Thursday, June 29, 2006

Thiruvairaani kulam Ambikai

R Ponnammal

கிராம தேவதைகள்
திருவைராணிக்குளம் அம்பிகை
“சாத்தானே! மூழ்கும் கல்லைத் தோணியாக்கி மூழ்காமல் என்னைத் தினமும் ஐராணிக்குளம் கொண்டு வந்து விடுபவனே! எனக்காக இனி நீ படகோடு காத்திருக்க வேண்டி வராது. இன்றுதான் எனது கடைசி தரிசனம்! பகவானை விட்டுப் பிரியவே மனசில்லை! தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டேயி ருந்தேன்” என்றார் நம்பூதிரி.



“சாமி! நினைவு தெரிஞ்சதி
லேயிருந்து தினமும் மகாதேவரைக் கும்பிடறீங்க! குடும்பம் வெள்ளாரப்பள்ளிக்கு மாறின பிறகும் நீங்க உங்க வழக்கத்தை விடலே! இப்போ தள்ளாமை ஆயிடுச்சு. உங்க நிலை சாமிக்குத் தெரியாதா! மனசைப் போட்டு குழப்பிக்காம இருங்க” என்று ஆறுதல் சொன்ன சாத்தான், மெதுவாகக் கையைப் பிடித்து அவரைக் கீழே இறக்கி விட்டான்.

“ரொம்பக் களைப்பாயிருக்கு. இந்தக் குடைகூட கனமாயிட்ட மாதிரி இருக்கு. தோள் வலிக்குது. இங்கே கொஞ்சம் ஓய்வெடுக்கறேன்” என்ற நம்பூதிரி தோளில் சாய்ந்திருந்த தாழங் குடையை பக்கத்தில் இருந்த பாறை மீது சாய்த்து வைத்தார்.

“வெய்யில் ஏறுதுடா. போவோம்” என்று எழுந்தவர் “சாத்தான்! குடை காத்து மாதிரி லேசா இருக்குடா. கனக்கவேயில்லே” என்று சொல்லி ஆச்சரியப்பட்டார். சாத்தான் வீடுவரை துணையாக வந்தான்.

மறுநாள். ஆற்றங்கரை அருகே ஒரு பெண்
புல் வெட்டிக் கொண்டிருந்தாள். அரிவாள் நழுவி நம்பூதிரி குடையை வைத்திருந்த பாறையில் விழ அதிலிருந்து உதிரம் பீய்ச்சி அடித்தது.



புல் வெட்டிய பெண் அரண்டு தலை தெறிக்க ஊரை நோக்கி ஓடிவரும்போது மூச்சிறைக்க மயங்கி விழுந்தாள். அங்கே இருந்தவர்கள் முதலுதவி செய்தும் பயனின்றி மோட்ச மடைந்தாள்.

“சாத்தான்! ஆத்தங்கரையிலே என்னடா கூட்டம்?” நம்பூதிரி கேட்கிறார்.

“சாமி! பகவானுக்கும் உங்களை விட்டுப் பிரிய மனசில்லே! படிகளை யெல்லாம் தொட்டுத் தொட்டு கண்ணீராலே கழுவினீங்களே! உங்க குடையோட அவர் வந்துட்டார். பாறையிலே குடையை வச்சதும் பகவான் அங்கே ஆவிர்ப்பிச்சுட்டார். அதான் குடை லேசாயிடுச்சு. புல்வெட்டற பொண்ணு மூலமா தான் கல்லிலே இறங்கி இருக்கிறதை அறிவிச்சிருக்கார். ஐராணிக்குளத்தை விட்டு திருவைராணிக் குளத்துக்கு பகவான் வந்திருக்கார்” என்று ஞான திருஷ்டியில் பார்த்துச் சொன்னான் சாத்தான்!



அந்த இடத்தில் ஈஸ்வரனுக்கு கோயில் கட்டப்பட்டது. புல்வெட்டும் பெண்ணின் பெயர் இரக்கி. அவள் ஓடிவந்த தூரம் மூன்று கிலோ மீட்டர். இரக்கி விழுந்த இடம் வார நாட்டு மடம். அங்கே இரக்கி பூஜை நடத்தப்படுகிறது. நிவேதனமாக படைக்கப்படுவது பொரி. அதை உண்டால் வியாதி குணமாகும் என்பது மக்களின் நம்பிக்கை. இரக்கி ஓடி வந்த தூரம் கோவிலுக்கு மானியமாக வழங்கப்பட்டது. சாத்தானுடைய கல்தோணியையும் அங்கே காணலாம்.

கேரளாவில் ஆல்வாய்-காலடி செல்லும் வழியில் ஸ்ரீமூலநகரம் என்னும் இடத்தில் பெரியாறு நதிக்கு அருகில் இந்த திருவைராணிக்குளம் கோயில் அமைந்துள்ளது. இரிஞால குடாவுக்கு அருகே உள்ளது ஐராணிக்குளம். திருவைராணிக்குளம் ஆலயம்த்தில் சிவபெருமான் சன்னிதி வாசல் கிழக்கிலும், அம்பாளின் சன்னிதி வாசல் மேற்கிலும் எப்போதும் திறந்திருந்ததாம். அந்தக்காலத்தில் அரிசி, வெல்லம், நெய் போன்றவற்றை நடையின் முன் வைத்து விட்டு நம்பூதிரி கதவை சார்த்திவிட்டு பூஜையில் ஈடுபடுவது வழக்கம். பூஜை முடிந்து கத வைத் திறந்தால் பாயசம் தயாராய் இருக்கும். இது அம்பிகை சமைத்த நிவேதனம். நம்பூதிரியின் உதவிக்கு இருந்த ஆள் ‘இதை யார் சமைக் கிறார்கள்’ என்று அறியும் ஆவலில் ஜன்னலின் ஓட்டை வழியாகப் பார்த்தான்.

“ஆ! பார்வதி தேவியே நைவேத் யம் பண்றாங்க” என்று கூச்ச லிட்டான். தேவி அந்தர்தியான மாகிவிட்டாள்.

“இனி இந்த நடையைத் திறக்கக் கூடாது” என்று அசரீரி ஒலித்தது.

பக்தர்கள் கதறினர். “தாயே! பார்வதி! சக்தி இல்லாமல் எது நடக்கும்? அறியாமல் செய்துவிட்ட குற்றத்தை அன்னை பொருட்படுத்தலாமா? மன்னிக்கக் கூடாதா? அபயம் அம்மா” என்று பிரார்த்தித்தனர்.

“அடியார்களே! இனி நம்பூதிரி மட்டும் நடையைத் திறந்து பூஜை செய்த பின் அதை மூடிவிட வேண்டும். மாதத்திற்கு ஒரு நாளாக பன்னிரண்டு நாட்கள் உங்களுக்கு அருளுவேன். மார்கழி மாதம் திருவா திரை அன்று சன்னிதானக் கதவைத் திறக்கலாம். அன்று முதல் பன்னிரண்டு தினங்கள் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்” என்று கூறி அருளினாள் உமாதேவி.

ஆருத்ரா அன்று இந்த ‘நடைத்திறப்பு மஹா உற் சவம்’ நடைபெறும்.

பிரம்மணி என்ற அம்மையார் அம்பிகையை மனமுருகப்பாடி வேண்டியதால் அவர்களின் வழிவந்தவர்கள் வந்து பாடிய பிறகே நடை திறப்பு நடைபெறுகிறது.

இந்தப் பன்னிரண்டு நாட்களில் ஒருநாள் அம்பிகையை தரிசித்தால் கன்னிப் பெண்களுக்குத் திருமணம் கைகூடும். பன்னிரண்டு நாழி (பந்தீர் அழ்) பாயசம் நிவேதித்தால் ஒரு மண்டலத்தில் திருமணம் நிச்சயமாகும் என்கிறார்கள்.

சிவராத்திரி, திருவாதிரை, பௌர்ணமி போன்ற விசேஷ தினங்களில் சிவலிங்கத்துக்கு 101 இளநீர் அபிஷேகமும், மிருத்யுஞ்ஜய ஹோமமும் நடக்கிறது. இந்தப் பன்னிரண்டு நாட்களிலும் கோயிலில் கூட்டம் அலைமோதும்.
- H காயத்ரி