R Ponnammal:
மாமனார் சுபாகு “அப்புறம் ஜெபிக்கலாம். கொஞ்சம் எனக்கு உதவியா சண்டையும் போடு”ங்கறார். அம்பாள் சிம்ம வாகனத்தில் மந்தாரமாலை போட்டுண்டு, சிவப்புப் புடவை கட்டிண்டு சண்டை போட வந்துட்டா. அப்போ சிங்கம் கர்ஜனை பண்ணித்து. யானைப் படையெல்லாம் தாறுமாறா ஓடினதிலே எதிரிப்படைக்கு ரொம்ப சேதமா யிட்டது. சிங்கம் விட்ட பெருமூச்சே சூறைக் காற்றா பகைவர்களை அலைக்கழித்தது.
காசி ராஜா சுபாகு, துர்க்கா தேவி காசியிலேயே வாசம் பண்ணணும்னு கேட்டுண்டான். தேய்பிறை அஷ்டமியும், சதுர்த்தசியும் துர்க்கைக்குப் பிரியமான நாள். சுதர்சனனும் பகை அழிந்து சௌக்கியமா அயோத்தியிலே அரசாண்டான்.
சிங்க வாகனத்துலே அம்பாளைத் தரிசனம் பண்ணினால் பகை அழியும். ஹம்ஸத்தை வாகனமாக உடையவளே என் கிறது அடுத்த வரி. இங்கே தேவியை சரஸ்வதி அம்சமாகப் பார்க்கிறோம். ஹம்சம் பாலையும் நீரையும் தனித்தனியாய் பிரிக்கக் கூடியது. ஒரே மனுஷாளோட மனசிலே இருக்கற நல்லது கெட்டதுகளைப் பிரிச்சுப் பார்க்கக் கூடியவ அம்பாள். அடுத்தாப்பலே ஒரு குடும்பத்திலே, அப்புறம் ஊரிலே, அதுக்கப் புறம் லோகத்துலே... அவளாலே மட்டும்தான் அப்படிப் பிரிச்சு அதுக்கேத்தபடி பாப புண்ணிய பலன்களைத் தரமுடியும்.
ஹம்சம்னா சூரியன்னு ஒரு அர்த்தம். பிராணன்னு இன்னொரு அர்த்தம். எல்லா ஜீவன்களோட பிராணனும் அவளுக்கு அடங்கின வாகனமாயிருக்கு. கோடி சூரியப் பிரகாசமே அவள் வாகனம். அவள்கிட்டேயிருந்து தான் அண்டங்களுக்கெல்லாம் வெளிச்சம் பாயறது. அவளோட கருணைதான் ஒளி. இல்லேன்னா இருட்டுதான்.
பண்டாசுரன், மஹிஷாசுரன், சண்டமுண்டன், சும்ப நிசும்பன்னு அசுராளை வதம் செய்தவள் அவள்.
இரண்யாட்சனுடைய வம்சத்திலே குரு என்கிறவனோட பிள்ளை துர்முகன். அவன் ஆயிரம் வருஷம் காற்றையே ஆகாரமாக்கொண்டு பிரம்மாவை நோக்கித் தபஸ் பண்ணினான். பிரம்மா வந்தார். வேத மந்திரமெல்லாம் எனக்கே சொந்தமாகணுமின்னு கேட்டான். தபஸ் பண்ணினா வரம் கொடுத்தாகணுமே! ‘சரி’ன்னுட்டார்.
எல்லோருக்கும் வேதம் மறந்து போச்சு. சந்தியாவந்தனம், ஹோமம், ஜபதபம், ஒளபாசனம், சிரார்த்தம், அக்னி ஹோத்ரம் ஒண்ணு கிடையாது. தேவாளுக்கு அவிர்ப்பாகம் இல்லாததாலே கிழவளாயிட்டா. எல்லா லோகத்தையும் அசுரன் ஆக்கிரமிச்சுட்டான். மேருமலைக் குகையிலே போய் எல்லாரும் அம்பாளைப் பிரார்த்தனை பண்ணினா.
யாகம் நடக்காததாலே பூமியிலே மழையில்லே! குளம், ஆறு எல்லாம் வத்திப் போச்சு. பசுக்களெல்லாம் உயிர்விட்டுது. சில தேவர்கள் இமயமலையிலே போய் தபஸ் பண்ணினா. பர்வத ராஜகுமாரி பிரத்யட் சமானா. அவ கையிலே ஒரு பூங்கொடி இருந்தது. அதிலே விதவிதமாப் பழங்கள். ஒன்பது கையிலே யிருந்தும் அருவி மாதிரி நீர் கொட்டித்து. ஆறு, குள மெல்லாம் நிறைஞ்சது.
அசுரனோட ஒற்றர்கள் சும்மா இருப்பாளா? துர்முகன் கிட்டே போய் “ராஜா, நாம மோசம் போயிட்டோம். சாகம்ப ரின்னு ஒரு ஸ்த்ரீ வந்தி ருக்கா. அவ கையி லேயி ருக்கிற மலர்க்கொடியிலே யிருந்து காய், விருந்துச் சாப்பாடு எல்லாம் வரது. தேவாளெல்லாம் nக்ஷமமா இருக்கா”ன்னு சொன்னா.
அசுரன் ஏராளமா சேனையோட வந்து அம்புமாரி பொழிஞ்சான். அம்பாள் விட்ட சக்கரம் பக்தர்கள் தலைக்கு மேலே சுத்தி சுத்தி வந்தது. முதல்லே 32 சக்திகள் வந்தா. அப்புறம் 66 சக்திகள் வந்தா. பத்து நாள் சண்டை நடந்தது. பத்தாம் நாள் சிவப்பு உடை உடுத்திண்டு, சிவப்பு மாலை போட்டுண்டு யுத்தம் பண்ணினான். 515 அம்புகளை இரண்டு ஜாமம் வரை தொடர்ந்து விட்டுண்டே இருந்தா தேவி. அசுரன் இரத்தம் கக்கிண்டு கீழே விழுந்தான். வேதங்கள் ஒளி வடிவா வெளியிலே வந்தன. இப்படி எத்தனையோ பண்ணியிருக்கா அம்பாள்.
கொலை முதலான பாபங்களையும் சமன் செய்யும் பாப நாசினி என்கிறது 112-ஆவது ஸ்தோத்திரவரி. மாந்தா தாவோட வழிவந்தவன் அருண ராஜா. அவனோட பிள்ளை பேரு சத்திய விரதன். அவன் கிட்டே நல்ல குணமும், கெட்ட குணமும் கலந்து இருந்தது. அவன் பூர்வ ஜென்மாவிலே பாவம், புண்ணியம் இரண்டையும் பண்ணினவன்.
ராஜா மகனாச்சே! ஒரு கல்யாணத்தை முன்ன நின்னுநடத்தி வைக்கணுமின்னு ஒரு குடும்பத்தில இருந்து வந்து கேட்டுண்டா. போனான். கலியாணப்பொண் ரொம்ப ரூபவதி. மேடையிலே உட்கார்ந்திருந்த அவளை சத்திய விரதன் தூக்கிண்டு போயிட்டான்.
எல்லாரும் அருண ராஜாகிட்டே போய் முறையிட்டா. ராஜா பிள்ளையைக் கூப்பிட்டு கண்டிச்சு நாட்டை விட்டே விரட்டிட்டார். சத்திய விரதன் செருப்புத் தைக்கிறவா கூட இருந்தான்.
அவனுக்கு, குலகுருவான வசிஷ்டர் “ஒரே பிள்ளையைக் காட்டுக்கு அனுப்பலாமா? பரிகாரம் பண்ணிடலாமின்னு ராஜாகிட்டே சொல்லலையேன்னு” கோபம்! பெத்த பிள்ளையைக் கவனிக்காம விட்டா மகாபாபம். அந்தப் பாபம் ராஜாவைப் பிடிச்சது. நாட்டிலே ஒரு மாமாங்கமா மழையே பெய்யலே! அருண ராஜா மந்திரிகிட்டே ராஜ்ஜி யத்தை ஒப்படைச்சுட்டு தவசு பண்ண காட்டுக்குப் போயிட்டார்.
அந்த நேரத்தில விசுவாமித்திரரும் வசிஷ்டரை ஜெயிக்கறதுக்காக காட்டுக்கு வந்து தபசு பண்றார். விவாகம் பண்ணிண்டு மனைவி குழந்தைகளை ரட்சிக்கலேன்னா அதுவும் பெரிய பாவம்! அந்தக் காலத்திலே குழந்தைகளை விற்கறதுன்னா கழுத்திலே தர்ப்பையைக் கட்டி இழுத்துண்டு போவா. யார் வேணா விலை கேட்கலாம்! நாட்ல மழை பெய்யாம பஞ்சம் ஏற்பட்ட காலத்தில ஒருத்தன் இப்படித் தன் பிள்ளையை விக்கிறதுக்காக தர்ப்பையை கட்டிக்கொண்டு வர்றான். அடுத்தவனுக்கு பாரியையா வரிச்ச பொண்ணைத் தூக்கிண்டு வந்தானே, சத்திய விரதன்; அவன் இதைப் பார்த்தான் ‘குழந்தையை விற்க வேண்டாம். நான் காப்பாத்தறேன்’னான். விக்க வந்தவன் சரின்னுட்டான். பின்னாலே அந்தப் பையன் தர்ப்பையாலே கட்டப்பட்டதாலே காலவன்’னு பேரோட, புகழோட இருந்தான். கல்யாணம், குழந்தை, அவாளைக் கைவிடறது எதுவும் வேண்டாம்னு அவன் தவம் பண்ணி பெரிய ரிஷியாயிட்டான்.
சத்திய விரதன் தினமும் வேட்டையாடி ஏதாவது மாமிசத்தை, பழங்களை கொண்டு வருவான். ஒரு நாளைக்கு எதுவுமே கிடைக்கலே! அலைஞ்சு அலைஞ்சு அலுத்துப் போனான். வசிஷ்டரோட ஆசிரமத்துலே அவருக்குத் தானமாக் கிடைச்ச பசு கட்டியிருந்ததைப் பார்த்தான். அவர் மேல இருந்த கோபத்துல அதைக் கொன்னுட்டான்.
வசிஷ்டர் இது தெரிஞ்சதும் ‘மூணு கொம்புள்ள பிசா சாப்போ’ன்னு சபிச்சுட்டார். ஒரு கொம்பு மணப் பொண் ணைத் திருடியதுக்கு அடுத்தது பசுவைக் கொன்னதுக்கு, மூணாவது தகப்பனாருக்கு அடங்காமத் திரிஞ்சதுக்கு.
அவன்தான் திரிசங்கு! அவனைத்தான் பிற்காலத்தில் விசுவாமித்திரர் உடம்போட சொர்க்கத்துக்கு அனுப்பினார். அவனுக்காக ஒரு சொர்க்கத்தையே உண்டு பண்ணினார். வசிஷ்டரோட சிஷ்யன் ஒருத்தன் “மூணு கொம்புப் பிசாசா அலையறியே! தேவியோட நவாக்ஷர மந்திரத்தை ஜபிச்சுண்டிரு. அவதான் பசுஹத்தியிலேயிருந்து விடுவிக்கற ஒரே பாப நாசினின்னு அந்த மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தான். சத்திய விரதனும் பயபக்தியோட தினமும் அதை பாராயணம் பண்ணிண்டிருந்தான். பிராயச்சித்த ஹோமம் பண்ணும்படியா ரிஷிகள் கிட்டே கேட்டான். ஒருத்தரும் முடியாதுன்னுட்டா.
அக்னியை மூட்டி உயிரை விட்டுடலாமின்னு ஏற்பாடு பண்ணினான். பாப நாசினி ஆகாயத்திலே தெரிஞ்சா! ஒரே பிரகாசம். “நாளை மறுநாள் நீதான் ராஜா! கவலைப்படாதே! இனி மேலாவது புத்தியோட இரு” ன்னு ஆசீர்வாதம் பண்ணினா. நாரதர் போய் அருண ராஜாகிட்டே “அம்பாளே சத்திய விரதனை மன்னிச்சுட்டா! நீ போய் பிள்ளையை அழைச்சுண்டு வந்து முடிசூட்டு. வயசான உனக்கு இனிமே குழந்தை பிறக்காது”ன்னு சொன்னார்.
- ஆர்.பி