Tuesday, April 05, 2005

ஸ்ரீபரமாச்சார்யாள் பாதையிலே - Feb

ஆர்.பி.


தான் வயித்துலே சுமந்த குழந்தை பிறந்து பெரியவாளாகி தன்னையே சேவிக்கிறதில்லையா? அந்த மாதிரி செல்வமாயும், வித்தையாயும் இருக்கிறவ லோக மாதாதான்.

திரிசதியிலே 64 ஆவது ஸ்தோத்திரம் லாகினி. இந்த லாகினீ என்கிற பேர் லலிதா ஸஹஸ்ரநாமத்திலேயும் 503 ஆவது நாமாவளியா வரும். அடுத்த வாக்கியம் ஸ்த்ரீகளெல்லாம் அம்பாள் சொரூபம் என்கிறது. அதனாலேதான் ஸ்த்ரீகளை அவமதிக்கிறவாளோட செல்வம் கரைஞ்சுடறது.

ஒரு பெண் ரொம்ப அவலட்சணமா இருந்தா. கல்யாணமும் ஆகலே. வயது நாற்பதைத் தாண்டிடுத்து. பல் எடுப்பா இருந்தது. கொலுவைப் பார்க்க ஆசையா வந்தா. வீட்டு எஜமானர்” நீ சுமங்கலியும் இல்லே! லட்சணமும் இல்லே. அப்படி ஓரமா உட்கார்னு” ஒரு மூலையைக் காட்டினார். கொஞ்ச நேரத்திலே அவளைக் காணலே.

அன்னிக்கு ராத்திரி தூஷிச்சவரோட பேத்திக்கு ‘இசிவு’ வந்துடுத்து. “துர்க்கே காப்பாத்து” ன்னு புலம்பினார். டாக்டர் கிட்டே அழைச்சிண்டு போய் குழந்தைக்கு குணமாயிடுத்து.

அன்னிக்கு ராத்திரி பெரியவர் கனவுலே காளி வந்து “நான்தான் அழகா இல்லியே! என்னை ஏன் கூப்பிட்டே! என் பல்லு கூட துருத்திண்டுதான் இருக்கும். நான் சிரிச்சா பயமா இருக்கும். மகிஷாசுரமர்த்தனி வந்தா மூலையிலேதான் உட்காரச் சொல்லுவியா?”ன்னு கேட்டா.

பெரியவருக்கு தொப்பலா வியர்த்துடுத்து. அதுக்கப்புறம் கொலுவுக்கு கொலு அந்தம்மாவைத் தேடறார் அவர். தெரிஞ்சுண்டதுக்கப்புறம் தென்படுவாளா? ஸ்த்ரீகள் வடிவிலே பிரத்யட்சமாய் காணப்படுகிறவள் அவள். மலர்ந்த மாதுளம் பூவும், பாதிரிப்பூவும் எப்படி இருக்குமோஅப்படி இருக்காங்கறது அடுத்த வரி.

அர்த்தம் புரிஞ்சாதான் ரஸிக்க முடியும்! நெத்திச்சுட்டி பிரகாசிக்கிறது என்கிறது அடுத்த நாமாவளி. கிருஷ்ணர் நெத்திச் சுட்டியோட அலைஞ்சார். கல்யாணப் பொண்ணுக்கு நெத்திச்சுட்டி வைச்சு அலங்காரம் பண்றா. நெற்றிக் கண்ணையுடைய ருத்திரனால் அவள் பூஜிக்கப்படறா என்கறது அடுத்த ஸ்லோகம். சௌந்தர்ய லஹரியிலே முதல் 41 ஸ்லோகமும் சிவ பெருமான் பண்ணினதுதான். ஆதி சங்கரபகவத் பாதாள் அதை எடுத்துக்கொண்டு வரும் போது நந்தி பார்த்து பிடுங்கறார். ஆசார்யாள் கைக்கு வந்தது 41. மீதி-59 ம் அவர் வாக்கிலேயிருந்து வந்தது. அதுதான் சௌந்தர்யலஹரி. கைலாசத்துலேயிருந்து வந்த 41-ம் ஆனந்த லஹரி.

உத்தர கௌலம் என்கிற மதத்தில் தனியா சிவ பூஜை செய்யறதில்லே! சக்தியிலேயே சிவன் ஐக்கியம். எல்லா லக்ஷணமும் இருந்தா மட்டும் போறாது அது பிரகாசிக்கணுமில்லியா! பல்வரிசையா இருக்குங்கறதைச் சிரிச்சாதான் தெரிஞ்சுக்கலாம். கால் கோணலா இல்லேங்கறதை நடையாலே தெரிஞ்சுக்கலாம். காது அழகா இருந்தாப் போறாது. தீர்க்கமா கேட்கவும் வேணும். மூக்குக்கு அழகு வாசனை பிரிச்சுச் சொல்றது. தலைக்கு அழகு வலிக்காம இருக்கறது.

அந்த மாதிரி பிரகாசிக்கிற திவ்வியமான அங்கம் தேவிக்கு என்கிறது. 69-ஆவது நாமாவளி. ஆகாசத்துக்கு சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் அழகு. காத்துக்கு பூக்களோட வாசனை அழகு. ஓடினா நதி; தேங்கினா குட்டை; கொட்டினா அருவி; ஆர்ப்பரிச்சா சமுத்திரம். எல்லாமே ஜலம்தான்! ஆனாலும் தேங்கினதை யாரும் ரஸிக்கிறதில்லே! லக்ஷம் கோடி அண்டங்களுக்கு நாயகியான அவ சில சமயம் ஓடறா! சிலசமயம் அருவியா கொட்டறா! ஆனா யார் கிட்டேயும் தேங்கி நிக்கறதில்லே! அவளுக்கு நிக்க அவகாசமுமில்லே! பூமிக்குத் தாவரங்கள் அழகு! மாடமாளிகைகள் அழகு! தரிசாக் கிடக்கிற நிலத்தை யாரும் திரும்பிக் கூடப் பார்க்கிறதில்லே!

மனசையும் தரிசாப் போடப்படாது. அசுத்த எண்ணம் என்கிற முள்ளுச் செடிகளை வளரவிடப்பாடது. மத்தவாகிட்டே காட்டற வாத்ஸல்யம்தான் பழம், பூ எல்லாம்.

நீங்க உங்க குழந்தைகள் நேர்மையா இருக்கணும். நல்லபேர் எடுக்கணும் கைநிறைய சம்பாதிக்கணும். தன்னை அக்கறையா காப்பத்தணுங்கறதை லட்சியமா வைச்சிண்டிருக்கிற மாதிரி அம்பாளும், நீங்க நீதி நியாயத் தோட நடந்துக்கணும்; சோம்பேறியாயில்லாம உழைச்சு முன்னுக்கு வரணும், தன்னை ஆசையோட வழிபடணுமின்னு எதிர் பார்க்கிறா. அப்படிச் செய்கிறவாளை அவளுக்குப் பிடிக்கறது. மேலே மேலே அனுக்கிரகம் பண்றா! புடவைத் தலைப்பைப் பிடிச்சுண்டு பின்னாலேயே அலைகிற குழந்தையை விட சமர்த்தா பள்ளிக்கூடம் போய் நன்னாப் படிக்கிற குழந்தை கிட்டே தாயாருக்குப் பிரியம் அதிகமாயிருக்கும். தேவியும் அப்படித்தான். மூணு காலமும் பூஜை பண்ணிட்டு கோழையா எந்த முயற்சியும் செய்யாதவனை விட பாடுபட்டு உழைச்சு மத்தவாளுக்கு உபகாரமாயிருக்கறவாளுக்கு மூணாவது கையா, துணைக்கு வருவா.

பவளம் போல் உதடுங்கறோம். அப்போ அம்பாள் உதடு கடினமானதா? செம்பருத்திப்பூப் போலன்னா செம்பருத்தி மறுநாள் அழுகிடுமே! மூங்கில் போல் தோளுன்னா மூங்கில் உடையுமே ! யானைத் துதிக்கை போல் தொடைன்னா, சரியா வரலியே! அதிலே உள்ள சொர சொரப்பு இதிலே இல்லே! அது சுப்ரமண்யரும், விநாயகரும் உட்காருகிற இடம்! கோபம் வந்தா தும்பிக்கையாலே யானை தூக்கி எறிஞ்சுடறதே! யானைக்கு உணவை வாய்க்கு ஊட்டுகிற கையும் அதுதான்! அதனாலே இப்படித்தான்னு உதாரணம் சொல்லி அவளை அடையாளம் காட்ட முடியாது.