Monday, May 23, 2005

2005 மே மாத விசேஷ தினங்கள்

3-5-2005 அப்பர் பெருமான் திருநக்ஷத்திரம்

திருஞான சம்பந்தரால் ‘அப்பரே’ என்றழைக்கப்பட்டவர் திருநாவுக்கரசர். அவர் சிவாலயங்களில் பிரகாரச்சுற்று வெளியில் புல்லும், புதரும் மண்டிக் கிடக்காதபடி உழவாரப்பணி புரிந்தவர். தந்தை புகழனார். தாயார் மாதினியார், தமக்கை திலகவதியார். இவர் திருமுனைப்பாடியிலுள்ள திருவாமூரில் வேளாளர் மரபில் பிறந்தவர். பெற்றோர் இட்ட பெயர் மருணீக்கியார். இளம் வயதில் பெற்றோரை இழந்து தமக்கை யால் வளர்க்கப்பட்டவர். சிறிது காலம் சமண மதத் தலைவராயிருந்தார். அப் போது இவர் பெயர் தருமசேனர். அச்சமயம் இவருக்குத் தீராத வயிற்றுவலி வந்தது.
சமண மருத்து வத்தால் இது குணமாகவில்லை!சிவத் தொண்டு புரிந்து வந்த இவரது தமக் கையார் இருந்த திருவதிகை வந்தார். திருநீறணிந்து ‘கூற்றாயினவாறு விலக்ககிலீர்” என்று பாடினார். சூலை நோய் அகன்றது. அன்றிலிருந்து சிவநேசச் செல்வரானார். சமண குருமார்களின் சொற்கேட்டு முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் இவரைக் கொல்வதற்காக முயற்சித்தான். சிவபிரான் அருள் அவரைக் காத்தது. பல்லவ மன்னன் மனந்திருந்தி சைவம் சார்ந்தான். திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் 4, 5, 6-ஆவதாக வைக்கப்பட்டு சிவன் கோயில்களில் பாடப்படுகின்றன.


--------------------------------------------------------------------------------
4-5-2005 அக்னி நக்ஷத்திர தொடக்கம்

அக்னி நக்ஷத்திர காலத்தில் கிரகப் பிரவேசம் செய்யக் கூடாது. இந்தக் காலங்களில் சில சமயம் மழையும் பெய்யும். முன்பத்து, பின்பத்து நாட்கள் தான் சூரியன் சுட்டெரிப்பான். கடும் வெயிலில் வயதான ரிஷிகள் அலைவ தால் உடல்நலம் பாதிக்கும் என்பதால் இந்த நியதி ஏற்பட்டிருக்க வேண்டும்.


--------------------------------------------------------------------------------

5-5-2005 மத்ஸிய ஜெயந்தி

வேதங்களைக் கடலில் ஒளித்த சோமுகாசுரனை எட்டு லட்சம் மைல் நீளமுள்ள மச்சமாகி அழித்து வேதங்களை மீட்ட மகாவிஷ்ணுவின் மச்சாவதார தினம் இது. ஊழிக் காலத்தில் இந்த பிரம்மாண்டமான மத்ஸ்யத்தின் ஒற்றைக் கொம்பில்தான் ஒளஷதிகளும், சப்தரிஷிகளும், வைவஸ்வதமனு என்ற ராஜரிஷியும் இருந்த ஓடம் ‘கட்டப்பட்டி ருந்தது. பிரளய வெள்ளம் அடங்கியதும் தன் கூரிய கொம்பினால் ஹயக்ரீவாசுர னின் மார்பைப் பிளந்த மச்சஹரி ஹயக் ரீவர் என்ற நாமத்தையும் பெற்றார். மச்சாவதாரம் எடுத்த திருமாலை இன்று வணங்கி வழிபடுவோம்.


--------------------------------------------------------------------------------

6-5-2005 ஸ்ரீரமண மகரிஷி 55-ஆவது ஆராதனை

விருது நகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி என்னும் ஊரில் பிறந்தவர் ஸ்ரீரமணர். ‘வாழ்க்கை நிலையான தல்ல. உடல்வேறு; உயிர் வேறு’ என்ற எண்ணங்கள் சிறுவயதிலிருந்தே அவர் மனதில் பதிந்தன.இவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் வேங்கடராமன். படிப்பில் அக்கறை காட்டாத வேங்கடராமனை வீட்டில் கண்டித்தார்கள். திருவண்ணா மலையின் பெருமையை சுற்றத்தார் சொல்லக் கேட்டு அங்கு செல்லும் ஆசை அவருக்கு நாளுக்கு நாள் வளர்ந்தது. அருணாசலம் என்ற வார்த்தை அவர் காதுகளில் எதிரொ லித்தது. 1896-ல் மாடியில் தனி அறையில் அவர் மரண அனுபவத்தை உணர்ந்தார். அதிலிருந்து மதுரை மீனாக்ஷி கோவிலிலேயே நேரத்தை செலவிட்டார். தன்னைத் தேட வேண்டாம் என்று எழுதி வைத்துவிட்டு மூன்று ரூபாய்களோடு புறப்பட்டார். திருவண்ணாமலை வந்தார். கோயி லுக்குள்ளிருக்கும் பாதாளலிங்கக் குகையில் நிஷ்டையில் அமர்ந்தார். ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்ததில் உடம் பில் புண்கள் தோன்றி சீழும், உதிரமும் வெளிப்பட்டன. இவரது மகிமையை உலகத்துக்கு அறிவித்தவர் சேஷாத் திரி சுவாமிகள். உறவினர் வந்து அழைத்தும் இவர் போகவில்லை! ரமணாஸ்ரமம் ஏற்பட்ட பிறகு அன்னை யார் அவரோடு வந்து தங்கினார். இரண்டே ஆண்டுகளில் தாயார் இறைவனடி சேர்ந்தார். 14-4-1950-ல் இரவு 8-47 மணிக்கு ரமண மகரிஷி ஜோதியானார். இன்று அம்மகானின் ஆராதனை தினம்.


--------------------------------------------------------------------------------
11-5-2005 அக்ஷய திருதியை

அக்ஷயம் என்றால் வளர்வது. மஞ்சள் அல்லது குங்குமத்தோடு கலந்து வைத்தால், அரிசி அக்ஷதை ஆகிறது. அக்ஷயவடம் என்று ஆலமரத்துக்கொரு மாற்றுப் பெயருண்டு. சிறிய விதையிலிருந்து வரும் ஆலமரம் பிரம்மாண்டமாகக் கிளைகள் விட்டுப் பெருகுவதாலேயே அதை அக்ஷயம் என்றார்கள். தஞ் சையை விஜயராகவ நாயக்கர் ஆண்ட காலம். பஞ்ச காலத்தில் பூஜ்ய ஸ்ரீராக வேந்திரர் தானியக் குதிர்களில் ‘அக்ஷய’ என்று எழுதச் சொன்னார். அப்படிச் செய்த பின் மழை பெய்து பூமி நனைந்து, விளைச்சல் அமோகமாகிக் குதிர்கள் நிரம்பி இருக்கின்றன. சிலர் இந்த நாளில் தங்க நகை, பவுன், வெள்ளிக் காசு என்று வாங்குவர். இன்று வாங்கியது விருத்தியாகும். அள்ள அள்ளக் குறையாத அக்ஷய பாத்திரத்தை சூரியபகவான் தரும புத்திரருக்கு வழங்கியிருக்கிறார். அத னால் இன்று புண்ணிய காரியங்களைச் செய்து நன்மைகளை அடைவோம்.


--------------------------------------------------------------------------------
11-5-2005 பலராம ஜெயந்தி

இராமாவதாரத்தில் இளவலாகப் பிறந்த ஆதிசேஷன் கிருஷ்ணாவ தாரத்தில் மூத்தவனாக, பலராமனாகப் பிறந்தார். பலராமருக்கு சங்கர்ஷணன் என்ற பெயரும் உண்டு. தேவகியின் கர்ப்பத்திலிருந்து ரோகிணியின் கர்ப் பத்துக்கு இழுக்கப்பட்டதால் அப்பெயர் வந்தது. தேனுகாசுரனையும், பிரலம் பாசுரனையும், ருக்மியையும் வதைத் தவர் பலராமர். துரியோதனனுக்குக் கதாயுதப் பயிற்சி அளித்தவர். இவரது ஆயுதம் கலப்பை. இவரது மனைவி ரேவதி. இவரது மகள் வத்ஸலை. அர்ச் சுனன் மகன் அபிமன்யுவுக்கு மாலை யிட்டவள். இன்று பலராமரை வணங் குவதால் வித்தையும், வலிமையும் பெருகும்.


--------------------------------------------------------------------------------

12-5-2005 ஸ்ரீஇராமானுஜர் ஜெயந்தி

ஸ்ரீ பெரும்புதூரில் அசூரி கேசவ சோமயாஜிக்கும் காந்திமதி அம்மை யாருக்கும் பிறந்தவர் இந்த வைணவ ஆச்சாரியர். ஸ்ரீ சைல பூரணர் என் கிற திருமலை நம்பி இவரது தாய் மாமன். திருப்புட்குழியில் யாதவப் பிரகாசரிடம் வேத சாஸ்திரங்களைப் படித்தார். விசிஷ்டாத்வைதம் என்ற தத்துவத்தை அருளியவர் இம்மஹான். மிகவும் ரகசியமானது என்று சொல்லி திருக் கோஷ்டியூர் நம்பிகள் இவருக்கு உப தேசித்த மகாமந்திரத்தை ஊராரின் நலனுக்காக கோபுரமேறி அனைத்து மக்களும் அறியுமாறு பிரகடனம் செய்த லோகோபகாரி இவர். ஜாதி வேறுபாடு கள் பாராது, திருமாலை வழிபடும் அனைவரும் வைணவர்களே என்ற சீரிய கொள்கையை 120 ஆண்டு காலம் வாழ்ந்து பரப்பிய பெருந்தகை ஸ்ரீராமானுஜர்.


--------------------------------------------------------------------------------


13-5-2005 ஸ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி

கேரளத்துக் காலடியில் அவதரித்த ஆதிசங்கரர் ஷண்மதஸ்தாபனம் செய்தவர். திருவானைக்காவலில் அம்பி கைக்கு ஸ்ரீசக்ரத்தையே தாடங்கமாக (தோடு) பிரதிஷ்டை செய்தவர். காசி, காஞ்சி, திருவொற்றியூர் முதலான ஸ்தலங்களில் யந்திர பிரதிஷ்டை புரிந்தவர். காரார் காச்சூழ் காஞ்சி தனில் காமகோடி பீடம் வைத்தார். “உச்சிதத்தானம் தன்னை சுரேஸ்வரர் பால் ஒப்பி வைத்து கச்சியில் காமகோடி பீடத்தில் வசித்திருந்து மெச்சு முப்பால் இரண்டு மேவிய அகவைமுற்ற நச்சுமிச் சரீரம் விட்டு நாதன் மெய்கலந்தார்” என்கிறது ஸ்ரீசங்கர விஜய சிந்தாமணி. சிவரகஸ்யம் லட்சம் ஸ்லோகங்களால்
ஆனது. அதில் ஒன்பதாவது அம்சத்தில் உள்ள பதினாறாவது அத்தியாயத்தில் ஸ்ரீபகவத் பாதாள் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி அவதாரம் என்கிறது. சநாதன தர்மமா கிய வைதீக மதத்தில் பல்வேறு தேவை யற்ற சடங்குகள் புகுந்த நேரத்தில் அதைத் தூய்மைப்படுத்தி புத்துணர்வு பெறச் செய்து அவதரித் தவர் சங்கர பகவத் பாதர். பரத கண்டத்தின் நான்கு திசைகளிலும் யாத்திரை செய்து மாற்றுக் கருத்துக் கொண்டோ ருடன் வாதுகள் புரிந்து வெற்றி பெற்று அத்வைத சித்தாந்தத்தை நிலை நிறுத்தியவர் ஸ்ரீஆதிசங்கரர். இம் மகானின் திவ்ய வரலாற்றினை எழுத்துச் சித்தர் பாலகுமாரன் காலடித்தாமரை என்ற தலைப்பில் காமகோடியில் தொடராக எழுதி இருக்கிறார். கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அதை நூல் வடிவில் வெளியிட்டிருக்கிறது. ஸ்ரீசங்கர பகவத் பாதரின் அவதார தினமான இன்று அவரது போதனை களைப் படித்து பயன் பெறுவோம்.

--------------------------------------------------------------------------------


22-5-2005 ஸ்ரீ நரசிம்ஹ ஜெயந்தி
தனக்குத் துன்பம் தருபவர்களை மன்னித்து விடுகிறான் பகவான். ஆனால் தன் அடியார்களுக்கு துன்பம் இழைப்பவர்களை கடுமையாக தண்டிப்பான் என்பதை அறிவிப்பது தான் பகவானின் ஸ்ரீநரசிம்மாவதாரம். கருவிலேயே நாராயண நாமத்தைக் கேட்ட பிரகலாதன், இரணியன் பேரைச் சொல்லாமல் “ஓம் நமோ நாராயணாய’ என்று சொல்லி வந்ததால் மகனென் றும் பாராது அவனை மலையிலிருந்து உருட்டி விட்டான். நாகங்களைக் கொண்டு தீண்டச் செய்தான். பகவான் பிரகலாதனை காத்தார். இப்படி பிரகலாதனுக்கு எண்ணற்ற கஷ்டங் களைக் கொடுத்தும் பொறுமையோடி ருந்தார் பரந்தாமன்.
“இந்தத் தூணிலி ருக்கிறானா? உன் நாராயணன்” என்று ஒரு தூணைக் காட்டி இரணி யன் கேட்டபோது “இருக்கிறான்” என்று அஞ்சாமல் பதில் சொன்னான் பிரகலாதன். கதாயுதத்தால் அந்தத் தூணை ஓங்கி அடித்தான் அசுரன். தூணிலிருந்து சிங்க முகமும், மனித உடலும் கொண்டு வெளிப்பட்டு இரணியனை சம்ஹாரம் செய்தார் திருமால். பகவான் அப்படி வெளிப்பட்ட தினம் இது. நரசிம்மாவதாரம் படித்தால் உக்கிரகம் தணிய பானகம் நிவேதனம் செய்ய வேண்டும். நரசிம்ம ஸ்லோகம் வாசித்தால் பகைவர் தொல்லை இருக்காது. கடன் தீரும்.

--------------------------------------------------------------------------------


23-5-2005 வைகாசி விசாகம்
வைபோக மாதமான வைகாசியில் விருச்சிக ராசியில் சந்திரனும், ரிஷப ராசியில் சூரியனும் சந்திக்கும் போது அவதரித்தவர் ஸ்ரீ சுப்ரமண்யர். சரவணப் பொய்கையாய் இருந்த உமாதேவியிடம் ஆறு தாமரைப் பூக்களில் ஆறு குழந்தைகளாய் உதித்து, கார்த்திகைப் பெண்களால் சீராட்டிப் பாலூட்டி வளர்க்கப்பட்டவர். ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைத்து ஓர் உருவாக்கினாள் அம்பிகை. இன்று கந்தன் குடியிருக்கும் கோயில்களிலெல்லாம் காவடி ஊர்வலங்களும், அபிஷேகம், ஆராதனைகளும் நடக்கும். ஸ்ரீலங்காவில் கண்டி, கதிர்காமம், மலேஷியாவில் பினாங்கு, சிங்கப்பூர் போன்ற

கடல் கடந்த ஊர்களிலும் கரகாட்டம், அலகு (சிறுவேல்) குத்தித் தேரிழுத்தல் போன்ற பிரார்த்தனைகள் நிறைவேற்றப்படுகின்றன. நாகப்பட்டி னத்துக்கு அருகிலுள்ள எட்டுக்குடி யில் 20,000க்கும் மேல் பால்காவடிகள் வருகின்றன. குறைந்தால் குத்தகை தாரர்கள் முருகனுக்குப் பொன் விலங்கு போட்டு விடுகிறார்கள். அடுத்த கிருத்திகைக்கு கணக்கை
சரி பண்ணி விடுகிறார் ஆறுமுகன். மூன்று நாட்கள் தொடர்ந்து பாலாபி ஷேகம் நடப்பதால் சேவற்கொடியோ னின் முகமே தெரியாதபடி வெண் ணெய் படிந்து விடுகிறது. இதனால் குமரனுக்கு ஜலதோஷம் பிடித்து விடப் போகிறதென்று வேதாரண்யத்தி லிருந்து அம்பாள் ரஸக்காவடி கட்டி அனுப்புகிறாள். ரஸக்காவடி வந்து முருகனுக்கு அபிஷேகம் நடந்த பிறகு தான் சுவாமியை நன்றாகத் தரிசனம்

--------------------------------------------------------------------------------

23-5-2005 நம்மாழ்வார் ஜன்மதினம்

தாமிரபரணி நதிதீரத்தில் திருக்குருகூரில் காரியாருக்கும், உடைய நங்கையாருக்கும் பிறந்தவர் மாறன். தவமிருந்து பெற்ற குழந்தை அழவுமில்லை. பால் குடிக்கவும்மில்லை! ஸ்ரீமந்நாராயணனின் கட்டளைப்படி திருக்குறுங்குடியில் ஒரு புளிய மரமாக இருந்தார் இவர். பெருமாளின் ஆணைப்படி வைகுண்டத்தின் சேனாதிபதியான சேனை முதலியார் புளிய மரத்தடியில் தவம் செய்த நம்மாழ்வாருக்கு மெய்ப் பொருளின் தத்துவத்தை உபதேசித்தார். 16ஆண்டு கள் புளிய மரப் பொந்தில் தவமிருந்தார் இந்த ஆழ்வார். இவரை ஞானாசிரிய ராக வரித்துக் கொண்ட மதுரகவி ஆழ்வாரின் கேள்வியால் இவர் தவம் கலைந்தது. நம்மாழ்வார் திருவாசிரியம், பெரிய திருவந்தாதி திருவிருத்தம், திருவாய்மொழி இவற்றைப் பாட பட்டோலையில் அவற்றைப் பதித்தவர் மதுர கவி யாழ்வார். வகுளா பரணன். சடகோபன், பராங்குசன், திருநாவீறு டையபிரான், குருகைப்பிரான் போன்ற பல பட்டப் பெயர்களும் இவருக்கு உண்டு. ராமா யண காவியம் இயற்றிய கம்பர் இவரைப் புகழ்ந்து சடகோபர் அந்தாதி என்ற பாமாலை புனைந்திருக்கிறார்.


--------------------------------------------------------------------------------

23-5-2005 திருவாய் மொழிப்பிள்ளை ஜன்ம தினம்

பாண்டிய நாட்டில் குண்டிகை என்ற ஊரில் பிறந்த இவர் தனது சிறிய தாயாரிடம் வளர்ந்தார். தமிழில் நல்ல புலமையுடையவர். சிறந்த சொற்பொழி வாளர். இவர் பாண்டிய நாட்டு அமைச்சராகப் பணிபுரிந்தவர். இவரது குரு கூர குலோத்தம தாஸர். இவர் திருக்குருகூரில் அடர்ந்த காடுகளை வெட்டித் திருத்தி நாடாக்கினார். திருநகரியில் இராமானுஜருக்குத் தனிக் கோயில் கட்டி, ஆலயத்தைச் சுற்றி வீதிகள் அமைத்து ஸ்ரீவைஷ்ணவர்களை அதில் குடியேற்றினார். அந்த ஊருக்கு‘ இராமானுஜ சதுர் வேதி மங்கலம்’ என்று பெயர் உண்டானது. ஸ்ரீசைலே சர், திருமலை ஆழ்வார் என்ற பெயர் களும் இவருக்கு உண்டு. பிள்ளை லோகாச்சாரியாருக்குப் பிறகு வைஷ் ணவ குருபீடத்தை அலங்கரித்தவர் இவர்.


--------------------------------------------------------------------------------


24-5-2005 ஸ்ரீ மஹாப் பெரியவாள் ஜெயந்தி

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 68-ஆவது பீடாதிபதியாக 13-2-1907-ஆம் ஆண்டில் தனது 13-வது வயதில் பொறுப்பேற்றார் ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள். தமது இளம் வயதிலேயே வேத சாஸ்திர புராணங் கள், உபநிஷத்துக்கள், அத்வைத, வேதாந்த சித்தாந்தங்கள். ஆகியவற் றைக் கற்றுத் தேர்ந்த ஞானி இம் மகான். காண்பதற்கு எளியவராய், கருணையே வடிவாய் திகழ்ந்த இவர் அனைத்து மக்களாலும் போற்றி வணங் கப்பட்டவர். ஸ்ரீபரமாச்சார்யாள் வேத சம்மேளனங்கள், வேதாகம சில்ப சதஸ் என்ற மகாநாடுகளை நடத்தி வேத விற்பன்னர்கள், சிற்பிகள், ஓதுவார்கள், இசைக்கலைஞர்கள், ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கௌரவித்திருக் கிறார். கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், வில்லுப்பாட்டு போன்ற
கிராமியக்கலைகள் புத்துயிர் பெற்று இன்று மக்களால் பாராட்டப்படுவதற்குப் பெரிதும் காரணமாக இருந்தவர் இவர். இந்திய, அயல் நாட்டு மொழிகள் 17-ல் புலமை பெற்றிருந்த மஹாப் பெரியவர் தம்மைத் தரிசனம் செய்ய வரும் பக்தர் களிடம் அவரவர் மொழியிலேயே பேசி அவர்களை வியக்க வைப்பதுண்டு. மஹாத்மா காந்தி தனது தென்னிந்திய விஜயத்தின் போது ஆச்சார்ய ஸ்வாமி களை சந்தித்து நெடுநேரம் அளவ ளாவியிருக்கிறார். அதிலிருந்து கதரையே உடுத்தியிருக்கிறார் ஸ்வாமிகள். சநாதன தர்மமாகிய ஹிந்து மதத்தின் மேன்மையையும், சிறப்பையும் விளக்கி ஸ்வாமிகள் ஆற்றிய உரை அனந்தம்! “ப்ராயா ணோன் முகே மயி அநாதேனூ” என்று ஆதிசங்கரர் இயற்றிய ஸுப்ரமண்ய புஜங்க வரிகளை (அனாதையான நான் நெடும் பயணம் கிளம்பும் போது குஹனே! தயாளுவே நீ வந்து கை கொடுக்க வேண்டும்) என்ற வாச கங்களைச் சொல்லாமல் அவர் தலை சாய்ப்பதில்லை! அவரே அநாதை என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம் ? ஒவ்வொருத்தரும் கர்மாவை தன்னுடைய மனதில் காமம், குரோதம் இல்லாமல் செய்ய வேண்டும் என்ற அவரது ஞான வாக்கியங்களைக் கடைப்பிடிப்பதே அவருக்குச் செய்யும் பாதாஞ்சலியாகும்.

--------------------------------------------------------------------------------

25-5-2005 திருஞான சம்பந்தர் திரு நக்ஷத்திரம்

பிறந்த சில ஆண்டுகளிலேயே உமா தேவியாரிடமிருந்து ஞானப்பால் குடிக்கும் பேறு பெற்றவர் இந்த அருளா ளர். தந்தை சிவபாத இருதயர். திருக் கோலக்காவில் இவருக்கு பொற்தாளம் அருளினார் ஈசன். திருநெல்வாயில் சந்திரசேகரப் பெருமான் இவர் அமர்ந்து வர முத்துச் சிவிகையும், உடன் பிடித்து வர வெண்குடையும், கட்டியம் கூற ஊதும் முத்துச் சின்ன மும் கொடுத்தார். திருக்கொடி மாடச் செங்குன்றூரில் சில காலம் சம்பந்தர் தொண்டர்களோடு தங்கியிருந்தபோது அடியார்களை குளிர்ஜுரம் பீடித்தது. ஊரில் பலருக்கும் குளிர் ஜுரம் வாட்டி யது. சம்பந்தர் சிவபெருமானிடம் செய்வினை வந்து எமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம்” என்று பாடினார். உடனே அடியார்களை மட்டுமின்றி ஊரை விட்டே குளிர் ஜுரம் ஓடிவிட்டது.

திருவாவடுதுறையில் சிவபாத ஹிருதயர் “யாகம் செய்ய பொருள் வேண்டும்” என்று விண்ணப்பிக்க, ஈசன் சன்னதியில் நின்று “நீள்நிதி வேண்டினார்க்கு ஈவது ஒன்றும் அற்றிலேன்; உன்னடி அல்லது ஒன்றும் அறியேன்” என்று பாடினார் சம்பந்தர் சிவபெருமான் திருவருளால் ஒரு பூதம் தோன்றி பலிபீடத்தின் உச்சியில் ஆயிரம் பொன் கொண்ட ஒரு முடிப்பை வைத்து “இது எடுக்க எடுக்கக் குறையாது” என்று கூறி மறைந்தது. இன்று சிவாலயம் சென்று சிவனோடு ஆளுடைப்பிள்ளையான சம்பந்தரை வணங்குவதால் எல்லாப் பேறுகளும் கிட்டும். இவரது தேவாரப்பாடல்கள் பன்னிருதிருமுறையில் 1, 2, 3 திருமுறைகளாக வைக்கப்பட்டு சிவாலயங்களில் பாடப்பட்டு, பூஜிக்கப்படுகின்றன.


--------------------------------------------------------------------------------


26-5-2005 ஸ்ரீகுமர குருபரர் பிறந்ததினம்

தாமிரபரணி நதிக்கரையில் ஸ்ரீவைகுண்டம் என்ற ஸ்தலத்தில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் வேளாளர் குலத்தில் சண்முக சிகாமணி கவிராயருக்கும், சிவகாம சுந்தரி அம்மையாருக்கும் பிறந்தவர் குமரகுருபரர். ஐந்து வயதாகியும் குழந்தை பேசவில்லை! திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்று சன்னதி முன் மகனைக் கிடத்தி “செந்திலாண்டவா! ஒரு மண்டலம் விரதமிருக்கிறோம். அப்படியும் உன் அருள் கிடைக்காவிடில் எங்கள் உயிரை அர்ப்பணிக்கிறோம்” என்று சபதம் செய்தனர் பெற்றோர். தினமும் அதிகாலை எழுந்து சமுத்திரத்திலும், நாழிக் கிணற்றிலும் நீராடி இலை விபூதி தரித்து
சண்முகர் முன் பாமாலை தொடுப்பார்கள். கோயில் சார்த்தியபின் பிரசாதத்தை உண்டு ஓம் சரவண பவாய நம:” என தியானித் திருந்தனர். 48-ஆவது நாள் நான்காம் ஜாமத்தில் குமரகுருபரரின் கனவில் அர்ச்சகர் வடிவில் ஆறுமுகன் பிரத் யட்சமாகி, அவரைத் தட்டி எழுப்பி நாக்கை நீட்டச் சொல்லி சடா க்ஷரத்தை எழுதினார். பிறகு “விரைந்து விஸ்வரூப தரிசனத்துக்கு வருக” எனக் கூறி மறைந்தார். குமரகுருபரர் எழுந்து பெற்றோரை எழுப்பினார். பெற்றோர் மகிழ்ச்சியில் பேச்சடைத்து நின்றனர். ‘கந்தர் கலி வெண்பா’ பாடினார் குமரகுருபரர். இவரது மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் திருமலை நாயக்கர் முன் அரங்கேறிய போது நாயக்கர் மடியில் சிறு பெண் ணாக அமர்ந்து ரசித்த அம்பிகை “காலத்தோடு கற்பனை கடந்த” என்ற பாடலுக்கு இவர் விளக்கம் அளிக்கை யில் ஒரு முத்து மாலையைப் பரிசாக அளித்து அந்தர் தியானமானாள். அருளாளர் குமரகுருபரர் பிறந்த தினமான இன்று அவரது பாமாலை களைப் படித்து நாம் அவரை நினைவில் கொள்வோம்.

--------------------------------------------------------------------------------

28-5 2005 ஸ்ரீபாம்பன் சுவாமிகள் குருபூஜை

முருகப் பெருமான் மீது அள வில்லா பக்தி கொண்டிருந்த அருளாளர் பாம்பன் சுவாமிகள். பஞ்சாமிர்த வண் ணம், சண்முகக் கவசம் போன்றவற்றை இயற்றியவர். 27-12-1923-ல் சென்னை, தம்புச் செட்டித் தெரு வழியாகப் போகும்போது ஒரு குதிரை வண்டி அவர் மீது மோதியதில் கீழே விழுந்தார் இடது காலில் ஒரு வண்டியின் சக்கரம் ஏறி விட்டது. தெருவில் போய்க் கொண்டி ருந்தவர்கள் அவரை வண்டியில் ஏற்றி ஜெனரல் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது அவரது வயது 73. உப்பு, புளி, நீக்கி குறைவாக சாப்பிட்டு வாழ்ந்தவர். வயோதிகத்தால் எலும்புகள் கூடுவது அசாத்தியம் என்று சொல்லி விட்டார் டாக்டர். சுப்ரமண்யதாசர் என்ற ஸ்வாமிகளின் சிஷ்யர் அன்று முதல் அவர் கட்டிலடியில் அமர்ந்து சண்முகக் கவசத்தைச் சாப்பிடும். நேரம், இரவு தூங்கும் நேரம் நீங்கலாகப் பாராயணம் செய்து கொண்டிருந்தார். 11-ஆம் நாள் இரவு ஸ்வாமிகளுக்கு ஒரு கனவு. முறிந்த கால் மீது எவரோ வேல் வைத்துக் கட்டுவது போலிருந்தது. மறு நாள் கட்டைப் பிரித்த மருத்துவருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை! எலும்புகள் நன்றாகக் கூடியிருந்தன. ஸ்வாமிகள் அதன் பிறகு பிரமாதமாய் நடந்தார். சென்னை, திருவான்மியூரில் இந்த அருளாளரின் சமாதி இருக்கின்றது. அங்கே ஸ்ரீபாம்பன் ஸ்வாமிகளுக்கு குருபூஜை நடைபெறும்.


- ஆர். பி.