Grama Thevathaigal
கிராம தேவதைகள்
மாதேஸ்வரன் மலை ஸ்ரீமாதேஸ்வரர்
“என்ன! பூஜைக்குப் பூப்பறிச்சுட்டீங்களா?” என்று இரைக்க இரைக்க ஓடி வந்த சீடர்களைப் பார்த்துக் கேட்டார் சுத்தூர் வீர சிம்மாசன மடத்து குருவான சித்த நஞ்சதேசிகர்.
ஒரு சிறுவன் சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டு சொன்னான். “மாதேஸ்வரன் ‘வா’ன்னதும் ஒரு புலி வந்தது”
அவனைத் தொடர்ந்து அடுத்தவன் “அவன் அது மேலே ஏறி வரான்” என்றான்.
இன்னொருவன் “அவன் பூவா பறிச்சான்? தவளை, பல்லி, ஓணான் எல்லாத்தையும் பையிலே பிடிச்சுப்போட்டுண்டி ருக்கான்” என்று சொல்ல, மற்றொருவன் “அதோடு நின்னாப்பரவாயில் லையே! பாம்பையும்னா பிடிச்சுப்போட்டுண்டிருக்கான்!” என்று நடுங்கினான்.
அவர்களோடு சென்ற மாதேஸ்வரன் புலியைப் ‘போ’ என்று சைகை காட்டியதும் அது மறைந்து விட்டது. மாதேஸ்வரன் நகைத்தபடி தவளையும் பாம்பும்... இருந்த பையை தடாக நீரில் அமிழ்த்தி எடுத்து வந்து குருநாதர் முன் கொட்டினான். எல்லாம் வாசனை வீசும் மலர்களாக மாறியிருந்தன!
குருதேவர் “நீ சித்தனப்பா” என்றார்.
அன்றிலிருந்து மற்ற பிள்ளைகள் மாதேஸ்வரனிடம் பயபக்தியோடு நடந்து கொண்டனர். அவனோடு விளையாடுவதையும் தவிர்த்தனர். இது நடந்தது 14-ஆம் நூற்றாண்டு என்று கல் வெட்டுகள் கூறுகின்றன. மாதேஸ்வரனை, ‘மும்மூர்த்திகளும் சிருஷ்டித்த தேவன்’ என்று அனைவரும் போற்றினர்.
மடத்தின் வழக்கப்படி கேழ்வரகு அரைக்கும் பணி மாதேஸ்வரனுக்குக் கொடுக்கப்பட்டது. அவன் திருகைக் குச்சியைத் தொட்டதும் கல் தானாகவே சுழன்றது. கூட இருந்த சிறுவன் திகைத்தான். விரைந்து சென்று குருநாதரை அழைத்து வந்தான்.
“மாதினை மேனியில் கொண்ட ஈஸ்வரனே நீ! உனக்குக் கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது? காவிரி உற்பத்தியாகும் குடகுமலைக்கு அருகேயுள்ள பிரபு லிங்க மலைக்குச் சென்று, பிரபுலிங்க மடத்துக் குருவான ஸ்ரீ ஆதிகணேஸ்வரரின் ஆசி பெற்று உன் யோகத்தைப் பூர்த்தியாக்கிக் கொள்” என்று பிரபு லிங்க மடத்துக்கு மாதேஸ்வரனை அனுப்பிவிட்டார் குரு.
சுத்தூர் மடத்தில் மாதேஸ்வரன் கைபட்ட கல் ‘மகிமைக்கல்”என்று இன்று வரை பூஜிக்கப்படுகிறது.
அவன் பூச்சிகளை பூக்களாக மாற்றிய பையும் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
மாதேஸ்வரன் ஸ்ரீ ஆதி கணேஸ்வரரை முழந்தாளிட்டு வணங்கினான். அவனுடைய முழந்தாள் பதிந்த இடத்தை இன்றைக்கும் பிரபுலிங்க மலையில் காணலாம்.
ஒருநாள் பூஜைக்கு பூவே கிடைக்கவில்லை. மாதேஸ்வரன் ஒவ்வொரு பருக்கைக் கற்களாக எடுத்துக் குடலையில் போட்டான். அவை சண்பகம், ரோஜா, மனோரஞ்சிதம் என்று விதவிதமான மலர் களாக மாறுவதைப் பார்த்து குரு ஆச்சரியப்பட்டார்.
இன்னொரு நாள் கன்று போடாத பசுக்களை ஒருவர் மடத்துக்குத் தானமாகக் கொடுத்தார். மாதேஸ் வரன் போய் பால் காம்பைத் தடவ, மடி கட்டிக் கொண்டு மாடுகள் பாலைப் பொழிந்தன.
மருத்துவர்களால் கைவிடப்பட்ட பல நோயாளிகளைக் காப்பாற்றினான் மாதேஸ்வரன். கிராமத்து மக்கள் அவனைத் தெய்வமாகவே கொண்டாடினர்.
கட்டு விரியன், கண்ணாடி விரியன், நாகப்பாம்பு ஆகியவை அவனோடு விளையாடும். மேனியில் சுற்றிக் கொள்ளும்.
“நீ சிவ பெருமானின் அம்சம். உனக்கு குருவாயிருக்க எவராலும் ஆகாது” என்று அவனுக்கு விடை கொடுத்தார் ஸ்ரீ ஆதி கணேஸ்வர்.
மாதேஸ்வரன், மாதேஸ்வரர் ஆகி சுற்றிலும் குன்றுகளாக இருந்த மலைப் பகுதிக்கு வந்தார். அவரது வலது கால் பட்டதும் அந்த இடத்துப் பாறைகள் பொடிப் பொடியாகி சமதளமானது. அங்கேயே தியானத்தில் அமர்ந்தார் மாதேஸ்வரர். அவரைச் சுற்றி புற்று மூடிக் கொண்டது. இவரைப் பிரிந்திருக்க இயலாமல் மாடுகளும், பாம்புகளும் இவரைத் தேடி வந்தன.
மாடுகள் வந்த வழி பசவன் வழி; அது பாதயாத்தி ரைக்கு எளிதானது. சர்ப்பங்கள் வந்த வழி சர்ப்ப வழி. இது கடினமாயிருக்கும்.
ஒரு மாமாங்கம் தவம் செய்து லிங்க வடிவானார் மாதேஸ்வரர். அவர் தவம் செய்கையில் ஒரு பசு கூட்டத்திலிருந்து பிரிந்து வந்து புற்றுவாயில் பால் சொரியும். அதன் உரிமையாளரான சூஜ்ஜே கௌடர் ஆலம்பாடி கிராமத்தில் வசித்து வந்தார். மேய்ச்சலி ருந்து திரும்பி வந்த பசு பால் சுரக்காமலிருப்பதை கவனித்து வந்த கௌடர், மாடு மேய்க்கும் இடையனைக் கூப்பிட்டு விசாரித்தார். அவனுக்கு எதுவும் தெரிய வில்லை. இது தொடர்ந்தது.
அவனறியாமல் தானே ஒருநாள் அந்தப் பசுவை பின் தொடர்ந்த கௌடர், புற்றுவாயில் பசுபால் சொரி வதைக் கண்டார். பசு நகர்ந்த பின் புற்றினுள் கூர்ந்து பார்த்தார். சிவலிங்கமும் ஒரு யோகியும் மாறி மாறிக் காட்சியளித்தனர். அது முதல் அந்தப் புற்று இருந்த இடம் கௌடர் குடும்பத்தின் வழிபாட்டுத் தலமாயிற்று.
இன்றைக்கு இருக்கும் ஸ்ரீமாதேஸ்வரர் ஆலயம் அவரது இனத்தவர்கள் கட்டியதுதான். மேட்டூரிலி ருந்த 55 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது மாதேஸ்வரன்மலை. ஸ்ரீமாதேஸ்வரர் தவம் செய்த குகைகளில் இப்போதும் தினமும் பூஜைகள் செய்யப் படுகின்றன.
அக்கம் பக்க கிராம வாசிகள் கால் நடைகளுக்கு நோய் கண்டால், பசு பிரசவிக்க சிரமப்பட்டால் மாதேஸ்வரருக்கு கன்றுக் குட்டியைக் காணிக்கை விடுவதாக வேண்டிக் கொள்கின்றனர்.
நூறு ஆண்டுகளுக்கு முன் கோயில் கமிட்டிடியினர் பத்து அடி உயர நந்தியை நிறுவி ஆலம்பாடி மஹா பசவேஸ்வரர் என மண்டபமும் கட்டினர். கர்ப்பக்கிருஹத்தை நோக்கியபடி தெற்கு நோக்கி அமைத்த நந்தி சிலை, ஒருவாரத்திற்குள் ஆலம் பாடியை நோக்கி வடமேற்கு திசையாய் திரும்பி விட்டது. மறுபடியும் கமிட்டியினர் மாதேஸ்வரரை நோக்கி அதை திருப்பி வைக்க சில நாட்களில் நந்தி பழையபடி திரும்பிக் கொண்டது. இந்த நந்திக்கு பால் அல்லது நெய் கொண்டு அபிஷேகம் செய்தால் குறை நீங்கும் என்று சொல்கிறார்கள்.
மாதேஸ்வரர் பயன்படுத்திய பை, பாதுகைகள், சங்கு எல்லாவற்றையும் பக்தர்கள் தரிசிக்கலாம்.
கஷ்டங்கள் தீர ரிஷபவாகனம் அல்லது புலிவாகனத்தைத் தேரில் ஏற்றி சுற்றி வருவதாக நேர்ந்து கொள்கிறார்கள். மாதேஸ்வரர், குடும்பங் களில் ஏற்படும் சிக்கல்களை அவிழ்ப்பதாக மக்கள் நம்புகிறார்கள். மாதேஸ்வரர் கதை கேட்டால் புண்ணிய தீர்த்தங்களில் ஆயிரம் முறை நீராடிய பலன் என்கிறார்கள். அங்கிருந்து ஐந்து மணி நேர நடைப் பயணத்தில் நாகமலை வருகிறது. அங்கே லிங்க வடிவில் ஒரு கல்லும், நாகப் பாம்பு உருவில் ஒரு கல்லும் இருக்கிறது. அது நாளுக்கு நாள் வளர்வ தாகச் சொல்கின்றனர்.
அமாவாசை, பௌர்ணமி, நவராத்திரி, சிவராத்திரி, தீபாவளி, யுகாதி ஆகிய நாட்களில் அங்கே விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. மாதேஸ்வரரை தரிசிக்க கிளம்பி விட்டீர்களா?
- காயத்ரி