Thursday, June 29, 2006

Akshaya Thrithiyay, Vya New Year

Giri Trading

2006 ஏப்ரல் மாத விசேஷ தினங்கள்

1-4-2006 ஸ்ரீவேதவியாசர் திருநக்ஷத்திரம்
பதினெட்டு புராணங்களை யும் இயற்றியவர் ஸ்ரீவேத வியாசர். இவர் மகாபாரதத்தை எழுத ஆள் தேடிய போது அதற்கு கணபதி முன்வந்தார். அனால் ஒரு நிபந்தனை விதித்தார். “நான் ஓலையில் எழுத்தாணி பதித்தால் நிறுத்தாமல் வாசகம் வரவேண் டும்” என்பதே அது. “சரி. ஆனால் அர்த்தம் புரிந்து கொண்டுதான் எழுத வேண்டும்” என்று மேல் நிபந்தனையிட்டார் வியாசர். கணேசர் ஒப்புக் கொண்டார். கடினமான பதங்களைச் சொல்லி விட்டு யோசிப்பார் வியாசர். நிதானமாய் யோசித்தபடி
எழுதுவார் மூஷிகவாகனர்.
இப்படி விக்னேஸ்வரருக்கு ஈடு கொடுத் தவர் வியாசர். சுக மகரிஷியின் தந்தை இவர். தனக்குள்ள கடமை முடிந்து வானுலகம் செல்ல விரும்பி காசிக்குப் போய் கங்கை யில் மூழ்கினார். “அபராத க்ஷமாயாசனம்” சொன்னார். (தன்னை அறியாமல் ஏற்பட்ட தவறுக்கு மன்னிப்புக் கேட்பது) “கீதையின் நாயகனே நீயே விஸ்வ ரூபி. என்னைக் கடைத் தேற்று” என்று உரக்கக் கூறினார்.

அப்போது அங்கே வந்த நந்திதேவர் சினம் கொண்டு “வியாசரே! இது காசி. இங்கே விஸ்வநாதருக்கே முதலிடம். பிரம்மாண்ட புராணத்தில் ‘அனைத்து சக்திகளும் ஒன்றே’ என்று கூறிவிட்டு இப்படி திருமாலை விஸ்வரூபி என் கிறீரே? உமது தூக்கிய கைகளும், மூழ்கிய கால்களும் வெட்டப் படட்டும்” என்று சபித்துவிட்டார்.

“உடலை விடப்போகும் இந்த சமயத்தில் உன் சாபம் என்னை என்ன செய்யும்? என்று வியாசர் சிரிக்க,“மறுபிறவியில் பலிக்கும்” என்றார் நந்தி. அதன்படி ஜயதே வராய் பிறந்து கைகால் வெட் டுண்டு ‘கீதகோவிந்தம்’ பாடி இறைவனருளால் கை, கால் வளரப் பெற்றார். அஷ்டபதியில் திருப்தி அடையாமல் மறுபடி வேண்டி தீர்த்த நாராயணராகப் பிறந்து ‘லீலா தரங்கிணி’யைப் பாடிய மகான் இவர்.



--------------------------------------------------------------------------------

5-4-2006 நந்திதேவர் ஜனன உற்சவம்
சிவபக்தரான சிலாத முனிவர் சொர்க்கம் செல்லும் வழியில் தனது பிதுர்க்கள் நரகத்தில் அல்லலுறுவதைக் கண்டு வருந்தி பூவுலகம் திரும்பி தவமிருந்தார். பிரத்யட்சமான ஈசனிடம் “உம்மைப் போலவே ஒரு பிள்ளை வேண்டும்” என்று வரம் கேட்டார். “புத்திர காமேஷ்டியாகம் செய்” என்று அருளினார் கைலாஸபதி. யாகத்துக்காக சிலாத முனிவர் நிலத்தை உழுதபோது ஒரு பெட்டி கிடைத்தது. திறந்து பார்த்தால் நான்கு கைகள், மூன்று கண்கள், தலையில் பிறைச்சந்திரனோடு தேஜஸான ஒரு குழந்தை! அரக்க மாயையோ என்று முனிவர் பயந்து பெட்டியை மூடிவிட்டார்.

“அஞ்சாதே! பிதுர்க்களைக் கரையேற்ற நந்தி பிறந்திருக் கிறான்; மீண்டும் திறந்து பார்” என்று அசரீரி ஒலித்தது. மறுபடி திறந்து பார்த்தார் சிலாதர். சாதாரணக் குழந்தை காட்சி யளித்தது. குழந்தையை வாரி யணைத்து அன்போடு வளர்த்தார் சிலாதர். இளம் வயதிலேயே வேத, ஆகம, சாஸ்திரங்களைக் கற்றறிந் தான் நந்தி.

ஒருநாள் மித்ரா, வருணன் என்ற இரு தேவர்கள் ரிஷி வடிவில் சிலாதரின் பர்ண சாலைக்கு வந்தனர். நந்தி அவர்களை நமஸ்கரிக்க, “நந்தியின் ஆயுள் எட்டு” எனக் கூறினர் இருவரும்.

சிலாதர் வேதனைப்பட, நந்தி மிருத்யுஞ்ஜய மந்திரம் ஜபித்து சிரஞ்சீவியாகும் பாக்கியமும், ஈசனை சுமக்கும் பேறும், கையில் பொற்பிரம்பும் வாளும் ஏந்தி கயிலையில் வாயில் காப்போனா கும் வைபவமும் பெற்றார்.

பாற்கடலில் அமிர்தம் தோன்றிய நாள் துவாதசி காலை. அமிர்தம் உண்ட தேவர்கள் மகிழ்ச் சியில், விஷம் அருந்திக் காத்த ஈசனை மறக்க, திரயோதசியன்று சூரிய அஸ்தமனத்துக்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன் தன்முன் இருந்த நந்தியின் கொம்புகளின் நடுவே மானும், மழுவும், சூலமும் குலுங்க, தண்டையும், சிலம்பும் ஒலிக்க, கங்கை தளும்ப நடனமாடினார் சிவபிரான். சரஸ்வதி உடனே வீணையை மீட்டினாள். இந்திரன் புல்லாங்குழல் ஊத, பிரம்மன் தாளம் தட்ட, திருமால் மிருதங்கம் வாசிக்க திருமகள் கீதமிசைத் தாள். அதுவே பிரதோஷம் எனப் படும் ரஜனீ முகவேளை. ரஜனீ முகம் என்றால் சாயங்காலம். அந்த நேரம் எல்லா உயிர்களும் ஈசனுக் குள் ஒடுங்கி விடுவதாக ஐதீகம். பிரதோஷ காலத்தில் ஈசனோடு நந்தியையும் வழிபட்டால் ஆயிரம் அஸ்வமேத யாகப் பலன் என்று சிவபுராணம் சொல்கிறது.

கைலாயத்தில் நவரத்தினங் கள் பதித்த மரகத ஊஞ்சலில் பார்வதி-பரமேஸ்வரன் வீற்றிருக்க எதிரேயுள்ள நந்திதேவர் விடும் மூச்சுக் காற்றில் அந்த தெய்வீக ஊஞ்சல் ஆடுகிறதாம்! அதனால் சிவலிங்கத்துக்கும், நந்திக்கு மிடையே நமஸ்காரம் செய்யக் கூடாது.

“தத்புருஷாய வித்மஹே சக்ர துண்டாய தீமஹி

தந்நோ நந்தி: ப்ரசோதயாத்” என்பது சாண்டில்ய முனிவர் அருளிய ஸ்ரீ நந்திகேஸ்வரகாயத்ரி யாகும்.


--------------------------------------------------------------------------------

6-4-2006 ஸ்ரீராம நவமி
வேய் புனர்பூசமும், விண்ணு ளோர்களும், தூயகற்கடகமும் எழுந்து துள்ளப் பிறந்தவர் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி. பத்ராசலத் தில் இன்று திருக்கல்யாண விழா நடக்கும். ஸ்ரீராமர் சித்திரை மாதம், நவமி திதியில், பூனர் பூசம் 4-ஆம் பாதத்தில் அவதரித்தார். சூரியன், சனி, குரு, குஜன், சுக்ரன் ஆகிய ஐந்து கிரகங்கள் உச்சம். சந்திரன் ஆட்சியிலிருக்கும்போது உதித்த வர் ரகுநாதன். இராமாவதாரம் நடுப்பகலில் அரண்மனையில் நடந்ததென்பதால் கிருஷ்ணா வதாரத்தை நள்ளிரவில்
சிறையில் அமைத்துக் கொண்டார் பகவான். அவருக்கு அரண்மனையும், ஆரண்யமும், சிறையும் சமமே! ஸ்ரீ ராமபிரானின் அவதார தினத் தைக் கொண்டாடுவது ஜன்மோத் ஸவம். பிரதமை முதல் நவமிவரை இராமாயணத்தைப் பாராயணம் செய்து தசமியன்று பட்டாபிஷே கத்தை முடிப்பது ஒருவகை. நவமி முதல் பத்து தினங்கள் பாராயணம் செய்வோரும் உண்டு. பட்டாபிஷே கத்தன்று, ஸ்ரீராம நவமியன்று பானகம், நீர்மோர்,வடைபருப்பு, விசிறி என்று தானம் செய்வார் கள். விஸ்வாமித்திரரின் பின் சென்ற போதும், பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்த போதும் ராமபிரான் வெய்யிலில் அலைந்தார். அவர் ஜனித்தது கோடை காலத்தில். அதனால் இந்த தானங்களும், நிவேதனங் களும் வகுக்கப்பட்டிருக்கின்றன. அஷ்டமியும், நவமியும் மகா
விஷ்ணுவிடம் சென்று “ஜனங்கள் எங்களைப் புறக்கணிக்கின்ற னரே” என்று வருந்த “இரு திதிகளிலும் நான் அவதரித்து உங்களைக் கொண்டாடச் செய்கிறேன்” என்று வாக்களித் தாராம்! அதன்படி ஸ்ரீராம நவமி யும், கோகுலாஷ்டமியும் பக்தர் களால் கொண்டாடப்படுகின்றன. வேடனான குகனையும், வானர னான சுக்ரீவனையும், அரக்க னான விபீஷணனையும் உடன் பிறந்தவர்களாக ஏற்றவர் ரகு நந்தனர். ஒரே பாணம், ஒரேசொல், ஒரே பத்தினி, என வாழ்ந்த அவரது மலரடியை இந்நன்னாளில் வணங்கி வழிபடுவோம். திருநெல்வேலி பஞ்சாங்கப்படி 7-4-2006-ல் வைஷ்ணவ ஸ்ரீராமநவமி கொண்டாடப்படுகிறது.



--------------------------------------------------------------------------------

11-4-2006 பங்குனி உத்திரம்
இன்று ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீரங்க நாச்சியார் திரு அவதார தினம். குரு வீடான மீனத்தில் சூரியனும், புதனின் உச்சவீடான கன்னியில் சந்திரனும் ஏழாம் பார்வையாகப் பார்த்துக் கொள்ளும் நாளே பங்குனி உத்திரம். முருகன்-ஸ்ரீவள்ளியையும், ஸ்ரீராமபிரான் - சீதாபிராட்டியாரையும், பார்வதி பரமேஸ்வரரையும் விவாகம் செய்து கொண்ட மங்கல நாள் இதுவே. காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், வரதர் கோயில்கள்; செஞ்சி, தேவதானம் பேட்டை, திருவண்ணாமலை, ஸ்ரீகள்ளழகர் கோயில்கள்; ஸ்ரீ வில்லிப்புத்தூர், மதுரை ஸ்ரீகூட லழகர் கோயில்; திருமோகூர் ஆகிய ஸ்தலங்களில் திருக்கல் யாண வைபவம் நடைபெறும்.

குடந்தை ஸ்ரீ ஆதிகும்பேஸ் வரர் மகாமகக் குளத்தில் தெப்பத்தில் வலம் வருவார். கும்பகோணம் ஸ்ரீசாரங்க பாணி வெள்ளி தேரில் பவனி, மயிலம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி அக்னி தீர்த்தம்; இரவு தெப்பத்தில் உலா. காஞ்சி ஸ்ரீ ஏகாம்பரநாதர் காலையில் கம்பா நதியில் ருத்ர பாத தீர்த்தம்; இரவு தங்க ரிஷபம், மேலக் கோட்டை திருநாராயணபுரம் ரதோற்சவம். திருவாரூர் ருத்ரபாத தரிசனம். தில்லை ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள் கருட சேவை, திருப்பா திரிப்புலியூர், மதுரை, திருவேடகம், பழனி, விரிஞ்சிபுரம் தீர்த்தவாரி ஆகியவை இத்திருநாளில் நடக்கும்

--------------------------------------------------------------------------------


14-4-2006 “விய” தமிழ் வருடப் பிறப்பு விஷு புண்ணிய காலம்
இன்று முதல் ‘விய’ஆண்டு தொடங்குகிறது. வீட்டின் பூஜை அறையில் முகம் பார்க்கும் கண்ணாடி முன் ஒருதட்டை வைத்து அதை நகைகள், மலர்களால் அலங் கரித்து இருபுறமும் பளபளக்கும் குத்து விளக்கை ஏற்றி, படி நிறைய நெல் அல்லது அரிசிக் கிண்ணங்களில் பருப்பு வகைகள், புஷ்டியான வாழைக்குலை, பலாப்பழம், மாம் பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கொத்து, பூசணிக் காய், வெள்ளரிக்காய், சேனை, தென்னம்பூ, கொன்றைப்பூங் கொத்து, முழுவெள்ளி
ரூபாய் இவற்றை வைத்து, இவற்றில் கண்விழித்து, நமஸ்கரித்து ஆசி பெறுவதே விஷுக்கனி காணல். குருவாயூரில் துண்டுகளையும், சேலை முந்தானையையும் விரித்துப் படுத்து காத்திருந்து விஷு தரிசனம் காண்போர் ஏராளம். இப்படிச் செய் தால் ஆண்டு முழுவதும் நல்லதே நடக்கும் என்பது ஆன்றோர் காட்டிய வழி.

நாரதர் பெண்ணாக மாறிய போது பெற்ற இருபதாவது குழந்தை ‘விய’. ‘விய’ என்றால் செலவு. ஜாதகத்தில் லக்னத்திலிருந்து பன்னிரண்டாவது இடத்துக்கு ‘விய’ ஸ்தானம் என்று பெயர். அதே இடத்தை அயன, சயன, போகஸ் தானம் என்றும் சொல்வார்கள். ஏன் நாரதர்(தி) அப்படிப் பெயர் வைத்தார்?

‘இந்திரியத்தை விரயம் பண்ணாதே’ என்று எச்சரிக்கிறார். அதே சமயம் பணத்தைப் பெட்டியில் அடுக்கிப் பார்ப்பதில் எந்தப் பெருமையும் இல்லை. அதை அன்னதானம், வஸ்திரதானம் கோயில் திருப்பணி என்று செல விட்டால் புகழும், புண்ணியமும் கிடைக்கும். சக்தியை செலவிட்டு தான் சம்பாதிக்கிறோம். செலவு சிறப்படைய வேண்டும். கடந்த பார்த்திப ஆண்டு ‘அரசன்’. அரசன் வரிப் பணத்தை விரயம் செய்தால் கொடுங்கோலாட்சி. மக்களுக்கு நாட்டுக்கு நற்பணி செய்தால் சுப ஆட்சி. அடுத்துவரும் ஆண்டு ‘சர்வ ஜித்து’ சகலத்தையும் ஜெயித்தவன். பார்த்திப-சர்வஜித்து இரண்டுக் கும் நடுவிலிருப்பது ‘விய.’ தலை வன் விரயம் பண்ணாவிட்டால் சகலத்திலும் வெற்றி கிடைக்கும். செலவு நன்மை தருவதாக, நியாய மாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே இப்பெயரை வைத் தார். ‘விய’வோடு‘ ன்’ சேர்த்தால் பெருமை. ‘த்’ சேர்ந்தால் ஆகாயம். நம் செலவு பெருமைப்படுவதாக இருந்தால் ஆகாயம்போல் உயரலாம்.

நாராயணீயத்தில் குசேல சரித்திரத்தில் “க்ருதம் க்ருதம் நன் ‘விய’ தேதி ஸ்ம்பரமாத்” என்று ஒரு வாக்கியம் வருகிறது. ‘குருவாயூர் கிருஷ்ணன்’ தலையசைத்து ஒப்புக் கொண்ட ஸ்லோகமான இதன் அர்த்தம் “போதும் போதும் என்று ருக்மணி தேவி தடுக்கின்ற வைபவம்” இது.“ இரண்டாவது பிடி அவலை ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா சாப்பிட்டிருந்தால் துவாரகையே கை நழுவி விடும்” என்று எச்சரிக்கிறாள்.

பணம், சொத்து வாங்க, கன்யாதானம் பண்ண விரயமாக லாம். தீய போகங்களுக்கு விரய மாகக் கூடாது என்பதை இந்த ஆண்டின் பெயர் உணர்த்து கின்றது. கிளர்ச்சி என்ற பெயரில் பொது சொத்துக்களை அழிக்காம லிருப்போம். உலகமெல்லாம் சுபீட்சம் பெருக, ஊரில், இல்லத்தில் சுற்றத்தில் சந்தோஷம் ததும்ப, தொழிலில் முன்னேற இந்நன் நாளில் நாமும் ஆண்டவனைப் பிரார்த்திப்போம்.


--------------------------------------------------------------------------------


18-4-2006 வராஹ ஜெயந்தி
வைகுண்டத்தின் வாயில் காப்போராகிய ஜய- விஜயர்கள் சனகாதியரின் சாபத்தால் கஸ்யபர்-திதியின் மைந்தர்களாகப் பிறந்தனர். அவர்களே இரண் யகசிபு-இரண்யாட்சன். இவர்கள் பிறந்தபோது பூமி அதிர்ந்தது. ஆந்தைகள் அலறின. நரிகள் ஊளையிட்டன. சூறாவளி வீசியது. பிரம்மாவைக் குறித்து தவமிருந்த இரண்யாட்சன் பன்றியைக் கேவல மாக நினைத்ததால் அதை நீக்கி மற்ற எவராலும் மரணம் வரக் கூடாது என்று வரம் பெற்றான். நான்முகன் யோக நிஷ்டையில் ஆழ்ந்தார். அவரது நாசித் துவாரத்திலிருந்து கட்டை
விரலளவு வெளிப்பட்ட வராகம் நொடிக்கு நொடி வளர்ந்து மலை போலானது. அதன் உறுமல் பதினான்கு லோகங்களிலும் ஒலித்தது. பூமாதேவியை அபகரித்து கடலுக்கடியில் ஒளித்து வைத்த இரண்யாட்சன், வருணனை யுத்தத்திற்கு அழைத்தான். வருணன் வராஹ மூர்த்தியைக் காண்பித்து “அவரே உனக்கு சமமான வலிமையுடையவர். அவரிடம் போய் மோது” என்றான். வராஹப் பெருமாளோடு போரிட்டான் அரக்கன். அவனை சம்ஹரித்து பூமியை மீட்டு நிலை நிறுத்தினார் பூவராஹர்.

ஆனந்தத்தினால் வராகர் புன்னகைக்க அவரது கண்களிலி ருந்து விழுந்த கண்ணீரிலிருந்து அரசமரமும், திருத்துழாயும் தோன்றின. வராக மூர்த்தியின் மேனியிலிருந்து பெருகிய வியர்வை வெள்ளம் ஸ்ரீமுஷ்ணம் என்ற ஸ்தலத்தில் நித்ய புஷ்கரிணியாக விளங்குகிறது. சித்ரா பௌர்ணமி யன்று ஸ்ரீவராக மூர்த்தி பூமாதேவி யுடன் ஒரு முகூர்த்தகாலம் அதில் ஜலக்கிரீடை செய்வதாய் ஐதீகம்-இன்று இதில் ஸ்நானம் செய்வது மிகவும் விசேஷமானது.


--------------------------------------------------------------------------------

23-4-2006 திருப்பைஞ்ஞீலியில் அப்பருக்கு கட்டமுது கொடுத்த வைபவம்
காவிரியைக் கடந்து திருப் பைஞ்ஞீலியை நோக்கி நடந்த நாவுக்கரசர் பசியாலும், தாகத் தாலும் மெய் வருந்தினார். சிவ பெருமான் ஒரு சோலையையும், குளத்தையும் உண்டாக்கி அந்தணர் ரூபத்தில் வந்து அப்பரை அழைத்து “என்னிடம் கட்டு சோறு உள்ளது. உண்டு பசியாறி செல்ல லாம்” என்றார். சாப்பிட்டு
பொய்கையில் நீர் அருந்தி இருவரும் நடந்தனர். கோயிலுக் குள் சென்றதும் அந்தணராக வந்த சிவன் அந்தர் தியானமானார். “என் பசியும், தாகமும் தீர்க்க வந்தனையே” என்று அப்பர் பெருமான் மெய்யுருகிப் பதிகம் பாடிய நாள் இது. ஞீலி என்றால் ஒருவகை வாழை. திருப்பைஞ்ஞீலியில் ஸ்தல விருட்சம் “ஞீலி வாழை.” இந்நன்னாளில் சிவனை வழிபட்டால் அன்ன தோஷங்கள் விலகும். வயிற்று நோய்கள் குணமாகும்.


--------------------------------------------------------------------------------

25-4-2006 ஸ்ரீரமணமகரிஷி 56-ஆவது ஆண்டு ஆராதனை
விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி என்னும் ஊரில் அவதரித் தவர் ஸ்ரீரமணர். சுந்தரம் ஐயர்-அழகம்மை தம்பதிகளுக்கு 30-12-1879-ல் பிறந்த இவருக்கு பெற்றோர் சூட்டிய நாமம் வேங்கடராமன். உடன் பிறந்தவர் தமையனார் நாகசாமி; தம்பி நாக சுந்தரம்; தங்கை அலமேலு. 1892-ல் தகப்பனார் இறைவனடி சேர்ந்தார். வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது. உடல்வேறு, உயிர்வேறு என்ற எண்ணங்கள் அவர் உள்ளத்தில் பதிந்தன. சித்தப்பா சுப்பையர் நாகசாமியையும், வேங்கட ராமனையும் மதுரையின் படிக்க வைத்தார். படிப்பில் அக்கறை காட்டாத தம்பியை தமையன் கண்டித்தார். பெரியபுராணம் வேங்கடராமன் மனதை ஈர்த்தது.


திருவண்ணாமலையில் பெருமையை உறவினர்கள் சொல்லக் கேட்டு அங்கு போகும் ஆர்வம் நாளுக்கு நாள் வலுத்தது. அருணாசலம் என்ற சொல் அவர் செவிகளில் எதிரொலித்தது.
1896-ல் மாடியில் தனி அறையில் அவர் மரண அனுபவத்தை உணர்ந்தார்.அதிலிருந்து மதுரை மீனாக்ஷி ஆலயத்திலேயே அவர் பொழுது கழிந்தது. தன்னைத் தேட வேண்டாம் என்று எழுதிவைத்து விட்டு மூன்று ரூபாய்களோடு புறப்பட்டார். திண்டிவனம் வழியாக மாம்பழப்பட்டு வருவதற்குள் மூன்று ரூபாயும் செலவாகி விட்டது. நடந்தே திருவண்ணாமலை வந்தார். மொட்டையடித்துக் கொண்டார். ஒரு கோவணத்துக் கான துணியை வைத்துக் கொண்டு மீதியைக் குளத்தில் வீசி எறிந்தார். அண்ணாமலையார் ஆலயத்துக்குள்ளிருந்த பாதாள லிங்கக் குகையில் நிஷ்டையில் அமர்ந்தார். ஒரே இடத்தில் நெடுங்காலம் இருந்ததால். சரீரத் தில் புண்கள் தோன்றி சீழும், இரத்தமும் வெளிப்பட்டன. இவரது மஹிமையை உலகத்துக்கு அறிவித் தவர் சேஷாத்திரி சுவாமிகள். சுற்றத்தார் வந்து வருந்தி அழைத்தும் இவர் திரும்பிப் போகவில்லை. ரமணாஸ்ரமம் ஏற்பட்ட பிறகு அன்னையார் இவ ரோடு வந்து தங்கினார். வந்த இரண்டு ஆண்டுகளில் தாயார் கைலாய பதவி அடைந்தார். அன்னை சமாதி அருகில் மாத்ரூபூதேஸ்வரர் ஆலயம் அமைத்தார் ரமணர். 14-4-1950 அன்று இரவு மணி 8-47க்கு ரமண மகிரிஷி ஜோதியானார்.


--------------------------------------------------------------------------------


25-4-2006 மத்ஸிய ஜெயந்தி
வேதங்களைக் கடலில் ஒளித்த சோமுகாசுரனை எட்டு லட்சம் மைல் நீளமுள்ள மச்சமாகி, அழித்து வேதங்களை மீட்ட திருமாலின் மத்ஸியாவதார தினம் இது. ஊழிக் காலத்தில் இந்த பிரம்மாண்டமான மீனின் ஒரு கொம்பில்தான் ஒளஷதிகளும், சப்தரிஷிகளும் “வைவஸ்வதமனு” என்ற ராஜரி ஷியும் இருந்த ஓடம் கட்டப்பட்டி ருந்தது. பிரளயம் நின்றதும் தன் கொம்பால்

ஹயக்கிரீவாசுரனின் மார்பைப் பிளந்த மச்சஹரி, ஹயக் கிரீவர் என்ற நாமத்தையும் பெற்றார். சம்சாரக் கடலில் நற்குணங்களை நம்மிடம் தங்க வைத்துக் கொள்ள மச்சாவதாரம் எடுத்த மகா விஷ்ணுவை வழி படுவோம்.

--------------------------------------------------------------------------------


29-4-2006 சியாமா சாஸ்திரிகள் ஜனனதினம்
இன்று சங்கீத மும்மூர்த்தி களில் ஒருவரான சியாமா சாஸ்திரிகள் ஜனன தினம். இவரை உலகுக்கு அளித்துப் பெருமை பெற்ற ஸ்தலம் திருவாரூர். மனம் உருகி இவர் பாடிய போது அம்பிகை தாம்பூலத் தட்டுடன் வந்து சேவை செய்ததாகக் கூறப்படுகிறது. இவருடைய கிருதிகளில் ஸம்ஸ்கிருதத்தின் கம்பீரத்தையும், தெலுங்கு மொழியின் நயத்தையும் காணலாம். அவரது இல்லம் ஆலயத்துக்கு அருகில் இருந்தது.


கர்நாடக யுத்தங்கள் நடந்து கொண்டிருந்த காலம் அது. பராசக்தியின் நெற்றிக் கண்ணி லிருந்து தோன்றிய பங்காரு காமாக்ஷியை ஸ்ரீகாஞ்சி ஸ்ரீமடத் தின் 62ஆவது பீடாதிபதியான ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் படுக்கையில் வைத் துக் கட்டிக் கொண்டு செஞ்சியில் சில நாட்கள் தங்கி உடையார் பாளையம் ஜமீன் சென்றார். அங்கு அம்மன் பூஜை, திருவிழா இல்லாமல் ஐம்பது ஆண்டுகள் தங்கியிருந்தார்.

தஞ்சை அரசர் பிரதாபசிம்மர் ஆச்சாரியரை தம் நகருக்கு அழைத்தார். ஆச்சாரியாள் சந்திரமௌலீஸ்வரர், பங்காரு (ஸ்வர்ண) காமாட்சியுடன் ஆனக்குடி, நாகூர், சிக்கல், விஜயபுரம் வழியாக தஞ்சையை அடைந்தார். அவரோடு வந்தவர் களில் இளைஞர் சியாமா சாஸ்திரிகளும், அவரது தந்தை யாரும் முக்கியமானவர்கள். முதலில் கொங்கணேஸ்வரர் ஆலயத்தில் அம்மனைத் தங்க வைத்துப் பின்னர் தனிக் கோயில் கட்டித் தந்தார் மன்னர். நினைவு தெரிந்ததிலிருந்து அம்மனை பக்தி யுடன் பூஜித்தவர் சியாமா சாஸ் திரிகள். அம்மன் அருள் சியாமா சாஸ்திரிகளை பெரிய வித்வா னாக்கியது. காஞ்சியைப் போலவே தஞ்சையிலும் பங்காரு காமாட்சிக்குப் பூஜைகள் நடத்தப் படுகிறது. சரபோஜி மகாராஜா காலத்தில் தஞ்சை காமாட்சி கோயில் மீண்டும் புதுப்பிக்கப் பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.


--------------------------------------------------------------------------------

29-4-2006 உய்யக் கொண்டார் திருநக்ஷத்திரம்
வைணவ குரு பீடத்தை அலங்கரித்த இவர் நாதமுனி களின் சீடர். திருவெள்ளறையில் பிறந்தவர். மணக்கால் நம்பிகளின் ஆசான். உய்யக்கொண்டாரின் இல்லாள் பெயர் ஆண்டாள். சோழிய வம்சத்தில் பிறந்த உய்யக் கொண்டார் திவ்யப் பிரபந்தங் களை உபதேசம் பெற்று அறிந்த வர். நாதமுனிகள் தனது அந்திம காலத்தில் யோக ரஹஸ்யத்தை அறிந்து கொள்ளும்படி இவரை வேண்ட “வீட்டில் பிணம் கிடக்க மணம் புரிவதா? ஊர் மக்களெல் லாம் சவம்போல் பக்தியற்றவர் களாயிருக்க நான் மட்டும் இறைவ னோடு இன்புறுவதா?”என மறுத்து திவ்யப்பிரபந்தத்தை முடிந்தவரை நாடு முழுவதும் பரப்பினார்.


--------------------------------------------------------------------------------

30-4-2006 அக்ஷய திருதியை
‘அக்ஷயம்’ என்றால் வளர்வது. ‘அட்சய வடம்’ என்று ஆலமரத்துக் கொரு மாற்றுப் பெயருண்டு. விழுதுகளுக்கு வடம் என்று பெயர் சிறிய விதையிலிருந்து வரும் ஆலமரம் பிரம்மாண்டமாகக் கிளைகள் விட்டுப் பெருகுவதா லேயே அதை அக்ஷயம் என் றார்கள். பஞ்சகாலத்தில் தஞ்சை மன்னனிடம் பூஜ்யஸ்ரீ ராகவேந்திரர் தானியக்குதிர் களில் ‘அக்ஷய’ என்று எழுதச் சொன்னார். அப்படிச் செய்தபின் மழை பெய்து, பூமி நனைந்து விளைச்சல் அமோகமாகி குதிர்கள் நிரம்பின. இன்று சிலர் பவுன், காசு, நகை, வெள்ளி என்று வாங்குவர். எது செய்தாலும் விருத்தியாகும். அள்ள அள்ளக் குறையாத அக்ஷய பாத்திரத்தை சூரியபகவான் தருமபுத்திரருக்கு வழங்கினார். மணிமேகலை அட்சய பாத்திரத்தால் ஏழை எளியோரின் பசி தீர்த்திருக்கிறாள். தமிழ் ஆண்டுகளின் கடைசிப் பெயர் ‘அக்ஷய’. ஏன் அப்படி வைத்தார் கள்? இது முடிவல்ல! மறுபடி வளரும் என்பதே இதன் பொருள். இன்று இறைவனை தரிசிப்பதும், ஹோமங்கள், மந்திரங்கள் நடத்துவதும் புண்ணியத்தைப் பெருக்கும்.

--------------------------------------------------------------------------------


30-4-2006 பலராம ஜெயந்தி
இராமாவதார முடிவில் லக்ஷ்மணர் தமையனிடம் “இப் பிறவியில் இளவலாகப் பிறந்து எதிலும் சுயமாக முடி வெடுக்க முடியவில்லை. அடுத்த அவதாரத் தில் மூத்தவனாகப் பிறக்க வேண்டும்”என்று கோரினார். ராமர் புன்னகையோடு சம்மதித் தார். அதனால் கிருஷ்ணா வதாரத்தில் ஆதிசேஷன் அம்சமான பலராமர் முதலில் பிறந்தார். குழந்தையாகப் பிறந்ததும் கிருஷ்ணர் நந்த கோபன் இல்லத்துக்கு மாற்றப் பட்டார் என்றால் பலராமர் கருவி லேயே மாற்றப்பட்டு தேவகி, ரோகிணி இரு தாயார்களிடமும் கர்ப்பவாசம் செய்தார்.
சாதாரண ராமரா! பலம் நிறைந்த பலராமர்! தமையன் விருப்பப்படி நடப்பதாக பாவனை செய்தபடியே தன் எண்ணங்களைப் பூர்த்தி செய்து கொண்டார் கண்ணன். சுபத்திரை, வத்ஸலை இருவர் திருமணமும் வாசுதேவன் கருத்துப்படிதான் நடந்தது. பலராமருக்கு சங்கர்ஷணன் என்ற பெயரும் உண்டு. தேனுகா சுரனையும், பிரலம்பா சுரனையும் ருக்மியையும் வதைத்தவர் பலராமர். துரியோதனனுக்குக் கதாயுத்தப் பயிற்சி அளித்த ஆசான். தன் கலப்பை நுனியால் அஸ்தினாபுரத் தையே அசைத்து கிருஷ்ணரின் மகனான சாம்பனை சிறை மீட்டு திருமண மேடையில் அமர்த்தியவர். இன்று இவரை வணங்குவதால் பலமும், புலமையும் பெருகும்.

- ஆர். பி