Tuesday, April 26, 2005

வடக்கே ஓர் அழகர் கோயில்

கிராம தேவதைகள் :

“ஏன் கர்ப்பக்கிரகத்துகிட்டே போகக்கூடாதுங்கறே? கிட்டப்போனா சாமியை நல்லா பார்க்கலாமில்லே?”

“இல்லே! பொம்பிளைங்க ஐம்பது மீட்டர் தொலைவிலிருந்து தான் முருகனை தரிசனம் பண்ணலாம். இந்த சாமி சிற்பி செஞ்சதில்லே! சுயம்புவா வந்தது! ஒரு ரிஷி இவரை பூஜை பண்ணிக்கிட்டிருந்தார். அதோ இருக்கே, அந்தக் கிணத்து
லேயிருந்து அபிஷேகத்துக்கு இரண்டு குடம் நீர் எடுத்துட்டுப் போவார். அக்ரகாரத்துப் பொம்பிளைங்களும் அந்தக் கிணத்துலே தண்ணி எடுப்பாங்க. ஒரு நாள் இரண்டு பொண்ணுங்க தண்ணி எடுக்க வந்தாங்க. கயிறு அறுந்து வாளி உள்ளே விழுந்துடுச்சு. எண்ண பண்றது? சுத்துமுத்தும் பார்த்தாங்க. முனிவர்கிட்டே செப்புக்குடம் இருந்தது. அதை ஓசைப்படாம எடுத்துட்டு வந்து கயித்தைக் கட்டி கிணத்துக்குள்ளே விட்டாங்க”

“அப்புறம்?”


“குடத்தை எடுக்கறத்துக்கு முந்தி ரிஷிகிட்டே கேட்டி ருக்கணும்! இல்லியா? அப்படிச் செய்யாம குடத்தை அவங்க எடுத்துக்கிட்டுப் போறதைப் பார்த்த ரிஷிக்குக் கோபம் வந்துடுச்சு. ‘துரவுக்குள்ளேயே கிடங்க’ ன்னு சபிச்சுட்டாரு. கொஞ்சம் பின்னாலே வந்துக்கிட்டிருந்த அவங்களோடசினேகிதக்காரப் பொண்ணுங்க காதிலே ரிஷி சபிச்சது விழுந்திருக்கு. ஓடி வந்து பார்த்தாங்க. கிணத்துக்குள்ளே ஒருத்தி வெண்தாமரைப் பூவாகவும், இன்னொருத்தி செந் தாமரைப் பூவாகவும் பூத்துக் கிடந்திருக்காங்க. அன்னியி லிருந்து எந்தப் பொண்ணும் அந்த கிணத்துகிட்டேயும், முருகன் கிட்டேயும் போறதில்லே!”

“அடப்பாவமே! சரி, வா... எட்டியிருந்தே பார்ப்போம். ஆமாம் பொங்க வைக்க எங்க பாத்திரம் கொடுப்பாங்க?” என்று விசாரித்தாள் கதை கேட்டவள்.

“அதோ இருக்கு பார் குளம். அங்கே பாத்திரம் இருக்கும். எடுத்து பொங்கல் வைச்சுப் படைச்சுட்டு, சுத்தம் பண்ணி அங்கேயே வைச்சுட்டுப் போயிரணும். இப்பப்போ நெசவாளிங் களோட பசங்க படிச்சுட்டு வெளியூர்லே, வெளி நாட்டிலே வேலை தேடிப் போயிடறாங்களா? அவங்க சாமி கும்பிட வரும் போது பாத்திரங்களைக் கொண்டுட்டு வர்ராங்க! அதைப் பார்த்து நெறைய பேர் பாத்திரம் கொண்டார ஆரம்பிச்சுட்
டாங்க. தை பொறந்தாலே திருவிழாதான்! வா, பொங்க வைப்போம்.” என்றபடி நகர்ந் தாள் கதை சொன்னவள்.


“சாமி! இந்த வருஷம் அமோ கமா லாபம் வரணும்” என்று வேண்டி யபடி பலர் படையலிட் டனர். பயபக்தியோடு குட்டிக் கொண்டஒருத்தி வாசல்ல பெரிய யானைச் சிலை நிக்குதே அதுக்
கும் ஏதாவது கதை இருக்கா?” என்று ஆவலாகக் கேட்டாள்.

“இல்லாம இருக்குமா? அந்த யானை அறுபதடி உயரமாக்கும்! இந்த ஊரிலே ஒரு களவாணிப்பய திருடிக்கிட்டு ஓடினானாம். தும்பிக்கையாலே அவனைப் பிடிச்சு இழுத்து காலாலே தொகைச்சுடுச்சாம் இந்த யானை.”


“ஆமாமா. அந்த யானைச் சிலை காலடியிலேயே கள்ளனைப் பார்த்தமே!” என ஆமோதித்தாள் இன்னொருத்தி. “இரண்டு குதிரைச் சிலைகளை பார்த்தியே! அது ஒவ் வொண்ணும் 45 அடி. இந்த சாமியை வேண் டிக் கிட்டா திருட் டுப் போன சாமான்கிடைச் சுடும். புள்ளை பொறக் கும், கேஸ் கோர்ட் டுன்னு அலையற வங்க வழக்கு சாத
கமா முடியணு’ மின்னு நேர்ந்துக்குவாங்க. வேலாலே குத்திடுவாரில்லே இந்த முருகன். கருப்பண்ண
சாமி தானே உங்க குலதெய்வம்! எங்க சாமி வீரபத்திரர்.
இவங்க ரெண்டு பேரையும் கும்பிட்டுக்கலாம்.” என்று வணங்கினாள் முதலில் கதை சொன்னவள்.

“இவரு மதுரை வீரன் போல இருக்கு” என்று ஒருத்தி இழுக்க, “பொம்மியைத் தூக்கிட்டுப் போன மதுரை வீரனே தான் இவரு. இங்க பார்த்தியா! முருகனுக்கு எதிர்த் தாப்போல வடபத்திரகாளி! கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலுக்கு வடக்குப் பக்கத்தை இந்த அம்மா காவல் காக்கறாங்க” என்றபடி வெளியே வந்தாள் அவள் தோழி. “ஆமா, இந்த ஊருக்கு அழகர் கோவிலுன்னு ஏன் பேர் வந்ததாம்?”

“முருகன்னா என்ன அர்த்தம்? அழகன்தானே! அதனால அழகர் கோவில்னு அழைச்சாங்க. சாமிக்குப் பேரே ‘துரவு மேல் அழகர்! கிணத்துப் பக்கத்துலே சுயம்புவா வந்ததாலே இந்தப் பேர். வெரசா நட, பிரசாதம் தீர்ந்து போயிடும்” என்று விரைவுபடுத்தினாள் தோழி.

இந்த அழகர் கோவில், கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வடக்கே ஐந்து கி.மீ. தொலைவில் உள்ளது. (ஜெயங் கொண்டத்திலிருந்து கிழக்கே எட்டு கிலோமீட்டர்)