கிராம தேவதைகள் :: எல்லைத் தெய்வம் மேல் மலையனூர் அங்காளபரமேஸ்வரி
இந்தக் கோயிலில் அமாவாசை தோறும் நடை பெறும் அர்த்த ஜாம பூஜையைக் காண்பதால் வாழ்வில் துன்பங்களும், பிரசினைகளும் தீரும். அன்று சிறப்பு அபிஷேகமும், சந்தனக்காப்பும் நடு நிசியில் அம்மன் ஊர்வலமும், உற்சவமும் நடக்கிறது. பேய், பிசாசு பிடித்தவர்களும், பில்லி, சூன்யத்தால் அவதிப்படுவோரும், புத்திர பாக்கியம் வேண்டுவோரும், திருமணமாகாதவர்களும், தீராத நோய்வாய்ப்பட்டோரும் அமாவாசையன்று ஆலயத்தில் தங்கி எல்லா தரிசனமும் கண்டால் அவர்கள் குறைகள் விரைவில் நீங்கும். அந்த இரவிலும் கூட்டம் கோயில் கொள்ளாமல் நிரம்பி வழிகின்றது.
இது தவிர வெள்ளி, செவ்வாய் சிறப்பு வழிபாடும், ஆடி மாதம் பத்துநாள் திருவிழாவும் (குறிப்பாக தேரோட்டத்தன்று கூட்டம் நெரியும்) விசேஷமாய் கொண்டாடப்படுகின்றன. மாசி மாத அமாவாசையில் மயானக் கொள்ளை உற்சவம் திமிலோகப்படுகிறது.
மாசி அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி. அன்று தன் பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவ பெருமான் அங்காளம்மனை வழிபட்டதாகவும், மறுநாள் அமாவாசையன்று ஜனங்களைக் கஷ்டப்படுத்தும் பைசாசங்களை அடக்கி ருத்ரன் தாண்டவமாடு வதாகவும் ஐதீகம் - அதன் அடையாளமாக பக்தர்கள் காளி வேஷமிட்டு மயானத்திற்குச் சென்று சூறையிடுவார்கள்.
வல்லாள கண்டன் என்ற அரக்கன் பரமசிவனை நோக்கிக் கடும் தவம் புரிந்து” பெண்ணைத் தவிர வேரெவராலும், எந்த ஆயுதத்தாலும் தனக்கு மரணம் நேரக் கூடாது. நினைத்த வடிவம் எடுக்கும் ஆற்றல் வேண்டும் என்கிற வரங்களைக் கோரிப்பெற்றி ருந்தான்.
வரம் பெற்றவுடன் எல்லா அசுரர்களுக்கும் ஏற்படும் அகந்தை இவனுக்கும் வந்தது. இந்திரனையும் திக்பாலர்களையும் வென்றான். பூவுலகிலுள்ள கோவில்களில் உள்ள விக்கிரகங்களை அகற்றி தன் சிலையை நிறுவி அதற்கு அபிஷேக, ஆராதனைகள் நடத்த ஆணையிட்டான். பணியாதவர்கள் அவனது வாளுக்கு இரையாயினர். யாக அவிர்ப்பாகத்தையும் தானே பெற்றுக் கொண்டான். தேவர்கள் அவனுக்குப் பணி புரிந்தனர்.
அமரர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். திருமால் “தேவர்களே! பிரம்ம கபாலத்தோடு சிவபெருமான் அலைகிறார். அகிலாண்டேஸ்வரி அதற்கு நேரே நின்று அவல் பொரியை இறைத்தால் அதை ஏற்க கபாலம் கீழிறங்கும்.
வாருங்கள். போய் உமையிடம் சொல்வோம். அவளால் தான் அரக்கன் மடிவான்” என்றார்.
கைலாயம் சென்று அன்னையிடம் பிரம்ம கபாலம் இறங்கும் வழியைக் கூற, அம்பிகை கணவனைத் தேடி பூலோகம் வருகிறாள். மேல்மலையனூர் மயானத்தில் சிவபெருமானைக் கண்டு அவல் பொரியை அள்ளிச் சூறை யிடுகிறாள்.
சிவன் கைக் கபாலம் கீழே இறங்கி பொரியை ஏற்கிறது இதைக் கண்ட சரஸ்வதிக்குச் சினம் பொங்குகிறது.
“என் கணவனை உன் புருஷன் என நினைத்து ஓடி வந்தது உன் தவறு. அதற்காகக் கோபம் கொண்டு ஈசன் என் பதியின் ஒரு தலையைக் கொய்தார். பிரம்ம கபாலம் கையில் ஒட்டிக் கொண்டது. பிட்சாடனராக அலைந்தார். அது அவர் செய்த குற்றத்துக்கான தண்டனை! புருஷன்
தண்டனையைக் குறைத்தவளே! மயான பூமிதான் உன் இருப்பிடம்! மயானக் கரிதான் உனக்கு அலங்காரம்! இரத்த வெறி கொண்டு அகோர ரூபமாக எரியும் பிணங்களையே உணவாகக் கொண்டு வாழக்கடவது” என சாபமிடுகிறாள்.
சாபம் பெற்ற பர்வதவர்த்தனி விரித்த சடையும் , மூன்று கண்களும், உயர்ந்த எடுப்பான பல்லும், இருண்ட மேனியும் கொண்டு சுடுகாட்டில் சுற்றித்திரிந்தாள். வல்லாள கண்டன் ஏற்கெனவே கயிலையில் பார்வதியைப் பார்த்து மயங்கியிருந்தான். மலையனூரில் சக்தி சிவனைப் பிரிந்து வாழ்வதாகக் கேள்விப்பட்டு அங்கு வந்தான். சிவனைப் போல் வடிவெடுத்து காளியாக வீற்றிருக்கும் அம்பிகையின் பின்புறமாக நெருங்குகிறான்.
தேவி கோபக்கனல் தெரிக்க கத்தி, கபாலம், பிரம்பு, அம்பு, வில், கதை, வீச்சரிவாள், சூலம், கேடயம், சங்கு இவற்றுடன் அவனோடு போர் புரிகிறாள். முடிவில் ஆயுதங்களை வீசி எறிந்து தன் கூரிய நகங்களால் அவனது வயிற்றைக் கிழித்துப் பெருகிய உதிரத்தை உறிஞ்சிகுடலை மாலையாக அணிந்து நர்த்தன மிடுகின்றாள். தங்கள் துயர் தீர்த்த அன்னையை, பூமாரி பொழிந்து தேவர்களும், முனிவர்களும் வணங்கித் துதிக்கின்றனர். சிவபெருமான் தேவியிடம் “இதே சுடலையில் கோயில் கொண்டு எழுந்தருளி நாடி வரும் அன்பர்களின் குறை தீர்த்து அருள் புரிய வேண்டும். எனது பிரம்மஹத்தி தோஷம் தீர்த்து சரஸ்வதியின் சாபத்தைப் பெற்றுக் கொண்ட உன் அங்கமெல்லாம் லிங்க சொரூபமாக நான் உறைவேன். அதனால் நீ இன்று முதல் அங்காள பரமேஸ்வரி என்று பெயர் பெறுவாய்!” என அருளினார். மலையனூரிலுள்ள ஏரிக்கரை அருகில் அங்காளம்மன் ஆலயம் அமைந்துள்ளது. அந்த ஏரியில் மீன் பிடித்து வாழும் செம்படவர் அங்கு வாழ்கின்றனர்.
ஒரு சமயம் ஊழி வெள்ளம் போல் மழை பொழிந்தது. கூடவே புயலும் அடித்தது. ஏரியின் கரை உடைந்து மரங்கள் வேரோடு அடித்துச் செல்லப்பட்டன. ஊருக்குள் நீர் புகுந்தது. மக்கள் “தாயே! நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்” என கோயிலில் கூடி முறையிட்டனர்.
அன்னை விஸ்வரூபம் கொண்டு ஏரியின் கரை உடைந்த இடத்தில் படுக்கிறாள்! வெள்ளம் அடங்கியது. மக்கள் உயிர்பிழைத்தனர். வெள்ளம் பெருக்கெடுத்துச் சென்ற போதும் திரிசூலி அசையவில்லை!
பெரிய + ஆயியாய் = பெரியாயியாய். திறந்த வெளியில் சயனித்திருக்கும் பராசக்திக்கு சேலை சாற்றுவது சிறந்த காணிக்கையாகக் கருதப்படுகிறது.
“ஓம் காளிகாயை வித்மஹே, மாதாஸ்வரூபாயை தீமஹி!”
தன்னோ அங்காளி ப்ரசோதயாத்” என்கிற அங்காளம்மன் காயத்ரியை ஜபித்தபடி வலம் வருவதால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.
தோல் நீக்கிய வாழைப்பழம் ஒரு பங்கு, பசுவின் பால் முக்கால் பங்கு, தேன் அரைப்பங்கு கலந்து தயாரிக்கப்படும் திரிமதுரம் அங்காளம்மனுக்குப் பிரியமான நைவேத்யம். பொங்கலிடுவோரும், பானகம், இளநீர் படைப்போரும் உண்டு. மாவிளக்குப் போடுவோர் ஏராளம். நல்லெண்ணெய், ஆமணக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பெண்ணெய், தேங்காயெண்ணெய், பசுநெய் ஐந்தையும் சம அளவு கலந்து வெள்ளி அல்லது செவ்வாய்கிழமை ராகுகாலத்தில் சிகப்பு நிறப் புதுத் துணியைத் திரியாக்கி வடக்கு திசை நோக்கி விளக்கு ஏற்றி 108 அங்காளம்மன் போற்றியைச் சொல்லி குங்குமத்தால் அர்ச்சித்தால் திருமணம் கைகூடும்.
இந்த ஐந்து எண்ணெய் கொண்டு எலுமிச்சம் பழமூடியில் சிவப்புத் திரியிட்டு தீபமேற்றி (கிழக்கு அல்லது வடக்குமுகம்) செம்பருத்திப்பூமாலை அணிவித்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) வணங்கினால் சந்தான பாக்கியம் கிட்டும். பூர்த்தி நாளன்று வெண்கலப் பாத்திரத்தில் சர்க்கரைப் பொங்கல் நிரப்பி மஞ்சள் நிற ஆடையணிந்து தானம் வழங்க வேண்டும். அமாவாசை பகல் அல்லது இரவு உச்சிப் பொழுதில் பூஜை செய்து இரவு கோயிலில் தங்கினால் பேய் பிடித்தவர் சுகமடைவர் கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் ஒரு மண்டலம் புற்றுக்கு பால் ஊற்றி கிழக்கு நோக்கி விளக்கேற்றினால் தோஷம் விலகும்.
சந்நிதிக்கு நேரே மலை போல் புற்று இருக்கிறது. புற்றில் நாக வடிவாக அம்மன் அருள்பாலிக் கிறாள். புற்றுமண் இங்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. சன்னதிக்குச் செல்லும் வழி குறுகியதாக, இருட்டாக உள்ளது. இடது பாதம் மடித்து வலதுபாதம் அரக்கனின் தலைமேல் பதித்து முன்னிரு திருக்கரத்தில் கத்தி, கபாலமும், பின்னிருதிருக்கரத்தில் டமருகமும், சூலமும் தரித்து, நாகமகுடம் சூடி அங்காளம்மன் அமர்ந்திருக்கும் அழகை தரிசிக்கும்போதே கவலைகள் நீங்கி மனம் லேசாகிறது.