Thursday, June 29, 2006

On the footsteps of Paramacharya

ஆர் பொன்னம்மாள்

ஸ்ரீபரமாச்சார்யாள் பாதையிலே. . .

சென்ற இதழ் தொடர்ச்சி. . .
‘ஹாஹா, ஹுஹு’ முதலான கந்தர்வர்களால் துதிக்கப்பட்டவள் அம்பாள். இவா ஆனி, ஆடி மாசத்துலே கிரிஷ்மருது காலத்துலே சூரியனோட தேரிலே இனிமையாப் பாடி சந்தோஷப்படுத்தறா. ‘கந்த’ன்னா வாசனை. காதுக்கு, மனசுக்கு வாசனையில் பாடறதாலே அவாளுக்குக் கந்தர்வான்னு பேரு. நாரதர், தும்புரு, விசுவாவசு, ஊர்ணாயு, சூர்ய வர்ச்சசு, சித்திர சேனன், உக்கிர சேனன், வசுருசி, சித்ராங்கதன், திருதராஷ்டிரன் இவா பத்து பேரும் மீதி பத்து மாசங்களும் சூரியனோட ரதத்துலே பாடுகிற கந்தர்வா.

இதிலே வருகிற சித்திரசேனன் தான் துரியோதனனைக் கட்டி இழுத்துண்டு போனான். தருமபுத்திரர் சொன்னபடி பீமனும், அர்ச்சுனனும் தான் துரியோதனனைக் காப்பாத்தினா.

‘ஹா ஹா ஹுஹு’வுக்கு அப்படி யென்ன விசேஷம்னு கேட்டா அவா உத்தராயணம் கடைசியிலும், தக்ஷிணா யணம் முதலிலேயும் சூர்யத் தேர் திரும்பறப்போ ரதத்துலே பாடறா. நன்னாப் பாடறவாளை, ‘ஆஹா’ன்னு பாராட்டறப்போ நீ, ‘ஹாஹா’ மாதிரிப் பாடறேன்னு சொல்ற மாதிரிதான்!

சந்திரனை இடது கண்ணா வைச்சுண்டாலும் அவளுக்குத் தேய்தலும் வளர்தலும் கிடையாது. அதனால்தான் அம்பிகை நித்யா என்று அழைக்கப்படறா. (வயோ ளு வஸ்த்தா-வி வர்ஜிதா) வயதால் நிலை மாறாதவள் பரதேவதை.

வெண்ணெயைப் போன்ற இதயமுடையவள் அவள் வெண்ணையைப் போல் தூய்மையான உள்ளத்திலே வாழுகின்றவள், அம்பிகை.

மகிஷாசுரனை சம்ஹாரம் பண்ணினப்போ அவனோட அறுபட்ட கழுத்திலே ஒரு சிவலிங்கம் இருந்தது. அதை துhக்காதேவி கொண்டு வந்து காமாட்சியம்மன் கிட்டே கொடுத்தா. ஆனா அது பார்வதி கையிலேயே ஒட்டிண்டுடுத்து. கௌதம ரிஷி பக்கத்திலே இருந்தார். “ஏன் இப்படியாச்சுன்னு கேட்டா அம்பிகை.

அகஸ்தியர் தலைமையிலே ஐம்பது ரிஷிகள் nக்ஷத்ராடனம் புறப்பட்டா. வழியிலே, வர முனிவரோட ஆஸ்ரமம் இருந்தது. எல்லாரும் உள்ளே நுழைஞ்சா. வர ரிஷி தியானத்திலே இருந்தார். கூப்பிட்டுப் பார்த்தா. எழுந்திருக்கலே. ஆத்திரம் அறிவை மறைக்கும். ‘எருமை மாடாப்போ’ன்னு சபிச்சுட்டா. வரமுனிக்குத் தவம் கலைஞ்சுடுத்து. கால்லே விழுந்து மன்னிப்பும் கேட்டுட்டார். ஆனா அவா கோபம் அடங்கலே. “சபிச்சது சபிச்சதுதான். அம்பாள் கையாலே மோட்சம் கிடைக்கும்” னுட்டா.

மன்னத ரிஷி கையிலே சிவலிங்கத்தோடதான் தபஸ் பண்ணுவார். ஒருநாள் மகிஷாசுரன் அவரை லிங்கத்தோட கபளம் பண்ணிட்டான். லிங்கம் தொண்டையிலே சிக்கிண்டுடுத்து. அதுதான் இது. லிங்கம் கழுத்திலே இருக்கும் போது அழிச்சதாலே கையிலே ஒட்டிண்டுடுத்து’ அப்படின்னார் கௌதமர்.

“சரி. இதை எங்கே எப்படி ஸ்தாபிக்கறது”ன்னு கேட்டா காமேஸ்வரி. “நவதீர்த்தங்களிலே ஸ்நானம் பண்ணனும். இந்த லிங்கம் விடுபடும். விடுபட்ட இடத்திலே ஸ்தாபிதம் பண்ணு’’ன்னார் முனிவர்.

அம்பாளுக்கு நினைச்ச மாத்திரத்திலே நவதீர்த்தங்களும் வந்தது. கத்தியாலே பூமியைக் கீறினா. கட்கம்னா வாள். அந்த தீர்த்தம் கட்க தீர்த்தமாச்சு. அதிலே நீராடினா தேவி. லிங்கத்தைக் கரையிலே பிரதிஷ்டை பண்ணி பூஜிச்சா. அந்த ஸ்வாமி பேர் பாப விநாசகலிங் கம். எல்லாம் லோகபாவனை. அம்பாளுக்குத் தெரியாம கௌதமரைக் கேட்டாளா? இல்லே. அகலிகை புருஷனுக்கு மகத்துவம் சேர்த்தா! கௌதமர் அம்பிகையை பூஜை செய்யாத நாள் ஏது?

51 அட்சரங் களாக இருக் கிறவ தேவி. திருவாரூரிலே அட்சர பீடம்னே இருக்கு. கமலாம்பா சன்னதிக்கு தென் மேற்கு மூலையிலே இதை தரிசிக்கலாம்.

இந்திர கோபம்னு ஒரு பூச்சி இருக்கு. அது சிவப்பாயிருக்கிறதாலே அந்தப் பேரை வைச்சிருக்கணும். மாணிக்கம் போலேன்னு கூட சொல்லியிருக்கலாம். ஆனா அப்படிச் சொல்லாம இந்திர கோபப் பூச்சியைப் போல் சிகப்பா வஸ்திரம் உடுத்திண்டிருக்கிறதா சொல்லப்பட்டிருக்கு. இந்த சிகப்புக்கு சில குணங்கள் உண்டு.

(தொடரும்)

- ஆர்.பி