Friday, February 25, 2005

சிறுவர் புத்தகங்கள் - ஆர். பொன்னம்மாள் (8)

நன்னெறிக் கதைகள்: நன்னெறிச் செய்யுள் முப்பதுக்கும் அர்த்தம் எழுதி முப்பது கதைகள் சொல்லப் பட்டிருக்கின்றன. முப்பதிலும் நகைச்சுவை, வீரம், படிப்பினை எல்லாமே நிறைந்திருக்கும்.

கருணை வள்ளல்: ரத்னபாலாவில் வெளி வந்த பழங்கால புலவர் வரலாறுகளும் கலந்து தந்த சிறுகதைத் தொகுப்பு. பரிமாறும் போது புலவரை அவமதிக்க முதுகில் ஏறிக் கொண்ட புலவரை உப்புமூட்டை தூக்கிய சகிப்புத் தனமையும், தந்தை இல்லாத போது வந்த புலவரை வெறுங்கையோடு அனுப்ப மனமில்லாமல்தான் விளையாடியத் தங்கத் தேரை சிற்றரசன் மகன் நீட்டுவதும் மறக்க முடியாத வரலாறு.

பொன்னான காலம்: திரு. சோமு அவர்கள் பள்ளி விடுமுறையில் மாணவர்கள் நடிக்க ஓரங்க நாடகங்கள் வேண்டும் என்று கேட்டு வாங்கிய நாடக நூல். மொத்தம் எட்டு நாடகங்கள். பெற்றவர்களின் கஷ்டங்களைப் புரிந்துகொள்ளும் விதத்தை நயமாகச் சொல்கிற நாடகம் 'பூக்கள் பலவிதம்'. துன்பம் பிறரைத் துன்புறுத்தும் அளவு போகக்கூடாது என்பதை 'மன அழுக்கு' நாடகம் மூலம் உணர்கிறோம்.

விருது பெற்ற புத்தகங்கள் - ஆர். பொன்னம்மாள் (9)

கசந்த இனிப்புகள்: டில்லியில் நடத்திய குடும்பக்கட்டுப்பாடு நாவல் போட்டியில் 1978-இல் தமிழுக்குப் பரிசு கொடுக்கப்பட்ட படைப்பு. குழந்தைகள் கடவுள் கொடுத்த பரிசு; அந்த இனிப்பான பரிசு எப்படிக் கசந்து போகிறது என்பதை ருசிகரமாகச் சொல்லும் புதினம்.

விதியின் பின்னல்: தமிழக அரசால் 1977-இல் மதுவிலக்கு நாடகப் போட்டியில் பரிசு பெற்ற நாடகம். திரு. ப. நீலகண்டன் அவர்கள் வீட்டிற்கு அழைத்துப் பேசி 'நீளமாயிருக்கிறதென்று' குறைத்துத் தரச் சொன்னார். மாண்புமிகு முன்னாள் அமைச்சர் ஆர். எம். வீரப்பன் அவர்கள் பரிசு வழங்கினார்கள். பொருட்காட்சியில் இந்நாடகம் நடிக்கப்பட்டது. மெட்ராஸ் பாஷை ஊடாடிய போரடிக்காத நாடகம். புத்தகமாக வெளிவராமல் 'பழனியப்பா பிரதர்ஸில்' உறங்கிக் கொண்டிருக்கிறது.

ஆன்மிகப் புத்தகங்கள் - ஆர். பொன்னம்மாள் (10)

பாண்டுரங்க மகிமை என்னும் பக்த விஜயம்: கிரி ட்ரேடிங் மற்றும் காமகோடி நிறுவனர் திரு. சொர்ணகிரி அவர்கள் பக்த விஜயம் எழுதும்படி கேட்டுக் கொண்டது 1980-இல். 96-இல் இருந்து காமகோடியில் 'பரமாச்சார்யாள் பாதையிலே', நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி, எல்லை தெய்வங்கள், விவேக சிந்தாமணி என்று பல பகுதிகளில் 'ஆழ்வார்களின் வரலாற்றையும்' மாதப் பகுதியாக எழுதி வந்தார். வேமன்னா, கோபால்தாசர் போன்ற பக்தர்கள் வரலாறு சேர்ந்து பெருகிக் கொண்டே போய், நாராயண பட்டத்ரி, பில்வமங்கள், எழுத்தச்சன் என்று மலையாள அடியார்களும் இணைய ஜூன் 2003-இல் புத்தகமாக வெளிவந்தது. ஆயிரம் பக்கங்களைத் தாண்டும் இந்த நேர்த்தியான வெளியீட்டை எவர் படிக்கத் தொஅங்கினாலும் கீழே வைப்பது சிரமம். பள்ளி இடைவேளையில் வந்து எழுதிய மட்டும் இங்க் மை காய்வதற்கு முன் சுடச்சுடப் படித்துவிட்டு ஓடிய அந்த இனிய பொழுதுகளையும் மறக்க முடியவில்லை; படித்த பெரியோர்களின் தியாக உணர்வும் பொதுமனித அக்கறையும் வராலாறுகளும் மறக்கவில்லை.

தேவி திருவிளையாடல்: இதுவும் 1980-இல் எழுதி முடிக்கப்பட்டது. ஆனால், 1997-இல்தான் வானதியால் வெளியிடப்பட்டது. பராசக்தியின் லீலைகள்; மதுரை, காசி, கன்யாகுமரி வரலாறுகளும், மகிஷாசுரமர்த்தனி, சும்பநிசும்ப, பண்டாசுர வதம் எல்லாம் சொல்லப்பட்டிருக்கும் ஆன்மீக நூல்.

தசாவதாரம்: கங்கை புத்தக நிலைய வெளியீடாக டிசம்பர் 2001-இல் வெளிவந்த நூல். 184 பக்கங்களில் அனாவசியமான வர்ணனைகள் எதுவுமில்லாமல் பத்து அவதாரங்களையும் சிறுவர்களுக்கு ஏற்ற கதை வடிவில் சொல்லப்பட்டிருக்கின்றன.

சிறுவர் புத்தகங்கள் - ஆர். பொன்னம்மாள் (11)

திருக்குறள் கதைகள் - 1,2,3,4: முதல் பாகம் 1981-இல் வெளிவந்தது. அடுத்த மூன்று பாகங்களும் வானதியின் புதல்வர் திரு. ராமநாதன் ஊக்கப்படுத்த எழுதியதே 2000வது ஆண்டில்தான். ஒரே சமயத்தில் வெளிவந்த இவை தேனோடு தரப்பட்ட ஔடதம்.

மூதுரைக் கதைகள்: மூதுரைச் செய்யுள் ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் சொல்வதோடு கதைகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகளையும் பெரியோர்களையும் சுவாரசியப்படுத்த இடை இடையே கவிதைகளும், புதிர்களும் கூட உண்டு.

மகாபாரதக் கதைகள் - 1,2,3,4 பாகங்கள்: வானதி திருநாவுக்கரசு அவரளின் மூத்த புதல்வர் திரு. சோமு அவர்கள் மகாபாரத்தில் ஒரு நிகழ்ச்சியும் விடாமல், அதிகமாக நீட்டாமல், அதிகமாக வர்ணிக்காமல் சிறுவர்களுக்கான கதைகளாகக் கொடுக்க முடியுமா என்னும் வேண்டுகோளை ஏற்று வெளிவந்த நூல்கள் இவை. இன்னும் பல பதிப்புகளையும், இன்றும் பெரும் வரவேற்பைப் பெறும் நூல்கள் இவை. கம்பர், வால்மீகி, வில்லிபாரதம் என்று எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு, யுத்த காண்டத்தையும் ரத்த களறி இல்லாமல் வெகு நளினமாக எடுத்து செல்லும் புத்தகம்.

மரியாதை ராமன் கதைகள்: திருவரசு வெளியீடு - இருபது கதைகள் கொண்டது. 1998இல் வெளிவந்தது. எளிய தமிழில் தோண்டி எடுக்கப்பட்ட புதையல் இது. 'குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.யை பற்றி அம்மா சொல்வார்கள். திறமை அதிகம். விளம்பரத்தைப் புறக்கணித்த மனிதர் என்று. என் தாயும் அப்படித்தான். 'யானைக்குப் பானை சரி' கதையைப் படித்தபோது இதை உணர்ந்தேன்.

குழந்தை எழுத்தாளர் சங்கம் - ஆர். பொன்னம்மாள்

தாய்மாமன் வீட்டிலிருந்த என் அன்னை தன் மாமன் மகனை மணக்க 'எழுதக் கூடாது', என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. பாட்டியின் கண்ணீர் அன்னையின் பேனாக்களை மூடிக் கொள்ள வைத்தது.

முதல் கதை பிரசுரமான நாள்: நவ. 28, 1956
திருமணமான நாள்: ஜன. 28, 1958.

தந்தையின் அனுமதியோடு சில கதைகள் மீண்டும் பிரசுரமாக ஆரம்பித்தது. முதல் குழந்தை பிறந்த நாள்: ஜன. 19, 1960. ஆறாவது மாதம் ஜுரத்தில் அந்தக் குழந்தை மடிந்ததால் தன் எழுத்துப் பணியைத் துறந்த என் தாய் குடும்பமே உலகம் என வாழ்ந்தார்கள்.

என் தமையனுக்கு 15 வயது. என் தமக்கைக்கு 13 வயது. என் தந்தை விரும்பிப் படிக்கும் 'தினமணி' நாளிதழில் குழந்தை எழுத்தாளர் சங்க (கு.எ.ச.) சிறுகதைப் போட்டி அறிவிப்பு வெளி வந்திருந்தது. அக்காவும், அண்ணனும் தூண்ட மீண்டும் எழுத ஆரம்பித்தார்கள்.

நவ. 13, 1976 அன்று 'எல்.எல்.ஏ. பில்டிங்கில்' (தேவநேயப் பாவாணர் நூலகத்தில்) ஏவிஎம் பரிசளிப்பு விழா நடக்கப் போவதாகவும், என் தாய்க்கு இரண்டாம் பரிசு கிடைத்திருப்பதாகவும் கடிதம் வந்தது. இப்போது எங்கள் குடும்பத்துக்கே இறக்கை முளைத்திருந்தது. விழாவில் கலந்து கொண்டு பரிசை வாங்கி வந்தோம்.

(கொஞ்சம் இடைச் செருகல்: கு.எ.ச.வின் 1978 வரலாற்றுப் போட்டியில் கலந்து கொண்ட என் சகோதரியும், 'திரு.வி.க. வாழ்க்கை வரலாற்று'க்கு ஏவிஎம் வெள்ளிப் பதக்கம் பெற்றாள்.)

1983-இல் என் தாய் எழுதிய 'கருணை விழிகள்' என்ற நாவல் கு.எ.ச. மூலமாக முதல் பரிசான தங்கப் பதக்கத்தைப் பரிசாகப் பெற்றுத் தந்ததோடு, கோகுலத்தில் தொடராகவும் வெளிவந்து சிறுவர்களிடையே பெரும் பாராட்டினை பெற்றது.

புத்தக அறிமுகங்கள் - ஆர். பொன்னம்மாள் (5)

கடவுளின் கருணை, கல்லுக்குள் ஈரம், புடமிட்ட பொன், மனமாற்றம் முதலான நான்கு கதைகள் கொண்ட முதல் தொகுப்பு பழனியப்பா பிரதர்ஸ் மூலமாக வெளியிடப்பட்டது.

புடமிட்ட பொன்: ஒரு சிறுவன் வீட்டை விட்டுப் போனால் எப்படிபட்ட துன்பங்களை அனுபவிக்க நேரிடும், பெற்றோரை தண்டிப்பதாக எண்ணி அவன் வாழ்க்கையை அவலப்படுத்திக் கொள்ளும் விதத்தை சித்தரிக்கிறது. இதைப் படிக்கும் சிறுவர், சிறுமியர் வாழ்க்கை என்பது, திரைப்படம் அல்ல. பணக்காரன் கையில் செல்லக் குழந்தையாய் வாழ்வோம் என்பது கனவு என்பதைப் புரிந்து கொள்வார்கள்.

தந்தை மகனை டேபிள் துடைப்பவனாகப் பார்த்தும் கூட கண்ணீரை சொரியாமல், கட்டிப் பிடித்துக் கொண்டு வீட்டுக்கு வா என்று அழைக்காமல் பேசுவது பெற்றோருக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று உணர்த்தலாம்.

கல்லுக்குள் ஈரம் பொல்லாதவனான ஒரு பையனின் கல் போன்ற மனதிலுள்ள ஈரத்தை ஒரு சிறுமி பொறுமை என்னும் உளி கொண்டு உடைத்து வெளிபடுத்தும் விதத்தை சொல்லும் கதை. (இரண்டாம் பரிசு என்பது சற்றே வயதான குழந்தைகளுக்கு என்பதாலே என்று விழாவில் திரு. எம். எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.

கருணை விழிகள்: மோகன் ஏழைச் சிறுவன். சென்னைக் கடற்கரையில் சுண்டல் விற்பவன். பெற்றோரை இழந்த அவனுக்கு பாட்டி மட்டுமே உறவு. ஏழையாலும் பிறருக்கு உபகாரமாக வாழ முடியும் என்பதை உணர வைக்கும் நாவல். பாட்டியின் கருணை நிரம்பிய விழிகள் சாகாமல் மோகனோடு படிப்பவர் விழிகளையும் ஈரமாக்குகின்றன. இது வானதி பதிப்பகத்தாரின் 1984-ம் ஆண்டு வெளியீடு.

அன்பு உள்ளம்: ராஜேஷ¤ம், அவன் தங்கையும் விடுமுறையில் மாமா வீடு சென்று பின்னர் காணாமல் போய் பெற்ற அனுபவங்களைச் சொல்லும் சிறுவர் நாவல். 1978-இல் பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு. இதை வெளியிட்டவர் கவர்னராயிருந்த திரு. பட்வாரி அவர்கள்.

புத்தகக் குறிப்புகள் - ஆர். பொன்னம்மாள்

ஈசாப் நீதிக் கதைகள் பாகம் 1,2: 1998 மார்ச்சில் கங்கை புத்தக நிலையத்தாரால் பிரசுரிக்கப் பட்டவை. பொறுக்கு எடுத்த நவமணிகள். முதல் பாகத்தில் 19 கதைகளும் (96 பக்கம்), இரண்டாம் பாகத்தில் 22 கதைகளும் (103 பக்கம்) இருக்கின்றன. ஒரு கதையில் கழுகு செய்த நன்மைகளும், பசி நட்பை மறக்கச் செய்த விதமும் சொல்லப் பட்டிருக்கிறது. குட்டிக் குட்டிக் கதைகளை மாணவர் மூலமாக நிகழ்கால உவமானக் கதைகள் கூறி விளக்கி யிருக்கிறார். இது என் தாய்க்குக் கை வந்த கலை. இந்த 25 வயதுக் குழந்தை விரும்பிப் படித்த கதைகள்.

பண்டிகை, பலகாரம், மந்திரம் மகிமை: 1983 அக்டோபரில் அம்பாள் பதிப்பக வெளியீடு. 224 பக்கங்கள். ஒவ்வொரு பண்டிகைக்கும் செய்ய வேண்டிய பலகாரம், பூஜா மந்திரம், வழிபாட்டு முறை, அதன் மகிமை எல்லாம் அடங்கியுள்ள நூல். மொத்தம் 19 பண்டிகைகள் உள்ளன. தமிழ்ப் போற்றிகளும் உண்டு.

ஸ்ரீசித்ரகுப்த பூஜை: 1997 ஏப்ரலில் கிரி ட்ரேடிங் ஏஜன்ஸியால் வெளியிடப் பட்ட நூல். 32 பக்கங்கள்.

அரிச்சந்திர புராணம்: வானதி அவர்களின் மைந்தரான திரு. ராமநாதன் கேட்டு எழுதிப் பிரசுரித்த புத்தகம் இது. அரிச்சந்திரன் பொய் சொல்லி வருணனை ஏமாற்றினான் என்ற செய்தி எனக்கு முதல் அதிர்ச்சி. அவர் எப்படிப் சத்தியவானன் ஆனான் என்பது சுவாரஸ்யமான கதைப் போக்கு. 123 பக்கங்களில், 15 அத்தியாயங்களில் தர்ப்பையைக் கழுத்தில் கட்டிப் பிள்ளையை விற்ற விசுவாமித்திரரின் மனைவியை சந்திக்கலாம். திரிசங்கு, நிமி இவர்களோடு தூங்கியதற்காக சபித்த வசிஷ்டரையும் காணலாம்.

பிள்ளையை விற்ற அஜீகர்த்தன், விசுவாமித்திரரின் வளர்ப்புப் பிள்ளை சுனச்சேபன் ஆகியோரும் உலவுகிறார்கள். முப்பது விதமான நரகங்கள் விஸ்தரிக்கப் பட்டிருக்கின்றன. பாபம் செய்ய மனம் நடுங்கும் அவைகளைப் படித்தால். இதே போல் சொர்க்க விபரங்களும் தரப் பட்டிருக்கின்றன. பாதாள உலகமும் வர்ணிக்கப் படுகிறது. இவற்றை யெல்லாம் எமதர்மனே அரிச்சந்திரனுக்குச் சொல்கிறார்.

சிறுவர் புத்தகங்கள் - ஆர். பொன்னம்மாள்

இராஜேஷ்: மாணிக்கமாக மாறிய சிறுவன் பெற்றப் படிப்பினையை சுவாரஸ்யம் குறையாமல் சொன்ன நாவல். வானதி வெளியீடு.

கனிந்த மனம்: சிறுவர் நாடக நூல். வானதி வெளியீடு.

பொன் மனம்: 1997-இல் குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய நாடகப் போட்டியில் ஏவிஎம் வெள்ளிப் பதக்கம் பெற்ற நாடக நூல். வானதி வெளியீடு. அருணை உதாரணச் சிறுவனாகக் கொண்டாடும் நாடகம்.

திருந்திய நெஞ்சம்: சிறுகதைத் தொகுப்பு. எல்லாமே சிறுவர்களுக்கான அற்புதமான கதைகள். 'இப்ப என்ன அவசரம்' என்று சோம்பேறித் தனத்தை வளர்த்துக் கொண்டு உல்லாசமாக இருக்கும் சிறுவன் திறமையிருந்தும், விழலுக்கு இறைத்த நீராய் பாராட்டுப் பெறாமல் நிற்பது, கானாப் பாடல் போல் சிறுவர் மனதில் பதியும் (வானதி வெளியீடு).

பாட்டி சொன்ன கதைகள் 1,2,3: 1980-ல் முதல் பாகம் வானதி பதிப்பகத்தாரால் வெளியிடப் பட்டது. நான்கு பாகத்தையும் எழுதிக் கொடுத்தாலே வெளியிடுவேன் என்றார் திரு. திருநாவுக்கரசு அவர்கள். சவாலுடன் முடித்துக் கொடுத்தார் என் அன்னை. 1992-ல் இரண்டாம் பாகமும், 1993-ல் மூன்றாம் பாகமும் வெளி வந்தது. நான்காம் பாகம் இன்னும் வெளிவர வில்லை. பழங்காலக் கதைகள். அத்தனையும் நவரத்தினங்கள். கையிலெடுத்தால் பெரியவர்களுக்கும் கீழே வைக்க மனம் வராது.

'சொக்கா... சொக்கா... சோறுண்டா?', இருட்டில் ஏன் சாப்பிடக் கூடாது என்பதை விளக்குகிறது. குணமித்திரன் கதை முழக் கயிறாலும் பொருள் ஈட்டலாம் என்று சொல்கிறது. 'வர வர மாமியார் தேய்ந்து கழுதை போலானாள்' என்பதை இப்போதும் படித்து வயிற்றைப் பிடித்துக் கொள்ளலாம். அஷ்டலட்சுமிகளையும் வீட்டுக்குள் வரவழைக்கும் தந்திரம் சொல்லப் பட்டிருக்கிறது.

காமகோடி - ஜனவரி 2004 - அம்மாவின் எழுத்துகள்

ஆர். பொன்னம்மாளின் ஜனவரி மாத பரமாசார்யாள் பாதையிலே, விசேஷ தினங்கள், கிராம தேவதைகள் இணையத்தில் கிடைக்கிறது.

முதற் பிரசுரம் - ஆர். பொன்னம்மாள் (3)

அம்மாவின் தோழிகளை விரல் விட்டு எண்ண ஆரம்பித்தால் ஒரு கை அதிகம். முக்கியமானவள் ருக்மிணி. பதினாறு வயது; 'எழுது' என்று (நம் மரத்தடி தோழர்களைப் போல்) தூண்டினாள். 'நானா? முடியுமா? அச்சில் வருமா?' என்ற சந்தேகங்களைத் துடைத்தவள் தோழி. எழுதினாள். தோழி சொல்படி ஸ்டாம்பு வைத்து! முக்கால்வாசி திரும்பிக் கூட வரவில்லை.

கன்னடியன் வாய்க்காலில் குளிக்கப் பிடிக்காமல் ஒரு மைல் தூரமிருக்கும் தாமிர பரணிக்கு நீராடச் செல்வார்கள். அதுவும் எப்படி? படித்துறையில் அல்ல! தாண்டித் தாண்டி நடுப் பாறைக்கு. அவள் விரும்பிய தனிமை அங்குதான் கிடைத்தது. தேகம் சிலிர்க்கும் மட்டும் நீரிலேயே அமிழ்ந்து கிடப்பாள். மணிமுத்தாறு நதியிலும் அப்படித்தான். நீச்சலடித்தால் கூட தண்ணீரின் அலப்பல் தன் கற்பனையை பாதிக்கும் என்று தோழியிடம் நீச்சலைக் கற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள்.

கரையிலிருந்த செம்பருத்தி, தங்க அரளி, கொன்றை, நந்தியா வட்டை போன்ற மலர்களைத் தொடுத்து மாலையாகக் கட்டி 'லஷ்மீபதி'க்குச் சாற்றுவதே அவளின் இறைத் தொண்டு.

இரண்டரை ஆண்டுகளோடு கிராம வாழ்க்கை முடிந்து மதுரை அருகில் நத்தம் என்கிற ஊருக்குக் குடித்தனம் பெயர்ந்தது.

அங்கேயும் அவளுடைய இலக்கியப் பசிக்கு உணவு கிடைத்தது. 'அருணாசலக் கவிராயரின்' ராம நாடகக் கீர்த்தனைகளை இரண்டே நாட்களில் பாடித் தொண்டை கட்டிக் கொண்டது. அங்கே, ஜகதலப் பிரதாபன், மதன காம ராஜனெல்லாம் கிடைக்கப் பெற்றாள்.

கரு.முத்து. தியாகராஜன் செட்டியார் நடித்தி வந்த 'தமிழ்நாடு' ஞாயிறு மலரில் ஒரு சிறுகதைப் போட்டி அறிவித்திருந்தது. 'இரட்டைப் பரிசு' என்று ஒரு கதை எழுதி அனுப்பினாள். திடீரென்று ஒரு மாலை... 'போஸ்ட்' என்று அவள் மடியில் விழுந்தது 'தமிழ்நாடி'ன் ஞாயிறு மலர். அதில் 'இரட்டைப் பரிசு' பிரசுத்துக்க்குரிய கதையாக வெளிவந்திருந்தது. அவளுக்கு இறக்கை முளைத்து விட்டதா என்று தெரியவில்லை. பறந்தாள். அதன்பின், மாதமிருமுறை அவளது கதைகள் பிரசுரமாயின. 'அன்பு மனம்', வழிகாட்டி, இன்ப ரகசியம், விதி சிரித்தது, கண் திறந்தது, சந்தேகப் பேய் இவைகள் குறிப்பிடத் தக்கவை. வாசகர்களின் கடிதங்களையும் பெற்றவை.

முதல் கதைக்குக் கிடைத்த சன்மானம் ஐந்து ரூபாய். அப்புறம் ஒவ்வொரு கதைக்கும் பத்து ரூபாய். 'தமிழ்நாடு' நாளிதழின் ஆசிரியரான திரு. எம். எஸ். பி. சண்முகம் பாராட்டி எழுதிய கடிதங்கள் குடும்பத்தில் புயலை எழுப்பியது.

துள்ளித் திரிந்த காலம்

என் அம்மாவின் பிறந்த நாள் மே 21, 1937. அவரின் பெற்றோர்களான லக்ஷ்மி, இராமசுப்பிரமணியம் பெயரிலும் பத்திரிகைகளில் எழுதி உள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்தவர். 1944 ஜனவரியில் அம்மாவுக்குத் தங்கை பிறந்தாள். அதே ஆண்டு கந்த சஷ்டியன்று தந்தையை இழந்தார்.

1951-இல் சென்னையை விட்டு கல்லிடைகுறிச்சிக்கு அருகில் இருக்கும் சிங்கம்பட்டி ஜமீனுக்கு குடி பெயர்ந்தனர். தாத்தாவின் பிரிவை மறக்க தாய் துணையாகத் தேடிக் கொண்டது படிக்கும் பழக்கத்தை. ஆனந்த விகடன் துணுக்குகளைப் படித்த சிறுமி மெதுவாக சிறுகதைகளைப் படித்தாள். தொடர்ந்து 'லஷ்மி'யின் நாவல்களான பெண்மனம், காஞ்சனையின் கனவு, லட்சியவாதி, 'தேவனின்' துப்பறியும் சாம்பு, ஸ்ரீமான் சுதர்சனம், மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், 'எஸ்.ஏ.பி'யின் காதலெனும் தீவினிலே, இன்றே,இங்கே,இப்பொழுதே, நீ, சூறாவளி போன்ற கதைகளில் லயித்ததோடு மட்டுமில்லாமல் அவர்களோடு வாழ்ந்ததாகவே சொல்லி யிருக்கிறார்கள்.

கல்கியின் 'பொன்னியின் செல்வனே' சரித்திரமும் ருசியாயிருக்கும் என்று அவர்களுக்கு சொல்லி கொடுத்தது. பி.எஸ். ராமையா, எஸ்.வி.வி, எல்லார்வி கதைகள் அம்மாவின் உணர்வுகளை அலைக்கழித்தவை. இன்னார் கதைகள் என்று பொறுக்காமல், போரடிக்கும் (நான் எழுதுவது போன்ற :) கதைகளிலும் என்ன இருக்கிறதென்று பார்க்க பொறுமையுடன் படித்தாள்.

பொன்னியின் செல்வனின் முதல் பாகத்தோடு சென்னை வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. சிங்கம்பட்டியில் ஒரு ஓவர்ஸியர் குடும்பத்தில் கல்கி இருப்பதை அறிந்து மீண்டும் வந்தியத்தேவனும், குந்தவையும், நந்தினியும், அருள்மொழி வர்மனும் அவளோடு உறவாடினர். மீண்டும் ஆனந்த விகடன் அவர்களின் நண்பனானான்.

ஒரு சிவராத்திரி இரவில் பெரிய எழுத்து விக்ரமாதித்தனை முடித்தாள். அவர்கள் பெரியப்பா வீட்டிலிருந்த கம்பராமாயணம், வால்மீகி ராமாயணம் அவளை ஆன்மீகத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்தது. அவளைச் சுற்றி எப்போதும் சிறுவர், சிறுமியர் அவளது கற்பனைக் கதைகளைக் கேட்க; பிள்ளைகலைச் சாக்கிட்டு பெற்றோரும் கூடினர்.

அவளுக்கு மிகவும் பிடித்த பத்திரிகை குமுதம். போரடித்த போது படிக்க ஆரம்பித்த சாண்டில்யனின் சரித்திரக் கதைகளால் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டாள். குறிப்பாக சீனாவின் அங்குபங்சர் சிகிச்சையில் காதலே பிறந்தது.

அம்மா...

என்னுடைய அம்மா ஆர். பொன்னம்மாளை குறித்து எழுத வேண்டும் என்ற வேண்டுகோளுக்கிணங்க, நாளை முதல் அவர்களின் வாழ்க்கையை சிறிது சிறிதாக பதிய முயலப் போகிறேன். அதற்கு முன் அவர்களின் தற்போதைய எழுத்துக்களை படிக்க விழைவோருக்கு, சில சுட்டிகள்.

காமகோடியில் எழுதுவதில் எனக்கு மிகவும் பிடித்தது 'பரமாசார்யாளின் பாதையிலே' . எளிய தத்துவங்கள்.

கிராம தேவதைகள், விரத விசேஷ தினங்கள் என மாதா மாதம் எழுதுகிறார். அவ்வப்பொழுது கோலங்கள் பகுதியும் காமகோடியில் வருகிறது.

நவமபர் மாதப் பகுதிகளையும் படித்து விட்டு காத்திருங்கள் :)

கடைசியாக, அவர்களின் சமீபத்திய புத்தகமான 'பக்த விஜயத்துக்கு' ஓர் அறிமுகம்.