2004 டிசம்பர் மாதம்
5.12.2004 மஹாதேவாஷ்டமி
கார்த்திகை மாத அஷ்டமி மகாதேவருக்கு உகந்த நாள். கேரளாவில் இந்த தினம் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அதிலும் வைக்கத்தில் சிறப்பாக அன்னதானம் நடக்கும். அந்த அன்னதானம் முடிந்ததும் சாப்பிட்ட இலையில் பக்தர்கள் உருளுவர். இதனால் வயிற்று ரோகங்கள் குணமாகும். இப்படிப் புரள்வதாக வேண்டிக் கொள்வோர் ஏராளம். சாப்பிட்ட இலையை எடுத்தெறிய, பரிமாற அன்பர்கள் போட்டி பலமாயிருக்கும். அதனாலேயே இதை வைக்கத்தஷ்டமி என்று சிறப்பித்துக் கூறுவர். ஸ்வாமிக்கும் சிறப்பான அபிஷேகம், ஆராதனைகள் நடக்கும். மதுரையில் அனேக பக்தர்கள் அஷ்டமி பிரதட்சணம் செய்வர். அஷ்டமியன்று சிவலிங்கத்தை வலம் வந்தால் கஷ்டங்கள் காற்றாய் பறக்கும். சிவபெருமான் அசுரர்களை சம்ஹரித்த நாள் அஷ்டமி. அமாவாசைக்கும், பௌர்ணமிக்கும் நடுநாளாக இருக்கும் அஷ்டமியன்று பரமேஸ்வரனை வழி படுவதால் பாபங்கள் நிவர்த்தியாகும். பெருமாளுக்கு கோகுலாஷ்டமி, சிவனுக்கு மஹா தேவாஷ்டமி.
--------------------------------------------------------------------------------
16.12.2004 தனுர்மாத உஷத்கால பூஜாரம்பம்
சூர்ய பகவான் தனுர் ராசியில் பிரவேசிக்கும் புண்ணியதினம். தேவலோ கத்தில் மாலை நேரம். தனுசு குருவின் ஆட்சி பீடம். தக்ஷிணாயணத்தின் கடைசி மாதம். பகவான் கண் விழிக்க திருப்பள்ளியெழுச்சி படிக்கிறோம். பளிச்சென்று வாசலில் நீர் தெளித்து பெரியதாக கோலமிடுகிறோம். பகவான் பார்வை நம் இல்லத்தில் பட்டு சகல சௌபாக்கியங்களும் பெருகவே இப்படியெல்லாம் செய்யவேண்டுமென்று நம் மூதாதையர் ஏற்படுத்தி இருக்கின்றனர். சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் நெய்யையும், பாலையும் நீக்கி நோன்பு தொடங்கிய நாள் இது. முப்பது நாட்கள் நோன்பு நோற்றவளை ஸ்ரீரங்கநாதர் பல்லக்கில் ஏற்றி வரச் செய்து ஆட்கொண்டார். இந்த முப்பது நாட்களும் விடியற்காலையில் எழுந்து நீராடி திருப்பாவை பாடி பெருமாளை தரிசித்தால் கன்னிப்பெண்களுக்கு விவாகம் நடக்க வாய்ப்பிருக்கிறது. “மாதங்களில் நான் மார்கழியாய் இருக்கிறேன்” என்கிறான் கீதையில் கண்ணன். அதிகாலை குளிர் காற்றில் பிராணவாயு அதிகம் உண்டு. அது தேகத்தில் படுவதால், சுவாசிப்பதால் வியாதிகள் அண்டாது. அதற்காக ரிஷிகள் வகுத்து வைத்த முறை இது.
--------------------------------------------------------------------------------
22.12.2004 ஸர்வபீஷ்ம வைகுண்ட ஏகாதசி
இந்த ஆண்டு வைகுண்ட ஏகா தசியும், பீஷ்ம ஏகாதசியும், ஒன்றாகவே வந்து விடுகின்றன. வைகுண்ட ஏகாத சிக்கு மோட்ச ஏகாதசி என்ற பெயரும் உண்டு. மகாவிஷ்ணுவின் வாசஸ் தலமான வைகுண்டத்தின் வாசல் திறக்கும் தினம் இன்று. இதன் அடையாளமாக பெருமாள் கோயில்களில் சிறப்பாக ஒரு வாயிலைத் திறந்து அதன் வழியே பெருமாள் தரிசனம் தருவார். இன்று இரவு கண் விழித்து பரமபதம் விளையாடுவார்கள். விளையாட்டில் ஏணி வழியே ஏறிச் சென்றால் சொர்க்கம். ஏணி என்பது புண்ணியம். பாம்பு என்பது பாவம்.
தக்ஷிணாயணத்தின் இறுதி மாதம் மார்கழி. தேவலோகத்தின் விடியற்காலை நேரம். கிருதயுகத்தில் முரன் என்ற கொடிய அசுரன் இருந்தான். தேவர்களையும், அந்தணர்களையும் வருத்தி வந்தான். மகாவிஷ்ணுவைச் சரணடைந்தான் இந்திரன். முரனோடு ஆயிரம் வருடங்கள் போரிட்ட மகா விஷ்ணு சுதர்சனத்தால் அசுர சேனைகளை அழித்தார். பின்னர் களைப்பு நீங்க பதரிகாசிரமம் சென்று பன்னிரண்டு யோஜனை விஸ்தீரண முள்ள ஸிம்ஹாவதி என்கிற குகைக்குள் பள்ளி கொண்டார்.
துரத்திக் கொண்டு வந்த முரன் புருஷோத்தமனைக் கொல்ல வாளை உருவினான். அச்சமயம் பரமாத்மாவின் தேகத்திலிருந்து ஒரு அழகிய மங்கை ஆயுதங்களோடு தோன்றி முரனை யுத்தத்திற்கு அழைத்தாள். அரக்கன் அம்பு எடுக்கு முன் அம்பிகை ஹுங்காரம் செய்தாள். முரன் பஸ்பமானான். பகவான் விழி மலர்ந்தார். நடந்ததை அறிந்து ஆனந்தப்பட்டார். அவளுக்கு ‘ஏகாதசி’ எனப் பெயர் சூட்டினார்.
“நீ ஜனித்த தினத்தில் விரதம் காத்து என்னை வழிபடுவோருக்கு சொர்க்க பதவியை அளிப்பேன்” என்று வாக்களித்தார். அப்போது இரவு நடு ஜாமம். அது வரை அதாவது இரவு 12 மணி வரை கண் விழிப்பதும் விரதத்தின் ஒருபகுதியாகக் கருதப்படுகிறது. அன்றும், மறுநாளும் பெருமாளை தரிசிப்பதும், பாகவதம், இராமாயணம், பாண்டுரங்க மகாத்மியம், நாலாயிர திவ்யப்ரபந்தம் போன்ற புண்ணிய சரித்திரங்களையும் பாசுரங்களையும், படிப்பதும், படிக்கச் சொல்லிக் கேட்பதும் பல மடங்கு புண்ணியத்தைக் கொடுக்கும்.
கம்பமென்னும் நகரை ஆண்ட வைகானஸ மன்னன் சொப்பனத்தில் தன் பிதுர்க்கள் நரகத்தில் கஷ்டப் படுவதைப் பார்த்து துக்கித்தான். பர்வதி ரிஷியை வணங்கி இதற்குப் பரிகாரம் வேண்டினான். மார்கழி மாத வளர்பிறை தசமியன்று ஒரு பொழுது சாப்பிட்டு, ஏகாதசியன்று பால், பழங்கள் மட்டுமே உட்கொண்டு துவாதசியன்று காலையில் நெல்லிக்காய், சுண்டைக் காய், அகத்திக்கீரை சமைத்து, அதிதி போஜனம் செய்விக்க வேண்டும்’ என்றார் முனிவர். அப்படியே செய்தான் வைகானஸன். அன்று இரவே மூதாதையர் அவன் கனவில் தோன்றி தாங்கள் சொர்க்கம் சேர்ந்ததைக் கூறி வாழ்த்தினர். மன்னனும் அஷ்டபோக பாக்கியங்களோடு நீண்ட காலம் அர சாண்டான். பயபக்தியோடு ஏகாதசி விரதமிருப்பவர்கள் எல்லா பாக்கியங்களையும் அடைவார்கள் என்பது திண்ணம்.
--------------------------------------------------------------------------------
26.12.2004 தத்தாத்ரேய ஜெயந்தி
முப்பெரும் தேவியராலும் வேகவைக்க முடியாத இரும்புக் கடலையை வேகவைத்துக் கொடுத்தவள் அத்ரி முனிவரின் பத்தினி அனுசூயை. அவளைச் சோதிக்க மும்மூர்த்திகளும் அதிதிகளாக வந்தனர். நிர்வாணமாக உணவிட்டாலே உண்ணுவோம்’ என்று நிபந்தனை விதித்தனர். தன் கற்பின் பலத்தால் மூவரையும் குழந்தைகளாக்கி உணவிட்டாள் அக்கற்புக்கரசி. முப்பெரும் தேவியரும் தங்கள் தவறு ணர்ந்து தங்கள் கணவன்மார்களை முன் போலாக்கும்படி வேண்டினர். தன் கணவரின் கமண்டல நீரைத் தெளித்து மூவரையும் முன் போலாக்கினாள் அசூயையே இல்லாத அனுசூயாதேவி.
மும்மூர்த்திகளும் தாங்கள் அவளை சோதித்த குற்றத்திற்காக வரமொன்றை கேட்கச் சொன்னார்கள். மூவரும் தன் குழந்தைகளாகப் பிறக்க வேண்டு மென்று வேண்டினாள் அனுசூயா. மூன்று முகம் கொண்டு அப்படிப் பிறந்தவரே தத்தாத்ரேயர். அத்ரி முனிவர் வம்சத்தில் பிறந்ததால் ஆத்ரேயரானார்.
தத்தாத்ரேயரை பூஜிப்பதால் மலட்டுத்தனம் நீங்கி மகப்பேறு உண்டாகும். பல யாகங்களை லோக nக்ஷமத்துக்காக நடத்திய தத்தாத்ரேயர் தன்னை பூஜித்த, கையும், காலுமின்றிப் பிறந்த கார்த்த வீர்யார்ஜுனனுக்கு விநாயக மந்திரத்தை உபதேசித்து ஆயிரம் கைகளும், இரண்டு கால்களும் கிடைக்கச் செய்தார்.
நான்கு வேதங்களும் நாய்களாக தத்தாத்ரேயரோடு காணப்படுவதை ஓவியங்களில் பார்க்கலாம். அவரது ஆறு கரங்களில் இரண்டு மேற்கரங்களில் சங்கு, சக்கரம். நடு இருகரங்களில் சூலமும், உடுக்கையும் ஆறாவது கரத்தில் பிரம்ம கமண்டலம். ஒன்று அபயக்கரம். அவர் பின்புறம் காமதேனு. எப்போது வேண்டு மானானலும் எடுத்துக் கொள்ளும்படி தொடைமேல் கதாயுதம். அபயம் கொடுப்பவர் நமக்காக பகை முடிக்க எந்த நேரமும் ஆயுதம் எடுப்பார். தத்தாத்ரேயரைக் கொண்டுதான் பரசுராமர் பெற்றோர்களின் ஈமச் சடங்குகளை முடித்தார். நோய்ப் படுக்கையில் உழலாமல் மோட்சம் தரும் இவரை வணங்குவதால் மும்மூர்த்தி களையும் பூஜித்த பலன் கிட்டும்.
--------------------------------------------------------------------------------
27.12.2004 ஆருத்ரா தரிசனம்
பட்டினத்தார் துறவு பூண்டபின் அவரது கணக்குப் பிள்ளையான சேந்தன் விறகு வெட்டிப் பிழைத்து வந்தார். அந்த நிலையிலும் அவரது விருந்தோம்பல் நிற்கவில்லை. அவரது ஈகைக்குணத்தைப் பெருமைப்படுத்த ஈசன் விருந்தாளியாய் வந்தார். இருந்த அரிசிமாவையும், வெல்லத்தையும் வைத்துக் களி சமைத்தாள் அவரது பார்யாள். இருக்கும் காய்கறிகளை ஒன்றாக்கி தாளகமும் (ஏழுதான் கூட்டு) தயாரித்துப் படைத்தனர். சாப்பிட்டு விட்டு வழிச்செலவுக்கும் கேட்டு வாங்கிக் கொண்டார் சபாபதி. மறு நாள் தில்லை ஆலயத்தில் இறைந்து கிடந்த களியைக் கண்டு அர்ச்சகர்கள் பதறினர். களி சிந்திய வழியைத் தொடர்ந்து சென்ற அவர்கள் சேந்தனார் வீட்டை அடைந்து நடந்ததை அறிந்து புளகித்தனர்.
அன்று முதல் திருவாதிரைத் திருநாளில் களி நிவேதிப்பது பழக்கமாயிற்று. ஆருத்ரா என்றால்
‘நனைதல்’ என்று பொருள். சிவபிரான் அருள் மழையில் மக்கள் நனையும் நாள் இது. பதஞ்சலி, வியாக்ரபாதர் என்கிற இருபக்தர்களுக்காக சிதம்பரத்தில் நடராஜர் ஆனந்தத்தாண்டவம் ஆடிய புனித தினம். கன்னிப்பெண்களுக்கு எண்ணெய் தேய்த்து நீராட்டி நுனி இலையில் களியும், தாளகமும் இட்டு சாப்பிடச் செய்த பிறகே பிறர் சாப்பிடுவது மரபு. நடராஜர் காலடியில் உள்ள முயலகன் போல் அகந்தை கொண்டு புத்தி தடுமாறி நடப்பவரை சிற்சபேசன் அடக்கி ஒடுக்கி களியாக்கி விடுவார் என்பதையும் அடியார்களுக்குக் களிப்பைத் தருவார் என்பதையும் குறிக்க களி தரப்படுகிறது. கறுப்பு சனியின் நிறம். கறுப்பு மை சனி உபாதையிலிருந்து நீங்க பிரசாதமாக வழங்கப்
படுகிறது.
--------------------------------------------------------------------------------
28.12.2004 பரசுராம ஜெயந்தி
ஜமதக்னி முனிவர்-ரேணுகை தம்பதிகளுக்கு திருமாலின்
ஆறாவது அவதாரமாகப் பிறந்தவர் பரசுராமர். கோடரியே இவரது
ஆயுதம். தந்தை சொற்படி தாயின் தலையைத் துண்டித்தவர். பின்னர் தந்தையிடம் வரம் பெற்று தாயை உயிர்ப்பித்தவர். மன்னன் கார்த்த வீர்யார்ஜுனன் ஜமதக்னியின் குடிலுக்கு இளைப்பாற வந்தான். சேனைகளோடு வந்த அவனது பசியை காமதேனுவின் உதவி கொண்டு தீர்த்தார் ஜமதக்னி. உணவளித்த காமதேனுவை பலாத்காரமாகக் கொண்டு போனான் மன்னன். பசுவை பரசுராமர் மீட்டு வந்தார். பழி வாங்குவதற்காக ஜமதக் கனியை இளவரசர்கள் கொன்றனர். ரேணுகா 21
முறை மார்பில் அறைந்து கொண்டு அழுதாள். அதனால் சினம் கொண்ட பரசுராமர் 21 தலை முறை க்ஷத்திரியர்களை வேரறுத்து பூபாரம் நீக்கினார். கோடரியைக் கடலில் வீசி நீரில் மூழ்கிய கேரள தேசத்தை மீட்டுக் கொடுத்த பெருமைக்குரியவர் பரசுராமர்.
--------------------------------------------------------------------------------
31.12.2004 ஸ்ரீ அஷோப்யர் ஜெயந்தி
ஸ்ரீமத்வரின் பிரியமான சீடர் இவர். பண்டித வித்யாரண்யர் அகந்தை யோடு இவரை வாதுக்கழைத்தார். முல்பாகலில் ஒருமலைப் பாறையில் கரித்துண்டால் ஸ்ரீ நரசிம்ஹரை வரைந்தார் அnக்ஷhப்பியர். அதன் பின் வாதம் செய்த அnக்ஷhப்பியருக்கு வெற்றி கிடைத்தது. அவர் வரைந்த நரசிம்ஹர் நாள்தோறும் வளர்ந்தார். தினமும் அவரை அnக்ஷhப்பியர் பூஜிக்க, கரிக்கோடுகள் மறைந்து பாறையிலிருந்து நரசிம்மர் வெளிப்பட்டார். அnக்ஷhப்பியர் தேர்ந்தெடுத்த
வாரிசே ஸ்ரீ ஜயதீர்த்தர்.