Tuesday, April 05, 2005

காமகோடி பீடம்

ஆர்.பி -- குரு ரத்னங்கள்


19. ஸ்ரீவித்யா கனேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - ஐஐ கி.பி. 386.398

ஸ்ரீவித்யா கனேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்-ஐஐ இவரும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவரே. இயற்பெயர் ஸ்ரீகண்டர். தந்தையார் நாமதேயம் உமேசசங்கரர்! சிறு வயதில் இவர் தேகத்தை வெண் மேக நோய் பற்றிக் கொண்டது. அதனால் இவரைத் தினமும் சூரிய நமஸ்காரம் செய்யச் சொன்னார் ஒரு பெரியவர். இவரும் தினமும் 1008 சூரிய நமஸ்காரம் செய்தார். நோய் பறந்து போயிற்று. ஆனாலும் இவர் சூரிய நமஸ் காரத்தைக் குறைக்கவில்லை. எனவே இவர்

சூரியதாசர் எனவும், மார்த்தாண்ட வித்யாகனர் என்றும் அழைக்கப்பட்டார். பதினெட்டாவது வயதில் இவர் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதி பதியாய் பொறுப்பேற்று பல திக்விஜய யாத்திரைகள் மேற் கொண்டார். பன்னிரண்டு ஆண்டுகள் பீடத்தை அலங் கரித்தார். கி.பி. 398-ஆம் ஆண்டு, ஹே விளம்பி வருஷம் பாத்ர பத மாதம் தேய்பிறை நவமியில் கோதாவரி நதி தீரத்தில் சித்தியுற்றார்.

--------------------------------------------------------------------------------
20. ஸ்ரீமூக சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் கி.பி. 398-437

ஸ்ரீமூக சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ‘நான்காம் சங்கரர்’ எனப்படுபவர். இவர் தந்தை யார் வித்யாவதி வானவியல் வல்லுனர். இவர் ஊமையாகப் பிறந்தவர். ஸ்ரீவித்யா கனேந்திரர் அருளால் இவருக்குப் பேச்சு வந்தது! உடனே, ‘மூகபஞ்ச சதீ’ என்னும் ஐநூறு அருட் பாடல்களைப் பொழிந்தார். மடத்துக்கே இவரைக் கொடுத்து விட்டனர் பெற்றோர்.

ஸ்ரீமூகசங்கரர் காலத்தில் பேரரசனாக இருந்தவன் ‘சஹாரி விக்ரமாதித்யன்’. அவனது ஆட்சிகாலம் கி.பி. 375-413 என்று வரலாற்று நூல்கள் கூறுகின்றன. அவனுக்குக் கப்பம் கட்டிய வேந்தர்கள் காஷ்மீரப் பகுதி களை ஆண்ட மாத்ரு குப்தனும், ப்ரவரசேனனுமாவர். இருவருக்குமே ஸ்ரீமூக சங்கரரிடம் பெரும்பக்தி உண்டு. சிறுவயதில் மாத்ருகுப்தன், சஹாரி விக்ரமாதித்யன் அரண்மனையில் சந்தனம் அரைக்கும் தொழிலை செய்து கொண்டி ருந்தான். விக்ரமாதித்யன் காஷ்மீரத்தை வென்று அங்கு முகாமிட்டிருந்த இரவு நேரம். நள்ளிரவு. எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்க மாமன்னன் திடீரென விழித்தான். விளக்குகளெல்லாம் அணைந்திருந்தன. வேந்தன் விளக்கேற்ற காவலரை அழைத்தான். மாத்ரு குப்தன் விளக்குடன் வந்தான்.

“நீ ஏன் தூங்கவில்லை?” என்று கேட்டான் அரசன். “புதிதாக வெற்றி பெற்ற அரசர் அலுப்பில் உறங்கலாம். இப்படி உறங்கிய பாண்டவர்களின் மைந்தர்களையும், மைத்துனனையும் எதிரிகளின் தளபதியான அச்வத்தாமா வெட்டியது இரவில் தான்” எனப்பொருள்படும் ஸமஸ்கிருதக் கவிதை யைச் சொல்லியபடியே விளக்கேற்றினான் சிறுவன்.

மன்னன் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை! சிறுவனுக்கு வெகுமதி தர விரும்பி அவனை காஷ்மீரத்தின் மன்னனாக்க ரசசியமாக அரசாணை பிறப்பித்தான். பிறகு மாத்ரு குப்தனிடம் தனது முத்திரை மோதிரத்தை அளித்து காஷ்மீர அரசாங்க தலைநகருக்கு அனுப்பினான். நகர எல்லையில் தனக்களிக்கப்பட்ட அரச மரியாதை களைக் கண்டு திக்குமுக்காடிப் போனான் மாத்ரு குப்தன். சஹாரி விக்ரமாதித்யன் எதிர்பார்த்ததும் இதைத்தானே! இப்படி எதிர்பாராத விதமாக மணிமுடி சூட்டப்பட்ட மாத்ரு குப்தனுக்கு நாளடைவில் கர்வம் மிகுந்தது. அதனால் எவரையும் மதிப்பதில்லை. ஸ்ரீமூக சங்கரருக்கு இச்செய்தி எட்டியது. அவனது குறையை உணர்த்தத் திருவுள்ளம் கொண்டார் அரசன் இருப்பிடம் சென்றார். ராமிலன் என்கிற குதிரை மாவுத்தனையும், மேது (மெந்தன்) என்கிற யானைப் பாகனையும் அழைத்து தனது அருள் நோக்கால் நனைத்தார். இருவரும் கவிபாடும் ஆற்றல் பெற்றனர். ராமிலன் ‘மணிப்ரபா’ என்ற நாடக நூலையும், மேது ‘ஹயக்ரீவ வதம்’ என்கிற நாடக நூலையும் படைத்தனர்.

கவிதைத்திறன் என்பது கர்வம் கொள்வதற்கல்ல என்று புரிந்து கொண்டான் மாத்ருகுப்தன். அவனது செருக்கு இருந்த இடம் தெரியாது மறைந்தது. மூக சங்கரரின் திருப்பாதங்களைப் பணிந்தான்.

“ஸ்வாமி! தங்கள் கட்டளைப்படி ஏதாவது செய்தால் தான் மனம் சமாதானமாகும்”. என்று வேண்டினான். “மன்னா! ஜீலம் நதி முதல் சிந்து நதிவரை அடர்ந்த காட்டுப்பகுதியாக இருக்கிறது. கொடிய மிருகங்கள் வாழ்கின்றன. முட்செடிகள் அடர்ந்துள்ளன. ஜனங்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். காட்டைத் திருத்திப் பாதை அமைத்துக் கொடு” என்றார் ஜகத்குரு. அதை சிரமேற்கொண்டு நிறைவேற்றினான் மாத்ரு குப்தன் அந்த நெடுஞ்சாலை ‘சுஷ்மா’ என அழைக்கப் படுகிறது. மாத்ரு குப்தன்’ ‘ஸேது பந்தம்’ என்ற காவியத்தைப் படைத்து ஆசார்யாளுக்கு அர்ப்பணித்தான். அரசாட்சியை ராஜ உரிமை பெற்ற பிரவர சேனனிடம் ஒப்படைத்து ஆசார்ய ஸ்வாமிகளிடம் உபதேசம் பெற்று ‘ஸார்வ பௌமன்’ என்னும் நாமத்தோடு “இளைய குரு” ஆனார். ப்ரவரசேனன் ஸார்வபௌமர் ஜீவிதகாலம் வரை காஷ்மீர நாட்டின் வரி வருமானம் முழுவதையும் ஸ்ரீகாமகோடி பீடத்துக்கு அனுப்பி வந்ததாய் ராஜதரங்கணீயம் கூறுகிறது. இப்படி செயற்கரிய செயல்களைச் செய்த மூகசங்கரர் கி.பி. 437 ஆம் ஆண்டு, தாது வருடம், ஆவணி மாதம் பௌர்ணமியன்று கோதாவரி தீரத்தில் சித்தியடைந்தார்.