லை! அவள் ஓய்வெடுத்துக் கொள்ளும் போது வருவதுதான் ஊழிக்காலம்!

அப்போ ருத்ரன் தாண்டவம் செய்யறான். அதுக்குத் தாளமிடுகிறாள் சக்தி. சிலபேர் மனைவி அசமஞ்சமாயி ருந்தாலும் தொழில் விஷயத்தையெல்லாம் சொல்லிப் புலம்புவா. அவ தீர்க்கப் போறாளான்னா இல்லே! அப்பேர்ப்பட்ட சதி, தீயிலே குதிச்சுட்டான்னதும் தட்ச யாகத்தை அழிச்சதோட ருத்ரனோட கோபம் அடங்கலே! தாட்சாயணியோட சரீரத்தை சுமந்துண்டு கோர தாண்டவம் ஆடறார். அவரோட பாதி உடம்பு எரியறது. ஒரு பாதி எரியறப்போ இன்னொரு பாதி குளுகுளுன்னா இருக்கும்! தேவியோட தேகம் துண்டு துண்டா விழுந்தப்புறம் சக்தியிழந்து யோக நித்திரையிலே ஆழ்ந்துடறார் சிவன். அவர் நடராஜர்னா அம்பாள் சிவகாமி. சிவனுடைய பிரியத்துக்குரியவள். தட்சயாகத்துல உங்களுக்கு அவிர்ப்பாகம் கொடுக்கலை என்று புகார் சொல்லிக் கொண்டு அவள் கைலாசத்துக்கு ஓடலை. அவனுக்குப் பெண்ணா வளர்ந்த பாவ உடலா நினைச்சு தன்னையே அழிச்சிண்டா! ஒரு பர்த்தாவோட கௌரவம் பத்தினிக்கு எத்தனை முக்கியமின்னு நிரூபிச்சா! தக்ஷப்பிரஜாபதியின் குமாரி என்கிறது அவள் போட்டுண்ட வேஷம். தட்சனோட வரத்துக்கான பலன்! அவ்வளவுதான். ஆனாலும் வேஷமே அவளுக்கு வெறுப்பாயிடுத்து. வேஷம் தானேன்னு ஒதுக்கலே! அதனாலேதான் ஈச்வரன் அவளை மடியிலே வைச்சுண்டி ருக்கார். புருஷனோட மூச்சுக்காத்தா பொண்டாட்டி இருந்தா அவளுக்கு எங்கேயும் இடம் கொடுக்கலாம் என்கிறது56-ஆவது த்ரிசதிஸ்லோகம். யதா சிவஸ்-ததா தேவீ-யதாதேவீ ததாசிவ: தஸ்மா-தபேத-புத்த்யைவ சிவேதி கதயந்த்யுமாம்” என்கிறது லிங்க புராணம். சிவன் வேறு, சக்தி வேறு என்பதே கிடையாது. சிவன்தான் சக்தி; சக்திதான் சிவன்.

‘ஈதி பாதா-எதிர்பாராமல் ஏற்படும் கஷ்டங்கள். அதையும் நாசம் செய்வள் அம்பிகை. நம்ம கிட்டே பணம் இருப்பிலே இருந்தா ஆபத்துக்கு உதவும். புண்ணியம் இருப்பிலே இருந்தா தெய்வங்கள் கை கொடுக்கும். கல்யாணம், ஸீமந்தம், ஆயுஷ்யஹோமமின்னா பணம் மட்டும் செலவாகறது தெரியும். அது மாதிரி புண்ணியமும் காலியாகறது என்பதை யும் புரிஞ்சுக்கணும். மேலே மேலே பூஜை பண்ணி புண்ணியத்தை சேர்த்துக்கணும். நாம வசதியானவா, பணத்தை நாணயமாத்திருப்பிடுவோமின்னு தெரிஞ்சா “பணம் வேணுமா! நாளைக்கு பாங்க் லீவாச்சே”ன்னு அக்கறையா விசாரிப்பா. நமக்கு நல்ல மனசிருக்கு. புண்ணியம் பண்ணி மறுபடி நிரப்பிடுவோம்கற உத்தரவாதம் இருந்தா, தேவதைகள் எதிர்பாராத கஷ்டங்கள் வர்றப்போ உதவி பண்ணும்.

அடையப்படாததை அடைய வேண்டும் என்று ஆசைப்படாதவள் அம்பிகை. அவளுக்கு அடையப்படாததும் உண்டோ! ஆச்சர்யமாயிருக்கிறதில்லையா? ஒருத்தர் பெரிய தபஸ் பண்ணினார். அம்பாள் அனுக்கிரகம் பண்ணவராள். ராத்திரி நேரம். காலிலே கொலுசுமணிகள் ஜல் ஜல்’ என்கிறது. வாய் நிறைய தாம்பூலம். எவ்ளோ தாசின்னு நெனைச்சு ‘சீ’ங்கறார் தவசி. வாயைத்திறந்துண்டு தூங்கறான் மடப்பள்ளி வரதன். அவன் வாயிலே தம்பலச் சாற்றை உமிழ்ந்து விட்டுப் போகிறாள் அகிலாண்டேஸ்வரி. அவன் காளமேகமாய் கவி மழை பொழிகிறான்.

அங்கே நீ தவசியாச்சே! நான் அம்பாளாக்கும்’என்று தன்னை அறிமுகப்படுத்திக்கலை தேவி. அது அடையப் படாத இடமின்னு ஒதுங்கிட்டா. ஈஸ்வரனுடைய சக்தி அவள். அவள் முகம் எப்பவும் புன்னகையோட பிரகாசமாயிருக்கும். சில ஸ்த்ரீகள் ரொம்ப லட்சணமாயிருப்பா. ஆனால் அவா முகத்திலே சிரிப்பே வராது. சிலபேர் ரொம்ப சுமாராயிருந் தாலும் சிரிச்ச முகமா இருப்பா. ஸ்த்ரீகள் சிரிச்ச முகமா இருந்தா வீட்டுக்கே லக்ஷ்மீகரம். அதுக்காக அட்டகாசமா சிரிக்கப்படாது. புன்சிரிப்புதான் கம்பீரம்!

பஞ்சதசாக்ஷரியின் நாலாவது எழுத்துதான்‘ல’. லகார ரூபாயை’ ன்னு அர்ச்சனை பண்றோம். ‘ல’ன்னு சொன்னாலே ஒரு மென்மை மனசைப் பரவசப்படுத்தறது’ ‘லஹரி’ன்னா வரிசை. பண்டாசுரனை வதைத்தவள் லலிதை. ‘லாலி’ன்னு பாடி குழந்தையைத் தூங்க வைப்பா. நமக்கெல்லாம் லாலி பாடறவ லோகமாதா! லக்ஷ்மியா, சரஸ்வதியா இருந்து தன்னைத்தானே நமஸ்காரம் பண்ணிக்கறவளும் அவதான்!