Thursday, June 29, 2006

May Special Days for Hindus

Kamagoti

2006 மே மாத விசேஷ தினங்கள்


02-5-2006 ஸ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி
தத்துவ ஞான பூமியாகிய பரத கண்டம் காலப் போக்கில் தடம் புரண்டு தடுமாறி, பலநூறு சமயப் பிரிவுகளில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் இருள் நீக்கும் கதிரவன் போல் கேரள நாட்டில் காலடியில் அவதரித்தவர் ஸ்ரீ ஆதிசங்கரர். தாயுடன் நீராடச் சென்ற போது முதலை காலைக் கவ்விக் கொள்கிறது. “சன்யாசம் கொள் என்று உத்தரவு கொடுத்தால் அது காலை விட்டுவிடும்” என்று பகவத் பாதாள் அன்னையிடம் கூற “மகனே நீ உயிரோடிருந்தால் போதும்” என்று அவரது துறவுக்கு சம்மதித்தாள் அன்னை.
ஸ்ரீ ஆதிசங்கரர் எட்டு வயதில் துறவு பூண்டு சகல சாஸ்திரங் களையும் கற்றுத் தேர்ந்து வல்லவராகி புண்ணிய பரதகண்டம் எங்கும் விஜய யாத்திரை சென்று பாதை மாறியவர்களோடு வாதிட்டு வென்று அத்வைத சித்தாந்
தத்தை, வைதீக சனாதன தர்மத்தை நிலை நாட்டினார். சிதறிக் கிடந்த சமயப் பிரிவுகளை ஷண்மதங்களாய் தொகுத்துச் சீரமைத்தார். இமயம் முதல் குமரிவரை நடைப் பயணமாகவே சென்று பரத கண்டத்தின் நான்கு திசைகளிலும் ஸ்ரீமடங்களை நிறுவி நாட்டில் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தினார். இன்று அவரை வழிபட்டு பயன் பெறுவோம்.


--------------------------------------------------------------------------------

02-5-2006 ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி
ஸ்ரீபெரும்புதூரில் ஆசூரி கேசவ சோமயாஜிக்கும்-காந்திமதி அம்மையாருக்கும் பிறந்தவர் இவர். ஸ்ரீ சைல பூரணர் எனப்படும் திருமலை நம்பி இவரது தாய் மாமன். தந்தையே முதல் குருவாக இருந்தார். இவரது இல்லாளின் பெயர் தஞ்சம்மா. திருப்புட்குழியில் யாதவப் பிரகாசர் என்ற பண்டிதரிடம் சாஸ்திரங்களைக் கற்றார். அதே யாதவப் பிரகாசர் இராமனுஜர் வைணவ மடாதிபதியானதும் “கோவிந்த ஜீயர்” என்ற தீட்சா நாமத்தோடு அவருக்கு சீடரானார். அஷ்டாட்சர மந்திரத்தை இவருக்கு உபதேசித்த திருக்கோஷ்டியூர்
நம்பி, அதை ஸ்ரீராமானுஜர் உலகுக்கெல்லாம் உரைத்த காரணத்தைக் கேட்டு “எம்பெருமானார்” என்ற நாமத்தை அவருக்குச் சூட்டி கட்டியணைத்துக் கொண்டார். யக்ஞமூர்த்தி என்கிற மகா பண்டிதரோடு 18 நாட்கள் வாதிட்டு வென்றார். ‘தேவராஜ முனி’ என்ற தீட்சா நாமத்தோடு அவர் இராமானுஜரின் சீடரானார். கலைவாணியே இவரை ஆசீர்வதித்து “பாஷ்யக்காரர்” என்று பட்டம் சூட்டியிருக்கின்றாள்.

தொண்டனூரை ஆண்ட பித்திதேவன் மகளைப் பேய் பிடித்திருந்தது. அதை ராமானுஜர் குணமாக்கியதால் அவரிடம் பக்திகொண்ட அந்த ஜைன அரசன் விஷ்ணு வர்த்தனன் என்ற நாமத்தோடு வைணவத்தைத் தழுவினான். இதனால் ஜைன குருமார்கள் இவரை வாதத்துக்கு அழைக்க, நடுவில் திரை போடச் சொல்லி ஆதிசேஷனாக மாறி அவர்கள் வினாக்களுக்கு விரைந்து பதிலளித்தார். ஜைனர்கள் வெல வெலத்துத் தோல்வியை ஒப்புக் கொண்டனர்.

விஷ்ணு வர்த்தனன் உதவியோடு திருநாராயண புரத்தில், மேல்கோட்டையில் பெருமாள் கோயில் கட்டினார். இவர் டெல்லிக்குச் சென்று பாதுஷா வசமிருந்த உற்சவ விக்ரகமான ‘இராமப் பிரியா’ வை ‘வா’ என்றழைக்க அது நடந்து வந்தது.

பத்மகிரியில் பௌத்தர்களோடு வாதிட்டு ஜெயித்தார். தம் சிஷ்யர் களுள் 74 பேர்களைத் தேர்ந் தெடுத்து சிம்மாசனாபதிகள் என்று பெயர் சூட்டி விசிஷ்டாத் வைதத்தைப் பரப்பக் கட்டளை யிட்டார். ஸ்ரீரங்கம், காஞ்சி, தோத்தாத்ரி, அஹோபிலம், வானமாமலை ஆகிய மடங்கள் அவர் நிறுவியதில் விசேஷமானவை. தனது 120ஆவது வயதில் அவர் இறைவனடி சேர்ந்தார். இன்று இவரது மலரடி போற்றுவோம்.


--------------------------------------------------------------------------------

04-5-2006 அக்னி நக்ஷத்திர ஆரம்பம்
இன்று ஆரம்பிக்கும் அக்னி நக்ஷத்திரம் முடியும் வரை சுப காரியங்களைத் தள்ளிப் போட வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. கடும் வெய்யிலில் அலைவது உடல் நலத்தை பாதிக்கும். தலைசுற்றல் வரும் என்பதாலும் இந்த நியதி கடைப் பிடிக்கப்பட்டிருக்கலாம். இந்தக் காலத்தில் சில சமயம் மழையும் பெய்யும். இதற்கு முன்பத்து, பின்பத்து நாட்கள் சூரியன் சுட்டெரிப்பான். ஆதித்ய ஹிருதயம் படித்தாலோ வருண ஜபம் செய்தாலோ உஷ்ணத்தின் உக்கிரம் குறையும்.


--------------------------------------------------------------------------------

09-5-2006 ஸ்ரீ மீனாக்ஷி-சோமசுந்தரர் திருக்கல்யாணம்
மதுரையை ஆண்ட மலையத்து வஜன் செய்த யாகத்தில் தோன்றி, காஞ்சன மாலை முற்பிறவியில் செய்த புண்ணிய பலனால் அவர்கள் புதல்வியாக வளர்ந்து, திக் விஜயம் செய்து கைலாயத்தில் சிவபெருமானை சந்திக்கிறாள். மீனாக்ஷியம்மை. பிறக்கும் போதே அவளுடன் தோன்றியிருந்த மூன்றாவது ஸ்தனம் மறைந்தது. “எட்டாவது நாள் சோம வாரத்தன்று உனக்கு மாலை யிடுகிறேன்” என்றார் கைலாய நாதர். வாக்குப்படி அவர் வந்து மீனாக்ஷியை மணமுடித்த திருநாள் இது. இந்தத் தெய்வத் திருமணத்தை தரிசித்தால்
கன்னியரும், வாலிபரும் விவாக பந்தத்துள் புகுவர். இன்று மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலில் நடக்கும் திருக்கல்யாணத்தில் முன்பே வந்து இடம் பிடித்து அமர்ந்தவர்களுக்கு தாலிச்சரடும், கருகமணியும் கிடைக்கும்.

--------------------------------------------------------------------------------


10-5-2006 உமாபதி சிவாசாரியார் ஜன்மதினம்.ன
சைவ சமய வளர்ச்சிக்கு சந்தான குரவர்களான மெய் கண்ட சிவாசாரியார், அருள் நந்தி சிவாசாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவாசாரியார் ஆகிய நால்வரும் பெரிதும் காரணமானவர்கள். பசு+பதி+ பாசம் என்பது சைவ சித்தாந் தத்தின் அடிப்படைக் கொள்கை. பக்தர்களைப் பசுவாகவும், பரம சிவனைப் பதியாகவும், இருவரை யும் பிணைக்கும் கயிறை பாச மாகவும் விவரிக்கும் இந்தத் தத்துவத்துக்கு விளக்கம் அளித்தவர்களுள் உமாபதி சிவாசாரியார்
முக்கியமானவர். இன்று அவர் அவதரித்த தினம். பல சிவாலயங்களில் சந்தான குரவர் சிலைகளைக் காணலாம் சிவனருளால் பல அற்புதங்கள் புரிந்து நாடாளும் மன்னரால் போற்றப்பட்ட இவரை இந்நன் னாளில் சிவன் கோயில் சென்று வழிபடுவது சிறப்பாகும்.

ஒருமுறை துறையிலிருந்து திரும்பி வந்த கழுதையை இவர் வணங்க, வண்ணான் பதறினான் “என்ன சாமி இது?” என்று! “இது என் குரு அப்பா! காலையில் அழுக்குத் துணிகளைச் சுமந்து செல்லும் போது இதன் முகம் கடுக்கவில்லை. இப்போது வெளுத்த துணிகளைச் சுமந்து செல்லும்போதும் ஆனந்த பரவச மாய் இல்லை! மனிதன்தான் துன்பத்தில் அழுகிறான். இன்பத் தில் சிரிக்கிறான். அப்போது இது என்னைவிட உயர்ந்ததல்லவா?” என்று பதிலளித்தார்.

இவர் சிதம்பரத்தில் தில்லை வாழ் அந்தணர் குடும்பத்தில் பிறந்தவர். மறைஞான சம்பந்தர் இவரது குரு. ஜாதி வேறுபாடு சிறிதும் கருதாதவர். சிவப்பிரகாசம், வினா வெண்பா, நெஞ்சு விடு தூது, திருப்பதிக் கோவை போன்ற பதினான்கு நூல்களை எழுதியவர் இவர்.


--------------------------------------------------------------------------------


11 /12-5-2006 ஸ்ரீநரசிம்ஹ ஜெயந்தி
வினோதமான வரத்தைப் பெற்றவன் இரண்ய கசிபு. அதனால் வினோதமான வடிவத்துடன், பக்தனான பிரகலா தன் வாக்கை மெய்ப்பிக்கதூணிலிருந்து நரசிம்மமாக வெளிப்பட்டு நிலைப்படியில் அமர்ந்து மாலையும் இரவும் கூடும் சந்தியா நேரத்தில் ஒரு துளி உதிரமும் கீழே சிந்தாதபடி இரணியன் மார்பைப் பிளந்து குடலை உருவி மாலையாகப் போட்டுக் கொண்டார் பகவான். நரசிம்மாவதாரத்தைப் பாராயணம் செய்தால் எதிரிகள் தொல்லை இருக்காது. நோய் குணமாகும். கடன் தீரும்.
படிக்கும் நாட்களில் பானகம் நிவேதனம் பண்ண வேண்டும். ஆதிசங்கரரைப் பலியிட முனைந்த காபாலிகனை அவரது சீடரான பத்மபாதர் மேல் ஆரோகணித்து வதம் பண்ணினவர் ‘நரசிம்ஹ மூர்த்தி. “நரர்கள் மிருகமாகும் போது நான் மிருகமாய் வந்து அழிப்பேன்” என்று உணர்த்த திருமால் எடுத்த அவதாரம் இது.

--------------------------------------------------------------------------------

12 /13-5-2006 சித்ர குப்த பூஜை
சித்திரை மாதம் சித்திரை நக்ஷத்திரத்தில் உதித்தவர் சித்ரகுப்தர். சிவனும், உமையும் “சித்திரத்துப் புத்திரனே வா” என்றழைக்க சித்திரத்திலிருந்து இவர் வெளிப்பட்டதாகப் புராணம் கூறுகிறது. இந்திராணி வளர்த்த பசுவின் வயிற்றில் ஏடும் எழுத்தாணியும் கை பிடித்து இவர் அவதரித்ததாகவும் ஒரு சரித்திரம் இருக்கிறது. சித்ரகுப்தன் பிறந்தவுடன் பசு மாண்டு போனதால் சித்ர புத்ர நோன்பு நோற்பவர்கள் பசுவின் பாலும், அந்தப் பாலிலிருந்து பெறப்படும் உணவு வகைகளையும் சேர்க்கக்கூடா தென்பது ஐதீகம். அதோடு

அன்று உப்பில்லாத உணவுகளையே (கனிகள்) உண்ண வேண்டும். அரிசிமாவால் சித்ர குப்தன் படம் போட்டு கையில் ஏடும் எழுத்தாணியும், விரல்களில் மோதிரங்களும், காதில் குண்டலங்களும் வரைய வேண்டும். குப்தன் என்றால் கணக்கன் என்று பொருள்.

சித்ரா பௌர்ணமி தோறும் இந்திரன் காஞ்சிபுரம் வந்து சித்ரபுத்ரனை பூஜிப்பதாக வரலாறு. சித்ரபுத்ரனின் மனைவி பெயர் காணாம்பிணிதேவி. காஞ்சியில் சித்ரகுப்தன் ஆலயத்தில் காலையில் மகா அபிஷேகமும், மாலையில் திருக்கல்யாணமும் நடை பெறுகிறது.

இன்று தலை வாழையிலையில் பட்சணங்கள், பாயசம், அன்னம், கிண்ணங்களில் பால், தயிர், நெய், தேன், உப்பு, மோர்க்குழம்பு. எல்லாக் காய்கறிகளும் போட்ட கூட்டு எல்லாம் நிவேதிக்க வேண்டும். பூஜையைத் தானே செய்தால்கூட ஒரு சாஸ்திரிகளுக்கு ஒரு புது முறத்தில் நவதானியங்கள் உப்பு, கற்பூரம், பருத்தி, பேனா அல்லது பென்சில், நோட்டு இவற்றை தானமாக அளிக்க வேண்டும்.

அமராவதி என்ற தேவருலகப் பெண் எல்லா பூஜைகளும் முடித்தும் சித்ரகுப்த பூஜை முடிக்காததால் பூவுலகுக்குத் திரும்பி அனுப்பப் பட்டாள் என்று வரலாறு சொல்கிறது.


--------------------------------------------------------------------------------

12 /13-5-2006 சித்ரா பௌர்ணமி
சித்திரை மாதத்து நிலவு பளிச் சென்று தெரியும். இந்திரன் பிரம்மஹத்தி நீங்கியதற்காக ஆண்டுதோறும் சித்ராபௌர்ணமி யன்று மதுரைக்கு வந்து சோம சுந்தரரை வழிபடுகிறான். இது இள வேனிற் காலமானதால் சந்திரன் அமுததாரைகளை அதிகம் பொழிவான். நிலாவில் உலாவினால் தோல் வியாதிகள் வராது. சரீரத்தின் உஷ்ணம் தணியும். சித்ரா பௌர்ணமியன்று பல ஸ்தலங்களிலும் இறைவன் வீதி உலாவருவது நம் முன்னோர்கள் செய்த ஏற்பாடு. பகவானை தரிசிக்க பக்தர்கள் நிலாவில் உலா வரத்தானே வேண்டும். சித்ரா பௌர்ணமியன்று எதைத் தானம் செய்தாலும், கிரிவலம் வந்தாலும் புண்ணியம் பல மடங்காகப் பெருகும். திருக்குற்றாலத்து சித்ரா நதியில் சித்ரா பௌர்ணமியன்று நீராடுவது விசேஷம். திருவாரூர், கொரடாச்சேரி, வெண்ணைவாசல், ஸ்ரீமகாமேருபீடம் பௌர்ணமி பூஜை சிறப்பானது.


--------------------------------------------------------------------------------

13-5-2006 ஸ்ரீகள்ளழகர் வைகையாற்றில் இறங்குதல்
திருமாலிருஞ்சோலை கள்ளழகர், தங்கையான தடாதகைப் பிராட்டியின் திருமணத்திற்காக சீர் எடுத்துக் கொண்டு ஆயிரம் பொன் சப்பரத்தில் மதுரை வருகிறார். தங்கக் குதிரை மேல் அமர்ந்து வைகை நதியில் இறங்கும்போது மாலை மாற்றி பச்சைப் பட்டு உடுத்தி லட்சக்கணக்கான பக்தர்களுக்குத் தரிசனம் தருகிறார். அப்போது பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவதும், அர்ச்சனை செய்வதும் வழக்கம். கூட்ட நெரிசலில் எள் விழுந்தால் எண்ணையாகி விடும். முதல் நாளே மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்து விட்டதை அறிந்து கரை ஏறாமல் திரும்புகிறார் அழகர். இரவு வண்டியூரில் சைத்யோப சாரம் நடக்கும். மறுநாள் அழகர் என்கிற சுந்தரராஜப் பெருமாள் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளி கருட வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு முக்தி அருள்கிறார்; இரவு இராமராயர், ராஜா ஸ்ரீசேது பதி மண்டபம் வரை ஸ்ரீ அனந்த ராயர் ராஜாங்க தரிசனம். திங்களன்று காலையில் மோஹினி அவதாரம். செவ்வாயன்று அதிகாலையில் அழகர் மலைக்குத் திரும்புவார். சித்திரைத்திருவிழாவின் ஒரு பகுதியே அழகர் ஆற்றில் இறங்கும் விழா.


--------------------------------------------------------------------------------

18-5-2006 பாம்பன் சுவாமிகள் குருபூஜை
பாம்பன் சுவாமிகள் பஞ்சாமிர்த வண்ணம், சண்முகக்கவசம் போன்றவைகளை இயற்றியவர். 27-12-1923-ல் சென்னை, தம்புச் செட்டித் தெரு வழியாகப் போகும்போது ஒரு குதிரைவண்டி அவர் மீது மோதியதால் கீழே விழுந்தார். இடது காலில் ஒரு பக்கச் சக்கரம் ஏறிவிட்டது. தெருவில் போய்க் கொண்டிருந்த பலரும் அவரை வண்டியில் ஏற்றி ஜெனரல் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது ஸ்வாமிகளின் வயது 73. உப்பு, புளி நீக்கி குறைவாக போஜனம் செய்வார். வயதாகி உடலில் சத்துக் குறைந்திருப்பதால் எலும்புகள் கூடுவது அசாத்தியம் என்று சொல்லி விட்டார் டாக்டர். சுப்ரமண்ய தாசர் என்ற அவரது சீடர், அடிபட்ட நாள்முதல் அவர் கட்டிலடியில் அமர்ந்து சண்முகக் கவசத்தை, சாப்பிடும் நேரம் இரவு தூங்கும் நேரம் தவிர பாராயணம் செய்தபடி இருந்தார்.

11ஆம் நாள் இரவு ஸ்வாமிகளுக்கு ஒரு கனவு. முறிந்த கால் மீது எவரோ வேல் வைத்து இணைப்பது போலிருந்தது. எவரென்று தெரியவில்லை! மறுநாள் கட்டைப் பிரித்து சோதித்த மருத்துவர் பிரமித்தார். எலும்புகள் முறிந்தது தெரியாமல் கூடியிருந்தன. ஸ்வாமிகள் அதன் பிறகு நன்றாக நடந்தார் சென்னை திருவான் மியூரில் இந்த அருளா ளரின் சமாதி இருக்கிறது. இன்று அவரது குருபூஜை.


--------------------------------------------------------------------------------


22-5-2006 ஸ்ரீதத்தாத்ரேய ஜெயந்தி
மும்மூர்த்திகள் அம்சமாக மூன்று முகங்கள், ஆறு கரங்க ளோடு அத்திரி முனிவருக்கும், அனுசூயா தேவிக்கும் பிறந்தவர் தத்தாத்ரேயர். இவர் ஆத்ரேய கோத்திர சந்ததி. சுசீந்திரம் தாணு மாலயன் கோவிலில் மும்மூர்த்தி களும் உள்ளனர். சுசீந்திரம் ஆலயத்தில் இரண்டு வேளைதான் பூஜை; அர்த்த ஜாம பூஜையை இரவு இந்திரன் செய்வதாக ஐதீகம். மும்மூர்த்திகளின் அம்ச மான தத்தாத்ரேயரை பூஜிப்பதால் மலட்டுத் தனம் நீங்கும். கையும் காலுமின்றிப் பிறந்த கார்த்தவீர் யார்ஜுனனுக்குக் கணபதி மந்திரத்தை உபதேசித்தவர்
தத்தாத்ரேயர். பன்னிரண்டு ஆண்டுகள் தவம் செய்து இரண்டு கால்களும், ஆயிரம் கைகளும் பெற்றான் கார்த்த வீரியன். திருமாலின் அவதாரமான பரசுராமர் பெற்றோரின் ஈமக் கிரியை களை தத்தாத்ரேய ரைக் கொண்டு தான் முடித்தார். இவரது ஆறு கரங்களில் ஒன்று அருள் பாலிக்கிறது-இரண்டு மேற்கரங்களில் சங்கு, சக்கரம் திகழ்கிறது. நடுவிலுள்ள இரு கரங்களில் சூலமும் உடுக்கையும், ஆறாவது கரத்தில் பிரம்ம கமண்டலமும் உள்ளன.

நான்கு வேதங்களும் நாய் களாகச் சூழ்ந்திருக்க, பின்னால் காமதேனு நிற்க, எப்போது தேவைப்பட்டாலும் எடுத்து உப யோகிக்கும்படி தொடைமேல் கதாயுதத்தோடு காட்சியளிக் கிறார். உலக nக்ஷமத்துக்காக பல யாகங்கள் நடத்திய இவரை இன்று வழிபடுவதால் ஊனங்களும், குறைகளும் நீங்கும்.

--------------------------------------------------------------------------------


30-5-2006 நம்பியாண்டார் நம்பி பிறந்த தினம்
இவர் திருநாரையூரில் பிறந்தவர். ஒருசமயம் தந்தை அவசர வேலையாக வெளியூர் சென்று விட அவர் பணியான பொள்ளாப் பிள்ளையாருக்கு பூஜை, நிவேதனம் செய்யும் பொறுப்பு சிறுவனான இவரிடம் ஒப்படைக்கப் பட்டது. விநாயகர் நிஜமாகவே சாப்பிடுவார் என்று நினைத்திருந்த குழந்தை நம்பி பலமுறை கெஞ்சி அழைத்தார். கணேசர் அசையவில்லை. “தான் செய்த பூஜை சரியில்லை. நைவேத் யம் எடுத்து வருகையில் விளை யாட்டில் கவனமாக இருந்து விட்டோம்” என்றெல்லாம் எண்ணி மனம் கலங்கிய நம்பி
கோயில் சுவரில் தலையை முட்டிக் கொண்டு அழுதார். அதைக் கண்டு மனம் பொறாத விக்னேஸ்வரர் நம்பியைத் தடுத்து நிவேதனத்தைச் சாப்பிட்ட ருளினார். திரும்பி வந்த தந்தை யிடம் நம்பி நடந்ததைச் சொல்ல, தந்தை “பிள்ளையாராவது, நைவேத்யத்தை நேரில் உண்பதா வது! பொய் சொல்கிறாய்” என்று மிரட்ட, தந்தை காண மீண்டும் கணபதியை அழைத்து உண்ணச் செய்தார் நம்பி. பொளியாப் பிள்ளையாரே (உளியால் பொளியப் படாமல் சுயம்புவாகத் தோன்றியவர்) மக்கள் வாக்கில் மருவி பொல்லாப் பிள்ளையாராகிவிட்டார்.கணபதியே ஆசிரியராகி இவருக்கு தமிழ் கற்பித்தார். இச்செய்தி நாடெங்கும் பரவியது. மன்னன் இராஜராஜன் விநாயகருக்கு உகந்த பழங்கள், கரும்பு, தேன், அவல், பொரி, எள்ளுருண்டை, அப்பம் ஆகியவற்றை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு திருநாரையூர் வந்தான். நம்பியிடம் அவற்றை எல்லாம் விநாயகரை சாப்பிட வைக்கும்படி வேண்டினான்.

நம்பியும் அபிஷேக ஆராதனைகள் நடத்தி கணேசரைப் பிரார்த்திக்க அவரும் அவர் விருப்பத்தை பூர்த்தி செய்தார்.“தேவாரத் திருமுறை களும், திருத்தொண்டர் வரலாறும் தமிழ் மக்களுக்குத் கிடைக்க வேண்டும்” என்று மன்னன் பிரார்த்திக்க “தில்லையில் மூவர் கை முத்திரையுடன் ஒரு அறையில் தேவாரச் சுவடிகள் உள்ளன” என்றுரைத்த கணபதி திருத் தொண்டர் வரலாற்றை நம்பிக்கு போதித்தார். நம்பிகளுடன் சிதம்பரம் சென்றான் சோழன். தேவார மூவர்களுக்கும் பூஜை செய்து ஏடுகள் இருக்கும் அறையின் முன் நிறுத்தி, தில்லைவாழ் அந்தணர்களைக் கொண்டு கதவைத் திறக்கச் செய்தான். ஓலைச் சுவடிகளைக் கரையான் புற்று மூடியிருந்தது. . குடம் குடமாய் எண்ணையைச் சொரிந்து புற்றை அகற்றினான் கொற்றவன்.

“மன்னா! வருந்தாதே! இக்காலத்துக்கு ஏற்புடையவை அரிக்கப்படவில்லை” என்று அசரீரி ஒலித்தது. அந்த ஏடுகளைச் சிதையாமல் எடுத்துத் தொகுத்துத் தரும் பணியையும் நம்பிகளிடமே ஒப்படைத்தான் வேந்தன்.

11ஆம் திருமுறையில் தாம் இயற்றிய பத்து பிரபந்தங்களையும் இணைத்து வகைப்படுத்திய பெருமையும் நம்பிக்கு உண்டு. நம்பி பாடியவை திரு இரட்டை மணிமாலை, கோயில் திருபண்ணியர் விருத்தம், திருத்தொண்டர் திரு அந்தாதி, ஆளுடைப் பிள்ளையார் திருவந்தாதி, திரு சண்பை விருத்தம், திருமும்மணிக்கோவை, திரு உலாமாலை, திருக்கலம்பகம், திருத்தொகை, திருநாவுக்கரசர் திரு ஏகாதச மாலை ஆகியன வாகும்.


--------------------------------------------------------------------------------


31-5-2006 சேக்கிழார் ஜன்மதினம்
தொண்டை நாட்டில் குன்றத்தூரில் வேளாளர் குடியில் பிறந்தவர் சேக்கிழார். பெற்றோர் சூட்டிய பெயர் அருண் மொழி இராமதேவர். அநபாய குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்த இவர் உத்தம சோழ பல்லவர் என்ற பட்டத்தையும் பெற்றார். சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய திருத் தொண்டத் தொகையை வழி நூலாகக் கொண்டு பெரிய புராணத்தை இயற்றிய இவர் அதற்காக சம்பவங்கள் நடந்த ஊர்களுக்கே சென்று வரலாற்றுக் குறிப்புகளை சேகரித்தார். சிற்பங்களை, ஓவியங்களை கூர்ந்து நோக்கி கருத்துக்களைத்
தொகுத்துக் கொண்டார். இசை, மருத்துவம், வானவியல், பூமியியல், உடலியல், அரசியல், நீதி முறைகள், சமயதத்துவம், தமிழ் இலக்கியம் ஆகியவற்றைத் தெளிவு படுத்திக் கொண்டார். தில்லையில் அம்பலவாணர் ‘உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுக்க ‘திருத் தொண்டர் புராணம்’ என்ற காவியத்தைப் படைத்தார். சேக்கிழாரையே அதைப் பாடச் சொல்லி அசரீரி ஒலித்ததோடு சிலம்பொலியும் கேட்டது. நாடெங்கும் தூதனுப்பி, முரசறைந்து திருத்தொண்டர் புராணத்தை அரங்கேற்றினான் அரசன்.

சித்திரை மாதம் திருவாதிரை தொடங்கி மறு ஆண்டு சித்திரைத் திருவாதிரையில் பெரிய புராண அரங்கேற்றம் பூர்த்தியாயிற்று. பசும் பட்டினால் ஏட்டுச் சுவடியைப் போர்த்து பொற்தட்டில் வைத்து, பட்டத்து யானைமேல் ஏற்றி, கூடவே சேக்கிழாரையும் அமர்த்தி, அவருக்குப் பின்னால் தானே உட்கார்ந்து வெண்சாமரம் வீசி, நகர் வலம் வந்து பொன்னம் பலத்தில் “தொண்டர் சீர் பரவுவார்” என்ற விருதினை அளித்து இவரை கௌரவித்தான் மன்னன்.


- ஆர். பி.