Tuesday, April 26, 2005

ஸ்ரீபரமாச்சார்யாள் பாதையிலே

ஆர்.பி

சென்ற இதழ் தொடர்ச்சி. . .
மான் போல விழி என்னு அடுத்த வரியிலே சொல்லப் பட்டிருக்கு. ஸ்த்ரீகள் பயந்தவா. மான் எப்பவும் நரி,புலி, சிங்கம் இது போல மிருகங்கள் வரதான்னு மருண்டு போய் பார்த்துண்டிருக்கும். சம்காரம் பார்வையிலே தெரிஞ்சா சிவன் நெருக்கமாட்டார். இவள் சிவப்பிரியை ஆனதினால் மருண்டு பார்க்கறா!

சிவனோட ஆராதனைதான் சௌந்தர்யலஹரியின் முதல் 41 ஸ்லோகமும். நந்தி, மீதியை சங்கர பகவத் பாதாள் கிட்டேயிருந்து பிடுங்கிண்டுட்டார். அதுக்கு ஆனந்த லஹரின்னு பேர்.

பூர்வ ஜென்மங்களிலே புண்ணியம் பண்ணியிருந்தாதான் அம்பாளை வழிபட முடியும்!

பிரம்மா அவளோட பாததூளியை சேமிச்சு வைச்சுண்டிருக்கிறதாலே தான் இந்த உலகத்தை விதவிதமான கற்பனைகளோட சிருஷ்டிக்க முடியறது. ஹரியும், இந்திரனும்கூட அப்படித்தான்! மது-கைடபர்னு ரெண்டு அசுரர்கள். அவாளோட எத்தனையோ வருஷம் சண்டை போட்டும் மகாவிஷ்ணுவால ஜெயிக்க முடியலே! அம்பிகையைப் பிரார்த்திச்சார். ஏன்னா அந்த ரெண்டு அசுராளும் சக்தி கிட்டே வரம் வாங்கினவா. எப்படி? அவா ஆசைப்பட்டாதான் மரணம் சம்பவிக்கும். அதுவும் விருப்பப்பட்ட நேரத்திலே, ஆசைப்படற விதத்திலே! தேவி பிரத்யட்சமாகி, கவலைப் படாதே! சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக்கோன்னா.

ஜகன் மோகினியா வந்தா! சும்ப நிசும்பரும், மஹிஷாசுரனும் ஆசைப்பட்ட மாதிரி மது கைடபாளும் ஆசைப்பட்டா. அம்பாள் பேசினதுமே சரஸ்வதி தன்னோட ‘கச்சபி’ என்கிற வாத்தியத்தைமூடி வைச்சதா ஆதி சங்கர பகவத்பாதாள் சொல்லியிருக்கா. அப்படியிருக்கிறப்போ பாடினா கேட்கணுமா? மதுகைடபாளுக்கு யுத்தம் செய்கிறதிலே சுவாரஸ்யம் போயிடுத்து.

அந்த சமயத்திலே மஹாவிஷ்ணு “ரொம்பத் திறமையா யுத்தம் பண்ணினேள். என்ன வரம் வேணுமோ, கேளுங்கோ”ன்னார். மமதைதான் யாரையும் அழிக்கிற ஆயுதம். மதுகைடபாளுக்கும் அது வந்தது.

“தோத்துப்போன நீ எங்களுக்கு வரம் கொடுக்கற தாவது! நாங்க தரோம். என்ன வேணுமோ, வாங் கிக்கோ”ன்னா. இவ்வளவு போறாதா! “உங்களைக் கொல்ல” வரம் தாங்கோ”ன்னார் விஷ்ணு.

‘அடடா, வாக்குக் கொடுத்துட்டோமே! மாற முடியாதே! பழி வாங்கிட்டாரே’ன்னு யோசிச்சா. அதிலேயும் ஒரு முடிச்சைப் போட்டா. அது ஊழிக்காலம். எங்கே பார்த்தாலும் ஜலமயம்.

“ஜலமில்லாத விசாலமான இடத்திலே கொன்னுக்கோ’ன்னா. ஜகந்நாதன் விஸ்வரூபமெடுத்தார். தொடையே பூமி மாதிரி தெரிஞ்சது. ஆனாலும் அவாளும் விடலை. ஆயிரம் யோஜனை நீளமா உடம்பை ஆக்கிண்டா. பெருமாளும் அதைப்போல இரண்டு பங்கா பெருகினார். அப்புறம் தொடையிலே தலையை வைச்சா. சுதர்சனம் அவா தலையை அறுத்தெறிஞ்சது. நாராயணன் தொடையிலே உயிரைவிட எத்தனை புண்ணியம் பண்ணியிருக்கணும்!

நூறு வருஷம் அசுராளோடு யுத்தம் பண்ணினோம். அசுராளையெல்லாம் தேவியோட அருளாலே பாதாளத்துக்கு விரட்டிட்டோங்கறதை எல்லாம் இந்திரன் மறந்துட்டான். அகங்காரம் வந்துடுத்து. அந்த கர்வத்தைப் போக்க யக்ஷரூபமா தேவி வந்தா. இந்திரன் அக்னியை அனுப்பி “அவன் கதையை முடிச்சுட்டுவா”ன்னான்.

“நீயார்”னு அக்னி கேட்டான். “நீ யாருன்னு முதல்லே சொல்லு”ன்னான் யக்ஷன். “நான் எல்லாத்தையும் பொசுக்கிடுவேன். என் பேரு ஜாதவேதன்”னான் அக்னி.

“சரி. முதல்லே இந்தத் துரும்பை எரிச்சுடு”ன்னா தேவி. அக்னி எத்தனையோ பிரயாசைப்பட்டும் அந்தத் துரும்பை எரிக்க முடியலே!

அக்னி இந்திரனிடம் போய் “நமக்கெதற்கு வேண்டாத வேலை! ஒரு துரும்பைப் போட்டு எரிங்கறான். அந்தத் துரும்பு அசையக்கூட மாட்டேங்கறது. நாம நம்ம வழியைப் பார்ப்போம்”ன்னான்.

“அமராவதியையே கட்டி ஆள்கிற நம்மாலே முடியாத காரியமா? வாயு! நீ போய் அந்தத் துரும்பைக் கடல்லே வீசிட்டு அவன் யாருன்னு தெரிஞ்சுண்டு வா” ன்னான் இந்திரன்.

வாயு போய் அந்தத் துரும்பை நகர்த்த முடியாம திரும்பி வந்தான். அடுத்து இந்திரனே போனான். தேவி மறைந்து விட்டாள். இந்திரன் இதை அவமானமா நெனைச்சான்.” யக்ஷ ரூபமே! ஏன் காணாமப் போயிட்டே! நான் உன்கிட்டே சரணடைஞ்சுட்டேன்”னு கூப்பிட்டான். “லட்சம் வருஷம் ஜபம் பண்ணினாதான் என்னைப் பார்க்க முடியும்”னு அசரீரி வந்தது.

அப்படியே தியானம் பண்ணினான் இந்திரன் . சித்திரை மாசம் நவமியன்னிக்கு மத்யானம் அம்பாள் பிரத்யட்சமானாள். ‘ஹ்ரீம்’னு சொல்லி தேவியை தரிசித்த இந்திரன், அவளை பூஜித்த கதை இதுதான்.

ஹய-ன்னா குதிரை. குதிரை முகம் கொண்டவள் அச்வாரூடை. தேவியின் ‘பாச’த்திலிருந்து தோன்றியவள் இவள். கோடிக்கணக்கான குதிரைப் படையை நடத்திச் சென்றவள்.

சிவன் கோவிலுக்கென்று சில வாகனங்கள் உண்டு. பெருமாள் கோவிலுக்கென்று சில வாகனங்கள் உண்டு. இரண்டு கோயிலுக்கும் பொதுவா உள்ள வாகனம் குதிரை வாகனம் தான்! குதிரை முகம் கொண்ட ஹயக்கிரீவர் அகஸ்தியருக்கு தேவி மஹாத்மியத்தைச் சொல்லியிருக்கார்.

அஸ்வினி தேவர்கள் குதிரை முகம் கொண்டவா தான்! சூரியனோட வெப்பம் தாங்காம உஷா குதிரையா மாறி காட்டிலே தவம் பண்ணிண்டிருந்தா. காளிந்தி நதியும், தமஸா நதியும் சங்கமமாகிற இடம் அது. அங்கே மகாலக்ஷ்மியும் பெண்குதிரையா வந்து சேர்ந்தா.

லக்ஷ்மி குதிரையானது தனிக் கதை. பாற்கடலைக் கடையறப்போ உச்சைச்சிரவஸ்னு ஒரு வெள்ளைக் குதிரை வந்தது. ஒரு துளி கறுப்பு கிடையாது. சூரியனோட பிள்ளை ரேவந்தன் அந்தக் குதிரை மேலே ஏறிண்டு வைகுண்டத் துக்குப் போனான். மகாலக்ஷ்மி அந்தக் குதிரையை பிறந்த வீட்டுப் பாசத்தோட பார்த்துண்டிருந்தா. குதிரை மேலே வர்றது யார்னு கேட்டார் நாராயணன். லக்ஷ்மி கவனிக்கலே. பெருமாளுக்குப் பார்யா அலட்சியம் பண்றதாத் தோணிடுத்து. ‘குதிரையைப் பார்த்து ரமிச்சிண்டிருந்ததாலே குதிரையாப்போ’ ன்னு சாபம் கொடுத்துட்டார்.

சிவ பெருமானை நோக்கித் தபசு பண்ணி சாபநிவர்த்தி வாங்கிண்டா மகாலக்ஷ்மி. நாராயணர் ஆண்குதிரையா வந்து மகாலக்ஷ்மியோட கூடி ஒரு பிள்ளையைப் பெற்றார். அதை, குழந்தைக்காகத் தவம் பண்ணின யயாதியோட பிள்ளை துர்வசுவுக்குக் கொடுத்தார். அவன்தான் ஏகவீரன்.

அப்புறம் சூரியனும் ஆண்குதிரையா வந்து உஷாவோட சேர்ந்து அஸ்வினி தேவர்களைப் பெற்றான். அதனாலேதான் அவாளுக்கு குதிரை முகம். நாராயணர் குதிரையா மாறினதாலே பெருமாள் கோவிலிலே குதிரை வாகனம்!

மாணிக்கவாசகர் குதிரை வாங்கக் கொண்டு போன பணத்திலே கோயிலைச் சீர்படுத்தினார். அவரை அரிமர்த்தன பாண்டியன் சிறையிலே தள்ளி சித்ரவதை பண்ணினான். பூத கணங்களையெல்லாம் குதிரைப் பாகர்களாக்கி காட்டிலுள்ள நரிகளையெல்லாம் பரிகளாக்கினார் பரமசிவம். நந்தியை தான் ஏறக் குதிரையாக்கிண்டார். அதுதான் சிவன் கோயில்லே குதிரை வாகனம்.

அப்பேர்ப்பட்ட பெருமையுடைய அஸ்வாரூடா அம்பாளுக்குப் பாத பூஜை பண்ணுகிறாள் என்கிறது த்ரிசதியின் 107ஆவது வரி.

அஸ்வமேத யாகத்துலே அம்பாள் ஆராதனை தனியா உண்டு. 100 அஸ்வ மேதம் யார் பண்ணினாலும் சரி, இந்திரன் விக்னம் பண்ணப் போயிடுவான். மலையத்துவஜன் 99 அஸ்வமேத யாகம் பண்ணினதும் போய் நின்னான். எதுக்கு யாகம் பண்றேன்னு கேட்டான். ‘சந்தான பாக்கியம் இல்லியே’ன்னான் மலையத்வஜன். அதுக்குப் புத்திர காமேஷ்டி யாகம்னா பண்ணணும்’னான் இந்திரன். ஆரம்பிச்சவுடனே சொல்லுவோம்னு அவனுக்குத் தோணினதேயில்லை! நூறையும் முடிச்சு இந்திரப் பதவியை அடைஞ்சவன் நகுஷன். அடைஞ்ச பதவியைத் தக்க வைச்சுக்க முடியலே! இந்திராணி மேலே கொண்ட மோகம் தலை குப்புற விழ வைச்சது.

ராமர் அனுப்பின அஸ்வமேதக் குதிரையை லவ-குசர்கள் பிடிச்சு வைச்சா. அதனாலே தான் ராமருக்குத் தன் பிள்ளைகளை அடையாளம் காண முடிஞ்சது.

சுத்யும்னன்னு ஒரு ராஜா. ரொம்ப நல்லவன். குதிரை மேலே ஏறி வேட்டையாடினான். ஒரு நந்தவனத்துக்குள்ளே நுழைஞ்சதும் பெண்ணாயிட்டான். அவனோட குதிரையும் பெண்ணாயிடுத்து. அவமானப்பட்டு ராஜ்ஜியத்துக்குப் போகாம காட்டிலேயே இருந்து, இளைச்சுப்போன அவனை எல்லாரும் இளைன்னே கூப்பிட்டா.

ஏன் அப்படியாச்சு? அந்த உத்தியானவனம் உமாதேவிக்கு சொந்தம். அங்கே யார் நுழைஞ்சாலும் பெண்ணாயிடுவாங்கறது சிவபெருமான் கொடுத்த சாபம். சந்திரனோட பிள்ளையான புதன் இளையைப் பார்த்து ஆசைப்பட்டான். அவாளோட புத்திரன்தான் புரூரவன். ராஜா பழையபடி ஆணா மாறணுமின்னு குருவான வசிஷ்டர் தபஸ் பண்ணினார்.

“நான் கொடுத்த சாபத்தை நானே மாத்த முடியாது. ஒரு மாசம் பெண்; மறுமாசம் ஆணாயிருக்கட்டும்” என்றார் பரமேஸ்வரன். ஆணானதும் ராஜ்ஜியத்துக்கு வந்தார் சுத்யும்னன். வசிஷ்டர்கிட்டேயிருந்து நிஜத்தைத் தெரிஞ்சுண்டார். அஸ்வமேதயாகம் பண்ணி அம்பாளை ஆராதிச்சார். புரூரவன் பெரியவனானதும் அவன் கிட்டே ராஜ்ஜியத்தை ஒப்படைச்சுட்டு நாரதர்கிட்டே நவாக்ஷர மந்திர உபதேசம் வாங்கிண்டு ஜெபம் பண்ணி சாயுஜ்ய பதவியை அடைஞ்சார்.

அம்பாளுக்குக் குதிரை வாகனம் அஸ்வாரூடையை கௌரவப்படுத்தறதுக்காக ஏற்பட்டது. சிம்ம வாகினியான துர்க்கையும் அவதான்!

அயோத்தியிலே துருவசிந்துன்னு ஒரு ராஜா. அவரோட குமாரன் சுதர்சனன். ராஜாவுக்கு லீலாவதின்னு இன்னொரு பார்யா. அவளோட பிள்ளை சத்துருஜித். ரெண்டு பேரும் காசி தேசத்து ராஜகுமாரியைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறா. ஆனா ராஜகுமாரி மாலையை சுதர்சனன் கழுத்துலே போட்டுட்டா. துருவசிந்து வேட்டைக்குப் போன இடத்துலே காலமாயிட்டான். சத்துருஜித் பாட்டன் தயவிலே ஆட்சிக்கு வந்துட்டான். அனாதரவா நின்ன சுதர்சனனுக்கு “க்லீம்” என்கிற காமபீஜம்தான் சொத்து. பரத்வாஜரோட ஆசிரமத்துலே வளர்ந்தவன். எல்லையைக் கடக்க முடியாதபடி நாலாபக்கமும் எதிரிகள் சூழ்ந்திண்டிருக்கா.

(தொடரும்)