இல்லாத புதையலுக்கு பொல்லாத பலி - 1
17-ஆம் நூற்றாண்டு நெல்லை மாவட்டத்துக் கடை யம் கிராமம். தெலுங்கு வடு கர் இனத்தைச் சேர்ந்த பொன்மாரி பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருக்கிறாள். அவளுடைய கணவர் அனஞ்ச பெருமாள் வீட்டுக்கு வெளியே தவித்தபடி நடைபோடுகிறார்.
“ ஏலே! பெருமாளு... ஏன் இப்படி அலையுறே? நீ இப்படி அலையிறதாலே உம் பொஞ்சாதிக்கு வலி கொறைஞ்சுரு மாக்கும்! பூமியிலே ஜனிக்கிற நேரம் வந்தா அரை நொடிகூட சிசு வயித்துலே தங்காது. கல்யாணியம்மா, கோமதியம்மா! இந்த தடவையாவது பொண்ணு பொறக்கணுமேன்னு வேண்டிக்க” என்றார் பெருமாளின் சித்தப்பா.
“போ, சித்தப்பு! இப்படித்தான் ஒவ்வொரு தடவையும் வேண்டிக்கிட்டு ஏழு ஆம்பிளைப்பிள்ளை பொறந்தாச்சு! ஏழு சாய வேட்டிக்கு நடுவிலே ஒரு பாவாடை காய வேண்டாமான்னு ஆத்தா புலம்புறா! ஆயிரந்தான் மணி மணியா மருமகளைக் கொண்டாந்தாலும் ஒரு மகளுக்கு ஈடு வருமா?” அலுத்துக் கொண்டார் பெருமாள்.
குழந்தை அழும் சப்தம் சங்கீதமாய் ஒலித்தது. “டேய்! இந்தவாட்டி பொட்டப் புள்ளதான்! குரலே சொல்லுதே! பஞ்சமி திதி. மீன ராசி. ரொம்ப அதிர்ஷ்டமாயிருக்கும்லே” உற்சாக மானார் பெரியமாமன்.
பிறந்தது பெண்தான்! அதன் தங்க நிறத்தைப் பார்த்து “பொன்னிறத்தாள்” என்றே பெயர் சூட்டினர். பொத்திப் பொத்தி வளர்த்தனர். குமரிப் பருவமும் வந்தது.
மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் உறவினரான தளவாய் நாயக்கரின் புதல்வன் இணை சூரப்பெருமாள் கட்டிளங்காளை. குற்றால அருவியில் குளித்தவன் சினேகிதர்களோடு வாணதீர்த்தம் புறப்பட்டான். வழியில் கடையம் சுனைக்கு வந்து நீராடியவன் கண்ணில், ஸ்நானம் செய்துவிட்டு தோழியருடன் திரும்பிய பொன்னிறத்தாள் சிக்கினாள். வைத்த கண்ணை எடுக்க மாட்டாமல் திணறினான்.
“குட்டி! உன் பேரென்ன?”
“இதோ பாருங்க! இந்த குட்டி, கிட்டிங்கிற வேலை எல்லாம் எங்கிட்டே வேணாம்! எம்மேலே ஆசைப்பட்டா எங்கப்பா கிட்ட வந்து முறைப்படி பொண்ணு கேளுங்க. குதிரை மேலே வந்தவரானாலும் எம்பொறந்த வீட்டை மதிச்சுப் பேசணும். கடயம் அனஞ்சபெருமாள் மக நான்” என்று வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகப் பேசினாள் பொன்னி.
வாண தீர்த்த மாடாமலே நண்பர்களுடன் மதுரை திரும்பினான் குமரன். அவன் தந்தையிடம் நடந்ததைச் சொன்னார்கள் நண்பர்கள். மகனின் ஆசையைத் தீர்க்க சீர்வரிசையோடு கடையம் வந்தார் தளவாய் நாயக்கர். பொன்னியின் அதிர்ஷ்டத்தைக் கண்டு ஊரே வியந்தது. தளவாய் குடும்பம் என்றால் சாதாரணமா?
திருமணம் வெகு சிறப்பாய் நடந்தது! ஏழு சகோதரர்களும், பெற்றோரும் பிரிய மனமில்லாமல் பொன்னியை வழியனுப்பினர். இன்னும் எதைத்தரலாம் என்று இவர்கள் யோசிக்க, ‘எதுவுமே வேண்டாம்’ என்று தளவாய் மறுக்க’ இப்படியும் சம்பந்திகளா’ என்னும்படி கூடிக்களித்தனர் இருவீட்டாரும். மனைவியிடம் உயிரையே வைத்திருந்தான் கணவன். அவனைப் பெற்றோரோ மருமகளைத் தாங்கித் தடுக்கிட்டனர். பொன்னி கருவுற்ற செய்தி கேட்டு பிறந்த வீட்டார் குதூகலித்தனர்.
மதுரையில் சீமந்தம், வளைகாப்பு எல்லாம் சிறப்பாக நடந்தது. ‘பிறந்த வீட்டில்தான் பிரசவிப்பேன்” என அடம் பிடித்த பொன்னி “வசதி என்ன வசதி! எங்க ஊரிலே தானே எங்காத்தா எட்டு புள்ளை பெத்தாங்க” என்று வாதிட்டாள். வேறு வழியில்லாமல் பெற்றோருடன் கடையம் அனுப்பினான் இணைசூரன்.
பொன்னிக்கு ஒன்பது மாதம். மாரியம்மன் கோயில் திருவிழா பொன்னி விதைத்த முளைப்பாரி முளைவிடவே யில்லையே என பெற்றவள் புலம்பினாள். பூனை உருட்டிய பால் பானை உருண்டு சிதறி பால் ஆறாக ஓடியதைக் கண்டு அவள் வயிற்றைப் பிசைந்தது. மாலைநேரம் நீராட சுனைக் குப்போக விரும்பினாள் பொன்னி. “இன்னிக்குக் கருக்கல்லே நான் கண்ட சொப்பனமே சரியில்லே! உன்னை பிடிச்சிட்டுப் போயி பலி கொடுக்கற மாதிரி... வேணாம் பொன்னி! உம் புருசனுக்கு என்ன பதில் சொல்றது. நிறை சூலி பொழுது சாயற வேளையிலே சுனைக்குப் போறதுங்கறது நல்லாவா இருக்கு? மேகம் மூடிக்கிட்டுவருது!” என்று தாய் தடுக்க.
“ஹை! மழை பெஞ்சா இன்னும் சொகமாயிருக்கும்! ஏம்மா, நீ தொட்டதுக்கெல்லாம் பயப்படுறே! பிள்ளை பொறந்த பொறவு புள்ளைக்கு சளி புடிச்சுக்கும் போகாதேம்பே! வூட்டுலேயே அடைஞ்சு கெடக்கணுமின்னா நான் இங்க வந்துருக்கவே வேண்டாமே” என்று மகள் அடம்பிடித்தாள், இதற்குள் தோழிகள் பட்டாளம் வந்துவிட்டது.
“பத்திரம்! ரொம்ப நாளி தண்ணியிலே ஆட்டம் போடாம வெரசா வந்துடுங்க” என்று எச்சரிக்க மட்டுமே தாயால் முடிந்தது. குஷியாக புறப்பட்டவர்களை ஒரு குறத்தி எதிர் கொண்டாள். தன் உயிர்த் தோழிக்கு எப்போது கலியாணம் ஆகும்’ என்று பொன்னிறத்தாள் அக்கறையாய் விசாரிக்க.
“அது கெடக்கட்டும், ஒங்கையைக் கொடுதாயி” என்று பொன்னியின் கையை வலுக்கட்டாயமாக இழுத்துக் குறி சொன்னாள் குறமகள்.” எப்போ குழந்தை பொறக்கும்?” என்று ஒருத்தி வினவ, “நாளைக்கு உதயத்தை குழந்தை பார்க்காதும்மா! இன்னிக்கு ராத்திரிக்கண்டம் உனக்குத்தாண்டணுமே! வருணத்தேவனும், வாயுத்தேவனும் எச்சரிச்சுப் போக பூமிக்கு இறங்குவாங்க” என்றாள் குறத்தி. தோழிகள் கண்களில் தெரிந்த பீதியைப் பார்த்து கையை இழுத்துக் கொண்டாள் பொன்னி. “போதும்! நீ குறி சொன்னது, போ” என்றாள். “பொன்னி! திரும்பிடுவோமா?” ஒருத்தி பயத்தோடு கேட்க,
“அடச்சே! பாசி மணி விக்கறவ வயித்துப் பொழைப்புக் காக உளர்றா! அதைக் கேட்டு மிரள்றியே! இன்னும் பொழுது சாயலே. ராத்திரி பத்திரமா வீட்டிலே கதவை அடைச்சிட்டு இருப்போம். வாங்கடி” தைரியமாய் முன்னே நடந்தாள் அவள். சுனையில் ஆனந்தமாய் ஒருவருக்கொருவர் நீரை வாரி எறிந்து கேலி பேசித்திளைத்து நீராடினர். திடீரென வானம் இருண்டது. ‘உய் உய்’ என்று காற்றும் சேர்ந்து கொண்டது. தூறல் தொடங்கியது.
“போதும், போவோம்” ஒருத்தி கரையேற எல்லோரும் அவளைப் பின்பற்றி துணியைப் பிழிந்து உடுத்திக் கொண்டு புறப்பட்டனர். மழையும், காற்றும் வலுத்துக் கொண்டிருந்தன. தோழிகளுக்கு சீக்கிரம் ஊருக்குள் நுழைந்துவிட வேண்டும் என்ற அவசரம் வேகமாக முன்னே நடந்தார்கள். அந்த வேகத்துக்கு பொன்னியால் ஈடுகொடுக்க முடியவில்லை! மூச்சிரைத்தது. ஒரு புளியமரத்தடியில் ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஒதுங்கினாள்.
காட்டாளம்மன் கோயில் பூசாரி உருளியில் பச்சரிசியுடன் போய்க் கொண்டிருந்தவர் கண்களில் பொன்னிபட்டாள்.
“ஏந்தாயி! மழை வலுக்குதுல்லே! சூலிப் பொண்ணு. வீட்டுக்குப்போ “நிற்காதே” என்று சொல்லி விட்டு கோயிலை நோக்கிப் போனார்.
காட்டாளம்மன் கோயிலில் கள்வர் கூடி இருந்தனர். மாந்திரீகன் சுடலை முத்து பூதமாரண சக்கரத்தை வைத்து பூஜை போட்டுக் கொண்டிருந்தான். கிடா, சூல் பன்றி எல்லாம் கட்டப்பட்டிருந்தன. “இங்கே என்ன பண்றீங்க?” பூசாரி கேட்டார்.
“இந்தக் கோயில்லே புதையல் இருக்காம்! சாமியாடி சொன்னான். அதை எடுக்கத்தான் பூசை” என்றான் மாரித்தேவன். அவன் கள்வர்களின் தலைவன். “டேய், பூசாரியை விடாதீங்க! அவன் பொஞ்சாதி பத்து வருசம் கழிச்சு உண்டாயிருக்கா! தலைச்சூலி பொண்ணு பலிகொடுக்கணுமே” என்று சுடலை முத்து ஞாபகப்படுத்த பூசாரி கழுத்தில் அரிவாளை வைத்தான் மாடத்தேவன்.
பூசாரி நடு நடுங்கி உருளியைக் கீழே போட்டான். “ஐயோ! என்னை விட்டுடுங்க! உங்களுக்கு எளசா ஒரு தலைச்சூலிப் பொண்ணைக் காட்டுறேன்” என்றான். கள்வர்கள் அவனை இறுக்கிப் பிடித்தபடி நடக்க தூரத்திலி ருந்தபடி அவன் புளியமரத்தடியிலிருந்த பொன்னியை அடையாளம் காட்டி விட்டு ஓடிப்போனான். “எங்க மாட்டைப் பார்த்தியா?” என்றபடி வந்த கள்வர்களை பொன்னி நம்பினாள். “இல்லியே! அண்ணே, காத்து மண்ணை வாரி இறைக்குது. தெசையே தெரியலே... ஊர் எல்லை வரை துணைக்கு வர்ரீங்களா?” அப்பாவியாகக் கேட்டாள்.
“தங்கச்சி! அது சுத்துப் பாதை! சுருக்கு வழி நாங்க காட்டறோம்” என்று திசை மாறி அவளை அழைத்துச் சென்றனர். பொன்னிக்கு சந்தேகம் வந்தது. சுருக்குப் பாதை என்றார்கள். இவ்வளவு நேரமாவா ஊர் வரவில்லை!
“அண்ணே! என்னை நகைக்காகத்தானே கூட்டிப் போறீங்க! திருகாணி, மூக்குத்தி, கல்தாலி மொதக் கொண்டு எல்லாத்தையும் களட்டித் தர்ரேன். என்னை விட்டுடுங்க” என்று அழுதாள்.