Tuesday, April 05, 2005

காவிரிக்கரைக்கு வந்த கங்கை

கிராம தேவதைகள்


“வண்டு தேனருந்து முன் மலரைக் கொய்ய வேண்டும்; ஆகவே எனக்கு மரமேறப் புலிக்கால்களைத்தா” எனக் கேட்ட வியாக்ரபாதரைத் திருவாரூரில் ஆட்கொண்டாய்! பதஞ்சலியாய் அவதரித்த ஆதிசேஷனுக்குத் தில்லையில் முக்தி அளித்தாய்! என்மீது ஏன் உன் பார்வை படவில்லை?” என தினமும் உருகினார் பாஸ்கர ரிஷி.

காவிரியின் தென் கரையில் கௌரிதேவி தவமிருந்த கௌரிவனத்தில் ஆசிரமம் கட்டிக் கொண்டு வாழ்ந்தார் அவர். அந்தண வடிவில் வந்தார் சிவன். கூடவே கங்கையும் பருவக்குமாரியாய் அவருடன் வந்திருந்தாள்.

“முனிவரே! உறவினர் தொல்லை தாங்காததால் திருமணம் செய்யலாமென்றிருக்கிறேன். இந்தப் பெண் பெயர்கங்கா. எனக்கு வேண்டியவள். இவளோடு போய் பெண் கேட்டால் பிரச்சினை வரும். கல்யாணமான பின் இவளை வந்து அழைத்துச் சென்று விடுவேன். என் பேர் ஆபத்சகாயன். இவள் உமது யாக காரியங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வாள். சிறிது காலம் இவள் இந்த ஆசிரமத்திலேயே இருக்கட்டும். முடியாது என்று சொல்லிவிடக் கூடாது” என்றார் சிவபெருமான்.

“அதிக நாள் இவள் இங்கு இருந்தால் உலகம் தூஷிக்கும். சீக்கிரம் வந்து கூட்டிப் போக வேண்டும்” என்றார் பாஸ்கரர். “சரி, ஒன்று சொல்ல மறந்து விட்டேன்! இவளுக்குத் தண்ணீரில் கண்டம் என்று கணியான் சொல்லியிருக்கிறார். அதனால் ஆறு, குளத்துக்குத் தனியாக அனுப்ப வேண்டாம்” என்று எச்சரிக்கையாகச் சொல்லி விட்டுப் புறப்பட்டார் சிவன்.

காலம் சென்றது. முனிவருக்கு உரிய பணிவிடைகள் செய்து வந்தாள் கங்கை. ஒரு நாள் அரிசிலாற்றுக்கு நீராடச் சென்றார் ரிஷி. நீரில் இறங்கியதும் தீர்த்தப் பாத்திரத்தை கொண்டு வராமல் மறந்து விட்டது நினைவுக்கு வந்தது. “கங்கா, கமண்டலத்தை எடுத்து வா என்று உரத்துக்குரல் கொடுத்தார். கமண்டலத்தோடு அவள் விரைந்து வந்தாள். கரை புரண்டோடும்
அரிசிலாற்று நீரைப்பார்த்ததுமே அவளுக்கு தான்கங்கை என்ற ஞாபகம் வந்து விட்டது. ஆனந்தமாக ஆற்றில் இறங்கினாள்.

“கங்கா! நீரில் இறங்காதே!” முனிவர் பதறிப்போய் தடுத்த போதும் கேளாமல் நீரில் இறங்கி கங்கை கரைந்து விட்டாள். பாஸ்கரர் தவித்தார். அந்தணர் வந்து கேட்டால் என்ன பதில் சொல்வேன்” என்று.

அந்தணர் திரும்பி வந்தார். “மகரிஷே! பரிமளா என்ற மங்கையை மணம் முடித்தேன். கங்கையை அழைத்துச் செல்லவே வந்திருக்கிறேன். அனுப்பி வைக்க வேணும். கங்கை எங்கே? கங்கா!” எனக்கூப்பிட்டார். முனிவருக்குப் பேச்சே வரவில்லை! “என்ன மௌனமாய் இருக்கிறீர்? என்ன செய்தீர் கங்காவை. சொல்லாவிட்டால் மன்னரிடம் சென்று முறையிடுவேன். நியாயம் கிடைக்காவிடில் உயிரை விடுவேன். பிரம்மஹத்தி உங்களை சும்மாவிடாது” என்று பயமுறுத்தினார் பரமேஸ்வரன். அவருக்கு என்ன பதில் சொல்வதென்று புரியாமல், விம்மி விம்மி அழுதபடி தான் பூஜை செய்த சிவலிங்கத்தின் பாதத்தில் விழுந்து “இந்த இக் கட்டிலிருந்து காப்பாற்று”
எனக் கதறினார் பாஸ்கரர்.

“அன்ப! வந்தது யாமே! அஞ்சற்க! எழுந்திரு. நீ எந்தக் குற்றமும் செய்யவில்லை! உனது தவம் கண்டு கங்கையைச் சிறிது காலம் உன் பணிவிடைக்கு அனுப்பி வைத்தேன். பதஞ்சலி, வியாக்ரபாதனுக்கு நீ எந்த விதத்திலும் குறைந்தவனல்ல என உலகுக்கு உணர்த்தினோம்! அவள் என் சடைமுடியில் திகழ்வதைப் பார்! எனக்குத் திருமணம் நடக்க உதவினாயல்லாவா! என் கல்யாண கோலத்தையும் காண்பாய்” என அருளினார் மகேசன். லிங்கத்தின் முன் கிடந்த முனிவர் எழுந்தார். ஆபத்சகாயேஸ்வரரோடு பரிமள நாயகியைத் தரிசித்து மகிழ்ந்தார். “அம்மையப்பா இங்கேயே குடி இருங்கள். இந்த நதியில் கங்கை கரைந்ததால் இந்த ஆறு ‘ருத்ரகங்கை’ எனப் பெயர் பெற வேண்டும். இங்கு வந்து உங்களை தரிசிப்போருக்கு கங்கையில் நீராடிய புண்ணியம் கிட்ட வேண்டும்” என வேண்டினார் ரிஷி.

“அப்படியே ஆகட்டும்” என்றார் ஈசன். அதன்படியே அத்தலத்தில் எழுந்தது மாடக் கோயில். மூலவர் ஆபத்சகாயருக்குப் பின்புறம் கௌரி-சங்கரர் திருமணக் கோலத்தைக் காணலாம். பிரம்மா, விஷ்ணு, பரத்வாஜர், விஸ்வாமித்திரர், சரஸ்வதி, யமுனை ஆகியோர் பூஜித்த nக்ஷத்திரம் இது.

மயிலாடுதுறை-திருவாரூர் நெடுஞ்சாலையில் பூந்தோட்டம் என்ற சிற்றூருக்குக்கருகே முடி கொண்டான் என்ற ஊருக்கு மிக அருகில் உள்ளது ருத்ரகங்கை என்ற இப்பதி. ஸ்வாமிக்குப் பரிமேளஸ்வரர் பாஸ்கரேஸ்வரர் என்ற நாமதேயங்களும் உண்டு. ருத்ரனும், கங்கையும் பாதம் பதித்து நடந்து வந்த இப்புண்ணியத் தலத்தில் ஈசனும் ஈச்வரியும் பக்தர்களின் பிரார்த்தனைகளை உடனுக்குடன் நிறைவேற்றுகிறார்கள்.