கிராம தேவதைகள் :
“முத்தமிழ் சேர் தென்பழகை மூதூரில் இயக்கி கதை அத்தனையும் என் நாவில் அறிந்தபடி யான்பாட”
“தே, சும்மா இரு.... ஏடு படிக்கிறாங்கல்லே... பேசினா அம்மன் கோச்சுக்கும்” பாட்டி அடிக்குரலில் கண்டித்தாள்.
“நாச்சியா, செல்லி . . . ரெண்டுபேரும் எந்திரிச்சு வாங்க” என்று அழைத்த தேவக்கா. “ஆத்தா! இவங்க இங்கே இருந்தா மத்தவங்கள கதை கேட்க விடமாட்டாங்க நாங்க மணமேட்டுலே இருக்கோம்” என்று சொல்லிக் கொண்டே முன்னால் நடந்தாள்.
நெல்லை மாவட்டத்திலிருந்து கன்னியாகுமரிக்குள் நுழைகிற இடத்திலுள்ள சிறிய கிராமம் ‘முப்பந்தல்’. கிராம எல்லையில் கிடுகாலான கூரையடியில் உள்ளது ‘இசக்கியம்மன்’ கோயில். முற்காலத்தில் சேர சோழ பாண்டியர்கள் சந்தித்துப் பேசும் அந்த இடத்தில் பந்தல் போடப்பட்டிருந்தது. அதனால் அந்த கிராமத்துக்கே
முப்பந்தல் என்று பெயர் வந்தது.
அருகில் உள்ள ஊர் பணகுடி. அங்கே வாழ்ந்த பண்ணையார் அருணாசலத்தின் மனைவிக்கு என்ன வைத்தியம் செய்தும் வயிற்று வலி தீருவதாயில்லை! அவரது பேத்தியின் கனவில் இசக்கியம்மன் தோன்றி “முப்பந்தல் மரத்தின் கீழே இருக்கேன். எனக்குத் தங்க இடம் கட்டிக் கொடுக்கச் சொல்லு. பாட்டி வயித்து வலிக்கு அதுதான் மருந்து” என்று சொல்லியிருக்கிறாள்.
ஊர் பெரிய மனிதர்களைக் கூட்டிக் கொண்டு முப்பந்தலுக்குப் போய் பார்த்திருக்கிறார் பண்ணையார்.
ஒரு குழிவான கல்லில் வெற்றிலை இடித்த கறை இருந்தது. அந்தக் கல்லையே சிலையாக்கி சின்னதாகக் கோவில் எழுப்பினார். அவர் மனiவியின் வயிற்று வலி மாயமாய் மறைந்தது. அப்புறம் பேத்திக்கு நல்லபடி பிரசவம் ஆக வேண்டுமே என்று தொட்டில் கட்டினார். சுகப் பிரசவத்தில் பெண்குழந்தை பிறந்தது. ‘நீலா’ என்றே பெயர் சூட்டினர். புது முறத்திலே, கண்ணாடி, வளையல், சாந்து, மை பவுடர் டப்பா எல்லாம் படைத்தார்கள். பக்கத்தில் ‘மாடன்’ சாமி. அவருக்குத் தனி பூஜை.
“ஆத்தா, இசக்கி அம்மன் கதையை வெளக்கமா சொல்லுங்க” என்று கேட்டாள் நாச்சியா, வீட்டுக்குப் போகும் வழியில் “பழகை நல்லூரிலே சிவன் கோயில் ஒண்ணு இருந்தது. இரண்டு மாசத்துக்கு ஒரு பட்டர் சாமி பூஜை பண்ணுவாரு”என்று தொடங்கினாள் பாட்டி.
“ஏன்?” என்று கேட்டாள் செல்லி.
“அது அப்படித்தான். மொத்தம் அந்த ஊரிலே 61 பட்டர் மார் இருந்தாங்க. அவங்களோட தலைவர் பேரு சிவசாமி. அவரோட பொஞ்சாதி பேரு சிவ ஆச்சி. அவங்களுக்கு ரொம்பக் காலம் குழந்தையில்லாம இருந்து ஈசுவரன் கிருபையாலே ஒரு பையன் பொறந்தான். அவனுக்கு வேலவன்னு பேரு வைச்சாங்க.
அந்த ஊரிலே 41 தாசிங்க இருந்தாங்க. அவங்களிலே ஒருத்தி பேரு சிவகாமி. அவளோட பிள்ளை திருக்கண்ட நட்டுவன். அவன் ரொம்ப நல்லாப் பாடுவான்.
சிவகாமிக்கு ஒரு பெண் குழந்தை வேணு மின்னு ரொம்பநாளா வேண்டுதல் இருந்தது. தேவி அருளாலே பிறந்த குழந்தைக்கு லக்ஷ்மின்னு பேர் வைச்சா. லக்ஷ்மி நிஜமாவே மகாலக்ஷ்மி மாதிரி கொள்ளை அழகு. அவளை சிவகாமி ரொம்ப செல்லமா வளர்த்தா. நாட்டியம் சொல்லிக் கொடுத்தா. சிவன் கோவில்லே ஆருத்ரா தரிசனம். அற்புதமா லக்ஷ்மி நடன மாடினா. அதைப் பார்த்த வேலவன் லக்ஷ்மி மேலே ஆசைப் பட்டான். லக்ஷ்மிக்கும் அவனைப் பிடிச்சிருந்தது. வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனா. சிவகாமி லக்ஷ்மியைத் தனியாக் கூப்பிட்டு “கூடை கூடையா பிரியம் இருந்தாலும் அது பசியைத் தீக்காது. பணத்தையும் கறந்துக்கோ”ன்னு ஓதினா.
லட்சுமியும் ‘மடியிலே இதென்ன சத்தம்’ அப்படீன்னு கேட்டு அவன் மடிப்பணத்தை எடுத்துத் தனியே வைச்சா. சிவகாமி அவனுக்கு சாப்பாட்டுலே வசிய மருந்தைக் கலந்து கொடுத்துட்டா. அதிலிருந்து வேலவன் லக்ஷ்மி வீடே கதியானான் அவன் வெளியே போவது நகை, வெள்ளிப் பாத்திரங்களை விற்கத்தான்! சொத்தெல்லாம் அழிந்தது.
அதன் பிறகு சிவகாமி அவன் வந்தால் கதவடைத்தாள். “வெறுங்கையை வீசிட்டு வர்ரியே, வெட்கமாயில்லையா” என்று கேட்டாள். “சம்பாதிக்கறவனுக்குத்தான் ஆசை வரலாம்” என்று ஞானம் போதித்தாள்.
மனம் வெறுத்து ஊரிலிருக்கப் பிடிக்காமல் கால் போன போக்கில் நடந்தான் வேலவன். சிவகாமிதான் பண ஆசை கொண்டு விரட்டினாளேயன்றி லக்ஷ்மி அவன் பிரிவைத் தாங்க மாட்டாது தவித்தாள்.
தாயறியாமல் வீட்டை விட்டு வெளியேறி நடுக்காட்டில் அவனைக் கண்டுபிடித்தாள். “அம்மா, புத்தியில்லாமல் பேசி விட்டார்கள். வாருங்கள் வீட்டுக்குப் போகலாம். என் அன்பு குறையானதல்ல” என்று கெஞ்சினாள்.
“இனிமேல் அது சரிவராது. வாந்தி எடுத்ததை சாப்பிட முடியாது. நீ போய் விடு. இங்கே பயங்கர மிருகங்கள் வரும் . கொள்ளையர் வருவர்” என எச்சரித்தான். “என்னைக் கொள்ளையடித்தவர் தாங்கள் தான். நான் தங்களின் நிழல். எப்படிப் பிரிவேன்?” என்று அடம்பிடித்தாள் லக்ஷ்மி.
வெயில் கொளுத்தியது. கள்ளி மர நிழலில் இருவரும் இளைப்பாறினர். லக்ஷ்மி வேலவன் மடியில் தலை வைத்துப் படுத்தவள் நடந்துவந்த களைப்பில் உறங்கிவிட்டாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்த வேலவனின் உள்ளே உறங்கிக் கிடந்த அரக்க மனம் விழித்துக் கொண்டது.