Thursday, June 29, 2006

Paramachaaryal Paathayiley - RP

Kamakoti

ஸ்ரீபரமாச்சார்யாள் பாதையிலே. . .

சென்ற இதழ் தொடர்ச்சி. . .

காளிதாஸன் ஆடு மேய்க்கிறவன். “அம்மா காப்பாத்து’’ன்னு தினமும் காளியை வேண்டிப்பான். போஜராஜா ஒரு கவிஞர். ஒரு நாளைக்கு போஜராஜா “குஸுமே குஸுமோத்பத்தி. ச்ரூயதே நச த்ருச்யதே” அப்படீன்னு சொன்னார். “பூவில் பூ மலர்கிறதுங்கிறதைக் கேட்கிறோமே தவிர பார்க்க முடிகிறதில்லை” என்கிறது இதோட அர்த்தம்.

“மீதி பாதியை சபையிலுள்ளவா பூர்த்தி பண்ணலாம்”னார் ராஜா. எல்லா புலவர்களும் பேசாம இருந்தா. காளிதாசன் பக்கத்துலே ஒரு அழகான பொண்ணு நின்னுண்டிருந்தா. அவளைப் பார்த்துண்டே,

“பாலே தவ முகாம் போn ஜத்ருஷ்டம் இந்தீவ ரத்வயம்”னு பாட்டை முடிச்சான் அவன்.

“இந்தப் பெண்ணோட முகத்தாமரையிலே இரண்டு நீலோத்பலம் மலர்ந்திருக்கறதைப் பார்க்க முடிகிறது’’ங்கறது இதோட அர்த்தம். ராஜா கேள்விக்குப் பதில் சொல்ற அளவுக்கு, அறியாமை என்கிற இருட்டைப் போக்கி அவனுக்கு அம்பாள் அறிவு கொடுத் திருக்கா. ராஜாவே மெய்மறந்து கையைத் தட்டிட்டார்.

இந்த ஸ்லோகத்தை தினமும் முடிஞ்ச வரை பாராயணம் பண்ணினா மனசஞ்சலம் போயிடும் அகங்காரம் போயிடும்

முன்னேயெல்லாம் கோலாட்ட ஜோத்ரைன்னு நடத்துவா. ஸ்த்ரீகள் வயசு வாரியா கோலாட்டம் போடுவா. நவராத்திரியிலே கோயில்லே கண்டிப்பா கோலாட்டம் இருக்கும். கோலாட்டத்தைக் கண்ட அம்பாள் சந்தோஷப்படறா என்கிறது 172-ஆவது ஸ்லோக வரி. சின்ன வயசுலே பளிச்சுனு பாவாடை, சட்டையோட குனிஞ்சு நிமிர்ந்து கோலாட்டம் போடறது தனி அழகு. புதுசு புதுசா கோலாட்ட கோல்கள் விக்கும். பணக்காரா அரசப் பிரதட்சணத்துக்குக் கோலாட்டக் கோல்களை எண்ணிக்கைக்குப் போட்டு தானம் பண்ணுவா. இப்போ கல்யாணத்துக்குக் கச்சேரி வைக்கிற மாதிரி அப்போ கல்யாண ஊர்வலத்துச் சாரட் முன்னால கோலாட்டமும் நடக்கும். கோலாட்ட ஓசை பைசாசங்களைத் துரத்தும்.

நவராத்திரி கொலுவிலே ஒவ்வொரு நாள் ஒவ்வொருத்தர் வீட்டிலே கோலாட்டம் நடக்கும். முன்னேயெல்லாம் கோலாட்ட ஜோத்ரையிலே பல கல்யாணங்கள் நிக்சயமாயிருக்கு. பொண்ணு பாத்துட்டு, வேண்டாமின்னு சொல்ற அவலமெல்லாம் அப்ப இல்லே!

ஹம்ஸ மந்திரத்தின் கருத்தாயிருக்கிறவ அம்பாள். இவா வேண்டியவா, அவா வேண்டாதவான்னெல்லாம் தேவி பார்க்கிறதில்லே! அப்படீன்னா ஏன் அம்பாளை ஆராதிக்கணுமிங்கற கேள்வி வரதுல்லியா? புண்ணியம் சேர்ந்தா நல்லது நடக்கும். அடுத்த ஜென்மாவிலே கஷ்டப்பட வேண்டாம். இந்த ஜென்மாவுலேயே பாவங்கள் கரைஞ்சு போகும். பாவ காரியம் பண்ண மனசு பயப்படும். பரிட்சைக்கு நன்னா படிச்சிருக்கோம். ஆனாலும் பரிட்சை எழுதும்போது கேள்வியோட பதில் மறக்கப்படாதில்லையா? மழைக்குக் குடை மாதிரி, வெயிலுக்கு செருப்பு மாதிரி அம்பாளோட கருணை கட்டாயமா வேணும்.

175-ஆவது வரி மகிழ்ச்சியளிக்கிறவள் தேவி என்கிறது. ஆனந்தம் மகிழ்ச்சி ரெண்டும் ஒண்ணு தானேன்னு நெனைக்கலாம். பேரக் குழந்தை கையையும், காலையும் உதைச்சுண்டு சிரிக்கி றானே! அதைப் பார்க்கறப்போ ஏற்படறது மகிழ்ச்சி. தூங்கற குழந்தையைப் பார்த்து பூரிக்கிறோமே அது மகிழ்ச்சி.

நாம உழைச்சு வருமானத்தைக் கொண்டு வந்து மத்தவாளையும் அனுபவிக்கப் பார்க்கறது ஆனந்தம். தனியா சாப்பிட்டா ருசிக்காது. குழந்தைகள் அதிகாரம் பண்ண ‘அவங்களுக்குப் போடு’ன்னு விட்டுக் கொடுக்கறப்போ கிடைக்கிறது ஆனந்தம். அவளை விடாம வழிபட்டா ரெண்டையும் தருவா.

கண்ணனோடு பிறந்தவ அவ. கம்சனுக்கு எட்டாவது குழந்தை வேணும். அதை அழிக்கணும். அதுக்காக யசோதை வயிற்றிலே பிறந்தா. கிருஷ்ணன் வளர ஒரு இடத்தை உண்டு பண்ணினவ அவ. பிணைக்கைதியாயிருக்க எத்தனை தைரியம் வேணும்? மாய்கையான அவளுக்குத்தான் அந்த தைரியம் இருந்தது. குழந்தை பெத்தவாளுக்குத் தான் பால் சுரக்கும். யசோதை பண்ணின தவம் அம்பாளை சுமந்து ஸ்ரீமந்நாராயண னுக்குப் பாலூட்டினா! வசுதேவர் பண்ணின தவம் இரண்டு பேரையும் சுமந்துண்டு போனார். கம்சன் மாயை யான அம்பாளின் பாதத்தைப் பிடித்ததால் தான் அவனைக் கொல்லாமல் விட்டா.

‘நந்தகோப க்ருஹே ஜாதா யசோதா-கர்ப்ப-ஸம்பவா’ என்கிறது தேவி மஹாத்மியம். நாராயண னோடு பிறந்ததால் அவள் நாராயணி என்றும் அழைக்கப்படறா. வாசுதேவன் ஒளிந்து வளர, கம்சன் கையில் அகப்பட தானே இசைந்து வந்த அந்த தேவி ஜனங்களோட துன்பம் தீரவும் உதவிக்கரம் நீட்டுவா.

(தொடரும்)
- ஆர்.பி